இந்தியாவில் மத்திய தர வர்க்கம் குறைந்து வருகிறதா?



ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

பல நாடுகளின் தலையெழுத்தை தீர்மானிப்பதில் மிடில் கிளாஸ் எனச் சொல்லப்படும் மத்திய தர வர்க்கத்தினருக்குப் பெரும் பங்கு இருந்திருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியிலும் முக்கியமான ஓர் இடத்தை மத்திய தர வர்க்கத்தினர் வகித்து வருகின்றனர். சமீப நாட்களாக இந்தியாவில் மத்திய தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சி செய்திகள் வருகின்றன. அதாவது மத்திய தர வர்க்கத்தினர், கீழ் மத்திய தர வர்க்கத்தினராக மாறி வருகின்றனர். உண்மையில் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்தோம்.

பொதுவாக மத்திய தர வர்க்கம் நன்றாக இருக்கிறது என்றால் முதலில் அப்பட்டமாக தெரியும் ஒரு துறை, நுகர்வுப் பொருட்கள் துறைதான். இந்த நுகர்வுப் பொருட்கள் பண்டிகை காலங்களில் கூட விலைபோகாமல், குடோன்களில் தூங்குவதாக சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். நுகர்வுப் பொருட்களுக்கு அடுத்து டூ வீலர் மற்றும் கார் போன்றவை. பொதுவாக மிடில் கிளாஸ் வளர்ச்சியுறுகிறது என்றால் அந்த ஆண்டில் இந்த இரு பொருட்களின் விற்பனையும் படுஜோராக இருக்கும்.

ஆனால், இதிலும் கியர் விழவில்லை. ‘‘அவங்க எல்லாம் மலிவான பேசஞ்சர் கார்களை விட்டுவிட்டு, பிரீமியம் கார்களான எஸ்.யு.வி கார்களை நோக்கிப் போயிருப்பார்கள்’’ என்று சப்பைக் கட்டுகிறவர்களுக்கு, மாருதி கார் கம்பெனியின் ஓனர், ‘‘பொய் சொன்னாலும் கொஞ்சம் பாத்து சொல்லுங்கப்பா. எந்த மிடில் கிளாஸும் பேசஞ்சர் காரிலிருந்து எஸ்.யு.வி காருக்கு ஒரேயடியாக தாவியதில்லை. 

எஸ்.யு.வி கார் விற்பனை கூடியிருக்கிறது என்றால் அந்தக் காரை வாங்கும் பணக்காரர்கள் கூடியிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்...’’ என்றிருக்கிறார். இந்த மிடில் கிளாஸ் சுருங்கிய பிரச்சனை இப்போது இந்தியாவில் பணக்காரர்கள் பற்றிய சிந்தனைக்கு வழிவகுத்திருக்கிறது.

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு எல்லா நாடுகளுமே கொஞ்சம் வளர்ச்சியை நோக்கிச் சென்றன. இந்தியாவும் அதில் அடக்கம். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அந்த நாட்டின் ஜி.டி.பி கொண்டு கணக்கிடுவார்கள். ஜி.டி.பி என்றால் ஒரு நாட்டில் உற்பத்தியாகும் எல்லாப் பொருட்களின் விலை மதிப்பு. சரி. 

இந்தியாவில் கொரோனாவுக்குப் பிறகு ஜி.டி.பி உயர்ந்திருக்கிறது. ஜி.டி.பி உயர்ந்தால் ஒவ்வொரு தொழிலாளியின் வருமானமும் உயரும். வருமானம்  உயர்ந்தால் வாங்கும் திறன் அதிகமாகும். வாங்கும் திறன் அதிகமானால் நுகர்வுப் பொருட்களை வாங்குவதும் அதிகமாகும்.

ஆனால், நுகர்வுப் பொருள் வாங்குவது குறைந்துபோய் இருக்கிறதே.ஒருவேளை வருமானத்தை வங்கியில் பதுக்குகிறார்கள் என்று போலியான பொருளாதாரவாதிகள் சொன்னால், வங்கியில் டெபாசிட் செய்வதும் குறைந்திருப்பதாக அரசு புள்ளிவிபரம் காண்பிக்கிறதே என்கிறார்கள் விமர்சகர்கள்.இந்தியா மற்றும் சீனாவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட நெருக்கமானது. ஆனால், 2017ம் வருடத்தின் கணக்குப்படி இந்தியாவின் மிடில் கிளாஸ் தொகை 10 கோடி சொச்சம். ஆனால், சீனாவின் மிடில் கிளாஸ் தொகை 70 கோடி.

இதன்படி சீனாவில் பாதிக்குப் பாதிப் பேர் மிடில் கிளாஸ். இந்தியாவில் ஒருகாலத்தில் சுபிட்சமாக இருந்த மிடில் கிளாஸ் வர்க்கம் சுருங்கிப் போனார்கள் என்றால் எங்கே அவர்கள் போனார்கள் என்று கேட்கலாம். அவர்கள் எல்லாமே ‘லோயர் மிடில் கிளாஸ்’ அல்லது கீழ் மத்திய தர வர்க்கத்தினராக மாறிவிட்டார்கள் என்றால் ஆச்சர்யம்தானே.

மத்திய தர வர்க்கம், கீழ் மத்திய  தர வர்க்கமாகவும், இன்னும் கீழாகவும் மாறிப்போனது.  பொதுவாக பணக்காரன், பணக்காரனாக ஆகிக்கொண்டே இருக்கிறான், ஏழை ஏழையாகிக்கொண்டே இருக்கிறான் என்று சர்வசாதாரணமாக பலர் குறிப்பிட்டுப் பேசுவார்கள். இந்த சொலவடையில் மிடில் கிளாஸ் வர்க்கம் பற்றிய பேச்சு இருக்காது. ஆனால், இன்று இந்தியாவில் இந்த இரண்டுமே நடப்பதுடன், மூன்றாவதாக  மிடில் கிளாஸ் வர்க்கமும் பின்னடைவைச் சந்திப்பதால் இனி இந்த சொலவடைக்குப் பொருள் ஏதும் இல்லை.

டி.ரஞ்சித்