ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்!



சொல்கிறார் நவீன் சந்திரா

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா. இவருடைய படங்களுக்கு தமிழிலும் நல்ல வரவேற்பு உண்டு. இப்போது ‘லெவன்’ படம் ரிலீஸுக்கு வெயிட்டிங்.
புரொமோஷனுக்காக சென்னை வந்தவரிடம் பேசினோம்.  ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’, ‘ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்’ என்று ஓடிடியில் உங்களுக்கு நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளதே?

அப்படியா! ஒரு படத்தோட வெற்றிக்கு எப்போதும் கதை அமைவது முக்கியம். அடுத்து அதுல முக்கியமான ரோல் கிடைப்பது முக்கியம். அப்படி ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ல  முக்கியமான கேரக்டர் கிடைச்சது. அதனால் பெர்ஃபாமன்ஸ் பண்ண முடிஞ்சது.நல்ல கதையில் ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல்ன்னு தேட வேண்டிய அவசியமில்லை. கார்த்திக் சுப்புராஜ் சார் இயக்கத்தில் நடிச்சது பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துச்சு. 
‘ரத்னா’ என்ற கேரக்டர் தமிழ் சினிமாவுல எனக்கு நல்ல பேர் கொடுத்துச்சு.‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ வெப் சீரிஸும் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்துச்சு. வயசு வித்தியாசம் இல்லாம எல்லோரும் பாராட்டினார்கள். அதற்கு என்னுடைய இயக்குநர் நந்தினி மேடத்துக்கு நன்றி சொல்லணும். கடைசியா பேட்டி கொடுக்கும்போது போலீஸ் கதை பண்ணமாட்டேன்னு சொல்லியிருந்தீங்க….

கடந்த பேட்டியில் போலீஸ் கதையை தவிர்க்கலாம்னு இருக்கேன்னு சொன்னது உண்மை. ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ பன்ணும்போது இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ்  இந்தக் கதையைச் சொன்னார். கதை கேட்ட அந்த சமயத்திலேயே இந்தப் படத்தை பண்ணணும்னு முடிவு பண்ணிட்டேன். அந்தளவுக்கு நல்ல கதை. 

ஆனால், போலீஸ் கதை என்பதுதான் சின்ன நெருடலைக் கொடுத்துச்சு. ஆனாலும் இந்தக் கதையை மிஸ் பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன். ‘லெவன்’ படத்தோட கதை என்னுடைய முடிவை பரிசீலனை பண்ணவெச்சதுன்னு சொல்லலாம். அந்தளவுக்கு அற்புதமான கதை. இயக்குநர் லோகேஷ் தியேட்டர்ல திரைப்படம் பார்ப்பதுபோல் இரண்டரை மணி நேரம் மிக அழகாக கதை சொன்னார்.

நான் என்ன நினைச்சேன்னா கதை யூனிவர்சலா நல்லாயிருக்கு. காக்கி டிரஸ் மட்டும்தான் பழசு. ஆனால், அந்த டிரஸ்ஸை போடுற ஆளுடைய கேரக்டர் வித்தியாசமா இருக்கு. இது நான் பண்ணவேண்டிய படம்னு கதை மீது முழு நம்பிக்கை வெச்சு ஓ.கே.சொன்னேன். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில், ஒரே சமயத்தில் ஷாட் பை ஷாட் 51 நாளில் எடுத்தோம். அதாவது 51 நாளில் இரண்டு படத்தை எடுத்தோம். அதற்காக நிறைய முன் ஆயத்த  வேலைகள் செய்தோம்.

தயாரிப்பு நிறுவனம் இயக்குநர் கேட்ட எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துச்சு. இந்தப் படத்தோட ஷூட் நடக்கும் போது சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுச்சு. எனக்கு கால்ஷீட்ல பிரச்சனை ஏற்பட்டுச்சு. ஆனாலும் தயாரிப்பு நிறுவனம் எல்லாத்தையும் மிக அழகா ஹேண்டில் பண்ணினாங்க. அந்தவகையில் ‘லெவன்’ எனக்கு பெரிய அனுபவம்னு சொல்லலாம்.

 ‘லெவன்’ என்ன மாதிரியான படம்?

டைட்டிலில் ஓரளவுக்கு கதை புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். சஸ்பென்ஸ் கதை என்பதால் கதையை முழுசா சொல்ல முடியாது. தன்னுடைய புத்திசாலித்தனத்தால் கொலையாளியிடமிருந்து பதினொரு பேரை ஹீரோ எப்படி காப்பாத்துறார் என்பதுதான் படத்தோட கதை. கதையில் சில சம்பவங்கள் வரும். 

அது நீங்க ஆச்சர்யப்படுமளவுக்கு, சீட் நுனியில உட்கார்ந்து பரவசப்படுமளவுக்கு சுவாரஸ்யமா இருக்கும். த்ரில்லர், மர்டர் மிஸ்ட்ரி கதையில் அடுத்து என்ன நடக்கும்ன்னு ஈசியா யூகிக்க முடியும். இப்போது ஓடிடியிலும் பல த்ரில்லர் கதைகள் வருது. ஆடியன்ஸ் எப்போதும் ஸ்மார்ட். அவர்கள் டிவிஸ்ட் எந்த இடத்துல வரும்னு யூகிச்சுடுவாங்க. இதுல கதையை யூகிக்க முடிஞ்சாலும் அது ஷாக்கிங்கா இருக்கும்.   

எனக்கு புத்திசாலியான போலீஸ் அதிகாரி வேடம். துப்பாக்கியை யூஸ் பண்ணாம டெக்னிக்கல் அம்சங்களை யூஸ் பண்ணுவார். த்ரில்லர் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இது ரொம்ப பிடிக்கும்.
 உங்க டீம்ல இருக்கிறவங்களைப் பற்றி சொல்லுங்கள்?

ரியா ஹரி, அபிராமி, திலீபன், சஷாங், ‘ஆடுகளம்’ நரேன், ரித்விகான்னு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கு. எல்லோருக்கும் ஸ்பேஸ் இருக்கும் என்பதால் எல்லோரும் தி பெஸ்ட் பெர்
ஃபாமன்ஸ் கொடுத்தார்கள்.இமான் சார் படத்தை வேற லெவலுக்கு கொண்டு போனார். இயக்குநர் லோகேஷ் அற்புதமான டைரக்டர். சுந்தர்.சி சாரிடம் சினிமா பயின்றவர். கடினமான உழைப்பாளி. இரண்டு நாள் தொடர்ந்து ஷூட் முடிச்சுட்டு வந்த சமயத்துல இந்தக் கதையைக் கேட்டேன்.

அப்படியொரு சிச்சுவேஷன்ல கதை கேட்கணுமான்னு தோணுச்சு. கதை கேட்டுட்டா முடிவுக்கு வரலாம்னு கதை கேட்டேன். சொன்ன மாதிரியே எடுக்கவும் செய்தார். படத்துல ஒரு விபத்து காட்சி வரும். அதை எப்படி சொன்னாரோ அப்படியே சிங்கிள் ஷாட்ல எடுத்தார். அவருடைய திட்டமிடல் பிரம்மிப்பா இருந்துச்சு.

ஒளிப்பதிவாளர் கார்த்தி ஒர்க் பேசப்படும். இமான் சார் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவருடைய இசை படத்துக்கு பெரிய பலமா இருந்துச்சு. தயாரிப்பாளர்கள் அஜ்மல்கான், ரியா ஹரி தமிழ், தெலுங்கு என
இரு மொழிகளையும் விட்டுக்கொடுக்காம பிரம்மாண்டமா செலவு செஞ்சாங்க.

 ‘கேம் சேஞ்சர்’ அனுபவம் எப்படியிருந்துச்சு?

‘கேம் சேஞ்சர்’ அடுத்த வருஷம் ஜனவரி ரிலீஸ். ஷங்கர் சார் படம் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவர் படத்துல நடிப்பது பெரிய பாக்யம். படத்துல எனக்கு வித்தியாசமான வேடம், வித்தியாசமான லுக் இருக்கும். நவீன் சந்திரா படத்துல எந்த இடத்துல வர்றார்ன்னு தேடுவீங்க. அப்படியொரு  சேஞ்ச் இருக்கும். சசிகுமார் சாருடன் ‘எவிடன்ஸ்’, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி-2’ ன்னு சில கமிட்மென்ட் இருக்கு.

 ஒரு டெம்ப்ளேட்டுக்குள்ள வராமல் உங்களுடைய ஸ்டைல் இதுதான்னு சொல்ற மாதிரி வெப் சீரிஸ் பண்றீங்க. ‘சத்யபாமா’ மாதிரி படம் பண்றீங்க.. என்ன சார் உங்க திட்டம்?
எந்த திட்டமும் இல்லாமல் இருப்பதுதான் என்னுடைய திட்டம். உண்மையை சொல்லணும்னா கொரோனாவுக்கு முன்னாடி, அதாவது சில வருஷங்களுக்கு முன்னாடி இந்த மாதிரி படம், இந்த மாதிரி கேரக்டர் பண்ணணும், குறிப்பிட்ட சில இயக்குநர்கள் படம் செய்யணும்ன்னு நிறைய ப்ளான் வெச்சிருந்தேன்.

அந்த சமயத்தில் நல்ல கதைகளும் வந்துச்சு. நிறைய கேரக்டர் மிஸ் பண்ணிட்டேன். அந்த சமயத்துலதான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ல ரத்னா கேரக்டரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சார் கொடுத்தார். அதுல நல்ல நேம் கிடைச்சது. எனக்கு மட்டுமல்ல, என்னைப்போன்ற ஹீரோக்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் மாதிரியான இயக்குநர்கள் படங்களில் நடிக்கும்போது பெரிய வெளிச்சத்தைக் கொடுக்கும்.  

பொதுவா என்னைத் தேடி வரும் கதையில் ஹீரோ, வில்லன் என்று பார்க்காமல் கதையில் என்னுடைய கேரக்டருக்கு எவ்வளவு ஸ்கோப் இருக்குன்னு பார்ப்பேன். திரைக்கதையில் என்னுடைய கேரக்டர் எந்தளவுக்கு கலந்திருக்குன்னு பார்ப்பேன். அப்படித்தான் படங்களை செலக்ட் பண்றேன். ஓடிடி, தியேட்டர் என்று எனக்கான நல்ல வாய்ப்புகள் வரும்போது தி பெஸ்ட் கொடுக்க முயற்சி செய்வேன்.

எஸ்.ராஜா