வரலாறு படைக்கும் தென்னிந்திய சினிமாவும் சர்வாதிகாரத்தை இழக்கும் இந்தி சினிமாவும்!
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தென் மாநிலங்கள் மிகவும் துடிப்பான சினிமா கலாசாரம் கொண்டவை என்று கூறி, தென் மற்றும் வட இந்திய திரைப்படத் துறைகளை ஒப்பிட்டுப் பேசினார். கோழிக்கோட்டில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பேசிய அவர், தமிழ்த் திரையுலகம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் அதே வேளையில், வட மாநிலங்கள் பாலிவுட்டால் இருட்டடிப்பு செய்யப்படுவதாகக் கூறினார்.
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, சீமாந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் செழிப்பான திரைப்படத் தொழில்கள், வட மாநிலங்களை விட சிறந்து விளங்குகின்றன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். “தமிழ்த் திரையுலகம் இப்போது கோடிக்கணக்கான வருவாய் ஈட்டுகிறது. கேரளா, தெலுங்கு, கன்னட சினிமாவும் செழித்து வருகிறது...” என்றார்.
வட இந்தியாவில் ஒப்பிடக்கூடிய திரைப்படத் துறை இருப்பதைக் கேள்விக்குட்படுத்திய அவர், “வட இந்தியாவில் எந்த மொழியிலும் நம்மைப் போல துடிப்பான தொழில் உள்ளதா? என்றால் இல்லை என்பதே பதில்...’’ என்றார்.
உண்மை அதுதான். வட இந்தியாவின் சினிமா ஹப்பாக விளங்கும் மும்பை நகரம் இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா. மகாராஷ்டிராவின் மாநில மொழி மராத்தி. ஆனால், அங்கேயும் இந்தி மொழி படங்களுக்குத்தான் முன்னுரிமை. காலம் காலமாகவே இந்த மோனோபொலி நிலை தவிர்க்க முடியாத ஒன்றாகவே வட மாநிலங்களில் இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவின் சினிமா வளர்ச்சி முதன்முதலில் இந்தி மொழியில்தான் - 1930களில் - தொடங்கியது என்பதுதான் முதல் காரணம்.
இதற்கிடையில் பிரிவினை மற்றும் கலவரம் என மற்ற மொழிகள் பிசியாக இருந்த அதே வேளையில் பாலிவுட் உலகம் தனது சினிமா தொழிலை பெருக்கிக் கொண்டிருந்தது. இதுதவிர இந்தி மொழி மோனோபோலி நிலைக்குப் பின்னணியில் பல துணை மோனோபோலிகள் இருப்பதும் இன்னொரு காரணம்.
தயாரிப்பு மற்றும் ஸ்டூடியோ மோனோபோலிகளான ‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்’, ‘தர்மா புரொடக்ஷன்ஸ்’, ‘எக்ஸெல் என்டர்டெயின்மென்ட்’ ஆகிய இந்த மூன்று தயாரிப்பு ஸ்டூடியோக்களை பிரதானமாகக் கொண்டு வட இந்திய சினிமா இயங்குகிறது. தொடர்ந்து ஸ்டார் மோனோபோலி. கான், கபூர் என்னும் இரு குடும்பங்களிடம்தான் பாலிவுட் உலகம் பிரதானமாக இருக்கின்றது.
அடுத்து தியேட்டர் மோனோபோலி. பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் உள்ளிட்ட இரு மல்டிபிளக்ஸ் செயின்களையும் கட்டுப்படுத்தும் நிர்வாகத்துறையும் பாலிவுட் குழுவிடம்தான் உள்ளன. உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் இருக்கும் மல்டிபிளக்ஸ் செயின்களை கட்டுப்படுத்தும் நிர்வாகம் தமிழ் சினிமா விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க அதிபர்களிடம் இருக்கும். அதே போல் தான் மலையாள உலகம் அங்கே இருக்கும் நிர்வாகத்தின் கீழ் இயங்கும். ஆனால், வட இந்தியாவைப் பொறுத்தவரை இந்த தியேட்டர் விநியோக நிர்வாகம் பாலிவுட் சினிமாவிடம்தான் இருக்கின்றன.
தற்போது வரை இந்த நிலையால்தான் வட இந்தியாவில் இருக்கும் மற்ற மொழிகள் நசுக்கப்படுகின்றன. மற்ற மொழிகளில் இருந்து நல்ல கதைகள் கொண்டு வந்தாலும் பெரிய பட்ஜெட் அவைகளுக்கு மறுக்கப்படுவதற்கு காரணம் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் பாலிவுட் அடிப்படையில் இயங்குவதுதான். அதையும் மீறி மராத்தி, பஞ்சாபி, பெங்காலி உள்ளிட்ட மொழிகள் அவர்களிடம் இருக்கும் சொற்ப பட்ஜெட்டை வைத்து எந்த அளவிற்கு நல்ல படங்களை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்து வருகிறார்கள்.
எனினும் அது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கவில்லை. என்றாலும் நீண்ட நாட்களுக்கு இந்த நிலை நீடிக்காது. இதற்கு அச்சாரமிடுவது போல் மாற்றங்கள் தென்னிந்திய தரப்பிலிருந்து தொடங்கியுள்ளன. ‘பாகுபலி’ ஆரம்பித்து வைத்ததை இன்று பல மெகா மகா படங்கள் பகாசூர வசூலை வட மாநிலங்களில் ஈட்டி வருகின்றன. இதனைத் தொடர்ந்தே இந்தி சினிமாவின் சர்வாதிகாரம் ஆட்டம் கண்டு வருகிறது என்கிறார்கள். ஒருமொழித் தன்மையை இழக்கும் பாலிவுட் சினிமா துவங்கிய காலத்திலேயே தென்னிந்தியாவில் அந்தந்த மொழிகளுக்கான சினிமாதுறை விழித்துக் கொண்டு தங்களது படைப்புகளை கொடுக்கத் துவங்கிவிட்டன.
ஆரம்ப காலத்தில் இருந்தே தென்னிந்திய மொழிகள் இந்தி மொழியை இரண்டாம் பட்சமாக பார்த்ததன் விளைவால் அந்தந்த மாநில மொழிகளின் சினிமா வளரத் துவங்கியது. இதற்கு தென்னிந்திய அரசியல்வாதிகளின் பங்கே அதிகம் என்றால் அது மிகையாகாது. தொடர்ந்து நடந்த இந்தி எதிர்ப்பு மற்றும் இந்தி திணிப்பு வேண்டாம் என்னும் முழக்கங்கள் தாமாகவே இந்தி மொழி படங்களை மக்கள் மத்தியில் இரண்டாம் நிலைக்குத் தள்ளின.
இதனைத் தொடர்ந்து தென்னிந்திய திரைப்படங்கள் அந்தந்த மாநிலங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. மேலும் இந்தி எனும் மோனோபோலி சிஸ்டமிற்குள் சிக்கிக் கொள்ளாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டன. அடுத்தடுத்து நவீன தொழில்நுட்பத்தின் மாற்றங்கள் ஒரு மொழி சினிமா கோட்பாட்டை மெல்ல தகர்த்தெறியத் துவங்கின. இதற்கு முதல் வழி வகுத்தது மாநிலங்கள் கடந்து சென்ற டெக், சிடி, டிவிடியை தொடர்ந்து இப்போது கைகளுக்குள் அடங்கும் வகையில் உருவாகிவிட்ட ஓடிடி தொழில்நுட்பம்.
இதன் காரணமாகவே தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்படும் நல்ல கதைகளும் படங்களும் வட இந்தியா மட்டுமல்லாமல் உலக அரங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதனால் மிகப்பெரிய மார்க்கெட்டை கைவசம் வைத்திருந்தும் இந்தி மொழி படங்களால் தென்னிந்திய மொழிப் படங்கள் அளவுக்கு நல்ல கதையம்சமுள்ள, தரமான படங்களைத் தர இயலவில்லை. மக்களுக்கும் இது புரியத் தொடங்கியதுதான் ஹைலைட்.
கிட்டத்தட்ட ஒரு மொழி கோட்பாட்டிற்கு சவாலாகவே நின்றன தென்னிந்திய படங்கள். இதன் விளைவாக இந்தியில் தற்சமயம் ஸ்டார் தயாரிப்பு தரப்புகள் குறைந்தபட்சம் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களையாவது தென்னிந்திய சினிமாவில் இருந்து பண்டமாற்று முறையில் செய்து கொள்ளலாம் என்னும் நிலைக்கு மாறியிருக்கிறார்கள். இதனால்தான் எஸ்.எஸ்.வாசன், தர், சின்னப்பதேவர், கே.பாலச்சந்தர், மணிரத்தினம் துவங்கி இன்று அட்லி வரையிலும் இயக்குநர்கள் மொழி கடந்து திரைப்படங்களை இயக்க முடிகிறது. குறிப்பாக இந்தியில் கான்களையும் கபூர்களையும் இயக்கும் வாய்ப்பு தென்னிந்திய இயக்குநர்களுக்கு கிடைத்து வருகிறது. எனினும் இந்த நிலை போதாது... திறமையும் நல்ல படைப்பும் மொழிகளைக் கடந்து நிற்க வேண்டும் என்பதற்காக தொழில் ரீதியாக உருவாக்கப்பட்டதுதான் ‘பான் இந்தியா’.
பல சினிமா கலைஞர்களுக்கு இந்த ‘பான் இந்தியா’ என்னும் தொழில்ரீதியான பெயர் பிடிக்கவில்லை என்றாலும் தற்சமயம் இந்தி மொழியின் பிடியில் இந்திய சினிமா இருக்கும் நிலையை மாற்ற இப்படியான தொழில் நேர்த்தி தேவைதான் என பலரும் அடித்துச் சொல்கிறார்கள். எந்த வருடத்திலும் இல்லாத அளவுக்கு இந்த கடைசி மூன்று வருடங்களில் தேசிய விருதுகளிலும் கூட தென்னிந்திய படங்களும், தென்னிந்திய கலைஞர்களும் அதிகம் அங்கம் வகித்திருக்கிறார்கள்; பரிசுகளை வென்றிருக்கிறார்கள். போலவே ஆஸ்கர் பரிந்துரைகளுக்கு தேர்வு செய்யப்படும் படங்களின் நிலையும் மாறத் துவங்கியிருக்கின்றன.
மட்டுமல்ல; ஆஸ்கர் பரிசையும் வென்று ஆஸ்கர் மேடையில் இந்தியா சார்பாக நின்று கெத்து காட்டியவர்களும் சமீபமாக இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், கீரவாணி, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி உள்ளிட்ட தென்னிந்தியர்கள்தான்.இந்த மாற்றத்தில் ரஜினிகாந்த் துவங்கி கமலஹாசன், மணிரத்தினம், எஸ்.எஸ்.ராஜமவுலி, ஏஆர் முருகதாஸ், பிரபுதேவா, பிரசாந்த் நீல், சந்திப் ரெட்டி வங்கா, பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில், மாதவன், சித்தார்த், விஜய் சேதுபதி, ரிசப் ஷெட்டி, தற்போது மொழிகளைக் கடந்து செல்லாமலேயே இங்கிருந்து இந்திய சினிமாவை ஆளுமை செய்யும் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், ஜித்து ஜோசப், வினித் னிவாசன் உள்ளிட்டோரும் காரணம் எனலாம்.
இதற்கு காரணமும் இந்தி சினிமாவின் மோனோ போலித்தனம்தான். குடும்ப வாரிசு சினிமா அரசியலை கையில் எடுத்துக் கொண்டு தங்களது குடும்பத்தை நிலை நிறுத்தவே பாலிவுட் தற்போது வரை தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து வருகிறது. இதனாலேயே திறமைக்கு வாய்ப்புகள் அங்கு மறுக்கப்பட்டன; திறமை இல்லாத பல நடிகர்களைக் கொண்டு நல்ல கதைகளை உருவாக்க முடியாமல் ஏராளமான இயக்குநர்கள் பாலிவுட் சினிமாவில் காணாமல் போய்விட்டனர் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
இதற்கு மேலும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் தயாரிப்பு தரப்பும், தியேட்டர் விநியோகத் தரப்பும் செயல்பட்டதன் விளைவு... ஒரு காலத்தில் இந்திய சினிமாவில் ராஜாவாகத் திகழ்ந்த இந்தி சினிமா இன்று சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தி மொழியின் மார்க்கெட் பெரிது, அதைக் கொண்டு இத்தனை நாளும் வசூல் கணக்கு காட்டிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் தென்னிந்திய சினிமாக்களான ‘பாகுபலி’, ‘கே ஜி எஃப்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘2.0’, ‘புஷ்பா’, ‘ஜெயிலர்’, ‘ஆர் ஆர் ஆர்’ உள்ளிட்ட படங்கள் பல நூறு கோடி ரூபாய்களில் வசூலித்து நல்ல சினிமாவுக்கு மொழி மார்க்கெட் தேவை இல்லை என்பதை நிரூபித்தன.
இதன் காரணமாகவே தற்போது இந்தி சினிமா மெல்ல தனது மார்க்கெட்டையும் இழந்து வருகிறது. இதற்கிடையில் ஓடிடியின் வரவால் சில இந்தி அல்லாத மற்ற மொழி படங்களும் தனித்து தெரியத் துவங்கின. குறிப்பாக மராத்திய படங்கள் உலக அளவில் தங்களது நல்ல படைப்புகளைக் கொண்டு சேர்த்ததின் விளைவு, இந்தி சினிமாவின் ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம் - குமிழ் - உடையத் தொடங்கியிருக்கிறது.
பல மொழிகள் மற்றும் இனங்கள் உள்ள இந்தியாவில் ஒரு மொழிக் கொள்கை என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான். அதே சமயம் இந்தி மொழியை யாரும் இங்கே வெறுக்கவும் இல்லை. அவரவர் விருப்பப்பட்டு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்தான் எந்த மொழியும் எந்த கலாசாரமும் தானாக வளரும். இது சினிமாவுக்கும் பொருந்தும் என்பதுதான் தற்போது நிலவும் சூழல்.
இந்த மாற்றத்தால்தான் பாலிவுட்டிலேயே கூட திறமையுள்ள நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் பலர் வாய்ப்பு கிடைத்து வளரத் துவங்கியுள்ளனர். ஆளுமையைத் தாண்டி எந்தத் தொழிலிலும் ஆரோக்கியம்தான் மிக முக்கியம் என்பதற்கு இந்திய சினிமாவின் தற்போதைய சுழல் மிகப்பெரிய உதாரணம்.
ஷாலினி நியூட்டன்
|