Must Watch



பரத நாட்டியம்

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, அப்ளாஸை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப் படம், ‘பரத நாட்டியம்’. அப்பா, அம்மா, இரண்டு சகோதரிகள், அந்த சகோதரிகளின் கணவர்கள், தம்பி என கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறான் சசி. குடும்பத்தை தாங்குபவனே அவன்தான். உள்ளூரில் உள்ள ஒரு கோயில் கமிட்டியில் செகரட்டரியாக இருக்கிறான்.

கிறிஸ்துவ பாதிரியார்கள் வீடு, வீடாகச் சென்று ஜெபம் செய்வதுபோல் நாமும் வீடு, வீடாகச் சென்று பூஜை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று தனது குழுவினருடன் திட்டம் தீட்டுகிறான். இதற்காக நமது குடும்பத்திலேயே பூஜை வைத்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும் என்று குழுவினர்களின் வீடுகளில் பூஜைக்காக ஏற்பாடு செய்கிறான்.  

இந்நிலையில் சசியின் அப்பாவுக்கு பக்கவாதம் வந்து உடலின் ஒரு பக்கம் செயலிழந்து விடுகிறது. ரொம்ப நாட்களுக்கு தாக்குப் பிடிக்க மாட்டார் என்று மருத்துவர்கள் சொல்லிவிடுகின்றனர். தவிர, பெரிய ரகசியம் ஒன்று அப்பாவிடம் இருக்கறது. அந்த ரகசியம் வெளியே வந்தால் குடும்பத்துக்கு அவமானம். இதையெல்லாம் சசி எப்படி சமாளிக்கிறான் என்பதே மீதிக்கதை. படத்தின் இயக்குநர் கிருஷ்ணதாஸ் முரளி.


மிஸ்டர் கிராக்கட்

ஒரு வித்தியாசமான திரில்லிங் படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘ஹாட் ஸ்டாரி’ல் வெளியாகியிருக்கிறது ‘மிஸ்டர் கிராக்கட்’ எனும் ஆங்கிலப்படம். தொண்ணூறுகளில் குழந்தைகளுக்காக தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வு நடக்கிறது. மிஸ்டர் கிராக்கட் என்பவர் அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.

 ‘பெற்றோர்கள் ஏதாவது தொந்தரவு செய்தால் என்னுடன் சொல்லுங்கள். அவர்களிடமிருந்து உங்களை நான் காப்பாற்றுகிறேன்’ என்று நிகழ்ச்சியில் பகிரங்கமாக அறிவிக்கிறார் கிராக்கட். அதனால் குழந்தைகளின் மத்தியில் ஹீரோவாக உருவெடுக்கிறார்.

இந்நிலையில் வளர்ப்புத் தந்தை ஒருவர் மகனை சாப்பிடச் சொல்லி தொந்தரவு செய்கிறார். அப்போது தொலைக்காட்சியில் கிராக்கட்டின் நிகழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது.
தொலைக்காட்சிக்குள் இருந்து மேஜிக் போல அந்த வீட்டுக்குள் வருகிறார் கிராக்கட். சாப்பிடச் சொல்லி தொந்தரவு செய்த தந்தையை மகன் கண் முன்பே கொலை செய்கிறார்.

நாளடைவில் பெற்றோர்களைக் கொலை செய்துவிட்டு, குழந்தைகளைக் கடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு கிராக்கட்டின் மீது விழுகிறது.இப்படி கிராக்கட்டிடம் தனது குழந்தையைப் பறிகொடுத்த சிங்கிள் மதர் எப்படி குழந்தையை மீட்கிறார் என்பதே திகில் திரைக்கதை. இப்படத்தின் இயக்குநர் பிராண்டன் எஸ்பி.

சி டி ஆர் எல்

‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் இந்திப்படம் இது. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. கல்லூரியில் படிக்கும்போது இருந்தே ஜோவும், நெல்லாவும் காதலர்கள். சமூக வலைத்தளத்தில் ஒரு சேனலை ஆரம்பித்து ஜோடியாக ரீல்ஸை வெளியிடுகின்றனர். நாளடைவில் பிரபலமான சோஷியல் மீடியா இன்ப்ளூயன்ஸர்களாக வலம் வருகிறது இந்த ஜோடி.

ஒரு சர்ப்ரஸ் வீடியோவுக்காக லைவ்வில் ஜோவைத் தேடிச் செல்கிறாள் நெல்லா. அப்போது வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கிறான் ஜோ. இந்த நிகழ்வும் லைவ்வில் ஒளிபரப்பாகிவிடுகிறது. ஜோ தன்னை ஏமாற்றிவிட்டான் என்று நெல்லா சண்டையிடுவதும் லைவ்வில் ஒளிபரப்பாக, பிரச்னை வெடிக்கிறது. நெட்டிசன்கள் நெல்லாவை சைக்கோ, போலி என்று கடுமையாகச் சாடுகின்றனர். கடுப்பாகும் நெல்லா, ஜோவைப் பழிவாங்கத் திட்டமிடுகிறாள்.

அப்போது நெல்லாவுக்கு சிடிஆர்எல் என்ற ஏஐ அறிமுகமாகிறது. ஏஐயின் உதவியுடன் தனது டிஜிட்டல் லைஃபில் இருக்கும் ஜோவின் அனைத்து புகைப்படங்களையும், வீடியோக்களையும், அவனது சோஷியல் மீடியா பக்கங்களையும் அழித்துவிடுகிறாள். அதே நேரத்தில் நெல்லாவின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அவளது ஒவ்வொரு நகர்வையும் ஏஐ கவனிக்க, சூடுபிடிக்கிறது திரைக்கதை. சுவாரஸ்யமான இந்த கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமாவை இயக்கியிருக்கிறார் விக்ரமாதித்ய மோத்வானே.

ஸ்திரீ 2

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, சுமார் ரூ.870 கோடிகளை அள்ளிய இந்திப்படம், ‘ஸ்திரீ 2’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.சாந்தேரி எனும் ஊரை விட்டு ஸ்திரீ எனும் ஆவி வெளியேறிய சில வருடங்களுக்குப் பிறகு அந்த ஊரை சர்கட்டா என்ற பேய் பயமுறுத்துகிறது. தலையில்லாத இந்தப் பேய் இளம் பெண்களை மட்டுமே கடத்திக்கொண்டு போகிறது. ஆனால், மக்களுக்கு பேய் மீது நம்பிக்கையில்லை.

இந்நிலையில் பிட்டுவின் கேர்ள் ஃபிரண்டான சிட்டியை சர்கட்டா கடத்திப் போவதைப் பார்த்துவிடுகிறான் பிட்டு. விக்கி, பிட்டு, ருத்ரா ஆகிய மூவரும் சேர்ந்து சர்கட்டாவைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். அது கொடூரமாக பழிவாங்கும் குணமுடைய ஆவி என்று கண்டுபிடிக்கின்றனர். தவிர, முற்போக்கான பெண்களைக் குறி வைத்துத்தான் சர்கட்டா கடத்துகிறது என்பதையும் அறிகின்றனர்.

சாதாரண மனிதர்களான அவர்களால் சர்கட்டாவை ஒன்றுமே செய்ய முடியாது. அதனால் ஸ்திரீயின் உதவியை நாடிச் செல்கின்றனர். நண்பர்கள் எப்படி சர்கட்டாவை விரட்டுகின்றனர் என்பதை நகைச்சுவையுடன் சொல்கிறது திரைக்கதை. திகில் படத்தையும் நகைச்சுவையாகச் சொன்னால் வசூலை அள்ள முடியும் என்பதற்கு இப்படம் சிறந்த உதாரணம். இதன் இயக்குநர் அமர் கௌசிக்.

தொகுப்பு: த.சக்திவேல்