மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.
‘கட்டா குஸ்தி’யில் கீர்த்தி கதாபாத்திரம் இவருடைய இன்னொரு முகத்தை காண்பித்தது. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் ‘தக் லைஃப்’ செய்கிறார். தீபாவளி வெடிச் சத்தம் அடங்கிய நிலையில் ஐஸ்வர்யா லட்சுமியிடம் பேசினோம்.
தொடர்ந்து வெற்றிக்கொடி பறக்க விடுகிறீர்களே..?
பெரிய சூத்திரமெல்லாம் கிடையாது. என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தை செலக்ட் பண்ண ரொம்ப டைம் எடுத்துக்க மாட்டேன். எப்படியென்றால், கதை கேட்கும்போது எனக்கு சில கேள்விகள் இருக்கும். அதற்கு திருப்திகரமான பதில் வரும்போது உடனே ஓகே சொல்லிடுவேன்.இந்தப் படத்தை ஓடிடியில் பார்க்க முடியுமா, என்னுடைய கதாபாத்திரம் கதையை நகர்த்த உதவுமா, என்னுடைய கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டாலும் படம் மக்கள் மத்தியில் சென்றடையுமா என்றெல்லாம் யோசிச்ச பிறகுதான் படங்களை கமிட் செய்கிறேன். தெலுங்கில் ‘அம்மு’ என்ற படம் செய்யும்போது எல்லோரும் ‘அது அழுத்தமான கதை. தெலுங்கில் இப்போதுதான் அறிமுகமாகிறீர்கள். உங்களால் அழுத்தமான கதை பண்ண முடியுமா’ என்று சந்தேகத்துடன் கேட்டார்கள். ஆனால், எனக்கு அந்தக் கதை ஒர்க்கவுட் ஆகும் என்ற நம்பிக்கை இருந்துச்சு. துணிச்சலோடுதான் அந்தக் கதையை செலக்ட் பண்ணினேன். படம் பெரிய வெற்றி. சவால்கள் இல்லையென்றால் வாழ்க்கை போரடித்துவிடும்.
காமெடி ரோலில் பின்னியெடுக்கிறீர்களே?
என்னுடைய நட்பு வட்டாரத்தில் நான்தான் கொஞ்சம் ஓவரா கலாட்டா பண்ணுவேன். என்னுடைய உண்மையான முகத்தை நீங்கள் இன்னும் திரையில் பார்க்கவில்லை. டிவி பேட்டிகளில் கூட சபை நாகரீகம் கருதி என்னை கன்ட்ரோல் செய்துகொண்டுதான் பேசுகிறேன்.
மலையாளத்தில் நீங்கள் வெற்றிகரமான நடிகை. தமிழில் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சினிமாவுக்கு வந்த சமயத்தில் சராசரி நடிகையாக, கிடைச்ச வாய்ப்பை நழுவ விடாமல் படங்களை கமிட் செய்த காலம் உண்டு. அந்தப் படங்களில் எனக்கான முக்கியத்துவம் குறைவாகவே இருந்துச்சு. அந்த சமயங்களில் எனக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்துச்சு. ஒண்ணு, வந்த வாய்ப்பை பண்ணணும். இல்லைன்னா வீட்ல சும்மா உட்கார்ந்திருக்கணும். அப்போது நான் ரிஸ்க் எடுக்க விரும்பினேன் என்பதோடு அந்தப் படங்கள் என் கரியருக்கு உதவியா இருக்கும் என்றும் நம்பினேன். அப்படி ஆரம்ப கால படங்கள் தமிழ் சினிமாவைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இருந்துச்சு. அதிர்ஷ்டவசமாக ‘பொன்னியின் செல்வன்’ வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் எனக்கு அமோக வரவேற்பு கிடைச்சிருக்கு. தமிழ் ரசிகர்கள் மனசுல இடம் பிடிச்சிருப்பதாகவே கருதுகிறேன்.அந்த வகையில் இதுவரை சரியான படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன் என்றும் தமிழ் சினிமாவில் என்னுடைய வளர்ச்சி சரியான பாதையில் பயணிக்கிறது என்றும் சொல்லலாம்.
ஆரம்பத்தில் ரிஸ்க் எடுக்காமல் இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் எனக்கு இப்படியொரு அடையாளம், அங்கீகாரம் கிடைச்சிருக்காது. பணத்துக்காக நான் தொடர்ந்து படங்கள் செய்யவில்லை. என்னால் வேலை இல்லாம வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது.
‘தக் லைஃப்’?
சினிமாவில் நடிக்க வரும் புதுமுக நடிகர், நடிகைகளுக்கு கமல் சார் படத்திலும், மணிரத்னம் சார் படத்திலும் நடிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. மலையாளத்தில் நான் நடிச்ச ‘மாயநதி’ படம் பாத்துவிட்டுதான் மணிரத்னம் சாரிடமிருந்து அழைப்பு வந்துச்சு. ‘தக் லைஃப்’ படத்தில் நானும் இருப்பதற்கு காரணம் ‘பொன்னியின் செல்வன்’. ‘தக் லைஃப்’ பற்றி நேரம் வரும்போது பேசுகிறேன்.
உங்கள் நடிப்பை மணிரத்னம் பாராட்டினாரா?
‘பொன்னியின் செல்வன்’ ப்ரொமோஷன் சமயத்தில் ‘ஜெயம்’ ரவி, கார்த்தி ஆகிய இருவரும் தங்கள் நடிப்பைப் பாராட்டி மணி சார் குறுஞ்செய்தி அனுப்பியதாக சொல்வார்கள். ஆனால், எனக்கு அந்த மாதிரி மணி சாரிடமிருந்து எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை. அதை பொறுக்கமுடியாமல் ஒரு நாள் மணி சாரிடம் நேரிடையாகவே கேட்டேன். நான் சிறப்பா நடிச்சதாகவும், என்னுடைய நடிப்பு திருப்தியா இருந்ததோடு, என்னுடைய வேலையை சரியா செய்திருப்பதாகவும் சொன்னார்.
அது பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துச்சு. அந்த மகிழ்ச்சியோடுதான் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்.ஏனெனில், நான் அவருடைய காஸ்டிங் லிஸ்ட்டில் முக்கிய இடத்தைப் பிடிக்கவில்லை என்றாலும் அவருடன் வேலை செய்கிறேன் என்பதில் உற்சாகம் அடைகிறேன். என்னை மணி சாரின் தீவிர சிஷ்யை என்று சொல்வதோடு மட்டுமல்லாம, அவரைப் பற்றி பேசச் சொன்னால் என்னையும் அறியாமல் ஆனந்தக் கண்ணீர் எட்டிப்பார்க்கும்.
எல்லா மொழிகளிலும் உங்களையே தேடுகிறார்களே?
என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும் என்று விரும்பினேன். மலையாளத்தில் ‘ஹலோ மம்மி’ முடிந்துவிட்டது. தமிழில் ‘தக் லைஃப்’, வெப் தொடர் இருக்கு. தெலுங்கில் சாய் தரம் தேஜ் படம் இருக்கு.
தொடர்ந்து படங்கள் செய்யும்போது அது என் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. எல்லா மொழிகளிலும் எனக்கான ஸ்பேஸ் கிடைச்சிருக்கு. எனக்கு மல்டி மில்லியனர் ஆகணும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. நான் என்ன வேலை செய்கிறேனோ அந்த வேலையை மகிழ்ச்சியோடு செய்ய விரும்புகிறேன். பண்டிகை கொண்டாட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
‘ஓணம்’ எப்போதும் என்னுடைய ஸ்பெஷல். பண்டிகை என்றாலே கோயில், விருந்து, சுற்றம், நட்பு என பொழுது போவது தெரியாது. பண்டிகை கொண்டாட்டங்களைப் பொறுத்தவரை சமீபத்தில் நான் கற்றுக் கொண்டது இதுதான்... நம்முடைய வாழ்க்கையில் சிறிதோ, பெரிதோ எல்லாவற்றையும் நாம் கொண்டாட வேண்டும்.
அதுக்காக விமரிசையாகக் கொண்டாடணும்னு அவசியம் இல்லை. இருக்கிறதை வெச்சு சிம்பிளாவும் கொண்டாடலாம். அது பண்டிகையா இருக்கலாம், பிறந்த நாளா இருக்கலாம். அப்படிச் செய்யும்போது நமக்கு பிடிச்சவங்க நம்மோடு இருப்பதோடு நமக்கும் அவர்களுக்குமான பந்தபாசம் அதிகமாகிறது.
அந்த மாதிரி நிகழ்ச்சிகள இரு தரப்புக்குமிடையே உள்ள வேற்றுமைகளை களைவதற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அது மட்டுமல்ல, பொக்கிஷம் மாதிரி வாழ்நாள் முழுவதும் நினைச்சுப் பார்க்கும்படியான நினைவுகளை ஏற்படுத்துகிறது.
நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் அன்பு காண்பிக்க விழாக் கால கொண்டாட்டங்கள் நல்ல வாய்ப்பாக அமைகிறது. சமீப காலமாக சில விஷயங்களுக்கு எதிர்வினையாற்றுவதை நிறுத்திவிட்டேன். மாறாக, பிரச்னைகளை அன்புடன் சமாளிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன். அதை என்னுடைய வாழ்க்கை நெறியாக வரித்துக்கொண்டதில் மகிழ்ச்சி!
எஸ்.ராஜா
|