எதிலும் நம்பிக்கை இருந்தா வாழ்க்கை ஜாலியோ ஜிம்கானாதான்!



சொல்கிறார் பிரபுதேவா மாஸ்டர்

நடனம், நடிப்பு, கதை, திரைக்கதை,  இயக்கம், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என பன்முகங்களைக் கொண்டு, இன்றும் இந்தியாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் பிரபுதேவா. 
‘கோட்’, ‘பேட்ட ராப்’ படங்களைத் தொடர்ந்து, அவரது  நடிப்பில் வெளிவரத் தயாராக இருக்கிறது, ‘ஜாலியோ ஜிம்கானா’. தமிழில், ‘என்னம்மா கண்ணு’, ‘சார்லி சாப்ளின்’, ‘காதல் கிறுக்கன்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘வியாபாரி’ போன்ற படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் இப்படத்தை இயக்குகிறார்.

ஜாலியோ ஜிம்கானா...

இயக்குனர் சக்தி சிதம்பரம் சார் பத்தி நான் சொல்ல வேண்டியதில்ல. எந்த படமானாலும் ஜாலியா லைட் வெயிட்டா, அதே சமயம் ஒரு சின்ன சமூக மெசேஜோட கதை செய்யணும்னு நினைப்பார். அப்படித்தான் இந்தப்படமும். படம் முழுக்க ஆடியன்ஸ் சிரிச்சு கொண்டாடி மகிழணும். அதனால்தான் பெயரும் கூட ‘ஜாலியோ ஜிம்கானா’.

நடன சிகாமணி இப்படி படம் முழுக்க டெட் பாடியாக வரப் போறீங்களே?

ஆக்சுவலி கதை சொல்லும்போது எனக்கு வேறு ஒரு கேரக்டரும், படம் முழுக்க இன்னொருத்தர் டெட் பாடியாகவும் நடிக்கிறதாதான் இருந்தது. முழுக்கதையும் கேட்டுட்டு, ‘‘சார், நான் வேணும்னா டெட் பாடியா நடிக்கட்டுமா...’’னு கேட்டேன். ‘‘ நீங்க எப்படி சார் டெட் பாடியா நடிப்பீங்க, ஆடியன்ஸ் எப்படி ஏத்துக்குவாங்க...’’னு சக்தி சார் கேட்டார்.
நிறைய கதைகள், கேரக்டர்கள் செய்தாச்சு. ஒருமுறை இப்படி நடிச்சு பார்ப்போமேன்னு தோணுச்சு. உடனே இதை இன்னும் வேறு மாதிரி ஒரு கதையாக எழுதி எடுத்துட்டு வந்தார் சக்தி சார். நான் டெட் பாடியாகவும், என்னைச் சுற்றி நான்கு பெண்களும், அவர்களைச் சுற்றி நடக்கும் கதைன்னும் கொண்டு வந்தார். அந்தக் கதையைக் கேட்கும்போது கலகலப்பாகவும், ஜாலியாகவும் இருந்துச்சு.

இந்த கேரக்டரில் என்னென்ன சவால் இருந்தது?

படம் முழுக்கவே ஒன்றரை நாட்களில் நடந்து முடிகிற மாதிரிதான் இருக்கும்.  காரணம், டெட் பாடியை அதிகபட்சம் ஒன்றரை நாள்தான் வைத்திருக்கலாம். அதை அடிப்படையாக வைத்துதான் இந்தக் கதையே நடக்கும். எனக்கு ஆக்டிவாக இருக்கிற மாதிரி பத்து நிமிடங்கள்தான் படத்தில் காட்சிகள் இருக்கு. அதுவும் கூட வேண்டாம் அப்படின்னு சொன்னேன். ஆனால், சக்தி சார் ‘‘இதுவும் இல்லைன்னா மக்கள் ஏத்துக்க மாட்டாங்க...’’னு சொன்னார்.

அதற்குள்தான் படத்தில் நீங்கள் பார்க்கும் பாடல்கள், நான் நடனம் ஆடுகிற காட்சிகள் எல்லாம் இருக்கும். ஒரு சில காட்சிகளில் டெட் பாடி நடனம் ஆடினால் எப்படியிருக்கும்னு யோசிச்சு காட்சிகள் அமைச்சிருக்கார் சக்தி சார். இந்த டெட் பாடியாக நடிக்கிற கேரக்டரை நான் செய்யறதுக்கு முன்பே நாகேஷ் சார் ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடிச்சிட்டார். அவர் செய்ததையே கொஞ்சம் படம் முழுக்க நான் செய்திருக்கேன். நடிப்பில் நாகேஷ் சார் எல்லாம் மாஸ்டர். அவர் வழியில்தான் இந்த கேரக்டரையும் நான் அணுகியிருக்கேன்.

உங்களுக்கும் இயக்குனர் சக்தி சிதம்பரம் சாருக்கும் அப்படி என்ன கெமிஸ்ட்ரி?

‘சார்லி சாப்ளின்’ ஃபர்ஸ்ட் பார்ட் ஆரம்பிக்கிறதுக்கு முன்பிருந்தே சக்தி சாரை எனக்கு நல்லா தெரியும். நல்ல நண்பர். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல நாங்க தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் இணைப்பில் இருக்கோம். தொடர்ந்து ‘சார்லி சாப்ளின் 2 ’ படத்திலும் சேர்ந்து வேலை செய்தோம். இதோ இப்போ ‘ஜாலியோ ஜிம்கானா’. நிச்சயம் என்னுடைய கரியரில் ‘சார்லி சாப்ளின்’ படத்தை தவிர்க்கவே முடியாது.

35 வருட அனுபவம் என்ன சொல்லிக் கொடுத்திருக்கு?

எதையும் நம்பினால் அது தானாகவே நடக்கும். என் வாழ்க்கையில் சினிமாவில் அறிமுகமானது துவங்கி, எதுவும் நான் திட்டமிடலை. எல்லாமே தானாக நடந்ததுதான். மேலும் எங்களுக்கான அடிப்படையை ஏற்கனவே எங்க அப்பா போட்டு வைத்திருந்தார். அதில் எங்களுடைய பெஸ்ட் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து இப்போது வரை பயணிச்சிட்டு இருக்கோம். நம்பணும். நமக்கு ஒரு நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை இருந்தாலே எந்த துறையிலும் ஜெயிக்கலாம்.

உங்கள் அனுபவத்தில் சினிமாவில் நீங்கள் பார்த்த மிகப்பெரிய மாற்றம் என்ன?

பெரிய மாறுதல்களா எதுவும் நான் பார்க்கலை. ஆனால், ஒவ்வொரு 10 வருஷத்துக்கு ஒரு தடவை நிச்சயம் எல்லாத் துறையுமே ஒரு மாற்றத்தை சந்திக்கும். அப்படித்தான் விசிடி, டிவிடி காலம். அடுத்து இப்போ ஓடிடி காலம். ஓடிடி காலம் சினிமாவை இன்னமும் நமக்கு நெருக்கமா மாற்றியிருக்கு. மொழி கடந்து தேசிய,  உலகளாவிய படங்கள் உருவாக ஆரம்பிச்சிருக்கு. இது நல்ல மாற்றம். ஆனால், இதெல்லாம் நடக்கும் என்கிற புரிதல் இருந்துச்சு.

இயக்குனராக அடுத்த படம் எப்போது?

கதைகள் இருக்கு அதற்கான ப்ராசஸ்  நடந்துகிட்டுதான் இருக்கு. நான் ஆரம்பத்தில் சொன்னது போல தான் எதுவுமே நான் திட்டமிடமாட்டேன். தானாக அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் அறிவிப்பும் வரும்.

மீண்டும் அபிராமியுடன் ஒரு படம்... மற்ற நடிகர்கள் பற்றி சொல்லுங்க?

சக்தி சார் படம்ன்னாலே நிச்சயம் ஒரு பெரிய பட்டாளமே இருப்பாங்க. இந்தப்படமும் அப்படித்தான். நான் ‘சார்லி சாப்ளின்’ படத்தில் நடிக்கும்போது அவங்களுக்கு 18 வயது. ரொம்ப சின்னப் பொண்ணா வந்து நின்னாங்க. இன்னைக்கு அவ்வளவு அனுபவம், டெக்னிக்கலா நிறைய விஷயம் அவங்களுக்குத் தெரியுது. எனக்கு அவ்வளவு ஆச்சரியமா இருந்துச்சு. சில காட்சிகளில் லைட்டிங் எல்லாம் கூட அவங்க பார்த்து சொல்றாங்க.

என்ன நீங்க லேடி வெர்ஷன் கமல் சார் மாதிரி பேசுறீங்க அப்படின்னு கேட்டேன். இந்தப் படத்துல அவங்களுக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர். மடோனா செபஸ்டியன் கூட இதுதான் முதல் படம். சிங்கிள் ஷாட் நாயகின்னுகூட சொல்லலாம். இவங்க இல்லாம யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு காமெடி ரொம்ப நல்லா வந்திருக்கு,  ஒய்.ஜி மகேந்திரன், இன்னும் நிறைய பேர் நடிச்சிருக்காங்க.

ஷாலினி நியூட்டன்