இரண்டு கேட்டால் நான்கு கிடைக்கும்!
ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும். ‘யூத்’, நாளை’, ‘மிளகா’, ‘கர்ணன்’, ‘சதுரங்கவேட்டை’, ‘பரினீதா’, ‘ராஞ்சனா’ உட்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராகவும் நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தியவர். இப்போது இயக்குநர்கள் தேடும் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘பிரதர்’, ‘கங்குவா’ வெளியான நிலையில் நட்ராஜ் என்கிற நட்டியை சந்தித்தோம். வெற்றிகரமான கேமராமேனாகவும், நடிகராகவும் கால் நூற்றாண்டாக பயணம் செய்து வருகிறீர்கள். இப்போது உங்கள் வெற்றியை எப்படி எடை போட்டு பார்க்கிறீர்கள்?
இதுல எடை போடுறதுக்கு என்ன இருக்கு! வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்குதான் நன்றி சொல்லணும். இன்ட்ரஸ்ட்டிங்கான ரோல் இருந்துச்சுன்னா நட்டியை கூப்பிடுங்கன்னு நடிக்க வாய்ப்பு கொடுக்கிறாங்க. கேமராமேனா கடின உழைப்பு தேவைப்படும்போது நட்டியை கூப்பிடுங்கன்னு சொல்றாங்க. இது எல்லாமே கடவுள் கொடுத்தது.
எந்த வேலையிலும் கஷ்டம், சந்தோஷம் இருக்கும். கஷ்டத்தை தவிர்க்க முடியாது. கஷ்டப்பட்டால்தான் முன்னேற முடியும். அந்தவகையில் எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
ஒரு படத்தை உள் உணர்வுகளுடன் தேர்வு செய்வீர்களா அல்லது சினிமா கால்குலேஷன் ஏதேனும் இருக்கிறதா?சினிமாவுல கால்குலேஷன் பண்ணி படம் பண்ண முடியாது. எல்லாவற்றுக்கும் கதை முக்கியம். கதையை எப்படி போர்ட்ரைட் பண்ணப்போகிறார்கள் என்பதைத்தான் பார்ப்பேன். அப்படி வந்த படங்கள்தான் ‘மிளகா’, ‘சதுரங்கவேட்டை’, மகாராஜா’, ‘கடைசி உலகப் போர்’.
அந்த வகையில் கதாபாத்திரம், கதை நடக்கும் காலகட்டம் பிடிக்கும்போது பண்ணுகிறேன். மக்கள் மத்தியில் சேர்ந்துவிடும்னு உள்ளுணர்வும் ஓரளவு சொல்லிவிடும். ப்ளாக் பஸ்டர் ஆவது இறைவன் அருள். எந்த நடிகருடன் நடிக்கும்போது கவனமாக இருப்பீர்கள்?
இங்கு வாய்ப்பு கிடைத்தவர்கள், கிடைக்காதவர்கள் என்ற வித்தியாத்தை தவிர மற்றபடி எல்லோரும் திறமைசாலிகள். கதாபாத்திரத்தை புரிஞ்சுக்கிட்டா தூள் கிளப்பிடுவாங்க. டவுட் வரும்போதுதான் கொஞ்சம் தடுமாறுவாங்க.
சினிமா கூட்டு முயற்சி. ரிகர்சல் பண்ணும்போதே இந்த இடத்துல இவர் ஸ்கோர் பண்ண முடியும், அந்த இடத்துல நாம் ஸ்கோர் பண்ண முடியும் என்று தெரிஞ்சுடும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும்போது நல்ல ரிசல்ட் கிடைக்கும். அப்படியொரு கூட்டு முயற்சியால்தான் ‘மகாராஜா’, ‘கடைசி உலகப் போர்’ மாதிரி நல்ல படங்கள் வெளிவருகிறது. ‘பிரதர்’ஜெயம் ரவி எப்படி?
இதுவரை நான் காமெடிப் படம் பண்ணியதில்லை. குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்று சொல்வார்கள். அதை மையமா வெச்சு மிக அழகா ஒரு கதை எழுதியிருந்தார் இயக்குநர் எம்.ராஜேஷ். எனக்கு முக்கியமான கேரக்டர் கொடுத்தார். எனக்கான சீன் இரண்டு இருந்துச்சு. எடிட்ல அதுல மாறிடுச்சு.
‘கங்குவா’ சூர்யா என்ன சொல்றார்?
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் ‘கங்குவா’. சில ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த கதை. சிவா சார் எக்சலண்ட் டைரக்டர். எனக்கும் சூர்யா சாருக்குமான காம்பினேஷன் பேசப்பட்டது. சூர்யா சாருடைய மெனக்கெடல் பற்றி சொல்லிட்டே இருக்கலாம். எங்கள் எல்லோருக்கும் மேக்கப் போட மூணு மணி நேரம், கலைக்க இரண்டு மணி நேரம் ஆகும். காலையில் ஆறு மணிக்கு ஷூட்டிங் என்றால் மூணு மணிக்கு மேக்கப் போட ஆரம்பிச்சுடுவாங்க.
ஷூட் முடிச்சுட்டு ரூம் போவோம். குளிச்சுட்டு, சாப்பிட ஒன்பது மணி ஆகும். அப்போது டங் டங் ன்னு மெட்டல் சத்தம் கேட்கும். சூர்யா சார் ஒர்க் அவுட் பண்ணிட்டு இருப்பார். பதினொரு மணி வரை ஒர்க்அவுட் பண்ணிட்டு மறுபடியும் மூணு மணிக்கு மேக்கப் போட ஆரம்பிச்சுடுவார். படத்துக்காக தன் உருவ அமைப்பையே மாத்திக்கிட்டார்.
அந்தளவுக்கு டெடிகேஷனை நான் பார்த்ததில்லை. அந்த ஸ்பெஷல் டிரஸ் போட்டா சாப்பிடவும் முடியாது. ஸ்பூன்லதான் சாப்பாடு. அதுவும் கொஞ்சம்தான். நைட்தான் வயிறு நிறைய சாப்பிட முடியும்.
அடுத்து வர்ற படங்களில் எந்த மாதிரி நட்டியைப் பார்க்கலாம்?
‘கதாநாயகன்’ முருகானந்தம் திரைக்கதை, வசனத்தில் நாதன் இயக்கும் படம். முழுக்க முழுக்க காமெடி படம். பிரிட்டோ இயக்கத்தில் ‘நிறம் மாறும் உலகில்’ அந்தாலஜி. அருமையான கதை. யோகிபாபு, பாரதிராஜா, வடிவுக்கரசி உட்பட பலர் இருக்கிறார்கள். சித்தார்த் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’. அதுல மெச்சூர்ட் கேரக்டர். சார்லஸ் ஆண்டனி இயக்கும் ‘ஆண்டவன் அவதாரம்’ படத்துல டபுள் ஆக்ஷன். குணா சுப்பிரமணியம் இயக்கும் ‘சீசா’வில் போலீஸ் ஆபீசர் ரோல்.
ஹீரோவாகவும் வர்றீங்க. கேரக்டர் ரோலும் பண்றீங்க. எது பிடிச்சிருக்கு?
ரெண்டுமே பிடிச்சிருக்கு. கேரக்டர் பண்ணும்போது சூர்யா சார், விஜய் சேதுபதி சாருடன் பண்ண முடியும். அவர்களிடமிருந்து கத்துக்க சான்ஸ் கிடைக்கும்.தியேட்டர்ல ரசிகனா பார்ப்பதைவிட சேர்ந்து நடிக்கும்போது அவர்களுடைய டைமிங், ஆக்டிங் மெத்தட் கத்துக்க முடிகிறது.
நான் ஹீரோவா நடிக்கும்போது என்னுடனும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் நடிக்கிறாங்க. அவர்களிடமிருந்தும் கத்துக்கிறேன். ஒவ்வொரு படமும், ஒவ்வொரு நடிகரும் லேர்னிங் பிராசஸ். அது பிடிச்சிருக்கு.‘சதுரங்க வேட்டை’ ரசிகர்கள் மத்தியில் இப்போதும் பேசப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? கதை, கான்செப்ட்தான் காரணம். அந்தப் பெருமை இயக்குநர் எச்.வினோத் சாருக்குதான் சேரும். அந்தப் படத்துல ஒவ்வொரு சீனையும், அவர் பிரசண்ட் பண்ண விதம் அருமை.
பத்து வருஷம் ஆனபிறகும் கொண்டாடுறாங்க. என்னை மட்டுமல்ல, அதுல நடிச்ச எல்லோரையும் பார்க்கும்போது ‘சதுரங்க வேட்டை’யில் நல்லா பண்ணியிருந்தீங்கன்னு சொல்வாங்க.
ஒளிப்பதிவாளராக ஒரு படத்தை அணுகுவதற்கும், நடிகராக ஒரு படத்தை அணுகுவதற்கும் என்ன வித்தியாசம்?கேமராமேனா முழு கதைக்களத்தையும் கேட்பேன். நடிகரா என்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்குவேன்.
ஒளிப்பதிவாளனாக ஒவ்வொரு ஷாட்டும் முக்கியம். எந்த கேரக்டர் என்ன பண்ணுதுன்னு தெரிஞ்சிருக்கணும். கிட்டத்தட்ட கோ டைரக்டர் ஜாப். அதை மனசுல வெச்சு பண்ணினால்தான் கேமராமேனா அச்சீவ் பண்ண முடியும். சினிமா ஓடிடிக்கு மாறியுள்ள நிலையில் தியேட்டர்கள் அதன் வசீகரத்தை மீண்டும் பெற முடியும் என்று நினைக்கிறீர்களா?
தியேட்டர்ல பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் டிவியில பார்க்கும்போது கிடைக்காது. ‘மகாராஜா’வை டிவியில் பார்க்கலாம். ஆனால், அந்தப் படத்துல வர்ற டுவிஸ்ட் அண்ட் டர்ன் பார்த்துட்டு பப்ளிக் கிளாப் பண்ணுவாங்க. அதைப் பார்க்கும்போது மத்தவங்களுக்கும் உற்சாகம் கிடைக்கும். அது ஓடிடியில கிடைக்காது.
தியேட்டர்ல பலதரபட்ட மக்கள் உட்கார்ந்து இருப்பார்கள். அந்த வகையில் தியேட்டர் அதன் வசீகரத்தை இழக்காது. சினிமாவில் இப்போதுதான் தன் பயணத்தை தொடங்க நினைக்கும் நட்ராஜிடம் இரண்டு விஷயங்கள் சொல்ல வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்?கண்ணையும் காதையும் திறந்து வெச்சுக்க.
உன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள். நிறைய படி. படிச்சதை மனசுல ஏத்து. எல்லா வகை படங்களையும் பார். அதுல என்ன கத்துக்க முடியும்னு முயற்சி செய். படங்கள் பார்க்கும்போதுதான் புதுசா கத்துக்க முடியும். இரண்டு கேட்டீங்க. நாலு சொல்லிட்டேன்.
எஸ்.ராஜா
|