முதல்வர் படைப்பகம்... கெத்து காட்டும் தமிழகம்!



கடந்த வாரம் சென்னை கொளத்தூரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான கற்றல் மையம் என இரண்டும் உள்ளடக்கிய, ‘முதல்வர் படைப்பக’க் கட்டடத்தைத் திறந்து வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதுமையான திட்டம் செம மாஸ் காட்டுகிறது.
குறிப்பாக அரசே குறைந்த கட்டணத்தில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் அமைத்திருப்பது இதுவே முதல்முறை. இதனால், இந்தத் திட்டத்தைப் பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.

கொளத்தூர் அகரம் பகுதி ஜெகந்நாதன் தெருவில் உள்ள மூன்று தளங்கள் கொண்ட முதல்வர் படைப்பகம், கார்ப்பரேட் அலுவலகம் போல அத்தனை பிரமிப்பாக இருக்கிறது.   
தரைத் தளத்தில் கோ-வொர்க்கிங் பகுதியும், முதல் தளத்தில் கற்றலுக்கான பகுதியும், இரண்டாம் தளத்தில் ஸ்நாக்ஸ் கேண்டீன் பகுதியும் உள்ளன. நுழையும் இடத்திலேயே செருப்பைக் கழற்றிவைத்துவிடச் சொல்கிறார்கள். அங்கிருந்தே தரை விரிப்புகளும் தொடங்குகின்றன.

முழுவதும் குளிரூட்டப்பட்ட தரைத் தளம். பத்து பதினைந்து பேர் தங்கள் லேப்டாப் முன் இருந்தபடி பரபரப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். உள்ளிருக்கும் வரவேற்பாளர், கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் பற்றி விசாரிக்க வருபவர்களுக்குத் தகவலை அளித்துக் கொண்டிருந்தார். இதனுடன் வலதுபுறத்தில், பணியாற்றுபவர்களைச் சந்திக்க வருகிறவர்களுக்கான லாபியும் உள்ளது. 
‘‘நம் தமிழக முதல்வர் வடசென்னை மக்களுக்கு, குறிப்பாக படிக்கிற பசங்களுக்கும், வொர்க் பண்றவங்களுக்கும், பெண் தொழில்முனைவோர்களுக்கும் ஏதாவது பண்ணணும்னு நினைச்சாங்க. அப்படி யாக இந்த கோ-வொர்க்கிங் பிளேஸ் கம் லேர்னிங் சென்டரை உருவாக்கித் தந்திருக்காங்க...’’ என நம்மை வரவேற்றபடியே சொன்னார் படைப்பகத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான கீதா பிரியா.  

‘‘இந்த கோ-வொர்க்கிங் பிளேஸ்ல 38 பேர் வரை உட்காரலாம். அரை நாளுக்கு ஒரு நபர் ரூ.50 செலுத்தினால் போதும். அதே முழு நாளுக்கு ரூ.100 சார்ஜ் பண்றோம்.
நீங்க மாதமாக புக் பண்ணினால் ரூ.2,500 கட்டணும். இது தவிர, தனியாக மூன்று சந்திப்பு அறைகள் உள்ளன. நான்கு பேர் அறைக்கு ஒரு மணிநேரத்துக்கு 150 ரூபாயும், ஆறு பேர் அறைக்கு ஒரு மணிநேரத்துக்கு 250 ரூபாய் செலுத்தணும்.

உள்கட்டமைப்பு முழுவதும் ஏசி பண்ணியிருக்காங்க. 24/7 பாதுகாப்பு, பார்க்கிங், ஃப்ரீ வைஃபைனு எல்லா வசதி களும் இங்க இருக்கு...’’ என உற்சாகமாகக் குறிப்பிட்டார்.   
தனியாக ஐடி கம்பெனி நடத்திவரும் கொளத்தூரைச் சேர்ந்த மதனிடம் பேசினோம். ‘‘நான் கடந்த ரெண்டு ஆண்டுகளாக ஐடி கம்பெனி நடத்திட்டு இருக்கேன். முன்னாடி தனியார் இடத்துல வச்சிருந்தேன். அப்புறம், வீட்டுல இருந்து செய்தேன். இப்ப இங்க வந்துட்டேன். காரணம், நல்ல வசதிகள் இங்க இருக்குது.

குறிப்பா நல்ல சேர்கள், மேஜைகள், ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு டிரானு கொடுத்திருக்காங்க. அதுல நம்ம பொருட்களை வச்சுக்கலாம். இது வெளியில் தனியார்ல இருக்காது. தவிர, நல்ல ஏசி வசதி பண்ணியிருக்காங்க. ஃப்ரீ வைஃபையும் இருக்கு. ரொம்ப அமைதியாக இருக்கு. முக்கியமாக இது என் தொகுதிக்குள் இருக்கு. இதுக்கு முன்னாடி நான் தினமும் காலை, மாலை 45 நிமிடங்கள்னு ஒன்றரை மணி நேரம் பயணிச்சிட்டு இருந்தேன். இப்ப அந்த நேரம் மிச்சமாகுது. என் குடும்பத்துடன் நேரத்தை செலவிடமுடியுது.

அப்புறம், வொர்க் ஃப்ரம் ஹோம்ல இருக்கோம். இங்க வர்றப்ப இன்னும் சிலர் நம்மள மாதிரி வேலை செய்றாங்க. அவங்கள பார்த்து வேலை செய்யும்போது ஒரு ஆபீஸ் அட்மாஸ்ஃபியர்ல இன்னும் உற்சாகமாக வேலை செய்ய முடியுது. தனியார்ல இந்தமாதிரி இடம் கிடைக்க குறைந்தது 5 ஆயிரம் ரூபாய்ல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டி வரும். இந்தக் கட்டணம் ஏரியாவைப் பொறுத்து மாறும். ஆனா, இங்க மாசம் 2 ஆயிரத்து 500 ரூபாய்தான்.

இங்க கான்பரன்ஸ் ஹாலும் இருக்கு. ஒரு மணி நேரத்துக்கு எடுத்துக்கலாம். மீட்டிங் வேணும்னா பண்ணலாம். மேலே பேன்ட்ரியும் வச்சிருக்காங்க. நல்ல காற்றோட்ட வசதியுடன் இருக்குது. இதுவும் தனியார்ல பார்க்கமுடியாது. அப்புறம், இங்க பார்க்கிங் ஃப்ரீ. ஆனா, தனியார்ல கார்பார்க்கிங்கிற்கு மட்டுமே மாசம் 4 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். 

இந்தமாதிரி கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் ஒவ்வொரு தொகுதியிலும் ஏற்படுத்திக் கொடுத்தால் என்னைப் போன்ற நிறுவனத்தை நடத்துகிறவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். அதனால், உற்பத்தி கூடும். உற்பத்தி கூடும்போது ஏற்றுமதி உயரும். அப்ப டாலர்கள் நிறைய தமிழ்நாட்டுக்கு உள்ளே வரும். தமிழ்நாடு வளரும். இந்தியாவும் வளரும்.

இப்ப முதல்வரின் நோக்கம் ஒரு ட்ரில்லியன் டாலர் எகனாமி. அந்த ஒரு ட்ரில்லியன் டாலர் எகனாமியை எட்ட இந்தத் திட்டம் ரொம்ப பங்களிப்பு செய்யும்...’’ என்கிறார் மதன்.
அவரின் எதிர்ப்புற மேஜையில் உற்சாகமாக வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழில்முனைவோரான பிரமிளா, ‘‘நான் பிரமிஸ் கிச்சன்னு ஒரு கேட்டரிங் பண்ணிட்டு இருக்கேன். என்னுடைய சென்டர் பட்டாளத்துல இருக்குது. நாங்க ஐடி நிறுவனங்களுக்கு சாப்பாடு சப்ளை பண்றோம்.

இதுக்காக நிறைய வாடிக்கையாளர்களை சந்திப்போம். வேலை செய்கிறவர்களுக்கு பயிற்சி கொடுப்போம். எங்களுக்கு டெலிகாலர்ஸ் இருக்காங்க. டிஜிட்டல் மார்க்கெட்டிங் பண்றோம். இவங்க எல்லாம் வொர்க் ஃப்ரம் ஹோம்லதான் இருக்காங்க. இவங்கள ஒருங்கிணைக்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. இதுக்காக ஒரு ஆபீஸ் போடலாமானு நினைச்சோம். அதற்கு பெரிய முதலீடு தேவைப்பட்டுச்சு. ஆனா, அப்படி போட்டால் எங்களால் சமாளிக்கமுடியாது. நாங்க ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி.

அப்பதான் ஒருத்தர் கோ வொர்க்கிங் பிளேஸ் அரசே கொண்டு வர்றாங்கனு சொன்னார். நாங்க முதல்ல தனியார் இடத்திற்கு போனோம். அங்க மாசம் 10 ஆயிரம் ரூபாய் வந்தது. அது எங்களால் முடியாது.சரினு விலை குறைவாக உள்ள தனியார் கோ-வொர்க்கிங் பிளேஸ் பார்த்தோம். ஆனா, அங்கேயும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. அதுவும் எங்க பட்ஜெட்ல முடியல. 

இந்த கோ-வொர்க்கிங் பிளேஸ் பத்தி கேள்விப்பட்டதும் இந்த இடத்திற்கு வந்தோம். உண்மையில் சொல்றேன்... தனியாைரவிட ரொம்ப சிறப்பாக இருக்குது.  
எங்களுக்கு வேண்டியது ஏசி, இந்த மாதிரி லாபி, கான்ஃபரன்ஸ் ரூம் இவ்வளவுதான். இவையெல்லாம் இங்க இருந்ததால் உடனே புக் பண்ணினோம். நாங்க மாசம் என்கிற கணக்குல 2,500 ரூபாய் கட்டியிருக்கோம்.

முதல்வர் இதை பண்ணிக் கொடுத்தது எங்களை மாதிரி ஸ்டார்ட்அப் கம்பெனிகளுக்கு ரொம்ப உதவியாக இருக்கு. இதை எப்படி யோசிச்சு பண்ணினாங்கனு புரியல. ரொம்ப அருமையான திட்டம்...’’ என மெச்சினார் அவர்.   அங்கிருந்து முதல் தளத்திற்குச் சென்றோம். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டித் தேர்வு புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அங்கேயும் ஒரு வரவேற்பாளர் வரவேற்றார்.வலதுபுறத்தில் இருந்த மூன்று கம்ப்யூட்டர்களில் மாணவர்கள் அமர்ந்து நோட்ஸ் எடுக்க, முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அமைதியாக போட்டித் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தனர்.  

சீரியஸாக படித்துக் கொண்டிருந்த சாந்தி என்ற மாணவியிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘எனக்கு கொளத்தூர் பெரியார் நகர். யுபிஎஸ்சிக்குத் தயாராகிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி பணம் கொடுத்து ஸ்டடி ஹால்ஸ் பயன்படுத்திட்டு இருந்தேன். அண்ணாநகர்ல அது ஃபேமஸ். இப்ப அரசே கொண்டு வந்திருப்பது ரொம்ப சிறப்பு. இந்த படைப்பகம் பணம் கொடுத்து புத்தகங்கள் வாங்கிப் படிக்க முடியாத நிலையில் உள்ளவங்களுக்கு ரொம்பப் பயனுள்ளதாக இருக்கும்.

ஏன்னா, ஸ்டாண்டர்டு புக்ஸ்னு சொல்வாங்க. அது ரொம்ப விலை அதிகம். அந்த புத்தகங்கள் எல்லாம் இங்கே இருக்கு. தனியார் ஸ்டடி ஹால்ஸ்ல புத்தகங்கள் கிடையாது. நீங்க பணம் கொடுத்து படிச்சாலும் உங்க புத்தகங்கள்தான் எடுத்திட்டு வரணும். அவங்க புத்தகம் எல்லாம் தரமாட்டாங்க. இங்க அப்படியில்ல. ஸ்டாண்டர்டு புக்ஸ், ஸ்கூல் புக்ஸ், என்சிஆர்டிஇ புக்ஸ்னு எல்லாமே இருக்கு. டிஎன்பிஎஸ்சிக்குத் தயாராகிறவர்களுக்கும் புத்தகங்கள் இங்கே நிறைய இருக்குது. அதுதான் பெரிய பிளஸ்.

இதுதவிர, என்கிட்ட கம்ப்யூட்டர் இல்ல, டேப் இல்லனு சொல்ற பசங்களுக்கும் இங்க மூன்று கம்ப்யூட்டர்கள் இலவச வைஃபை வசதியுடன் வச்சிருக்காங்க. அப்புறம், ரொம்ப அமைதியான சூழல். முழுவதும் குளிரூட்டப்பட்ட அறை. பராமரிக்க அட்மின் மேடம் இருக்காங்க. அதனால், சத்தங்கள் வராது. தொந்தரவும் இருக்காது.இங்க மூன்றரை மணி நேரத்திற்கு 5 ரூபாய்தான். அதன்பிறகு ஒவ்வொரு மூன்றரை மணி நேரத்திற்கும் 5 ரூபாய் செலுத்தணும். நான் காலை 10 மணி முதல் இரவு வரை இருக்கலாம்னு நினைச்சிருக்கேன்.  

கூடுதல் நேரம் படிக்கப் போறீங்களா, அதற்கும் ஏற்பாடு செய்றோம்னு சொல்லியிருக்காங்க. படிப்பதற்கு என்ன வேணும்னாலும் செய்து தர்றோம்னு சொல்றது சந்தோஷமாக இருக்கு. எல்லா பசங்களும் வரணும், படிக்கணும், வெற்றி பெறணும்னு நினைச்சு முதல்வர் செய்திருக்காங்க. இந்தப் படைப்பகம் ஒரு வரப்பிரசாதம்...’’ என நெகிழ்ந்தார் மாணவியான சாந்தி.

தரைத்தள லாபியில் இருந்த மற்றொரு பொறுப்பாளரான ஹெலன் நம்மிடம் இதுகுறித்து விரிவாகப் பேசினார். ‘‘முதல்வர் ஸ்டாலின் 2019ம் ஆண்டு எம்எல்ஏவாக இருந்தப்ப கொளத்தூர்ல ‘அனிதா அச்சீவர்ஸ் அகடமி’னு இலவச திறன் பயிற்சி மையத்தை திறந்தாங்க. குறிப்பா கலை, அறிவியல் படிப்பு எடுத்துப் படிக்கிறவங்களுக்கு அந்தத் திறன் பயிற்சி மையத்தை ஆரம்பிச்சாங்க. இந்த அகடமி வழியாக Tally படிக்க வச்சு சான்றிதழ் கொடுக்குறோம்.  

பொதுவாக வெளியில் Tally படிக்க 5 ஆயிரம் முதல் 15 வரை போகுது. அதை முடிச்சதும் அவங்க சான்றிதழ்தான் தருவாங்க. ஆனா, இங்க நேரடியாக Tally நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு சான்றிதழ் வழங்குறாங்க. இதனை முடிச்ச பசங்களுக்கு லேப் டாப்பும் கொடுக்குறாங்க. 

இதுல இதுவரை 4 ஆயிரத்து 500 பேருக்கும்மேல் பயன் பெற்றிருக்காங்க.
இதில்லாமல் ஹவுஸ் வொய்ஃபிற்காக 2020ம் ஆண்டு இலவச டெய்லரிங் வகுப்பு தொடங்கினாங்க. ஒரு பேட்ச்சுக்கு 360 பெண்கள் பாஸ் ஆவாங்க. அதுவும் டெய்லரிங் முடிச்சதும் ஒவ்வொருவருக்கும் மோட்டார் பொருத்திய இலவச தையல் மிஷின் கொடுக்குறாங்க.

பயிற்சி, தையல் மிஷின்னு எல்லாமே இலவசம்தான். நீங்க படிச்சால் மட்டும் போதும். இதுதவிர, வயதானவர்களுக்கு கண் பிரச்னைக்காக ‘கலைஞர் நூற்றாண்டு கண் சிகிச்சை மையம்’னு ‘அனிதா அச்சீவர்ஸ் அகடமி’ வளாகத்திலேயே ஆரம்பிச்சிருக்காங்க. இதுல கண் குறைபாடு உள்ளவங்க பயனடையறாங்க.

இப்ப இந்தக் கான்செப்ட் எப்படி ஆரம்பிச்சதுன்னா, சமீபத்துல முதல்வர் தொகுதியில் ஆய்வு செய்யும்போது பெரியார் நகர் நூலகத்திற்குப் போனாங்க. அப்ப பசங்க போட்டித் தேர்வுகளுக்குப் படிச்சிட்டு இருக்கிறதா சொன்னாங்க.அப்பதான் இவ்வளவு சீரியஸாக படிக்கிற பசங்களுக்கு நாம் ஏன் தனியாக ஒரு இடம் கொடுக்கக் கூடாதுனு நினைச்சாங்க. அப்படியாக இந்த லேர்னிங் சென்டர் ஆரம்பிச்சாங்க. இது நம் தமிழக முதல்வர் ஐடியாதான்.

இதுல போட்டித் தேர்வுகளுக்கு படிக்கிற பசங்க வரலாம். காலையிலிருந்து மாலை வரை வந்தோம் போனோம்னு இருக்கமுடியாது. இதுக்கு ஸ்லாட் புக் பண்ணணும். மூன்றரை மணி நேரத்துக்கு 5 ரூபாய். இதை ஃப்ரீயாக தராமல் 5 ரூபாய்னு வாங்குறோம். அப்புறம் வேணும்னா மீண்டும் ஸ்லாட் புக் பண்ணிக்கலாம். 

காலை ஆறு மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். இன்னும் சீக்கிரமாக வேணும்னு கேட்டால் அப்பவும் நாங்க திறக்க தயாராக இருக்கோம். முதல்வரின் முதல் நோக்கம், ‘நீங்க படிங்க. அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கோம்’ என்பதுதான்.

இங்க ஏசி, இலவச வைஃபை, தவிர டிஜிட்டல் கன்டென்ட்டிற்காக மூணு கம்ப்யூட்டர் தந்திருக்கோம். அதையும் பயன்படுத்திக்கலாம். எல்லா புத்தகங்களும் இருக்கு. இவை நம்முடைய ஐஏஎஸ் அதிகாரிகளே ரெஃபர் பண்ணினது. இதைத் தவிர்த்து பசங்க கேட்குற புத்தகங்களையும் லிஸ்ட் எடுக்குறோம். அதையும் வைக்கிறமாதிரி ஐடியா. இப்ப 51 பேர் அமரலாம். ஒருநாளைக்கு 30 முதல் 35 பேர் வரை வர்றாங்க.

கோ-வொர்க்கிங் பிளேஸைப் பொறுத்தவரை ஸ்டார்ட்அப் பிசினஸ் ஆரம்பிக்கிறவங்க ஒரு கம்பெனி எடுத்து, அதுக்கு வாடகை, மின்கட்டணம் எல்லாம் செலுத்தினா மாசம் எப்படியும் 7 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் வரை ஆகிடும். அதனாலேயே பிசினஸ் ஆரம்பிக்கிறவங்க யோசிப்பாங்க. 

அவங்களுக்கு உதவுவதற்காக நம் முதல்வர் உருவாக்கினது இந்த ஐடியா. இதனால், நிறைய இளைஞர்களும், பெண் தொழிலமுனைவோர்களும் பிசினஸ் நோக்கி வருவாங்கனு செய்திருக்காங்க. இன்னும் மக்களுக்கு நிறைய செய்யணும்னு முதல்வர் நினைச்சிருக்காங்க...’’ என்றார் பொறுப்பாளர் ஹெலன்.   

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்