நிறுத்தப்பட்டது 150 ஆண்டுகள் பழமையான கொல்கத்தா டிராம் சேவை!



ஒன்றல்ல... இரண்டல்ல... 150 ஆண்டுகள். கொல்கத்தா மக்களுக்கான போக்குவரத்து சேவையில் அளப்பரிய பணியைச் செய்து வந்தவை டிராம் வண்டிகள். அவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன போக்குவரத்தும்கூட. கொல்கத்தா நகரில் எடுக்கப்படும் எந்த மொழித் திரைப்படங்களாக இருந்தாலும் அதில் டிராம் வண்டிக் காட்சிகள் நிச்சயம் பிரதானமாக இருக்கும்.
அப்படி புகழ்பெற்ற டிராம் வண்டி சேவையைத்தான் சமீபத்தில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு. இது கொல்கத்தாவாசிகள் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் 1873ம் ஆண்டு முதல்முதலாக டிராம் சேவை தொடங்கப்பட்ட இடம் கொல்கத்தா. அப்போது எஞ்சினோ, மின்சாரமோ இல்லாமல் குதிரைகள் இழுத்துச் செல்லும் வண்டியாக டிராம் இருந்தது.

பின்னர் 1874ம் ஆண்டு மும்பையில் டிராம் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதுவும் குதிரைகள் இழுத்துச் செல்லும்படி இருந்தது. தொடர்ந்து 1889ம் ஆண்டு நாசிக் நகரில் இதேபோல குதிரை டிராம் வண்டிகள் தொடங்கப்பட்டன. இதனையடுத்து 1895ம் ஆண்டு சென்னையில் மின்சார டிராம் சேவைகள் அறிமுகமாயின. இந்தியாவில் முதன்முதலாக மின்சார டிராம் வண்டிகள் இயக்கப்பட்டது சென்னையில்தான்.

தொடர்ந்து கான்பூர், தில்லி எனப் பல இடங்களில் டிராம் வண்டிகள் வந்தன. இதில் நாசிக் டிராம் போக்குவரத்து பஞ்சம் மற்றும் நோய்கள் வந்ததால் நஷ்டத்தைச் சந்திக்க 1933ம் ஆண்டு மூடப்பட்டது. கான்பூரும் இதே ஆண்டு மூடுவிழா கண்டது.சென்னையில் சிறப்பாக இயங்கி வந்த டிராம் சேவை நஷ்டம் காரணமாக 1951ம் ஆண்டு திவாலானது. 1953ம் ஆண்டு மூடப்பட்டது.
இதனையடுத்து தில்லியில் மக்கள் நெருக்கடி காரணமாக 1963ம் ஆண்டும், மும்பையில் 1964ம் ஆண்டு ரயில் போக்குவரத்து மேம்பட்ட பிறகும் டிராம் சேவைகள் மூடுவிழா கண்டன.

இதற்கிடையே கொச்சி மாநில வன டிராம்வே பரம்பிக் குளம் வனஉயிரின காப்பகத்திலிருந்து சாலக்குடிக்கு காடுகள் வழியாக இயக்கப்பட்டது. இது தேக்கு, ரோஸ்வுட் உள்ளிட்ட மரங்களை சுமந்துவர பயன்படுத்தப்பட்டது. இதுவும் 1963ல் சேவையை நிறுத்தியது. இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வந்த ஒரே டிராம் சேவையாக கொல்கத்தா டிராம் மட்டுமே இருந்து வந்தது. இதைத்தான் இப்போது நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது மாநில அரசு.

கடந்து வந்த பாதை 1873ம் ஆண்டு அப்போதைய கல்கத்தாவில் முதன்முதலாக குதிரைகள் மூலமான டிராம் சேவை சியல்தா என்ற பகுதியிலிருந்து ஆர்மேனியன் காட் தெரு வரை நான்கு கிமீ தூரம் ஆரம்பிக்கப்பட்டது. 
பின்னர் கல்கத்தா டிராம்வே கம்பெனி 1880ல் உருவாக்கப்பட்டு லண்டனில் பதிவுசெய்யப்பட்டது. தொடர்ந்து மீட்டர் கேஜ் குதிரை டிராம் சேவை தொடங்கப்பட்டது. இதனையடுத்து 1882ல் டிராம் கார்களில் நீராவி எஞ்சின்கள் பொருத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

19ம் நூற்றாண்டின் முடிவில் கல்கத்தா டிராம்வே கம்பெனி 166 டிராம் கார்களும், 1000 குதிரைகளும், ஏழு நீராவி எஞ்சின்களும், சுமார் 30 கிமீ தூர டிராக்குகளும் கொண்டிருந்தது. பின்னர், 1902ம் ஆண்டு மின்சார டிராம்கள் எஸ்பிளேனேடு டூ கிட்டர்பூர் வரை இயக்கப்பட்டன. இதற்காக 1900ம் ஆண்டே நகர் முழுவதும் டிராக்குகள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டன.

20ம் நூற்றாண்டில் நகரின் எல்லா பகுதிகளுக்கும் மின்சார டிராம் டிராக்குகள் போடப்பட்டன. ஹவுரா பிரிட்ஜ் கடந்துசெல்லும் ரூட்களும் வந்தன. இதனால், கொல்கத்தா நகர மக்களின் வாழ்வியலோடு ஒன்றாகக் கலந்தன டிராம்கள். கொல்கத்தா மக்களும் நகரின் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமென்றாலும் டிராமையே முன்னுரிமையாகப் பயன்படுத்தி வந்தனர்.

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கொல்கத்தாவில் 25 ரூட்களில் 200 டிராம் கார்கள் செயல்பட்டு வந்தன. 1951ம் ஆண்டு கல்கத்தா டிராம்வே கம்பெனியுடன் மாநில அரசு ஓர் ஒப்பந்தம் போட்டது. அதன்வழியாக கல்கத்தா டிராம்வேஸ் சட்டம் 1951ஐ அறிமுகப்படுத்தியது. அதாவது டிராம்வே கம்பெனி மாநில அரசிடம் வந்தது.

தொடர்ந்து 1980களில் 37 ரூட்களாக உயர்ந்தன. டிராம் கார்களின் எண்ணிக்கையும் முந்நூறானது. இதற்கிடையே பல்வேறு வங்காளப் படங்களில் டிராம்கள் காட்டப்பட்டன. அதன் புகழ் திக்கெற்றும் பரவியது.

மற்ற இந்திய நகரங்களில் டிராம்கள் நிறுத்தப்பட்டாலும் கொல்கத்தாவில் மட்டும் தொடர்ந்து ஓடின. இதற்குக் காரணம் நகரின் குறுகிய தெருக்கள் மற்றும் வரலாற்று கட்டிடக்கலை ஆகியவை சாலைகளின் விரிவாக்கத்தைக் கடினமாக்கியது. இதனால், அப்போதைய கொல்கத்தா டிராம்களைத் தவிர வேறு போக்குவரத்துக்கு சாத்தியமில்லாமல் இருந்தது. அதுமட்டுமில்லாமல் டிராம்கள் மிகவும் மலிவு விலையில் போக்குவரத்தைக் கொடுத்தன.

அதன் டிக்கெட் விலை ரூ.5 முதல் ரூ.10 வரைதான். இது பலதரப்பட்ட மக்களும் அணுகக்கூடியதாக இருந்தது. அத்துடன் ஈகோ-ஃப்ரண்ட்லி போக்குவரத்து என்பதும் ஒரு காரணம்.  கடந்த 2011ம் ஆண்டு வரை சுமார் 61 கிமீ தூரம், 37 ரூட்கள் என டிராம்கள் இயக்கப்பட்டு வந்தன. சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் இதில் பணிபுரிந்து வந்தனர். அந்த ஆண்டு 70 ஆயிரம் பேர்கள் வரை டிராம்களில் பயணித்தனர்.

2011ம் ஆண்டுக்குப் பிறகு டிராம்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டன. குறிப்பாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகே டிராம் போக்குவரத்து குறைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.அதாவது 2015ம் ஆண்டு வெறும் பத்து ரூட்களில் நூறு டிராம்களே இயக்கப்பட்டன. இதன்பிறகு, 2018ல் டிராம் போக்குவரத்தில் முதலீடு செய்வதையும் மாநில அரசு நிறுத்தியது.  

கொரோனா காலத்தில் டிராம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதாவது 2022ம் ஆண்டு டிராம் சேவை 12 கிமீ தூரமாக மாறியது. அப்போது சுமார் 5 முதல் 7 ஆயிரம் பேர்கள் வரையே பயணித்தனர். இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு டிராம் சேவை தொடங்கப்பட்டு 150 ஆண்டு ஆனது. இதனை கொல்கத்தா டிராம்வேயும், டிராம் பிரியர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அந்தக் கொண்டாடத்தின் போதே கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஒரு பொதுநல வழக்கில், பாரம்பரியமான டிராம்களை எப்படி தக்க வைக்கலாம் என்பதற்காக ஒரு கமிட்டியை உருவாக்க மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. தனியார்-அரசு பங்களிப்புடன் கூடிய டிராம் சேவை மாடலைப் பரிந்துரைத்தது.

இந்நிலையில் கடந்த மாதம் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சினேகசிஸ் சக்ரபோர்த்தி, கொல்கத்தாவில் சாலைகள் குறுகலாக இருப்பதாகவும், வாகனப் போக்கு
வரத்து அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் உள்ள பாதைகளில் டிராம்கள் இயக்குவது கடினமாக உள்ளதாகவும்  கூறினார்.

இதனால், டிராம் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக அறிவித்தார். இருந்தும் டிராம்களின் பாரம்பரியத்திற்காக எஸ்பிளனேடு முதல் மைதான் வரை ஒரு ரூட்டில் மட்டும் ஜாலி ரைடர்களுக்காகவும் சுற்றுலா வருபவர்களுக்காகவும் இயக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

உடனடியாக அரசின் இந்த முடிவை எதிர்த்த கொல்கத்தா டிராம் பயன்படுத்துவோர் சங்கத்தினர் கடும் போராட்டத்தை முன்னெடுத்தனர். மக்களும் தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்துவருகின்றனர். இருந்தும் டிராம் சேவை மீண்டும் வருவது சந்தேகம்தான். அதனால் நிதர்சனம், இனி கொல்கத்தா மக்களின் நினைவுகளில் மட்டுமே டிராம் போக்கு
வரத்து இருக்கும் என்பதே!  

பேராச்சி கண்ணன்