அமெரிக்க தேர்தலில் ஏ.ஆர்.ரஹ்மான்!



ப்ராமிஸ். சும்மா எல்லாம் இல்லை. உண்மையாகவே தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் அரை மணி நேர இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

அதிபர் தேர்தலுக்காக இரு தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியர்களிடையே அவருக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. 

அவருக்கு ஆதரவாக அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் பல்வேறு இடங்களில் பிரசார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.உலகளவில் பிரபலங்களாக உள்ள பல்வேறு நபர்கள் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரில் ஒருவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இச்சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்கூட்டியே பதிவு செய்த இசை நிகழ்ச்சி ஒன்றை ஞாயிற்றுக்கிழமை இரவு காணொலியில் நடத்தியுள்ளார்.‘ஜெய் ஹோ...’, ‘சிங்கப்பெண்ணே...’ உள்ளிட்ட பல்வேறு பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் இந்த நிகழ்ச்சியில் பாடியிருக்கிறார். 

சுமார் அரை மணி நேரம் கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு ஏஏபிஐ (AAPI Victory Fund) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைப்பானது கமலா ஹாரிசின் பிரசாரத்துக்கு நிதி திரட்டுவது, வாக்காளர்களை ஈர்க்க நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறது.

கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக தெற்காசிய மற்றும் இந்திய வாக்காளர்களைக் கவரும் பொருட்டு ஏ.ஆர்.ரஹ்மானை இந்த அமைப்பு ஒப்பந்தம் செய்தது. ஏ.ஆர்.ரஹ்மானும் அந்த அமைப்பு கேட்டபடி 30 நிமிட பிரசார பாடலை உருவாக்கிக் கொடுத்துள்ளார். அது சென்ற ஞாயிறு அன்று இரவு காணொலியில் ஒளிபரப்பாகியது.இந்த இசை நிகழ்ச்சிக்கு நடுவில் கமலா ஹாரிஸின் வேட்பு மனு தாக்கல், கமலா ஹாரிஸின் வாக்குறுதிகள் மற்றும் அமெரிக்கர்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் போன்றவை இடையிடையே காட்டப்பட்டன.

காம்ஸ் பாப்பா