சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்!



‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.
‘இயற்கைக்கான உலகளவிலான நிதியம்’ (World wide fund for Nature) எனும் அமைப்பின் ‘த லிவிங் ப்ளானட் இண்டெக்ஸ்’ (the living planet index) எனும் அறிக்கைதான் உலகம், இந்தியா மற்றும்
சென்னை தொடர்பாக இருக்கும் சதுப்பு நிலங்களின் தலையெழுத்தை ஆராய்ந்து இப்படி ஒரு குண்டை சென்னை மேல் போட்டிருக்கிறது.

சென்னை பற்றி இந்த அறிக்கை என்ன சொல்கிறது?

‘சதுப்பு நிலம் என்பது நிலத்தடி நீர்வளத்தை பாதுகாப்பதோடு, வெள்ளத் தடுப்பாகவும் திகழ்கின்றன. நீர்வளத்தை பாதுகாப்பதால் நீர் மட்டுமல்லாது பல்வேறு வறட்சிகள் தடுக்கப்படுகின்றன.
இந்த ரீதியில் எடுத்துக்கொண்டால் சென்னையில் இப்போது வெறும் 15 சதவீத சதுப்பு நிலங்கள்தான் மிச்சமாக இருக்கிறது. சென்னையில் 2015 மற்றும் 2023களில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களுக்கு இந்த சதுப்பு நிலங்களின் அழிவே காரணம்...’ என்று சொல்லும் அந்த அறிக்கை சதுப்பு நிலங்களின் பயன்கள் குறித்தும் பட்டியலிடுகிறது.

‘நீர் மாசை நீக்குகிறது. வண்டல் மண்ணை தடுத்து வைக்கிறது. வலசை பறவைகளின், விலங்குகளின் வாழிடமாக இருக்கிறது. விதவிதமான தாவரங்களை உற்பத்தி செய்கிறது. மொத்தமாக சொன்னால் மழை நீரை பஞ்சு மாதிரி பொத்தி பொத்தி பொதிந்து வைத்துக்கொண்டிருக்கிறது’ என்று சொல்கிறது.சென்னையின் முக்கியமான சதுப்பு நிலங்கள் பள்ளிக்கரணை, பழவேற்காடு மற்றும் எண்ணூர் கடற்கழி எனும் எண்ணூர் க்ரீக் (Ennore creek) ஆகியவை. பள்ளிக்கரணையை எடுத்துக்கொண்டால் அதில் சுமார் 10 சதவீத நிலப்பரப்பே இப்போது மிஞ்சியிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தப்படுகிறார்கள்.

எண்ணூர் கடற்கழிமுகத்திலும் தனியார் நிறுவனங்களின் துறைமுக அறிமுக பணியால் மக்கள் பயந்துகிடக்கிறார்கள். பழவேற்காடும் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது.
இந்நிலையில் சுற்றுச்சூழல் குறித்து தொடர்ச்சியாக எழுதி வரும் வனவிலங்கு ஆராய்ச்சியாளரான கண்ணன் வைத்தியநாதனிடம் சென்னையின் சதுப்பு நிலத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசினோம்.

‘‘சதுப்பு நிலம் என்று தமிழில் சொல்லும்போது பல குழப்பங்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் சதுப்பு நிலத்துக்கு ஈடான ‘வெட்லேண்ட்ஸ்’ (wetlands) என்ற வார்த்தையை பலவகைகளில் பிரித்து மேய்கிறார்கள். உதாரணமாக சதுப்பு நிலத்தைக்கூட ‘ஸ்வாம்ப்ஸ்’ (swamps), ‘மார்ஷஸ்’ (marshes), ‘பாக்ஸ்’ (bogs), ‘ஃபென்ஸ்’ (fens) என பிரித்திருக்கிறார்கள்.

 ‘ஸ்வாம்ப்ஸ்’ என்றால் காட்டுப் பகுதியில் இருக்கும் திட்டுத் திட்டான சதுப்பு நிலங்கள். ‘மார்ஷஸ்’ என்றால் நீரும் சேறும் கலந்த, பறவைகள் கூடு கட்டுவதற்கான சதுப்பு நிலங்கள். அதேமாதிரி ‘பாக்ஸ்’ என்றால் தாவரங்கள் வளரக்கூடிய நீரும் சேறும் கலந்த பகுதி...’’ என்று சொல்லும் கண்ணன் மேலும் சில வகைகளைப் பற்றிப் பேசினார்.

‘‘ஆறு, ஏரி, குளம், குட்டை, ஓடை... எல்லாமே சதுப்பு நிலங்கள்தான். ஆனால், இது முழுமையான சதுப்பு நிலம் கிடையாது. காரணம், இவை தண்ணீரை நீண்ட நாள் சேமித்து வைக்காது, இவை எல்லாமே ஓடிக்கொண்டிருக்கும் அல்லது வெகு விரைவில் வறண்டு போகும் பகுதிகள். விவசாய நிலம்கூட இதுமாதிரியானதுதான். ஆனாலும் இந்த முழுமையில்லாத சதுப்பு நிலங்களும் ஒரு நாட்டின் நீர் வளம், பொருளாதார நலன் மற்றும் இயற்கைப் பாதுகாப்புக்கு அவசியம்.

ஆனால், உண்மையான அல்லது முழுமையான சதுப்பு நிலம் என பள்ளிக்கரணை, பழவேற்காடு மற்றும் எண்ணூர் கடற்கழியைத்தான் சொல்லவேண்டும். காரணம், இந்த சதுப்பு நிலங்கள்தான் நீர்ப்பகுதிக்கும் நிலப் பகுதிக்கும் இடைப்பட்ட நிலமாக இருந்து அந்த இருபக்கமும் இருந்து வரும் நீரை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்கின்றன...’’ என்று சொல்லும் கண்ணனிடம் சென்னையில் காணாமல் போன 85 சதவீத சதுப்பு நிலங்கள் பற்றிக் கேட்டோம்.

‘‘ஒருகாலத்தில் ‘மதறாஸ்’  என்று சொல்லியது செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வரையும் இருந்தது. ஆங்கிலேயரின் ஆட்சியிலேயே சென்னையின் சதுப்பு நிலங்களின் அழிவு ஆரம்பமானது. அன்றைய காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து சுதந்திரத்துக்குப் பிறகு எல்லாமும் அழிந்துபோனது. ஆங்கிலேயருக்கோ அல்லது நம் முன்னோருக்கோ அப்போது சதுப்பு நிலங்கள் பற்றி எல்லாம் பெரிதாகத் தெரியாது. 

ஆனால், நம் காலத்தில் ரியல் எஸ்டேட், நில ஆக்கிரமிப்பு, வளர்ச்சி என்ற பெயரில் முழுமையாக அழித்துவிட்டோம். சென்னை மாகாணம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வரை நீண்டு இருந்தபோது இந்த இரு மாவட்டங்களையும் ஏரி மாவட்டம் என்றுதான் அந்தக் காலத்தில் அழைத்திருக்கிறார்கள்.

ஆனால், இன்று பெருநகர சென்னை அல்லது கிரேட்டர் சென்னை எனும் பெயரில் அந்த இரு மாவட்டத்தின் அடையாளமான ஏரிகளை ஆக்கிரமித்து சென்னை மட்டும் வளர்வதால் அந்த இரு மாவட்டங்களுமே வறண்ட நிலையில் வளர்ச்சியுறாமல் இருக்கின்றன...’’ என்று சொல்லும் கண்ணன் சதுப்பு நிலங்களின் வெள்ளத் தடுப்பு பயன்களையும் விளக்கினார்.
‘‘சதுப்பு நிலம் என்பது நிலப் பகுதிக்கும், நீர்ப் பகுதிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி என்று சொன்னேன். உதாரணமாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னை நிலப் பரப்புக்கும், கடற் பரப்புக்கும் இடைப்பட்ட பகுதியாக இருக்கிறது.

மழைக் காலங்களில் சென்னையின் நிலப் பரப்பில் விழும் மழை நீர், பல கிலோமீட்டர் ஓடி வந்து பள்ளிக்கரணையில் சேரும். மீதம் கடலுக்குப் போய்ச் சேரும்.
நிலப் பரப்பில் ஓடி வரும் மழை நீர் தாழ்வான பகுதியின் வழியாக ஓடி வரும். இதைத்தான் வடிகால் பகுதி என்கிறோம். இப்படி ஓடிவரும்போது போதுமான நீர், நிலத்தடி நீராக சேமிக்கப்படும். மீத நீர்தான் சதுப்பு நிலத்துக்கும் கடலுக்கும் போய்ச் சேரும்.

இதுமாதிரி கடல் நீர் நிலப்பரப்புக்கு வந்தாலும் சதுப்பு நிலத்தைத் தாண்டித்தான் நிலப்பரப்புக்கு வந்துசேரும்...’’ என்று சொல்லும் கண்ணன் சென்னையில் வெள்ளம் வரும்போது எல்லாம் ஏன் சில பகுதிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்பது பற்றியும் சதுப்பு நிலம் தொடர்பாகப் பேசினார்.‘‘மழை நீர் ஓடி வரும் பகுதியை வடிகால் பகுதி என்று சொன்னேன். சென்னையில் வேளச்சேரி போன்றவை தாழ்வான நிலப் பகுதிகள். சென்னையின் மற்ற நிலப்பரப்பில் விழும் மழை நீரின் பெரும் பகுதி பள்ளமான நிலப்பரப்பில் விழுந்து அதன் வழியாகவே சதுப்பு நிலங்களுக்கு ஓடிவரும்.

அப்படி வேளச்சேரியில் சேரும் மழை நீர் அதிகம் என்பதால் வெள்ளம் ஏற்படுகிறது. சென்னையில் சைதாப்பேட்டைக்கு பக்கத்தில் ‘மவுண்ட்’ எனும் ஒரு பகுதி இருக்கிறது. ஒருபோதும் இந்தப் பகுதி வெள்ளத்தில் பாதித்ததில்லை. காரணம், அந்தப் பகுதியின் பெயரில் இருப்பது போலவே அது ஒரு மேட்டுப் பகுதி. சிறு குன்றுகள் இருந்ததால் அதற்கு மவுண்ட் என்று ஆங்கிலேயர்கள் பெயர் வைத்திருந்தார்கள்.

இதுமாதிரி வறட்சியை, வெள்ளத்தை தடுக்கத் துணையாக இருக்கும் சதுப்பு நிலங்களை இனிமேலும் பாதுகாக்கத் தவறினால் அதற்கான விலையைக் கொடுத்துதான் ஆக வேண்டும்...’’ என்று எச்சரிக்கிறார் கண்ணன்.இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘மீதமுள்ள சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க பல்வேறு துறைகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக’க் கூறியிருப்பது இந்தப் பிரச்னைக்கு ஆறுதலாக உள்ளது.  

டி.ரஞ்சித்