Must Watch



யோலோ

உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம். இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் ஆங்கில சப்டைட்டிலுடன் காணக்கிடைக்கிறது. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, சின்னச் சின்ன வேலைகளைப் பார்க்கிறாள் லேயிங். வாழ்க்கையிலும், வேலையிலும் எந்தப் பிடிப்பும் அவளுக்கு இல்லை. சமூகத்திடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் விலகி பெற்றோருடன் வாழ ஆரம்பிக்கிறாள்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சமூக உணர்வு இல்லாமை, தனிமை என அவளுடைய வாழ்க்கை செல்கிறது. லேயிங் ஒரு சோம்பேறி, இந்த வயதிலும் அப்பா, அம்மாவை நம்பியிருக்கிறாள் என்று நெருங்கிய உறவுகளாலேயே விமர்சிக்கப்படுகிறாள். பெரிதாக எந்த வேலையும் செய்யாததால் நாளடைவில் லேயிங்கின் உடல் பருமன் அதிகமாகிறது. ரொம்பவே குண்டாகி, அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி லேயிங்கின் தோற்றம் மாறிவிடுகிறது.

இப்படியான சூழலிலிருந்து மீண்டு, லேயிங் எப்படி வாழ்க்கையில் வெற்றி பெறுகிறாள் என்பதே திரைக்கதை.ஆரம்பத்தில் சாதாரணமாக செல்லும் இப்படம், வாழ்க்கையில் துவண்டு போகிறவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு படமாக மாறுகிறது. லேயிங்காக நடித்து, படத்தை இயக்கியிருக்கிறார் ஜியா லிங்.

தேவரா பாகம் ஒன்று

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது. இந்த விஷயம் காவல்துறைக்குத் தெரிய வருகிறது. கும்பலைப் பிடிப்பதற்காக காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்குகிறது.

கும்பலைச் சேர்ந்த அடியாட்களைப் பிடித்து விசாரிக்கிறது காவல்துறை. கும்பலைச் சேர்ந்த தலைவன் முருகா எனும் கொள்ளைக்காரனைச் சந்திக்கப் போவதாக தகவல் கிடைக்க, முருகாவைத் தேடிச் செல்கிறது காவல்துறை. ஆனால், முருகா இறந்துவிட்டார் என்ற செய்திதான் காவல்துறைக்குக் கிடைக்கிறது. 

கடற்கரையை ஒட்டிய பகுதியான ரத்னகிரி மலைக்கு வரும் காவல்துறை, அந்தக் கும்பலைப் பிடிக்க பைரா என்ற கொள்ளைக்காரனின் உதவியை நாடுகிறது.தேவரா காரணமாக காவல்துறைக்கு உதவ மறுக்கிறார் பைரா. தேவரா யார் என்பதே மீதிக்கதை.ஜூனியர் என்டிஆர், சயிப் அலி கான், பிரகாஷ் ராஜ் என நட்சத்திரப் பட்டாளங்களுடன் களமிறங்கிய இப்படத்தின் இயக்குநர் கொரட்டலா சிவா.

கோலம்

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான். 

தனது அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் இறந்து கிடக்கிறார் ஜான். கழிப்பறையின் கதவு உள்ளே தாழிட்டிருப்பதால் இது கொலையா அல்லது விபத்தா என்று கணிக்க முடிவதில்லை. ஐசக்கின் மரணத்தை விசாரிக்க ஆரம்பிக்கிறது காவல்துறை. கழிப்பறையில் வழுக்கி, விழுந்து தலையில் அடிபட்டு ஐசக் மரணம் அடைந்திருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் ஒரு முடிவுக்கு வருகின்றனர்.

ஐசக் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான எந்த தடயங்களும் கண்ணில் படவில்லை. ஆனால், ஐசக்கை யாராவது கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார் ஏஎஸ்பி சந்தீப்.
உண்மையில் ஐசக் வழுக்கி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? கொலை செய்யப்பட்டிருந்தால் உள்ளே கதவு எப்படி தாழிடப்பட்டது... போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரில்லிங் திரைக்கதை.ஆரம்பத்திலிருந்து எந்த இடத்திலும் சலிப்புத் தட்டாமல் விறுவிறுப்பாகச் செல்கிறது திரைக்கதை. சுவாரஸ்யமான இப்படத்தின் இயக்குநர் சம்ஜத்.

அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்

‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார். 

ஒரு வருடம் கழிகிறது. தனியாக ஒரு வீட்டில் ஒரு பூனையுடன் வாழ்ந்து வருகிறார் மேனல். பெரிதாக யாருடனும் அவருக்குத் தொடர்பு இல்லை. தனது சகோதரியின் குடும்பத்துடன் வீடியோ சாட்டில் மட்டுமே தொடர்பு கொள்கிறார். அப்போது ஆபத்தான வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் பரவுகிறது.

மன விரக்தியில் இருப்பதால் இந்த வைரஸைப் பற்றியெல்லாம் மேனல் கவலைப்படவில்லை; கண்டுகொள்ளவும் இல்லை. வைரஸின் தாக்கத்திலிருந்து மேனல் எப்படித் தப்பிக்கிறார் என்பதே மீதிக்கதை.சயின்ஸ் ஃபிக்‌ஷன், ஹாரர் வகைமை படங்கள் பிடிப்பவர்கள், வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை எதிர்பார்ப்பவர்கள் தவறவிடக்கூடாத படம் இது. இப்படத்தின் இயக்குநர் கார்லெஸ் டோரென்ஸ்.

தொகுப்பு:த.சக்திவேல்