பிரிக்ஸ் vs நேட்டோ



மூன்றாம் உலகப்போருக்கு முன்னோட்டம்

சமீபத்தில் ரஷ்யாவின் கசான் நகரில் 16வது ‘பிரிக்ஸ்’ மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையில் கடும்போர் நடந்துவரும் சூழலில், இந்த மாநாடு நடந்திருப்பது உலக நாடுகள் அனைத்தையும் உற்றுநோக்கச் செய்துள்ளது.
இந்த உற்று நோக்குதலுக்கு இருநாடுகளுக்கு இடையிலான போர் மட்டுமே காரணமல்ல. உள்ளுக்குள் பல விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஐந்து நாடுகள் கொண்ட ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் இப்போது மேலும் சில நாடுகள் இணைந்துள்ளன. இதனால் மேற்கத்திய நாடுகள் அல்லாத ஒரு கூட்டமைப்பாக ‘பிரிக்ஸ்’ மேலும் விரிவாக்கம் கண்டிருப்பது ஒரு காரணம்.

ஏனெனில் ரஷ்யா, உக்ரைன் போருக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ‘நேட்டோ’ அமைப்புடன் உக்ரைன் சேர விரும்பியதுதான். மேற்கத்திய நாடுகள் உருவாக்கிய ‘நேட்டோ’ ராணுவக் கூட்டணியில் உக்ரைன் சேர்வதை புதின் எதிர்த்தார். மேற்கத்திய நாடுகளின் அதிகாரத்தை அவர் விரும்பவில்லை.
இந்நிலையில்தான் அவர் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை வலுப்
படுத்தத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்கா இல்லாத ஒரு உலகத்தை அவர் கட்டமைக்க முயல்வதாகக் கூறப்படுகிறது. அப்படியாக பிரிக்ஸில் இப்போது மேலும் நான்கு நாடுகள் இணைந்துள்ளன. இன்னும் பல நாடுகள் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன.

இதனால்தான் ‘பிரிக்ஸ் vs நேட்டோ?’ என்ற தலைப்பில் இரு அமைப்புகளின் பலம் பற்றி பலரும் இணையத்தில் எழுதி வருகின்றனர். குளோபல் நார்த் vs குளோபல் சௌத் என உலக நாடுகள் இரண்டாக பிளவுபட்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றனர் சில நிபுணர்கள்.‘பிரிக்ஸ்’ மாநாட்டில் முன்மொழியப்பட்ட 134 தீர்மானங்களில்கூட ‘வாய்ஸ் ஆஃப் குளோபல் செளத்’ என்பதே பிரதானமாக இருந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலை உலகளாவிய அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பார்க்கும்முன் பிரிக்ஸ், நேட்ேடா பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வது அவசியம்.

*நேட்டோ (NATO)

 நேட்டோ என்பது வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை இரண்டாம் உலகப் போர் நடந்தது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகள் வலுவானதாக இருந்தன. இந்த உலகப் போர் முடிந்ததும் நாடுகளுக்கிடையே பனிப்போர் தொடங்கியது.

குறிப்பாக சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து தன் படைகளைப் பின்வாங்க மறுத்தது. 1948ல் பெர்லினை முற்றுகையிட்டது. இந்நிலையில் ஐரோப்பாவில் சோவியத் யூனியனின் ஆதிக்கத்தைத் தடுக்க பல நாடுகளும் நினைத்தன.இதனால் 1947ம் ஆண்டு பிரிட்டனும், ஃபிரான்ஸும் டன்கிர்க் நகரில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டன. பின்னர், இந்த நாடுகள் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ் நகரில் பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையை ஏற்படுத்தின.இந்நிலையில் சோவியத் யூனியனின் விரிவாக்கத்தைத் தடுக்க, 1949ம் ஆண்டு அமெரிக்காவுடன் இந்த நாடுகள் அனைத்தும் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கின. அதுவே ‘நேட்டோ’ (North Atlantic Treaty Organisation).

அதாவது மேற்சொன்ன ஐந்து நாடுகளுடன் அமெரிக்கா, கனடா, இத்தாலி, ஐஸ்லாந்து, நார்வே, போர்ச்சுக்கல், டென்மார்க் ஆகிய நாடுகளும் இணைந்தன. மொத்தமாக 12 நாடுகள் கொண்டதாக நேட்டோ அமைப்பு உருவானது.ஒரு பொதுவான பாதுகாப்புக் கொள்கையில் பணியாற்றுவதற்கான ஆணையைக் கொண்ட இராணுவக் கூட்டணியே இந்த ‘நேட்டோ’. அதாவது, ‘நேட்டோ’ உறுப்பு நாடு மீது உறுப்பினராக அல்லாத வேறொரு நாடு படையெடுத்தால், அது அனைத்து நேட்டோ உறுப்பு நாடுகளின் மீதான படையெடுப்பாகவே கருதப்படும்.

உடனே அனைத்து ‘நேட்டோ’ உறுப்பு நாடுகளும் படையெடுப்பிற்கு எதிராகச் செயல்படும். இதுவே ‘நேட்டோ’ ராணுவக் கூட்டணி. இதன்பிறகு அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இரு துருவங்களாக செயல்பட ஆரம்பித்தன. இரண்டு நாடுகளுமே சூப்பர்பவராக விளங்கின.இந்நிலையில் சோவியத் யூனியனும் 1955ம் ஆண்டு வார்சா ஒப்பந்தம் மூலம் நேட்டோவுக்கு பதிலடி கொடுத்தது. 

அதாவது அல்பேனியா, ரோமானியா, செக்கோஸ்லோவாக்கியா, போலந்து, பல்கேரியா, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, சோவியத் யூனியன் இணைந்து ‘நேட்டோ’ போல பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டுக் கொண்டன.

ஆனால், 1991ல் சோவியத் யூனியன் சிதைந்தது. அது ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ​​எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் என 15 நாடுகளாகப் பிரிந்தது.அமெரிக்கா ஒன் அண்ட் ஒன்லி சூப்பர்பவராக மாறியது. இந்நிலையில் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகள் பாதுகாப்பிற்காக ‘நேட்டோ’விற்குள் இணைய ஆரம்பித்தன. லாட்வியா, லிதுவேனியா, எஸ்டோனியா ஆகிய நாடுகள் 2004ம் ஆண்டு இணைந்தன.

2008ம் ஆண்டு ஜார்ஜியாவுக்கும், உக்ரைனுக்கும் உறுப்புரிமை வழங்கப்பட்டது. இருந்தும் அவர்கள் ‘நேட்டோ’வில் சேரவில்லை. நேச நாடுகளாக இருக்கின்றன. காரணம், புதின் ‘நேட்டோ’ விரிவாக்கத்தை எதிர்த்து வருவதுதான்.ஏனெனில், ஒருவேளை உக்ரைன் ‘நேட்டோ’ உறுப்பினராக சேர்ந்தால் ‘நேட்டோ’ படைகள் ரஷ்யாவை சுற்றி வளைத்து
விடும். இது ரஷ்யாவிற்கு பேராபத்து என புதின் நினைக்கிறார். ‘நேட்டோ’ அமைப்பு ரஷ்யாவின் அண்டை நாடுகளில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என அவர் விரும்புகிறார்.

*பிரிக்ஸ் (BRICS)

 ஆனால், ‘பிரிக்ஸ்’ ராணுவக் கூட்டணி கிடையாது. அரசியல் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நம்பிக்கையில் உருவானது. இருந்தும் கடந்த இரண்டு தசாப்தங்களாக முக்கிய அரசியல் சக்தியாக இந்த அமைப்பு உருமாறியுள்ளது.

குறிப்பாக ‘பிரிக்ஸ்’ அமைப்பு மேற்கத்திய நாடுகள் அல்லாத ஒரு கூட்டமைப்பாகும். மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிர் எடையைக் கொண்டது. சர்வதேச நிறுவனங்கள் மேற்கத்திய சக்திகளின் ஆதிக்கத்தால் வளரும் நாடுகளுக்கான சேவையை நிறுத்திவிட்டன என்ற அடிப்படையில் ‘பிரிக்ஸ்’ அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதனை கடந்த 2009ம் ஆண்டு ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் இணைந்து ஏற்படுத்தின. அப்போது ‘பிரிக்’ என்றே இருந்தது. இவர்கள் முதல் மாநாட்டையும் நடத்தினர். பின்னர் 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா இந்த அமைப்பில் இணைய ‘பிரிக்ஸ்’ என்றானது.

தற்போது ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் கைகோர்த்துள்ளன. சவுதி அரேபியா இணைவதாக இருந்தது. ஆனால், இதுவரை இணையவில்லை. அர்ஜென்டினா இணைவதாக இருந்த நேரத்தில் அங்கே பதவியேற்ற புதிய அரசு இணைய மறுத்துவிட்டது.துருக்கி இந்தக் கூட்டமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ளது. ஏற்கனவே துருக்கி ‘நேட்டோ’விலும் 1952ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.

இது நேட்டோவிற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட அமைப்பு கிடையாது என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் ‘பிரிக்ஸி’ல் உள்ள இந்தியாவும், ஈரானும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) இருக்கின்றன.அதாவது ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து 1996ம் ஆண்டு அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்த அமைப்பை ஏற்படுத்தின. இது ‘நேட்டோ’ போலான ஓர் அமைப்புதான். ஆனாலும், இது ராணுவக் கூட்டணி இல்லை என்கிறது ‘SCO’ அமைப்பு. இதில் 2017ம் ஆண்டு இந்தியாவும் முழு உறுப்பினராகியது.

‘பிரிக்ஸ்’ அமைப்பில் உள்ள சில நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் இருப்பதால் ‘நேட்டோ vs பிரிக்ஸ்’ என்பதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், ‘பிரிக்ஸி’ன் கொள்கையில் முக்கியமானது டாலரை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்பது. அத்துடன் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஜி7, ஐநா பாதுகாப்பு கவுன்சில் போன்ற பலதரப்பு குழுக்களில் மேற்கத்திய ஆதிக்கம் இருப்பதால் அதற்கு மாற்றை உருவாக்க ‘பிரிக்ஸ்’ முயல்கிறது.

‘பிரிக்ஸி’ல் உள்ள ஐந்து நாடுகள் உலக நிலப்பரப்பில் 30 சதவீதத்தைக் கொண்டுள்ளன. உலக மக்கள்ெதாகையில் 45 சதவீதத்தைப் பெற்றுள்ளன. ஆப்பிரிக்காவில் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு தென்னாப்பிரிக்கா. உலக அளவில் மக்கள்தொகை, பரப்பளவு, உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்டவற்றில் முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகள் பிரேசில், இந்தியா, சீனா. ரஷ்யாவும் ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ளது.

ராணுவமாக பார்த்தால் ‘நேட்டோ’வைவிட ‘பிரிக்ஸ்’ அதிக துருப்புகளைக் கொண்டுள்ளது. இதைக் கொண்டு ‘பிரிக்ஸ் vs நேட்டோ’, மூன்றாம் உலகப் போருக்கான முன்னோட்டமா எனச் செய்திகள் பரபரக்கின்றன.‘நேட்டோ’விற்கு எதிராக ‘பிரிக்ஸ்’ உருவாக்கப்படவில்லை என்றாலும் அதன் விரிவாக்கம் புதிய டென்ஷனை உருவாக்கியுள்ளது. ஆனால் இதன்மூலம் சீனாவும் ரஷ்யாவுமே பலனடைய நினைக்கின்றன என்கின்றனர் நிபுணர்கள்.

அதாவது சீனா, ஆப்பிரிக்காவில் தன் செல்வாக்கை அதிகரிக்க நினைக்கிறது என்றும், ரஷ்யாவோ உக்ரைன் போரால் அதன்மீதுள்ள பொருளாதாரத் தடையை முறியடிக்க நினைக்கிறது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.அதுமட்டுமில்லாமல் கசான் மாநாட்டின் மூலம் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை மேற்கத்திய நாடுகளுக்கு புதின் உணர்த்திவிட்டார் எனவும் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர ‘பிரிக்ஸ்’ மற்றும் ‘நேட்டோ’ அமைப்புகள் வெவ்வேறு நோக்கங்கள் கொண்டவை என்றும், அந்த அமைப்புகளுக்குள் இருக்கும் நாடுகளிடையே வெவ்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியாவேகூட மேற்கத்திய நாடுகளுடன் இணக்கமாக இருக்கவே விரும்புவதாகக் குறிப்பிடும் அவர்கள், கசான் மாநாட்டில் புதின், இந்தியப் பிரதமர் மோடியின் மேற்கோளை குறிப்பிட்டதைப் பகிர்கின்றனர். அது, ‘பிரிக்ஸ் மேற்கத்திய நாடுகளுக்கான எதிர்ப்பு குழு அல்ல; மேற்கத்திய நாடுகள் அல்லாத ஒரு குழு’ என்பதே!

பேராச்சி கண்ணன்