திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’
- ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும் மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது.
அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன்’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால். ‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘தெகிடி’ , ‘முண்டாசுப்பட்டி’ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டிங் படங்கள் அனைத்திலும் சிறந்த படத்தொகுப்பை கொடுத்தவர் தான் லியோ ஜான் பால். தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் ‘ககன மார்கன்’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகவிருக்கிறார். ககன மார்கன்...
ககன என்றால் ஆகாயம் மற்றும் காற்று என்கிற பொருள் வரும். மார்க்கம் என்றால் பாதை, வழி. இதில் மார்க்கம் என்கிறதைத்தான் மார்கன் என மாற்றி ‘ககன மார்கன்’ என்கிற தலைப்பு இந்தப் படத்துக்கு வந்தது. தொடர்ந்து மர்மமாக மேலும் அமானுஷ்யமாக நடக்கும் கொலைகள், அதை கண்டுபிடிக்க மும்பையில் இருந்து வரும் சிறப்பு போலீஸ் அதிகாரிதான் படத்தின் நாயகன். அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணை, குற்றவாளி யார் என்கிற கேள்விக்கு பதில் எல்லாம் சேர்ந்துதான் படத்தின் கதை. விஜய் ஆண்டனி உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து சொல்லுங்க... எனது முதல் படம், நான் இன்று இயக்குனர்… இதற்கு காரணமே விஜய் ஆண்டனி சார் தான். இரண்டு மூன்று வருஷங்களாகவே அவரை நல்லா தெரியும். நிறைய ப்ராஜெக்ட்ல அவருக்காக வேலை செய்திருக்கேன். ஒரு சில டிரெய்லர் கட் கூட என்னிடம் கொடுத்து செய்து தரச் சொல்லி இருக்கார். அப்படி ஒரு ப்ராஜெக்ட் விஷயமா பேசும் போதுதான் இந்தக் கதையைக் குறித்து நான் விஜய் ஆண்டனி சாரிடம் சொன்னேன். கேட்டவுடன் அவரே தயாரிக்கவும் முன் வந்தார்.
மேலும் எனக்கு இதுதான் முதல் தடவை என்கிறதால் ஒரு இயக்குனராக எனக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் பார்த்துப் பார்த்து செய்து கொடுத்தார். எனக்கான சிறப்பு இயக்குநர் குழுவையும் கூட உருவாக்கிக் கொடுத்தது அவர்தான். கிரியேட்டிவ் வேலை மட்டும் தான் எனக்கு இருந்தது.
மீதி அத்தனை அழுத்தத்தையும் அவர் எடுத்துகிட்டார். 25 படங்களுக்கு பிறகு இயக்கம் என முடிவு செய்திருந்தேன். அதில் 22 படங்கள் முடிச்சிட்டேன். இடையில் கொரோனா காரணமாக நான் வேலை செய்த ஒருசில படங்கள் இன்னும் வெளியாகலை. நான் நினைத்தபடி இன்னைக்கு இயக்குநர் எனில் அதற்கு முழுக் காரணம் விஜய் ஆண்டனி சார் தான். எடிட்டராக ஒரு படத்தை இயக்கும்போது கிடைத்த பலன்கள் என்ன?
பொதுவா எடிட்டரின் பிரதான வேலையே தேவையில்லாத காட்சிகளை டெலிட் செய்வதுதான். ஒரு 20 படங்களுக்கு மேல் வேலை செய்த அனுபவம் மூலமாக கதை எழுதும் போதே தேவை உள்ள மற்றும் தேவையில்லாத காட்சிகளை எடிட் செய்துகிட்டேதான் எழுதினேன். குறிப்பா ஒவ்வொரு படத்திலும் மிகப்பெரிய சவால் தயாரிப்பு செலவை கட்டுப்படுத்தி வேலை செய்வதுதான்.
ஒரு எடிட்டராக வேலை செய்த காரணத்தாலேயே ஆரம்ப கட்டத்தில் இருந்தே தயாரிப்பு செலவைக் கட்டுக்குள் வைத்தே தான் படம் இயக்கணும் என்கிற தெளிவு இருந்தது. இந்தப் படத்துக்கும் நான்தான் எடிட்டர். படம் ஆரம்பிக்கும்பொழுதே விஜய் ஆண்டனி சாரிடம் நான்தான் இந்த படத்தை எடிட் செய்வேன் என்று சொல்லிய பிறகே படத்தை ஆரம்பித்தேன். அவரும் நீங்கதான் செய்யணும் அப்படின்னு சொல்லிதான் கொடுத்தார். உங்களைப் பற்றி சொல்லுங்க...
நெய்வேலிதான் எனக்கு சொந்த ஊர். அங்கே பள்ளிப் படிப்பு , கோயம்புத்தூரில் டிகிரி முடிச்சுட்டு சென்னையில் லயோலா கல்லூரியில் மாஸ்டர் முடிச்சேன். தொடர்ந்து குறும்படங்கள், தனியிசைப் பாடல்கள் எல்லாம் இயக்கி இருக்கேன். பிறகு எடிட்டிங்கில் இருபதுக்கும் மேலான படங்கள்.
இப்போ என்னுடைய முதல் இயக்கம். அப்பா பெயர் மைக்கேல், அம்மா ஜாக்குலின் ரெண்டு பேருமே அரசு பணியாளர்கள் என்கிறதால் அரசாங்கத்தின் முக்கியத்துவம் தெரிந்து, புரிந்து வளர்ந்தவன் நான். அரசு சார்ந்த அல்லது அரசாங்க பொருட்களைத் தான் பயன்படுத்தணும் என நினைப்பவன் நான். என்னுடைய பெற்றோர் மட்டுமல்ல, என்னைச் சுற்றி இருக்கும் சொந்த பந்தங்களும் அவங்க கொடுத்த அன்பும் சேர்ந்து தான் இன்னைக்கு நான் இங்கே இப்படி நிற்கக் காரணம். படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் பற்றி சொல்லுங்க...
விஜய் ஆண்டனி சாருக்கு வித்தியாசமான ரெண்டு கேரக்டர்கள் இந்த படத்தில் இருக்கும். அனல் காற்று மாதிரி வேலை செய்கிற ஒரு மனிதனாக இருப்பார். அவரையும் குறிக்கும் விதமாகத்தான் இந்தப் படத்துக்கு ‘ககன மார்கன்’ என்கிற தலைப்பு. அஜய் தீஷா என்கிற அறிமுக நடிகர் இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிச்சிருக்கார். மெயின் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரகிடா நடிச்சிருக்காங்க.
மேலும் சமுத்திரக்கனி சார், இதுதான் காட்சி அப்படின்னு சொல்லும்பொழுது அவருடைய உடல் மொழி துவங்கி பார்க்கும் பார்வை உட்பட அத்தனையும் காட்சிக்கேத்த மாதிரி மாறிடறார். ஒரு இயக்குனராகவும், கதையாசிரியராகவும், நடிகராகவும் அனுபவம் வாய்ந்தவர் கனி சார். நிறைய கத்துக்க முடிஞ்சது. மகாநதி சங்கர் , வினோத் சாகார், தீக்ஷா இவங்கதான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். சினிமாட்டோகிராபி யுவராஜ். இதற்கு முன்பு ‘லிஃப்ட்’, ‘ரன் பேபி ரன்’ உள்ளிட்ட படங்களில் வேலை செய்திருக்கார். இசை விஜய் ஆண்டனி சார்தான். ஒரே நாளில் ரெண்டு பாடல்கள் கொடுத்தார். இந்த படத்தில் கிராபிக்ஸ் ரொம்ப நல்லா செய்து கொடுத்திருக்காங்க நெக்ஸ்ஜென் டீம். டிசைனிங் வின்சி ராஜ் ‘காலா’, ‘கபாலி’ படங்களில் எல்லாம் வேலை செய்திருக்கார்.
எத்தனையோ திரில்லர் படங்கள். அதில் ‘ ககன மார்கன் ‘ எப்படி வேறுபடும்?
‘ராட்சசன்’, ‘போர் தொழில்’ உள்ளிட்ட படங்கள் எனக்கு பர்சனலா ரொம்பப் பிடிக்கும். அந்தப் படங்களில் இல்லாத ஒரு அமானுஷ்யம் மற்றும் சித்தர்கள் போர்ஷனை இந்தப் படத்தில் பார்க்கலாம். திரில்லர் மற்றும் கொலை விசாரணை மட்டுமல்லாமல் ஒரு அமானுஷ்ய கதை சொல்லலும் இந்தக் கதையில் உண்டு. திரில்லர் ரசிகர்களுக்கு நிச்சயமா விஷுவல் விருந்தா இந்தப் படம் இருக்கும்.
ஷாலினி நியூட்டன்
|