61 வயது மாடல்!



“இந்த வயசான காலத்துல வீட்ல சும்மா உக்காந்துகிட்டு இருக்க வேண்டியதுதானே... உன்னோட எலும்புகளை நீயே உடைத்துக்கொள்ளப் போகிறாய், கடவுளை வழிபடுவதில் கவனம் செலுத்து, நீயெல்லாம் மாடலாகி என்ன பண்ணப்போறே...” - இதுபோன்ற கேலியான பின்னூட்டங்களால், இன்ஸ்டாகிராமில் நுழைந்த முக்தா சிங்கை வரவேற்றனர்.
ஒரு மாடலாக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கைத் துவங்கினார் முக்தா. அப்போது அவரது வயது 58. வயது மற்றும் முதுமை காரணமாக இன்ஸ்டாகிராமில் பல அவதிப்புகளுக்கு ஆளானார். அதுவும் இளம் தலைமுறையினர்தான் முக்தாவை வார்த்தைகளால் அவமதித்தனர்.

தன் மீதான எதிர்மறையான விமர்சனங்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, இன்ஸ்டாகிராமில் நுழைந்ததற்கான நோக்கத்தில் மட்டுமே ஈடுபட்டார். வேறு எதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. 
முக்தாவைத் தூற்றியவர்களே புகழும் அளவுக்கு ஒரு மாடலாக வலம் வருகிறார் முக்தா. இப்போது அவரது வயது 61. முக்தாவிற்கு பதினைந்து வயதாக இருந்தபோது அவரது முடி நரைக்க ஆரம்பித்துவிட்டது. 30 வயதுக்குள்ளேயே நிறைய முடிகள் நரைத்துவிட்டன. இன்று வெள்ளி போன்ற நரைத்தமுடிதான் அவரது அடையாளம் மற்றும் பலம்.

முக்தா இளமையாக இருந்தபோதே, வயதான பெண்கள்தான் அவரை வெகுவாக கவர்ந்தனர். குறிப்பாக அவருடைய பாட்டி நேர்த்தியான ஆடைகளை அணிந்து, ஸ்டைலீஷாக தன்னை வைத்துக்கொள்வார். அவருடைய அம்மா தன்னுடைய இறப்பின்போதும் கூட நேர்த்தியான ஆடையுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். 

இதைப் பார்த்து, வளர்ந்த முக்தா, தன்னை நேர்த்தியாக, அழகாக வைத்துக்கொள்வதற்கும், வயதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்துகொண்டார். தன்னை ஸ்டைலீஷாக வைத்துக்கொள்வதிலும், நேர்த்தியான ஆடைகளை அணிவதிலும் அதிக ஆர்வம் காட்டினார். இது அவரது 60 வயதிலும் தொடர்கிறது.

“என்னை நினைத்து நான் எவ்வளவு பெருமை கொள்கிறேன், என்னை நான் எவ்வளவு மதிக்கிறேன்என்பதை இந்த வயதிலும் உலகுக்கு காட்ட நினைத்தேன். இதுதான் நான் மாடலிங்கில் இறங்க காரணம். நம் சமூகத்தில் பெரும்பாலான பெண்கள் குறிப்பிட்ட வயதுக்குப் பின் தங்களது உடைகள், தோற்றம் என்று எதிலும் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. இந்த வழக்கத்தையும் உடைக்க வேண்டும். 

இதற்கு நானே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல அவமானங்களைத் தாங்கினேன்...” என்கிற முக்தா, ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆங்கிலேயரைப் போல சரளமாக ஆங்கிலத்தில் பேசக்கூடியவர். ஒரு விமானியைத் திருமணம் செய்துகொண்டதால் அடிக்கடி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம் பெயர்ந்துகொண்டே இருந்தது முக்தாவின் குடும்பம்.

அதனால் எல்லா ஊரும் அவருக்குச் சொந்த ஊர்தான். குடியேறும் இடத்தில் நிலவும் புதுச் சூழல்களுக்குத் தகுந்த மாதிரி தன்னை தகவமைத்துக்கொண்டு, இரண்டு குழந்தைகளை வளர்த்தார். இதற்கிடையில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்தார்.முப்பது வயதுக்கு மேல் குழந்தைகள், குடும்பம், கற்பித்தலைத் தாண்டி தனது உலகத்தை விரிவாக்கினார்.

ஆம்; கலைத்துறை, மார்க்கெட்டிங், பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளை எழுதுவது என பல துறைகளிலும் இயங்க ஆரம்பித்தார். இன்னொரு பக்கம் பாதுகாப்பின்மை அவரை வாட்டியது.
“என்னுடைய கணவர் அழகாக இருப்பார். அவர் அழகான இளம் பெண்களுடன் வேலை செய்து வந்தார். இது எனக்குள் ஒருவித பாதுகாப்பின்மை உணர்வை தந்தது.

இப்படியான பாதுகாப்பின்மையில் இருப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை...” என்கிற முக்தா, தனது குழந்தைகளை மிகச் சுதந்திரமாக வளர்த்தார். தனக்கு விருப்பமான ஓவியம் வரைவதில் ஈடுபட்டார். புகழ்பெற்ற பல ராக் இசைக்கலைஞர்களை ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் முக்தா.  இந்நிலையில் முக்தாவின் அம்மாவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது . தனது விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, அம்மாவைக் கவனித்துக்கொண்டார்.

சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய கலைப்பயணத்தில் இறங்கினார். பல இடங்களுக்குச் செல்லும்போது, அவரது தோற்றத்தைப் பார்த்து மாடலிங்கில் ஈடுபடச் சொல்லி முக்தாவைக் கேட்பார்கள். ஆனால், அதற்கான நேரம் கிடைக்காமல் இருந்தார்.தனது 58 வது வயதில்தான் நேரம் கிடைக்க, மாடலிங் துறையில் நுழைந்தார். விதவிதமான ஆடைகளில், விதவிதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார்.

அப்போதுதான் பல அவமதிப்புகளை அவர் சந்திக்க நேர்ந்தது. இருந்தாலும் துவண்டு போகாமல் தன்னை மெருகேற்றிக்கொண்டே இருந்தார். முக்தாவின் தோற்றம், ஒரு டிசைனரைக் கவர அவரது தயாரிப்புகளுக்கு மாடலாகத் தோன்றினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, பல டிசைனர்களுக்கு மாடலிங் செய்யத் தொடங்கினார். இன்று முக்தாவின் மாடலிங் பயணம் வெற்றிகரமாக தொடர்கிறது.

த.சக்திவேல்