ஆன்மிகம் கலந்த காதல் கதை!



‘‘‘உன்னைக் கொண்டாடு’ன்னு ஓஷோ சொல்லுவார். உன்னைக் கொண்டாடினால் உலகத்தைக் கொண்டாட முடியும் என்பதுதான் அதன் அர்த்தம். அப்படி சினிமாவுக்கு நேர்மையா இருந்ததாலதான் என்னுடைய இரண்டாவது படத்தை நெனைச்சபடி எடுக்க முடிஞ்சது.

முதல் நாள் ஷூட்டிங் கொடைக்கானலில் கோஸ் பேக்ரவுண்ட் செட்டப்ல ஷூட் ஏற்பாடு பண்ணிட்டேன். வண்டி வண்டியா கோஸ் ஆர்டர் பண்ணிய நிலையில செலக்ட் பண்ணிவெச்சிருந்த சிறுவனால அங்கவர முடியல. 
எல்லாம் போச்சுன்னு நெனைச்ச சமயத்துல ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்த சிறுவன் என் கண்ணுல பட்டதும் அவனையே நடிக்க வெச்சுட்டேன். நம்ம தொழிலுக்கு நாம நேர்மையா இருந்தா அது நம்மை கைவிடாதுன்னு ‘உன்னைக் கொண்டாடு’ கான்செப்ட் புரிய வெச்சது...’’ நிதானத்தோடு பேச ஆரம்பித்தார் இயக்குநர் சிவா ஆர்.

போஸ்டர்ல ஆன்மிக வாசம் வீசுதே..?

சிவனுடைய 1008 நாமங்களில் ஒன்றுதான் ‘ஆலன்’. சிவன் என்றால் படைப்பாளி. காசியையும் சிவனையும் பிரிக்க முடியாது. காசிக்குப்போன பிறகுதான் ஹீரோவுடைய வாழ்க்கையில பல திருப்பங்கள் நடக்குது. ‘ஆலன்’ கதைக்கு தொடர்புடைய டைட்டிலா இருந்துச்சு. க்யூட்டான டைட்டிலா இருந்ததால அதையே ஃபைனல் பண்ணிட்டோம்.

இது மெலடி டிராமா. எழுத்து, காதல் என பல தளத்துல கதை டிராவலாகும். இளம் வயசுல காதலைக் கடந்து வராதவங்க யாரும் இருக்கவே முடியாது. சிலருடைய காதல் தொடரும். சிலருடைய காதல் தொடராவிட்டாலும் அதிலேயே இருப்பாங்க.

ஹீரோ, ஹீரோயின் இரண்டு குடும்பமும் நட்பா பழகுகிறாங்க. ஹீரோவுக்கு ரைட்டராகணும்னு ஆசை. ஹீரோயினுக்கு ஹீரோ மீது ஆசை. ஒரு கட்டத்துல இரண்டு குடும்பங்களும் வாழ்ந்ததுக்கான சுவடே இல்லாமல் அழிகிறது.  ஹீரோ மொத்தமா தன் குடும்பத்தை இழக்கிறார். இந்தப் பக்கம் ஹீரோயினும் அவருடைய அப்பாவும் தப்பிப் பிழைக்கிறாங்க.

இந்த சூழ்நிலையில ஹீரோ மன நிம்மதி தேடி காசிக்கு போறார். காசி வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திக் கொண்டு முழு ஆன்மிகவாதியாக தன்னை மாற்றிகொள்ள முயற்சி செய்கிறார்.
ஹீரோவுடைய இந்தப் பயணத்தில் ஆன்மிகம், காதல், லட்சியம் என பல மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அதை ஹீரோ எப்படி சந்திக்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன்.

இந்த மாதிரி அழுத்தமான கதைக்கு ஹீரோ தேர்வு முக்கியமாச்சே?

உண்மைதான். என்னுடைய கதைக்கு ரொம்ப நெருக்கமா மணிகண்டனும், வெற்றியும் இருந்தாங்க. மணிகண்டனால நான் கேட்ட தேதிக்கு கால்ஷீட் ஒதுக்கமுடியல.
வெற்றி கதை பிடிச்சு உள்ளே வந்தார். 

அவரை காஸ்டிங் பண்ண முக்கிய காரணமா இருந்தது அவருடைய கண்கள். ஆன்மிகத்துக்கு கண்ணுதான் பேசணும். தியாகு கேரக்டருக்கு அந்த கண் போதுமானளவுக்கு நியாயம் செய்யும்னு தோணுச்சு. வாயோ வேற எதுவும் பேசவேண்டிய அவசியமிருக்காது. கேரக்டருக்கு பலம் சேர்க்கும் உயரம்.

ஆன்மிகத்தையும், சராசரி வாழ்க்கையையும் பேலன்ஸ் பண்ணக்கூடிய கேரக்டருக்கு வெற்றி சரியான சாய்ஸா இருந்தார். அவர் பண்ணிய படங்களில் இது வித்தியாசமான படமா இருக்கும். தாடியோடு பார்த்தா சாமியாரா தெரிவார். தாடி இல்லாம பார்த்தா ரொமான்ஸ் ஹீரோவா தெரிவார். இந்த இரண்டு டைமன்ஷன்களுக்கும் என்ன நியாயம் செய்யணுமோ அதை சிறப்பா செய்தார்.

அனுசித்தாராவுக்கு மலையாளத்துல நல்ல பேர் இருக்கு. சமீபத்துல ‘பத்துதல’ பண்ணியிருந்தார். கதைப்படி ஹீரோயின் 40 வயசு மாதிரி தெரியணும். அதற்கு அனுசித்தாராவுடைய லுக் சரியா இருந்துச்சு. சினிமாவை ரொம்ப ப்ரொஃபஷனலா பார்ப்பாங்க. அழச் சொன்னா அழுவாங்க. சிரிக்கச் சொன்னா சிரிப்பாங்க. டைரக்டர் என்ன சொல்றாரோ அதை யோசிக்காம
பண்ணுவாங்க.

அவங்ககிட்ட நான் கவனிச்சது கேரக்டரை உள்வாங்கி நடிப்பதுல தேர்ந்தவர். ஒரு காட்சியில் ஹீரோவும், ஹீரோயினும் நூலகத்துல இருப்பாங்க. இருவரும் சின்ன வயசுல பிரிஞ்சதால ஒருத்தருக்கு ஒருத்தர் அடையாளம் தெரியாது. அந்த இடத்துல ஹீரோயின் தன்னுடைய உள் உணர்வுவை கடத்தணும். அதை அனுசித்தாரா சரியா பண்ணினார்.இன்னொரு ஹீரோயின் மதுரா. ஜெர்மனிக்காரர். அம்மா இலங்கை. அப்பா ஜெர்மனி. சினிமா பேஷன் உள்ளவர். தமிழ் பேசத் தெரியும் என்பதால் டயலாக் பேப்பரை முன்கூட்டியே வாங்கி கரைச்சுகுடிச்சுட்டுதான் செட்டுக்கு வருவார்.

மற்ற கேரக்டர்ல விவேக் பிரசன்னா, கருணாகரன், அருவி மதன், ஹரீஷ் பேரடி நடிச்சிருக்காங்க. சும்மா தலைகாட்டிட்டு போற மாதிரி இல்லாம எல்லோரும் கதைக்கு முக்கியமானவங்களா இருப்பாங்க.

பாடல்கள் எப்படி வந்திருக்கு?

இசை மனோஜ் கிருஷ்ணா. தமிழில் சில படங்கள் பண்ணியிருக்கிறார். டேலன்ட்டட் மியூசிக் டைரக்டர்.  நான்கு பாடல்களை சிறப்பா கொடுத்திருக்கிறார்.  பின்னணி இசையையும் கதைக்கு வலு சேர்க்கிற மாதிரி கொடுத்தார்.ஒளிப்பதிவு விந்தன் ஸ்டாலின். என்னுடன் ‘காரோட்டியின் காதலி’ பண்ணியவர். கொடைக்கானல், காசி, வாரணாசி, ரிஷிகேஷ், சென்னை, பாண்டிச்சேரி என ஒவ்வொரு லொகேஷனையும் மிரட்டலா படம் பிடிச்சிருக்கிறார். எடிட்டிங் மு.காசி விஸ்வந்தான். தயாரிப்பு 3 எஸ்  பிக்சர்ஸ்.

இரண்டாவது படத்துல என்ன கத்துக்கிட்டீங்க?

இது என்னுடைய மனசுக்கு நெருக்கமான கதை மட்டுமல்ல, மக்களிடம் முழுமையா சேரணும்னு நினைச்ச கதை. ஆனால், எல்லோரும் ‘இது நார்மலான கதை. இந்த மாதிரி கதை எடுபடாது. ஃபைட், டான்ஸ்னு கமர்ஷியலா கொண்டுபோனாதான் ஆடியன்ஸ் பார்ப்பாங்க’ன்னு பயம் காட்டினாங்க.நான், என்னுடைய முடிவுல தெளிவா இருந்தேன். 

நான் நினைச்சிருந்தா இந்தக் கதையில நிறைய ஃபைட் வெச்சிருக்கலாம். ஹீரோ ரிவெஞ்ச் எடுப்பதற்கு கதையில நிறைய ஸ்பேஸ் இருக்கு. ஆர்ட்டிஸ்ட், லொகேஷன் உட்பட எதையும் சமரசம் பண்ணிக்கல. படம் முடிச்சு பார்க்கும்போது ஆடியன்ஸை ஏமாத்தாம உண்மையா ஒரு ஃபீல் குட் படம் கொடுத்த திருப்தி வந்துச்சு.

யார் இந்த சிவா?

என்னுடைய இருபது வயசுக்குள்ள நான் படிக்காத புத்தகம் இல்ல. ஜெயகாந்தன், சாண்டில்யன், கி.ரா, பாலகுமாரன், சுஜாதா, புஷ்பா தங்கதுரை, கோவி.மணிசேகரன், சிவசங்கரி, அனுராதா ரமணன், திலகவதி... என பலருடைய எழுத்துக்களை வாசிச்சதாலதான் எனக்கும் எழுத்தின் மீது ஆர்வம் வந்துச்சு.தரமணி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சேர முயற்சி செய்தேன். ஆனால், ஃபேமிலி சிச்சுவேஷனால படிப்பு முடிஞ்சதும் வேலைக்காக சிங்கப்பூர் போனேன். படிப்படியா முன்னேறி அங்கேயே சொந்தமா பிசினஸ் பண்ண ஆரம்பிச்சேன். இப்போது பல நூறு பேர் எங்கிட்ட வேலை பார்க்கிறாங்க.

‘உன்னைக் கொண்டாடு’ன்னு ஓஷோ சொல்லியிருப்பார். லைஃப்ல செட்டிலான பிறகு நான் நானாகவே இருக்க விரும்பி சினிமாவுக்கு கதை எழுத ஆரம்பிச்சேன்.
சாருநிவேதிதா, அராத்து, கேபிள் சங்கர், மனுஷ்யபுத்திரன் என நட்பு வட்டாரம் கிடைச்சது. முதல் படம் ‘காரோட்டியின் காதலி’. அந்தப் படத்துக்கு பல விருதுகள் கிடைச்சது. ‘ஆலன்’ வெகுஜனத்துக்கான படம்!l

எஸ்.ராஜா