சல்மான் கான் Vs லாரன்ஸ் பிஷ்னோய்... இது ஒன்றிய அரசின் Game?



சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் அனைத்து செய்தித்தாள்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு பெயர், லாரன்ஸ் பிஷ்னோய்.  இன்று இந்தியா முழுவதும் அறிந்த ஒரு தாதா இவர்தான். காரணம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் லாரன்ஸ்.

ஆம். 26 வருடங்களுக்கு முன்பு, சல்மான் கான் செய்த தவறு, இப்போது அவரை துப்பாக்கிமுனையில் துரத்திக் கொண்டு இருக்கிறது. 1998ல் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் 2 மான்களை சல்மான் கான் வேட்டையாடிய சம்பவம், பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அவர் குற்றவாளி என்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பும் அளித்தது.

வெறும் மான் அல்ல... பிளாக்பக் மான்களை அவர் வேட்டையாடியதுதான் இன்று அவரது உயிரை ஊசலாட வைத்திருக்கிறது. யெஸ். பிளாக்பக் மான்களை வேட்டையாடியதற்காக சல்மான் கான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் லாரன்ஸ்.ஆனால், தான் வேட்டையாடவில்லை என்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து வருகிறார் சல்மான்.  

இந்நிலையில் சமீபத்தில் சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான பாபா சித்திக்கை லாரன்ஸின் கும்பல் கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிஷ்னோய் என்கிற இனக்குழுவைச் சேர்ந்தவர் லாரன்ஸ். காடுகளையும், விலங்குகளையும் மிக உயர்வாக பிஷ்னோய் மக்கள் மதிக்கின்றனர்.
குறிப்பாக பிளாக்பக் மான்களைக் கடவுள் போல புனிதமாகக் கருதுகின்றனர். அப்படியான பிளாக்பக் மான்களை வேட்டையாடியதற்காகத்தான் சல்மான்கனைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல்.

சல்மான் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்டால் சல்மானை விட்டுவிடுவோம் என்கிறார் லாரன்ஸ். ஆனால், சல்மான் கான் மன்னிப்புக் கேட்கவில்லை; குற்றத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் அவர் மீதான லாரன்ஸின் கொலை மிரட்டல் தொடர்கிறது. பிளாக்பக் மானை வேட்டையாடியதற்கா லாரன்ஸ் இப்படி கொலைவெறியுடன் அலைகிறார் என்ற கேள்வி எழலாம். பிஷ்னோய் இனக்குழுவைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது, லாரன்ஸின் கொலைவெறிக்கு உண்டான காரணம் தெரிய வரும்.

சுமார் 500 வருடங்களுக்கு முன்பு ஜம்பேஷ்வர் என்பவர் உருவாக்கிய வாழ்க்கை நெறிமுறைதான், பிஷ்னோய். இயற்கைதான் முதன்மையான விஷயம். காடுகளும், விலங்குகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக உயிரையும் கொடுக்கலாம் என்பது பிஷ்னோயின் கோட்பாடு.

 இன்று இந்தியாவில் இயற்கை பாதுகாக்கப்படுவதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் இந்த பிஷ்னோய் மக்கள்தான். எங்கேயாவது மரம் வெட்டப்பட்டாலோ, விலங்குகள் வேட்டையாடப்பட்டாலோ முதலில் குரல் எழுப்புபவர்கள் பிஷ்னோய் மக்கள்தான். சல்மான்கான் பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்ட போது, அவரைத் தண்டிக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தியவர்களும் பிஷ்னோய்கள்தான்.

மட்டுமல்ல, இராஜஸ்தானில் அதிகமாக வசித்து வரும் பிஷ்னோய் மக்கள் அசைவம் சாப்பிடுதில்லை. மரங்களை வெட்டி விறகாகப் பயன்படுத்துவதில்லை. 

காடுகளில் கைவிடப்பட்ட பிளாக்பக் மான்குட்டிகளை எடுத்துவந்து வீட்டில் குழந்தைகள் போல வளர்த்து, மீண்டும் காடுகளில் கொண்டு போய் விடும் வழக்கத்தை பிஷ்னோய் மக்களிடம் சர்வசாதாரணமாகக் காணமுடியும்.

பிளாக்பக் மான்கள் மட்டுமல்லாமல், பன்றிக்குட்டிகளைக் கூட குழந்தைகள் போலக் கருதுகின்றனர். இதுபோக மரங்களைப் பாதுகாப்பது அவர்களின் வாழ்க்கைக் கடமைகளில்
முக்கியமானது.

இத்தகையை இயற்கை சார்ந்த வாழ்க்கையிலிருந்து வந்து, தாதாவாக மாறியவர் லாரன்ஸ் பிஷ்னோய். அதனால்தான் பிளாக்பக் மான்களை வேட்டையாடியதற்காக சல்மான் கான் மீது இவ்வளவு கோபத்துடன் இருக்கிறார். கடந்த பத்து வருடங்களாக சிறையில்தான் இருக்கிறார் லாரன்ஸ். அவர் மீதும், அவரது கும்பல் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அக்குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் லாரன்ஸ்.

சிறைக்குள் இருந்தே தனது கும்பலை வழி நடத்துகிறார். இதற்கு சிறை அதிகாரிகள் உதவி செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு இருந்தாலும் மான்களுக்காக செல்வாக்கு மிக்க ஒரு நடிகருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுதான் பிஷ்னோய் இனக்குழுவைப் பற்றிய தகவல்கள் பரவலாக மூல காரணம்.

சரி... யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்..?

1998ல் சல்மான்கான் மானை வேட்டையாடிய சம்பவம் நடந்தபோது, லாரன்ஸ் பிஷ்னோய்க்கு 5 வயது. இப்போது லாரன்ஸ் 31 வயது இளைஞன். மோஸ்ட் வான்ட்டட் நொட்டோரியஸ் கிரிமினல் கும்பலின் தலைவனாக அறியப்படுகிறார் லாரன்ஸ் பிஷ்னோய். பஞ்சாப்பில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்தான் பிஷ்னோய். கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரம்பரை நிலம் கொண்ட குடும்பம் பிஷ்னோயின் குடும்பம்.

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான், அவரது வாழ்க்கைப் பாதை மாறியதாகச் சொல்கிறார்கள். மாணவர் தேர்தலில் போட்டி யிட்டு தோல்வியடைந்தார். அதனால், ஏற்பட்ட மோதல்கள் கொலை முயற்சி வழக்கு வரை லாரன்ஸ் பிஷ்னோயைக் கொண்டு சேர்த்தது. 

இதனைத் தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்குதான்... சிறையில்தான் லாரன்ஸின் வாழ்க்கை மாறத் தொடங்கியது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது சிறையில் கிரிமினல்களுடன் லாரன்ஸுக்கு ஏற்பட்ட தொடர்பு.

வெளியே வந்து கொலை, ஆள்கடத்தல், பணம் பறிப்பு என கிரிமினல் செயல்களில் ஈடுபட்டு ஒரு கேங்ஸ்டராக லாரன்ஸ் பிஷ்னோய் உருவெடுத்ததாக சொல்கிறார்கள். இன்று பஞ்சாப்பில் ஏகப்பட்ட கிரிமினல் கேங்குகள் இருக்கின்றன. அவர்களையெல்லாம் பொதுவாக இணைப்பது, போதைப் பொருட்கள், ஆயுதக் கடத்தல், ஆள்கடத்தல், இவற்றோடு சேர்த்து பாப் இசையும், உள்ளூர் சினிமாவும் என்கிறது இந்திய உளவுத்துறை. பஞ்சாப் பாப் மியூசிக்கில் இருப்பவர்களுக்கும், போதைப் பொருட்களுக்கும் மிகுந்த தொடர்பிருப்பதாக சில வருடங்களாகவே பேச்சு அடிபடுகிறது. பாடகர் சித்து மூஸ்வாலா கொலை, இந்த நெட்வொர்க் எப்படி இயங்குகிறது என்பதற்கு ஓர் உதாரணம் என சுட்டிக்காட்டுகிறார்கள்.

போதைப் பொருள், பாப் இசை போன்றவை இளைஞர்களை எளிதாக, கிரிமினல் கும்பல்களை நோக்கி இழுக்கின்றன. இவற்றோடு சேர்த்து, மேலும் ஒரு விஷயமும் இருக்கிறது.
அதுதான், இளைஞர்கள் மத்தியில், லாரன்ஸ் பிஷ்னோயை ஒரு ஐகானாக நிலை நிறுத்தியிருக்கிறது.2018ல் சல்மான் கான் மான்களை வேட்டையாடிய வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகச் சென்ற நேரத்தில், ‘சல்மானை நிச்சயம் கொல்வோம்’ என பேட்டி கொடுத்தார் லாரன்ஸ் பிஷ்னோய். அந்தப் பேட்டி இந்தியா முழுவதும் பேசு பொருளானது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில், சல்மான் கான் வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சல்மான் கானுக்கு அதில் ஒன்றும் ஆகவில்லை. சல்மானைத் தொடர்ந்து குறி வைப்பதால், பிஷ்னோய் கேங் அவ்வப்போது பேசுபொருளாகி விடுகிறது.விஷயம் இதுமட்டுமல்ல. 

வேறொரு பரிணாமமும் இருக்கிறது.யெஸ். கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையின் மையப்புள்ளியாகவும் பிஷ்னோய் கேங்தான் இருக்கிறது. 2023 ஜூலையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது நினைவில் இருக்கலாம்.

அந்தக் கொலையில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்ததும் சர்வதேச அளவில் வைரலானது.கூடவே பிஷ்னோய் கேங் போன்ற கிரிமினல் குழுக்களுக்கு, இந்திய உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தகவல்கள் திரட்டிக்கொடுப் பதாகவும், அதை வைத்து அந்தக் குழுக்கள் கனடாவில் வசிக்கும் சீக்கியர்களைக் குறிவைத்துக் கொல்வதாகவும் பரபரப்பாக கனடா மீடியாக்கள் பேசின, எழுதின. அதற்கு ஏற்ப கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இதே விஷயத்தை மீடியாக்களில் பகிர்ந்தார்.

இந்தியா இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக எதிர்த்தது; எதிர்க்கிறது. விளைவு... இரு நாடுகளும் தங்கள் தூதர்களைத் திரும்பப் பெற்றுள்ளன.இதற்கிடையில் இந்த விவகாரத்தில் கனடா அரசு பிஷ்னோய் கேங்கின் பெயரைப் பயன்படுத்தியது, சர்வதேச அளவில் அந்த கேங்குக்கு பப்ளிசிட்டியை ஏற்படுத்திவிட்டது.  

இப்பொழுது எழுந்திருக்கும் கேள்வி, சல்மான் கானை அப்புறப்படுத்த ஒரு சமூகத்தின் நம்பிக்கையைப் பயன்படுத்தி லாரன்ஸ் பிஷ்னோயை ஒன்றிய அரசே பயன்படுத்துகிறதா என்பதுதான்.இதற்கு ஆதாரம் இல்லை. புறங்கூறல்தான் என்றே இந்திய மக்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை ஒன்றிய அரசு காப்பாற்றும் என நம்புவோம்.

த.சக்திவேல்