சிறுவயது முதல் கேலி, அவமானம்...2 மேஜர் அறுவை சிகிச்சைகள்...



இந்தியாவின் உயரமான கூடைப்பந்து வீராங்கனை!

இந்தியாவில் கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகளுக்குப் பெரிதாக அங்கீகாரம் கிடைப்பதில்லை. சமூக வலைத்தளங்களின் வருகைக்குப் பிறகு, செஸ், மல்யுத்தம், கூடைப்பந்து, ஹாக்கி, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளும் மக்களின் மத்தியில் கவனத்தைப் பெறுகின்றன. அந்த வகையில் இந்தியாவில் பெண்களுக்கான கூடைப்பந்து விளையாட்டும் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக பூனம் சதுர்வேதி என்ற கூடைப்பந்து வீராங்கனை சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கிறார்.

மட்டுமல்ல, இந்தியாவின் உயரமான கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையாகவும் வலம் வருகிறார். பூனத்தின் அசாதாரணமான வாழ்க்கை கதையின் முன்பு அவரது உயரம் என்பது சிறு துளிதான். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், தான் சந்தித்த பிரச்னைகளையும், தடைகளையும் தாண்டி கூடைப்பந்து விளையாட்டில் சாதித்து வரும் பூனத்தின் மன தைரியத்தின் முன்பு அவரது உயரம் உண்மையிலுமே குறைவுதான். விளையாட்டு மைதானத்தில் மட்டுமல்லாமல், வாழ்க்கையிலும் பலருக்கு உந்துதல் தரும் ஒரு ரோல் மாடலாக ஜொலிக்கிறார் பூனம்.

யார் இந்த பூனம் சதுர்வேதி?

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிறந்து, வளர்ந்தவர் பூனம். சிறு வயதிலிருந்தே வழக்கத்துக்கு மாறான உயரத்தில் இருந்தார். அந்த உயரம் எளிதாக மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.

பத்தாம் வகுப்பில் நுழையும்போதே 6 அடி உயரத்தை தொட்டுவிட்டார். அவரது பள்ளியில் மாணவர்களின் மத்தியில் நிற்கும்போது பூனம் மட்டுமே தனியாகத் தெரிவார். அந்தளவுக்கு அவரது உயரம் இருந்தது.

துரதிர்ஷ்டவசமாக அசாதாரணமான உயரமே அவருக்கு பல இன்னல்களைக் கொண்டு வந்தது. உயரத்தை வைத்து சக மாணவர்கள் அவரை கிண்டலும், கேலியும் செய்தனர்.
இயல்பாக இல்லாத உதட்டின் காரணமாக பேசுவதற்குச் சிரமப்பட்டார். இதன் பொருட்டும் கிண்டலுக்கு உள்ளானார். பள்ளியில் நடந்த இந்தச் சம்பவங்கள் பூனத்தின் சுய மரியாதையை அசைத்துப் பார்த்தது. இன்னொரு பக்கம் கிண்டலையும், கேலியையும் அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால், கூடைப்பந்து விளையாட்டு ஒரு தேவதையைப் போல அவரைக் காப்பாற்றியது.

கான்பூரில் ஒரு மதிய வேளை. கடுமையான வெய்யில் வாட்டிக்கொண்டிருந்தது. அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் பூனம். ஏதொவொரு வேலையாக ஒரு தெருவின் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். உயரம் காரணமாக குடும்ப நண்பர் ஒருவரின் கண்ணில் பட்டுவிட்டார். அந்த நண்பர் பூனத்தைச் சந்தித்து, ‘‘எப்போதாவது கூடைப்பந்து விளையாடுவதைப் பற்றி யோசித்திருக்கிறாயா?’’ என்று கேட்டிருக்கிறார்.

ஒரு ஆர்வத்தில்தான் அந்த நண்பர் பூனத்தைக் கேட்டார். ஆனால், அந்தக் கேள்வி பூனத்தின் மனதில் ஒரு விதையைப் போல விழுந்து, விரைவிலேயே மரமாகி, அந்த மரம் பழங்களைக் கொடுக்க ஆரம்பித்தது. ஆம்; நண்பர் கேள்வி கேட்ட தருணத்திலிருந்து கூடைப்பந்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தார். கூடைப்பந்து அவரது வாழ்க்கையையே முற்றிலும் மாற்றிவிட்டது. மற்றவர்கள் கேலியாகப் பார்த்த உயரத்தை, தனது பலமாக, நேர்மறையாக மாற்றிக்கொண்டார்.

பத்தாம் வகுப்பை முடிக்கும்போது பூனத்தின் உயரம் 6 அடி, 3 அங்குலத்தைத் தொட்டுவிட்டது. கூடைப்பந்து மைதானமே கதி என கிடந்தார். தனது பாதுகாப்பின்மைகளை அந்த மைதானத்தில் பலமாக மாற்றினார். ஒருவகையில் கூடைப்பந்து மைதானம் பூனத்தின் அடைக்கலமாக மாறியது. நாளுக்கு நாள் கூடைப்பந்து விளையாட்டில் மெருகேறிக்கொண்டே வந்தார். வெறும் உயரத்தை மட்டுமே நம்பி விளையாடாமல், திறமையை வளர்த்துக்கொண்டு விளையாடினார்.

சில வருடங்களிலேயே மாநில அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து அணியில் இடம் கிடைத்தது. கூடைப்பந்து விளையாட்டில் சாதித்து வரும் நிலையில், நினைத்துப்பார்க்க முடியாதபடி வாழ்க்கை ஒரு தடையை பூனத்துக்கு விதைத்தது.ஆம்: 2013ம் வருடம் பூனத்தின் மூளையில் கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. அப்படியே நொறுங்கிப் போனார். பூனத்தின் கூடைப்பந்து கனவுகள் மட்டுமல்ல, உயிருடன் இருப்போமா என்பதே கேள்விக்குறியானது.

இரண்டு மேஜர் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஐந்து வருடங்கள் அவருடைய கூடைப்பந்து வாழ்க்கை இருண்டுபோனது. இருந்தாலும் கூடைப்பந்தின் மீதான காதல் அவருக்கு குறையவே இல்லை. விளையாட வேண்டும் என்ற வெறி அவரது ஆன்மாவைத் துரத்திக் கொண்டே இருந்தது. 2019ம் வருடம் மூளையிலிருந்த கட்டி முற்றிலும் அகற்றப்பட்டு, அவரது வாழ்வில் மீண்டும் வெளிச்சம் பரவியது. இன்று இந்தியாவின் முன்னணி கூடைப்பந்து வீராங்கனையாகவும், உயரமான வீராங்கனையாகவும் வலம் வருகிறார்.
ஆம்; பூனத்தின் உயரம், 7 அடி.

த.சக்திவேல்