யார் இந்த உமர் அப்துல்லா&நயாப் சிங் சைனி..?



ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணியுடன் இணைந்த தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களைப் பிடித்தது. 
மொத்தமாக இந்தியா கூட்டணி 90 இடங்களில் 49ஐக் கைப்பற்றியது. இதேபோல் அரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி 48 இடங்களைப் பிடித்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லாவும்; அரியானாவில் இப்போதைய முதல்வர் நயாப் சிங் சைனியும் இரண்டாவது முறையாகவும் முதல்வர்களாக ஆகியுள்ளனர். அவர்களைப் பற்றிய ஒரு டைம் லைன் இது.  

*உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரில் மூன்றாவது தலைமுறையாக முதல்வர் பதவியை அலங்கரிப்பவர் உமர் அப்துல்லா. இவரின் தாத்தா ஷேக் அப்துல்லா, தந்தை ஃபரூக் அப்துல்லா ஆகிய இருவரும் ஜம்மு காஷ்மீரின் முதல்வராக இருந்தவர்கள். உமர் அப்துல்லாவும் ஏற்கனவே ஒருமுறை முதல்வராக இருந்துள்ளார்.  கடந்த 1970ம் ஆண்டு பிரிட்டனிலுள்ள ரோச்ஃபோர்டு நகரில் பிறந்தவர் உமர். அப்பா ஃபரூக் அப்துல்லா. அம்மா மொல்லி அப்துல்லா. அம்மா மொல்லி இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அங்கே நர்ஸாகப் பணியாற்றியவர்.

உமர் ஸ்ரீநகரிலும், இமாச்சலப் பிரதேசத்திலும் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் மும்பையிலுள்ள சைடன்ஹாம் கல்லூரியில் பி.காம் படித்தவர், ஐடிசி, ஓப்ராய் ஆகிய குழுமங்களில் பணியாற்றினார். 

தொடர்ந்து 1998ம் ஆண்டு தன் 28 வயதில் அரசியலுக்குள் வந்தார்.அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் லால் சவுக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இளம் வயது எம்பியாக இருந்தார் உமர். ஆனால், வாஜ்பாய் அரசு 13 மாதங்களில் ஆட்சியை இழந்தது.

பின்னர் 1999ல் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு ஸ்ரீநகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாய் அரசில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராகப் பதவியேற்றார். 

இளம் மத்திய அமைச்சர் என்ற பெயரையும் பெற்றார்.தொடர்ந்து வெளியுறவுத் துறை இணையமைச்சராக ஆனார். இந்நிலையில் 2002ம் ஆண்டு எம்பி பதவியில் இருந்து வெளியேறி தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவராக மாநில தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், கந்தர்பால் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

பின்னர் 2004ம் ஆண்டு மீண்டும் ஸ்ரீநகர் தொகுதியிலிருந்து எம்பி ஆனார் உமர். 2008ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான உரையில், ‘நான் ஒரு முஸ்லிம், நான் ஒரு இந்தியன். இரண்டிற்கும் இடையே எனக்கு எந்த வேறுபாடும் இல்லை’ எனச் சிறப்பாக பேசினார். இந்தப் பேச்சு இணையத்தில் வைரலானது. உமரை பலருக்கும் பிடித்துப்போனது.

அந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தல் நடக்க, அதில் கந்தர்பால் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார் உமர் அப்துல்லா. காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து நின்ற இந்தத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி 28 இடங்களைப் பிடித்தது. தன்னுடைய 38வது வயதில் உமர் அப்துல்லா முதல்முறையாக ஜம்மு காஷ்மீர் முதல்வரானார். தொடர்ந்து 2014ம் ஆண்டு பீர்வாஹ் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரின் தேசிய மாநாட்டுக் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கவில்லை.

பாஜகவும், மெகபூபா முஃப்தியின் பிடிபி கட்சியும் ஆட்சியை அமைத்தன. பின்னர் 2019ம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை அடுத்து, உமர் அப்துல்லாவும், பிடிபி தலைவர் மெகபூபா முஃப்தியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு 2020ம் ஆண்டு தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.

2014ம் ஆண்டுக்குப் பிறகு, சிறப்பு அந்தஸ்து 370 சட்டப்பிரிவு ரத்துசெய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தல் இது. இதில் உமர் அப்துல்லா கந்தர்பால், பட்காம் என இரண்டு தொகுதிகளில் களம்கண்டு இரண்டிலும் வெற்றிவாகை சூடினார். இப்போது இரண்டாம் முறையாக ஜம்மு-காஷ்மீரின் முதல்வராகி இருக்கிறார்.

*நயாப் சிங் சைனி

உமர் அப்துல்லாவைப் போலவே சைனியும் 1970ம் ஆண்டு பிறந்தவர். அரியானாவின் அம்பாலா நகர் அருகேயுள்ள மிர்சாபூர் மச்ரா என்ற சிறிய கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பிஏவும், எல்எல்பியும் முடித்துள்ளார்.ஆரம்பத்தில் ஆர்எஸ்எஸ்ஸில் சேர்ந்து பணியாற்றினார். 

அப்போது முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாரால் ஈர்க்கப்பட்டு பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். தொடர்ந்து கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். ஓபிசியின் முகமாக செயல்பட்டார். இந்நிலையில் 2009ம் ஆண்டு நாராயண்கார் சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் ராம்கிஷனிடம் தோல்வியுற்றார்.

பின்னர் 2014ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியிலிருந்து சுமார் 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரியானா சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அந்தக் காலக்கட்டத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுரங்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தார். 

இதனையடுத்து 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அரியானாவின் குருச்சேத்திரா தொகுதியிலிருந்து வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு முதல்முறையாகச் சென்றார். ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்தார். எளிமையாகப் பழகக்கூடியவர் என மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்றார்.

இந்நிலையில் 2023ம் ஆண்டு அரியானா மாநில பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கட்சிப் பணியாற்றினார். அனைவரையும் அரவணைத்துச் சென்றார். இதனையடுத்து மாநில முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். 

இதனால் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பாஜக மாநிலத் தலைவரான சைனிக்கு சான்ஸ் அடித்தது. அவர் புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார். கட்டாரும் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று இப்போது ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.

இந்நிலையில்தான் அரியானா சட்டமன்றத் தேர்தல் வந்தது. இதில்தான் சைனி, லட்வா சட்டமன்றத் தொகுதியில் நின்று வாகை சூடியுள்ளார். அவரின் பாரதீய ஜனதா கட்சியும் 48 இடங்களில் வென்று மூன்றாவது முறை அரியானாவில் ஆட்சியைப் பிடித்துள்ளது. 

விவசாயிகள் போராட்டம், அக்னிபாத் திட்டம், வேலைவாய்ப்பின்மை எனப் பல்வேறு பிரச்னைகள் அரியானாவில் உள்ளன. இதனால், இந்தமுறை காங்கிரஸே ஆட்சியைப் பிடிக்கும் எனக் கருத்துக்கணிப்புகளும் வந்தன. ஆனால், இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி இந்த வெற்றியை வசப்படுத்தியுள்ளது பாஜக. இதற்குக் காரணம் முதல்வர் நயாப் சிங் சைனிதான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பேராச்சி கண்ணன்