சிறுகதை - சாமி சேலை



நடேசனுக்கு ஒரே பரிதவிப்பாகவே இருந்தது. அங்காளம்மனுக்குஅபிஷேகம் முடிந்து கர்ப்பக்கிரகத்திற்கு முன்னால் தொங்கிய எண்ணெய் பிசுபிசுப்பான அழுக்கு படிந்த திரைச்சீலையை இழுத்து விட்டுவிட்டு பூசாரி உள்ளே போய்விட்டார்.எல்லோரும் நீட்டியது போலத்தான் நடேசனும் தாம்பாளத்திலிருந்த அந்த சேலையை நீட்டினான். 
பூசாரி எந்த பதிலும் சொல்லாமல் எல்லோருடையதையும் வாங்கிக் கொண்டார்.மொத்தம்  ஏழெட்டு பேராவது அம்மனுக்கு சேலை வாங்கி வந்திருப்பார்கள். அதுவும் அந்த ஊர் நாட்டாமைக்காரர் மருமகள்தான் விலையுயர்ந்த பட்டுச்சேலையை தாம்பாளத்தில் வைத்திருந்தாள். பச்சையில் சிவப்பு பார்டர்போட்ட சேலை. கண்களைப் பறித்தது.

மற்ற எல்லோருமே பளபளப்பான சேலைதான் வைத்திருந்தார்கள். ஆனால், அந்த நாட்டாமைக்காரர் மருமகள் வாங்கி வந்திருந்த சேலையை விட  விலைக் குறைவுதான்.
எல்லோருடைய சேலையையும் விட இவனுடைய சேலைதான் மிகவும் மலிவு. அதுவும் நூல் சேலை. மஞ்சளில் கோடுகள்போட்ட நூல் சேலை.

 முன்னூத்தி சொச்சரூபாய்.  அவனிடம் இருந்த காசுக்கு அதைத்தான் வாங்க முடிந்தது. வருஷத்தில் ஒரு நாள் நடக்கிற திருவிழா. எப்பவும் இவன் வீட்டிலிருந்துதான் அம்மனுக்கு சீர்வரிசைஎல்லாமே போகும். ஒரு காலத்தில் அந்த ஊரையே கட்டி ஆண்ட குடும்பம். பெரிய சுற்றுக்கட்டு வீடு. நிலங்கள், தோப்பு, அரிசி ஆலை என ஏராளமாக இருந்தது.

நடேசனின் அப்பாவுக்கு போதாத காலம். உடன் பிறந்த தங்கைகள் எல்லாம் கல்யாணம் கட்டிக் கொடுத்ததிலேயே பாதி சொத்து பாழ்.  மீதியை தம்பிமார்களுக்கும் அண்ணனுக்கும் பங்குபோட்டுக் கொடுத்துவிட்டு ஊரைவிட்டுப் போகிற நிலைமை.நடேசனை சரியாகப் படிக்க வைக்கவில்லை. திருச்சிக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கிறான். திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை. அவனுடைய அப்பா, அம்மா எல்லோரும் இப்போது உயிரோடு இல்லை. மனைவி, குழந்தைகளுடன் சாதாரண வாடகை வீட்டில் வசிக்கிறான்.

இது சொந்த ஊர். முன்னோர் வாழ்ந்த ஊர். கொடி கட்டிப் பறந்த ஊர். இவர்களுக்கு அந்தக் கோயிலில் முறை உண்டு. எப்பவும் திருவிழாவிற்கு இவர்கள்தான் நூற்றுக்கும் அதிகமான தாம்பாளங்களில் சீர் செய்வார்கள். ஆனால், இப்போது ஒரு தாம்பாளம் கூட செய்ய வழி இல்லை. ‌வருஷா வருஷம் சித்திரை முதல் தேதியில் திருவிழா. மழையாக இருந்தாலும் புயலாக இருந்தாலும் திருவிழா நடந்தே தீரும்.

இது மாற்ற முடியாத விதி. அதனால் யாரும் திருவிழா பத்திரிகை இவனுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இவனாகவே எங்கிருந்தாலும் கிளம்பி வந்துவிடுவான்.
எப்படியாவது ஒரு சேலை எடுத்துக்கொண்டு வந்துவிடுவான். கோயில் பூசாரிதான் வரவேற்பார். நல்லவிதமாகப் பேசுவார். இவன் கொடுக்கற சேலையைத்தான் அம்மனுக்கு கட்டுவார். நடேசனின் அப்பா காலத்து மனுஷன். அவருக்கு நல்லது கெட்டது தெரியும். இவர்களுடைய தரம் தெரியும். வாழ்ந்த வாழ்க்கை தெரியும்.

இவன் பெரிதாக தட்சணை எல்லாம் கொடுக்காவிட்டாலும் இன்முகத்தோடு அவனுக்கு கழுத்தில் மாலை போட்டு, பூ, பழம் எல்லாம் ஒரு தட்டில் வைத்து கொடுப்பார். நெற்றி நிறைய விபூதி பூசி வாழ்த்தி அனுப்பி வைப்பார்.எப்பவும் போல அவர்தான் கோயிலில் இருப்பார்... தான் வாங்கி வந்திருக்கிற சேலையைத்தான் கட்டுவார் என்ற நினைப்போடுதான் வந்திருந்தான். நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன?அந்த பூசாரி இப்பொழுது உயிரோடு இல்லை. அவர் காலமாகி மூன்று மாத காலமாகிறது.

அவருடைய உறவுக்காரப் பையன்தான் கோயிலில் பூசாரியாக இருந்தான். சின்னஞ் சிறு வயசு. பூசாரி மாதிரியெல்லாம் நீளமான முடியை கொண்டை போட்டிருக்கவில்லை. கழுத்தில் பட்டையாய் சங்கிலி போட் டிருந்தான். காதில் செல்போன் ஆனிலேயே இருந்தது. யாரோடு பேசுகிறான் என்று அவனுக்குத் தான் தெரியும்.கூட்டத்தோடு கூட்டமாக இவன சேலையை முகத்தில் சலனமே இல்லாமல் வாங்கிக்கொண்டுதான் கர்ப்பக்கிரகத்தில் நுழைந்திருந்தான்.புது பூசாரி தன்னோடு சினேகமாகப் பேசாவிட்டாலும், தான் வாங்கி வந்த சேலையைக் கட்டினால் போதும் என்ற நினைப்பிலேயே இருந்தான்.

இப்போது வந்தது கூட வீட்டில் மனைவி சரசுக்குத் தெரியாது. சண்டை போடுவாள். அவளுக்கு இதில் எல்லாம் விருப்பமே இல்லை.‘‘ஒங்க சாமி நம்மள சந்தோசமாவாவாழ வச்சிக்கிட்டு இருக்கு? அன்னன்னைக்கு சோத்துக்கே அல்லாடிட்டு இருக்கோம். இதுல மொற வேற சீர் வேறயாக்கும்...’’ என்பாள். அவள் வார்த்தைகளிலும் நியாயம் இருக்கவேதான் செய்கிறது.
இந்தச் சேலையை வாங்குவதற்கு அவன் பட்ட பாடு கொஞ்சமல்ல.

சரசு இந்த வருஷம் போக வேண்டாம் எனத் தடுத்துவிட்டாள். குழந்தைகளுக்கு பீஸ் கட்டவே பணம் இல்லை.உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை உடைத்துத்தான் சில்லறைக் காசுகளாகப் பொறுக்கி, எண்ணித்தான் இந்தச் சேலையை வாங்கினான். 

அதுவும் கடைக்காரர் ஐநூறுக்குக் குறைய மாட்டேன் என்று சொல்லிவிட்டார். கெஞ்சிக்கூத்தாடி குறைக்கச் சொல்லி முன்னூத்தி சொச்ச ரூபாய்க்கு  வாங்கினான்.திருச்சியில் இருந்து இங்கே  கிளம்பி வர, போக பஸ்சுக்குதான் பணம் சரியாக இருந்தது. சாமிக்கு அர்ச்சனை சாமான் வாங்கக் கூட காசு இல்லை.

முன்னோர்கள் கும்பிட்ட சாமி. அப்பாவும் அம்மாவும் கும்பிட்ட சாமி. காலம் காலமாய் வழிபட்ட சாமி. தன் குடும்பத்திற்கு குலதெய்வ  சாமி. மனசு ஏனோ தாங்கவில்லை.
வராமல் இருக்கக்கூடாது என்ற நினைப்போடுதான் வந்திருந்தான். அழுக்கான பேண்டும் சட்டையும் அணிந்து இவன் மட்டும் தனித்து தெரிந்தான். மற்றவர்கள் எல்லாம் வெள்ளையும் சொள்ளையுமாய் காட்சியளித்தார்கள்.

இவனோடு யாரும் பேசவில்லை. எல்லாரும் இளைஞர்கள். ஒரே வண்ணத்தில் சட்டையும் வேஷ்டியும் கட்டியிருந்தார்கள்.பாவாடை தாவணி அணிந்த வயசு பெண்கள் பயபக்தியோடு கோயிலைச் சுற்றி வந்துகொண்டிருந்தார்கள். பால்காவடி எடுத்து வந்தவர்கள் எல்லோரும் அபிஷேகத்தைப் பார்த்துவிட்டு தீபாராதனைக்காகக் காத்திருந்தார்கள்.

முன்பு கூரையாக இருந்த கோயில் இப்பொழுது சிறிய கட்டடமாக மாறியிருந்தது. கட்டடம் புதிது. சூழல் புதிது. காட்சிகள் புதிது.ஆனால், சாமி மட்டும் அதேதான். எப்பவும் மூன்று நாட்கள் நடக்கிற திருவிழா. மூன்று நாட்களிலும் இவர்கள் வீட்டில்தான் அன்னதானம் எல்லாம் நடக்கும். வேலைக்காரர்கள் வீட்டில் குழுமி இருப்பார்கள். நடேசன் ராஜகுமாரன் மாதிரிதான்
வாழ்ந்தான். இப்போது அவர்களுடைய வீடு இருந்த இடம் தரிசாக இருந்தது. வீடு இடிக்கப்பட்டு, அதை வாங்கியவன் பெரிய வைக்கோல்போர் போட்டிருந்தான்.

தெருவில் நிறைய புதுவீடுகள் முளைத்திருந்தன. எல்லாமே அடுக்குமாடி வீடுகள். யாருக்கும் இவனை அடையாளம் தெரியவில்லை.அவனுடைய அப்பா வயதிலிருந்தவர்களுக்கெல்லாம் வயதாகி விட்டது. திண்ணைக்கட்டில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். இவனுக்கு 15 வயதாக இருக்கும் பொழுதே ஊரைவிட்டுப் போய்விட்டதால் யாரும் இவனைக் கண்டு கொள்ளவில்லை; அடையாளம் தெரியவில்லை. 

இவனும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை. வாழ்ந்து கெட்ட ஊருக்குத் திரும்ப வரும்பொழுது வளமோடு வரவேண்டும். அப்பொழுதுதான் மரியாதை. இல்லாவிட்டால் வரக்கூடாது என்பது அவனுக்கு அப்போதுதான் உறைத்தது.

இதுநாள்வரை ஒரு வருடம் கூட விட்டதில்லை. விட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் ஓடோடி வந்திருந்தான். அவன் வாங்கி வந்த சேலையை அம்மனுக்குக் கட்டி அழகு பார்த்தால் போதும் ‌மனசு நிறைந்துவிடும். 

தான் பட்ட கஷ்டம் எல்லாம் காணாமல் போய்விடும். அம்மன் எதையும் அவனுக்கு அள்ளிக் கொடுக்கப் போவதில்லை. ஆனால், ஒரு சின்ன சந்தோஷம். தான் வாங்கி வந்த சேலையை அம்மனுக்குக் கட்டி இருக்கிறார்கள்... அதுவும் திருநாளில் கட்டி இருக்கிறார்கள். ஊரே கும்பிடும்படி கட்டியிருக்கிறார்கள். அது ஒன்றுதான் அவனுக்கு பேரானந்தம்.

அதற்காகத்தான் அவன் காத்திருந்தான். இரண்டரை மணிக்கு பஸ். அந்த பஸ்ஸை விட்டால் அப்புறம் 6 மணி ஆகிவிடும். அதற்குள் கிளம்பி விட வேண்டும்.

இப்போதே மணி மதியம் ஒன்றுக்கு மேல் ஆகிவிட்டது. கோயில் வளாகத்தைச் சுற்றிலும் நிறைய கடைகள் முளைத்திருந்தன. எல்லாக் கடைக்காரர்களும் இவன் அப்பா அம்மாவோடு போகிறபோது எழுந்து நின்று கும்பிடுவார்கள். இப்போது யாருக்கும் அவனைத் தெரியவில்லை. தோற்றம் மாறியிருந்தது. வயது 45தான் என்றாலும் தலைமுடி எல்லாம் நரைந்து, ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தான். மாலை உபயதாரர் பெரிய ரோஜாப்பூ மாலையை வைத்துக் கொண்டு ஒரு கேரிபேக்கோடு நின்றிருந்தார். பூசாரி பையன் வெளியே வந்து அந்த மாலையை வாங்கிக் கொண்டு போனான்.

‘‘அலங்காரம் முடிஞ்சிடுச்சி... இப்போ தீபாராதனை காட்டிடுவாங்க...’’ முண்டியடித்துக் கொண்டு எல்லாரும் வரிசையில் நின்றார்கள்.கர்ப்பக்கிரகத்தின் திரைச்சீலை விலகியது. எல்லோரும் கைகளை உயர்த்தினார்கள். ஐந்து கலத்திலும் நெய்தீபத்தை ஏற்றி பூசாரி சாமிக்கு தீபம் காட்டினான்.இவனும் தீபத்தை பார்த்தான். 

அதற்கு முன்பு அவன் கண்கள் அம்மனின் மீது பதிந்தது. அவன் கண்களில் ஏமாற்றம் பரவியது. அம்மனுக்கு வேறு சேலை கட்டி யிருந்தார்கள். நாட்டாமைக்காரரின் மருமகள் வாங்கி வந்திருந்த வேலை. உயர்ந்த பட்டுச் சேலையைக் கட்டியிருந்தார்கள்.பெரிய ரோஜாப்பூ மாலைக்குள் அம்மன் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

இவன் கண்களில் கண்ணீர் கரகரவென வழிய தீபத்தை ஒற்றிக்கொண்டான். பிரசாதத்தை வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டான். அவனுக்கு அழுகை அடைத்தது. தொண்டைக் குழியை விட்டு அழுகை சிதறியது. கதறி அழ வேண்டும் போல இருந்தது. தான் வாங்கி வந்த சேலையைக் கட்டவில்லை. அவனால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளவே
முடியவில்லை.அப்பாவும் அம்மாவும் இருந்திருந்தால் அவர்களுக்குத்தான் முதல் மரியாதை; அவர்கள்தான் முதல் தாம்பாளம்; அவர்களுக்குத்தான் பூரண கும்பம்; அவர்களுக்குத்தான் எல்லாமே...

காலம் மாறிவிட்டது. பணம் மாற்றிவிட்டது.அவன் கோயிலை சுற்றிச் சுற்றி வந்தான். கூட்டம் அந்த அர்த்த மண்டபத்தை விட்டு நகர்ந்த பிறகு பூசாரியிடம், ‘‘சாமி! நான் வாங்கியாந்த சேலை... திருப்பிக் கொடுத்துடுங்க. அதான் சாமிக்கு கட்டலியே...’’இளம்பூசாரி இவனை முறைத்துப் பார்த்தபடியே அந்த சேலையை திரும்பவும் கொண்டு வந்து தந்தான். விரல்கள் நடுங்க அந்த சேலையை வாங்கிக் கொண்டான்.இனிமேல் நான் இந்தக் கோயிலுக்கு வரமாட்டேன் என்பது மாதிரி அம்மனைப் பார்த்துவிட்டு வெளியேறி பேருந்து நிறுத்துகிற ஆற்றங்கரைக் கீற்றுக்கொட்டகை பேருந்து நிறுத்தம் நோக்கி தளர்வாய் நடந்துகொண்டு இருக்கும்போது...

நேர் எதிரே ஒரு வயசான பெண்மணி வந்துகொண்டிருந்தாள். அழுக்கான சேலை கட்டி யிருந்தாள். ஆங்காங்கே கிழிந்து தொங்கியது. இரண்டு கைகளையும் ஏந்தியபடி ‘‘பசிக்குது பசிக்குது...’’ என கெஞ்சிக் கொண்டிருந்தாள்.அவள் பாவம் . யாரோ? நிச்சயமாக அவளுக்கும் ஒரு தாய் தந்தை இருந்திருப்பார்கள். கல்யாணம் ஆகியிருந்தால் குழந்தைகள் இருந்திருக்கும். கணவன் இருந்திருப்பான். உறவுகள் இருந்திருக்கும். ஏனோ அவளை நிர்க்கதியாக விட்டுவிட்டார்கள்.

‘‘அந்த ஆத்தா மூணு புள்ளைங்களை பெத்த பொம்மனாட்டி. மூணு பசங்களையும் நல்லா படிக்க வெச்சு நல்ல நெலைமைக்கு கொண்டுவந்துச்சு. எல்லாரும் டவுன்ல குழந்தை குட்டியோட இருக்காங்க. சொத்தை எல்லாம் பிரிச்சு வாங்கிட்டு போயிட்டாங்க. இந்தப் பக்கம் தலை வெச்சுப் படுக்கிறதில்லை. பிச்சை எடுக்க விட்டுட்டாங்க. கட்டிக்க துணிகூட இல்லாம திரிஞ்சிகிட்டிருக்கு...’’அதைக் கேட்டதும் நடேசனுக்குள் என்னவோ செய்தது.

தன் கையில் இருந்த   சேலையை சில கணங்கள் பார்த்தவன் என்ன நினைத்தானோ அந்தப் பெண்மணியிடம் ஓடிப்போய் நீட்டினான்.அந்தப் பெண்மணி மறுப்பேதும் சொல்லாமல் அதை கையில் வாங்கினாள். அப்போது அவள் கண்களை அவன் கவனித்தான். அவள் கண்களில் ஒரு ஒளி வெள்ளம். புதுச்சேலையைப் பார்த்த மகிழ்ச்சி வெள்ளம்.இப்போது நடேசனுக்கு அந்தக் கண்களுக்குள் அங்காளம்மன் தெரிந்தாள்.

-  மகேஷ்வரன்