ஹோட்டல் நடத்துகிறார் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியும் ஜி.வி.பிரகாஷ் அம்மாவுமான ஏ.ஆர்.ரெஹானா!



அறிமுகம் தேவைப்படாத பிரபலம் ஏ.ஆர்.ரெஹானா. பாடகி, இசையமைப்பாளர் என பல தளங்களில் இயங்கும் அவர் இப்போது சென்னை சாலிகிராமத்தில் தன் அம்மா பெயரில் ‘கரீமா ஹோட்டல்’ திறந்துள்ளார். மியூசிக், ஹோட்டல் என பிசியாக இருந்தவரிடம் பேசினோம். பேட்டிகளில் உங்கள் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மான், மகன் ஜி.வி.பிரகாஷ் பற்றி நிறைய சொல்லியிருக்கீங்க.

 உங்களுக்கு எப்படி மியூசிக்ல ஆர்வம் வந்துச்சு?

எங்க குடும்பமே இசைக் குடும்பம். தாத்தா பாகவதர். கோயில்களில் கதாகாலட்சேபம் பண்ணியவர். அப்பா மியூசிக் டைரக்டர். ரஹ்மானை எல்லோருக்கும் தெரியும்.
அப்பாவுக்கு மியூசிக்னா உயிர். கம்போஸிங், ரிக்கார்டிங் என எப்பவும் பிசியா இருப்பார். அந்த சூழ்நிலையில் வளர்ந்ததாலயோ அல்லது ஜீன் என்பதாலயோன்னு தெரியல... எனக்கும் மியூசிக் மேல ஆரவம் வந்துடுச்சு. அப்பா மியூசிக் டைரக்டர் என்பதால நானும் மியூசிக்ல இருக்கணும்னு பியோனோ, கிடார் கத்துக்க வெச்சார்.

நாங்க சின்ன பசங்களா இருக்கும்போதே அப்பா தவறிட்டார். அம்மா கொஞ்சம் கன்சர்வேடிவ். அப்போது எங்களை கல்யாணம் பண்ணிவெச்சுட்டாலே போதும்னு இருந்தார் அம்மா. ஆனாலும் படிச்சு வேலைக்குப் போகணும்னு தைரியமும் கொடுத்தாங்க. படிச்சாதான் தைரியமா லைஃபை ஃபேஸ் பண்ணமுடியும்னு நல்லா படிக்க வெச்சாங்க.பொதுவா வீட்ல மூத்தவங்களுக்கு பொறுப்பு அதிகமா இருக்கும்.

உங்கள் இளமைக் காலத்தில் என்னென்ன பொறுப்பு இருந்துச்சு?

அப்பா இல்லையே தவிர, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா என ரிலேட்டிவ்ஸுடன்தான் வளர்ந்தோம். தனிமையா இருக்கிறோமே என்ற ஃபீலிங் வந்ததில்லை. எனக்கு பொறுப்புகளும் அதிகமில்லை. குட்டிக் குட்டியா வேலை கொடுப்பாங்க. அதை செஞ்சுட்டு படிக்க போயிடுவேன்.

திடீர்னு ஹோட்டல் அதிபரா மாறிட்டீங்க?

அம்மாவை இழந்தபிறகு போகக்கூடிய இடம் எதுவுமில்லை என்ற சூழ்நிலை உருவாச்சு. அம்மா இருக்கும் வரை எதுவும் தெரியல. அம்மா இறந்த பிறகுதான் நமக்கு இருந்த ஒரு சப்போர்ட்டும் இல்லாமப் போயிடுச்சேன்னு தோணுச்சு.நிறைய டைம் இருந்துச்சு. சோகத்தை மீட்டெடுக்க எதாவது ஒரு விஷயத்துல ஆக்டிவ்வா இருந்தா மட்டுமே அம்மாவை இழந்த சோகத்திலிருந்து மீள முடியும்ன்னு நெனைச்சு அம்மா பேர்ல ‘கரீமா ஹோட்டல்’ திறந்தேன். ஹோட்டல் அதிபர் என்று சொல்லுமளவுக்கு ரொம்ப பெரிய ஹோட்டல் கிடையாது. 20 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். வீட்டு ஃபீல் இருக்கும்.

அம்மா பிரியாணி ரொம்ப சூப்பரா செய்வாங்க. நான் வெஜ் என்றில்லாம மோர்க் குழம்பு, வத்தக் குழம்பு, மீன் குழம்புன்னு குழம்பு வகைகளை பிரமாதமா சமைப்பாங்க. டேஸ்ட் தூள் கிளப்பும். அம்மா கைப்பக்குவம் அப்படி.எங்க ஹோட்டலோட ஸ்பெஷாலிட்டினா... டேஸ்ட்டியான ஃபுட் கிடைக்கும். வயித்துக்கு எந்த பிரச்னையும் வராது. 

ஆரோக்யத்துக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் இருக்கும். தரமான மசாலாக்கள் யூஸ் பண்றோம். ஹோட்டலில் சாப்பிட வர்றவங்களின் எதிர்பார்ப்பு என்னவோ அதை சமரசம் இல்லாம பூர்த்தி செய்வதுதான் எங்க நோக்கம். விலையும் அதிகமில்ல. கஸ்டமர்களிடமிருந்து நல்ல சப்போர்ட் கிடைச்சிருக்கு.

ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொன்னார்?

‘மாத்திக்கலாம் மாலை...’ டீசருடன் பிரியாணி விளம்பரம் வந்துச்சு. விளம்பரத்தைப் பார்த்துட்டு, ‘என்ன... அடி  தூள் கிளப்புற’ன்னு சொன்னார். பிரியாணி டேஸ்ட் பார்த்துட்டு பாராட்டினார். சமீபத்துல ரிக்கார்டிங், மீட்டிங் சமயத்துல பிரியாணி ஆர்டர் கொடுத்தார். சாப்பிட்ட எல்லோரும் நல்லா இருந்ததாக சொன்னார்களாம்.  

‘பல்லேலக்கா...’, ‘கிடாகாரி...’ போன்ற பாடல்களை ரஹ்மான் இசையில் பாடியிருக்கீங்க. சமீபத்துல ‘பொன்னியின் செல்வன்’, ‘லால்சலாம்’ படங்களில் பாடிய அனுபவம் எப்படி?

ரஹ்மானிடம் பாடுவது எப்போதும் ஸ்பெஷல். எப்போது பாடினாலும் சந்தோஷத்தைக் கொடுக்கும். அக்கா, தம்பி என்ற உறவு முறையெல்லாம் ஸ்டூடியோவுல இருக்காது. ‘நான் ஒரு மியூசிக் டைரக்டர். நீ ஒரு சிங்கர். ஒழுங்கா பாடு’ன்னுதான் சொல்வார். சில சமயம் திட்டவும் செய்வார். அது கொஞ்சம் கஷ்டமா இருக்கும். சிலர் ஸ்ருதி இல்லாம பாடும்போது, ‘ரெஹானா... ஸ்ருதி சரியில்ல’ன்னு சொல்வார். ‘நான் கரெக்ட்டாதான் பாடுறேன்’னு சொல்வேன். ‘சொல்றேன்ல’ன்னு கண்டிப்பான குரல் வரும். அப்போதுதான் மெசேஜ் எனக்கு இல்ல, கூட பாடுறவங்களுக்குன்னு புரியும்.  

பாடகி, மியூசிக் டைரக்டர் - எதுல திருப்தி அதிகமா கிடைக்கிறது?

சில சமயம் கம்போஸிங் திருப்தி தரும். சில சமயம் பாடும்போது திருப்தியா இருக்கும். ஓபனா சொல்லணும்னா எனக்கு பாடுவது ரொம்ப பிடிக்கும்.

‘ரெயின் டிராப்’ சமூக சேவை நிறுவனத்தோட தூதுவரா இருக்கீங்க. அதன் பணிகள் எப்படியிருக்கு?

சமூக சேவை மனப்பான்மை என்னுடைய பாட்டியிடமிருந்து வந்துச்சு. உதவி செய்ற அளவுக்கு பெரிய வசதியெல்லாம் இருக்காது. நாலைந்து புடவையோடு வாழ்ந்தவங்க. ஆடம்பரம்
செஞ்சுக்கமாட்டாங்க. கலைத் திறன் மிக்கவர். எப்பவும் சேவை மனப்பான்மையில் இருப்பாங்க. தன்னுடைய வளையலைத் வித்து பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட வெச்சிருப்பாங்க. அந்த சமயத்துல யாராவது ஹாஸ்பிட்டல் போகணும்னு  உதவி கேட்டா யோசிக்காம தூக்கிக் கொடுத்துடுவாங்க.

பாட்டியைத் தொடர்ந்து அம்மாவிடமும் பிறருக்கு உதவும் குணம் இருந்துச்சு. தனக்கு கொஞ்சமாகவும் பிறருக்கு நிறையவும் பண்ணுவாங்க. அப்படி எனக்கும் இயல்பாகவே சமூக சேவை மீது ஆர்வம். எங்கள் தொண்டு நிறுவனம் வழியாக கல்வி, சுற்றுச்சூழல் என பல தளங்களில் எங்களால் முடிந்தளவுக்கு சேவை செய்கிறோம். இந்த பூகோளத்தில் இருக்கும்போது யாருக்காவது உதவி செய்யணும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும்.

நீங்க பாடிய ‘மலை மலை...’ பாடல் பெரிய ஹிட். அந்த ரிக்கார்டிங் ஞாபகமிருக்கா?

நல்லா ஞாபகமிருக்கு. அப்போது ரஹ்மான் ஸ்டூயோவில் கோரஸ் பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தேன். இயக்குநர் மாதேஷ் நல்ல பழக்கம். நான் தனியா  பாடுவதை பார்த்துவிட்டு ‘குயில் தனியா கூவிட்டிருக்கு. எப்போ தனியா பாடப் போறீங்க’ன்னு கேட்டார். ‘நீங்க படம் எடுத்தா நான் பாடுறேன்’னு சொன்னேன். 

‘சாக்லேட்’ படம் எடுத்தபோது என்னைக் கூப்பிட்டார். அழுத்தமான குரலுக்காக ஏற்கனவே இரண்டு மூணு சிங்கர்ஸ் பாடியும் திருப்தியில்லாததால் என்னை பாட வெச்சார். முழுப்பாடலையும் அனுராதா ஸ்ரீராம் பாடியிருந்தார். மும்தாஜ் போர்ஷனுக்கு என்னுடைய குரலை யூஸ் பண்ணினாங்க. ரிக்கார்டிங் சமயத்துல தேவா சார் இல்ல. ஸ்ரீகாந்த் தேவாதான் ரிக்கார்டிங் பண்ணினார்.

தமிழில் பெண் இசையமைப்பாளர்களின் பங்களிப்பு மிகவும் குறைவு. பெண் இசையமைப்பாளராக எப்படி பார்க்கிறீர்கள்?

இசையமைப்பாளரின் பங்களிப்பு என்பது பரந்த பணி. கம்போஸிங் திறமை மட்டும் இருந்தால் போதாது. சவுண்ட் என்ஜினியரிங், ஆர்க்கெஸ்ட்ரா அரேஞ்ச்மென்ட்னு பல விஷயங்கள் தெரிஞ்சிருக்கணும்.

படத்தை எந்தக் கோணத்தில் எடுத்துட்டுப் போலாம், எங்க மியூசிக் தரணும் எங்க தரக்கூடாதுன்னு சகலமும் தெரியணும். இப்படி டெக்னிக்கலா தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கும். அந்த எக்ஸ்போஷர் லேடீஸுக்கு கிடைப்பதில்லை. ஆண்கள் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் ஒர்க் பண்ண முடியும். 

லேடீஸுக்கு அந்த மாதிரி வாய்ப்பு குறைவு.அடுத்து, கிரியேட்டிவிட்டி வேணும். உள் மனசுலயிருந்து டியூன் வரணும். இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும் அல்லது ஐடியாவாவது இருக்கணும். அப்படியிருந்தால்தான் மியூசிக் டைரக்டரா டிராவல் பண்ண முடியும். முக்கியமா தைரியம் வேணும்.

பெண்கள் இன்னும் எந்த விஷயத்தில் தைரியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

எல்லா விஷயத்திலும் தைரியமா இருக்கணும். ஓடி ஒளியக் கூடாது. யாராவது புண்படுத்தினாலும் அதை ஃபேஸ் பண்ணணும். உதாரணத்துக்கு என்னுடைய வீட்ல வேலை செய்த பணியாளரின் மகள் நல்லா படிப்பாங்க. படிப்புக்கு நானும் சப்போர்ட் பண்ணிட்டிருந்தேன்.திடீர்னு படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. அந்த அம்மாவிடம் ‘நல்லா படிக்கிற பொண்ணு. டிகிரி கூட வாங்கல. அதுக்குதானே நீங்க பாடுபட்டீங்க’ன்னு சொன்னேன்.

‘ரோட்ல போற பசங்க கேலி பண்றாங்க. அவங்ககிட்ட மோதமுடியாது’ன்னு சொன்னாங்க. ‘யாருக்கோ பயந்து பொண்ணோட படிப்பை நிறுத்திட்டீங்களே. பிச்சைபுகினும் கற்கை நன்றேனு சொல்லியிருக்கிறாங்க. நல்லா படிக்கிற பொண்ணு. வால்தனம் பண்ணவங்களை கண்டிக்காம பொண்ணோட படிப்பை முடக்கிட்டீங்களே’ன்னு கேட்டேன். பெண் படித்தால் மொத்த குடும்பத்துக்கும் கல்வி கிடைக்கும். அந்த விதத்துல எல்லா விஷயத்துக்கும் தைரியம் வேணும்.

உங்க தங்கை இஷ்ரத் காதிரி என்ன பண்றாங்க?

அவங்க பிசினஸ்வுமன். ஆனால், அவங்க பண்ற பிசினஸை சொல்லமாட்டாங்க. எனக்கும் அவங்களுக்கும் பத்து வயசு வித்தியாசம். நல்லா பாடுவாங்க. அக்காவா என் மேல கொஞ்சம் பாசம் உண்டு. ஆனால், மிடில் சிஸ்டர் என்னிடம் அதிக பாசமா இருப்பாங்க. அவளுடைய நேச்சர் எல்லோருக்கும் பிடிக்கும். அவ யாரிடமாவது பழகினா அது லைஃப் டைமா இருக்கும். மேலோட்டமா பழக மாட்டாங்க. இஷ்ரத் சுதந்திரமா இருக்கணும்னு நினைப்பாங்க.

எஸ்.ராஜா