மில்லியனில் சப்ஸ்க்ரைபர்ஸ்... மில்லியன் வியூவ்ஸ்...லட்சங்களில் வருமானம்...



தமிழகத்தின் டாப் 5 வுமென் ஃபுட் விலாக்கர்ஸ்!

கீழே இருக்கும் பெல் பட்டனை அமுக்குங்க... லைக் பண்ணுங்க...  சப்ஸ்க்ரைப் பண்ணுங்க...இந்த வார்த்தைகளைத் தெரியாதவர்கள் சோஷியல் மீடியாவில் இருக்க முடியாது.கைகளில் மொபைல் இருந்தால் போதும். இன்றைய இளைய தலைமுறை, கப்புள் விலாக்கர்ஸ்... ஃபுட் விலாக்கர்ஸ்... ட்ரோல் விலாக்கர்ஸ்... கண்டதையும் கன்டென்ட் ஆக்கும் விலாக்கர்ஸ்... என எல்லாவற்றையும் கன்டென்டாக்கி காசு பாக்க ஆரம்பிச்சுடறாங்க.
ஏதோ சேனல் நடத்துறாங்கன்னு மட்டும் நினைச்சு இவுங்களைப் பார்க்காதீங்க. இன்றைய தேதிக்கு ரிச்சஸ்ட் யூ டியூபர்ஸ், விலாக்கர்ஸ்களும் இதில் இருக்கிறார்கள். இவர்கள் நடத்தும் விலாக்கில் நுழைந்தால், மில்லியனைத் தாண்டிய வியூவ்ஸ்... மில்லியனைத் தாண்டிய சப்ஸ்க்ரைபர்ஸ்... உடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடியோக்கள் இவர்களால் அப்லோடாகி இருக்கும்.

சோஷியல் பிளேடு வெப்சைட்டிற்கள் நுழைந்து டாப்பில் இருப்பவர்களின் யூ டியூப் வருமானத்தை துழாவினால், டாலர்களில் இவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்திய பண மதிப்பிற்கு இவர்களின் டாலர்களை குறைத்துக் கணக்கிட்டாலே வருமானம் அரை லட்சங்களைத் தாண்டுகிறது. 
குடும்பத்தையும் பார்த்து... குழந்தைகளையும் கவனிச்சு... ஸ்ஸ்ஸ்... அப்பா... என்னால வேலைக்கும் போக முடியலப்பா என்கிற பெரும்பாலான பெண்களின் தேர்வு யூ டியூப் சேனலாகத்தான் இருக்கிறது. இதில் கிராமம் நகரம் என்று பாகுபாடு இல்லாமல் பெண்கள் கலந்துகட்டி களத்தில் இறங்கி அசால்ட்டாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வுமன் ஃபுட் விலாக்கர்ஸில் மில்லியன் சப்ஸ்க்ரைபர்களைத் தாண்டி முதல் ஐந்து இடங்களில் இருப்பவர்களைப் பார்க்கலாம்.

5 மை கன்ட்ரி ஃபுட்ஸ் (My country foods)

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தி. 2017ல் தொடங்கி இன்றுவரை வெற்றிகரமாக தன்னுடைய மை கன்ட்ரி ஃபுட் சேனலை குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களின் ஒத்துழைப்போடு நடத்தி வருகிறார்.
தான், சிறுமியாக இருந்தபோது தனது அம்மா வயல் வேலைக்கு சென்றுவிட்டு வாங்கி வருகிற கூலியில், மறுநாள் சமையலுக்குத் தேவையானதை வாங்கிச் சேகரித்து, வேலைக்குச் சென்ற அம்மா வீடு வருவதற்குள் சமையலை முடித்துவிடுவேன் என தன்னைப் பற்றி பெருமையாகக் குறிப்பிட்டு, தனக்குத் தெரிந்த கிராமத்து சமையலை, பாரம்பரியம் மற்றும் மண் மணம் மாறாமல், இயற்கையுடன் இணைந்து, மண்பாத்திரங்கள், விறகு அடுப்பு, மசாலாப் பொருட்களை அம்மி ஆட்டுக்கல் என அதில் வைத்து அரைத்து ருசியாகச் செய்து காட்டுவதென காணொளிகனை வெளியிடுகிறார் ஆனந்தி.
இவரின் ‘மை கன்ட்ரி ஃபுட்ஸ்’ யூ டியூப் சேனலுக்கு 1.88 மில்லியனுக்கு அதிகமான வியூவ்ஸ் இருப்பதுடன், 1.94  மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்களை சேகரித்து வைத்திருக்கிறார் ஆனந்தி. தனது கிராமத்து மக்களையும், உறவு களையும் தனது சேனலில் இணைத்துக்கொண்டு, இதுவரை 2258க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றி இருக்கிறார்.

4 ஷெரின்ஸ் கிச்சன் (Sherin’s Kitchen)

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷர்மிளா என்பவரின் விலாக்தான் ‘ஷெரின்ஸ் கிச்சன்’.  2017ல் தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.இவர் பிறந்து வளர்ந்தது தேனி மாவட்டம் என்றாலும், திருமணத்திற்குப் பிறகு கோவை மாவட்டத்தின் மருமகளாக நுழைந்தவருக்கு, சமையல் குறித்து எதுவும் தெரியாதாம். 

கணவர்தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக சமையலை சொல்லிக் கொடுத்தார் எனப் புன்னகைப்பவர், சமையலுக்கான அடிப்படை விஷயங்களை கற்றுத்தேர்ந்து, கொங்கு நாட்டு சமையலையும் சேர்த்து கலந்து கட்டி சமைத்து, சமையல் ஸ்பெஷலிஸ்ட்டாக பட்டையைக் கிளப்பி வருகிறார்.

பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கும் தனக்கு, ஆரம்பத்தில் யூ டியூப் குறித்தெல்லாம் எதுவும் தெரியாது. ஆனால், சமையலில் என் கை பக்குவத்தில் தனி மணம் இருக்கிறது என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும் என்றவர், ஒரு நாள் என் வீட்டிற்கு வந்த என்னுடைய தம்பி, உன்னோட சமையலின் ருசி ரொம்பவே சிறப்பாக இருக்கிறது. 

நீ ஏன் உன் சமையல் கலையை வீடியோவாக்கி யூ டியூப்பில் வெளியிடக்கூடாது என ஐடியா கொடுக்க, வீடியோ, எடிட்டிங், அப்லோட் குறித்தெல்லாம் எதுவும் தெரியாமலே, ‘ஷெரின்’ஸ் கிச்சன் என பெயர் சூட்டி, தம்பியின் உதவியுடன் விலாக்கைத்  தொடங்கிவிட்டேன்.

முதல் இரண்டு மூன்று வீடியோக்களுக்கு மட்டுமே தம்பியின் உதவி கிடைத்தது. பிறகு நானே வீடியோ எடுப்பது, எடிட் செய்வது, வீடியோவை அப்லோட் செய்வது எனக் கற்றுக்
கொண்டு தினம் ஒரு வீடியோவை அப்லோட் செய்ய ஆரம்பித்தேன் எனப் புன்னகைக்கிறார். கிட்டத்தட்ட இரண்டாயிரம் சமையல் வீடியோக்களை பதிவேற்றியுள்ள ஷர்மிளாவின் யூ டியூப் தளத்திற்கு, 6 மில்லியனுக்கு அதிகமான வியூவ்ஸ் மற்றும், 2.79 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கின்றனர்.  

3 கவிதா சமையலறை
(Kavitha Samayalarai)

பொழுதுபோக்காகத்தான் என்னோட ஊர் சமையலை ‘கவிதா சமையலைறை’ யூ டியூப் மூலம் தொடங்கினேன் என மெதுவாகவே பேச ஆரம்பிக்கும் கவிதா சுவாமிநாதனும் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்.அம்மா மற்றும் மாமியாரிடம் கற்றதை, என் கை பக்குவத்தில் பாரம்பரிய சுவை மாறாமல் அத்துடன் கொஞ்சம்  மாடர்னிட்டியும் சேர்த்து, சுவை மற்றும் ஆரோக்கியமான சைவ - அசைவ உணவுகளைச் சமைத்து வீடியோக்களாகப் பகிர்ந்து வருகிறேன். இத்துடன் எனது அனுபவம் மற்றும் யோசனைகளை பார்வையாளர்களுக்கு டிப்ஸ்களாக வழங்கி வருகிறேன் என்கிறார்.

என் சமையலுக்கு பார்வையாளர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் மற்றும் ரீச் இருக்கிறது. என் சமையலை ரசித்து பார்வையாளர்கள் போடும் கமென்ட்ஸ் அனைத்தும் மேலும் மேலும் என்னை ஊக்கப்படுத்தியது என்கிறார் கவிதா.

நான் யூ டியூப் தளத்தில் இந்த அளவுக்கு முன்னேற என் வியூவர்ஸ்தான் காரணம் என்றவர், 2017ல் தொடங்கிய ‘கவிதா சமையலறை’ சேனலுக்கு 7 மில்லியனுக்கு அதிகமான வியூவர்ஸ் மற்றும் 1.95 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் இருப்பதுடன், இதுவரை 800க்கும் அதிகமான விதவிதமான சமையல் வீடியோக்கள் இவரது விலாக்கில் பதிவேற்றப்பட்டு இருக்கிறது.

2 இந்தியன் ரெசிபிஸ் தமிழ் (Indian RecipesTamil )

உங்கள் தினத்தை உற்சாகம் ஏற்ற, தினமும் போடுகிற டீயினை இப்படி போடுங்க என்பதில் தொடங்கி... குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்டா டக்குன்னு இப்படி நொடியில் செஞ்சு குடுங்க என்பது வரை, சமையலில் அதீத ஆர்வம் கொண்ட அபியின் சேனலுக்கு முதலிடத்தில் இருக்கும் சேனலைவிட அதிகமான வியூவர்ஸ் இருக்கிறார்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
கல்லூரி படிப்பை முடித்து ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது.

என்ன தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம் என யோசித்ததில், சமையலில் எனக்கு இருந்த அதீத ஆர்வம், அதையே தொழிலாக்கலாம் என மண்டைக்குள் மணி அடிக்க, இதோ, திருமணத்திற்குப் பிறகு இதையே யூ டியூப் சேனல் வழியாகத் தொழிலாக்கிவிட்டேன் என்கிறார். 

ஈஸி பிரேக்ஃபாஸ்ட் ரெசிபிஸ், சட்னி ரெசிபிஸ், லன்ச் சைடிஷ் ரெசிபிஸ், வெஜிடேரியன் மற்றும் நான் வெஜிடேரியன் ரெசிபிஸ், ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் ரெசிபிஸ், கேக் ரெசிபிஸ், ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபிஸ், ஐஸ்க்ரீம் ரெசிபிஸ், பிஸ்கட் ரெசிபிஸ்... என அபியின் விலாக்கில் பதிவேற்றப்பட்டிருக்கும், விதவிதமான ரெசிபிஸ் வீடியோக்கள் நமது நாவில் உமிழ் நீரை வரவழைத்து விடுகிறது.

அபியின் வீடியோக்கள் அத்தனையும் நாக்கில் சுவையைத் தூண்டுகிற ரகம் என்பதைத் தாண்டி, சுலபமாக யாராலும் செய்துவிடுகிற மாதிரியான செய்முறைகளோடும் இருக்கிறது.
பேச்சுலர்ஸில் தொடங்கி நியூலி மேரிட் கப்புள்ஸ் வரை மனதில் வைத்து இதுவரை 1680க்கும் மேற்பட்ட எளிமையான, அதே சமயம் விதவிதமான சமையல் வீடியோக்களை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எப்படி செய்வதென டிரிக்ஸ் அண்ட் டிப்ஸ்களுடன் வெளியிட்டு, பார்வையாளர்களை தன்பக்கமாக வசப்படுத்தி வைத்திருக்கிறார் அபி.

‘இந்தியன் ரெசிபிஸ் தமிழ்’ என்கிற இந்த சேனல் 2017ல் தொடங்கப்பட்டாலும், 2018ல் இருந்துதான் வீடியோக்களை பதிவேற்றத் தொடங்கினேன் என்றவர், ஆரம்ப காலத்தில் தன் சேனலுக்கு 100 சப்ஸ்க்ரைபர்ஸ் வரமாட்டார்களா என எதிர்பார்த்திருந்த நாட்களும் இருந்தன... இன்று 19 மில்லியனுக்கு அதிகமான வியூவர்ஸ், 4.46 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் எனக்கு இருக்கிறார்கள் என தனது கட்டைவிரலை உயர்த்தி தம்ஸ்அப் காட்டி புன்னகைக்கிறார் இந்த மாடர்ன் செஃப்.

1 மெட்ராஸ் சமையல் (Madras Samayal )

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் ஃபேவரைட் ஃபுட் ரெஸிபி சேனல் என்றால் அது ஸ்டெஃபியின் மெட்ராஸ் சமையல் ஃபுட் விலாக்கேதான். தமிழ் யூ டியூப் ஃபுட் விலாக்கர்ஸ் சேனலில் முதலிடத்தில் இருக்கும் ஸ்டெஃபி 760க்கும் மேற்பட்ட வீடியோக்களை இதுவரை பதிவேற்றியுள்ளார். 

இந்த சேனலுக்கு 17 மில்லியனுக்கும் அதிகமான வியூவ்ஸ் இருப்பதுடன், 5.87 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கிறார்கள். நம்முடைய பாரம்பரிய சுவையை உலகெங்கும் பரப்புவோம் என்கிற ஸ்டெஃபிக்கு நாகர்கோவில் பிறந்த ஊர். திருமணத்திற்குப் பிறகு ஸ்டெஃபி வசிப்பது அமெரிக்காவில். தனது வீடியோவை தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் தனித்தனி விலாக்குகளாக பதிவேற்றி வருகிறார்.

சின்ன வயதில் இருந்தே சமையலில் எனக்கு அதீத ஈடுபாடு இருந்ததால் அம்மா சமைக்கும்போது அருகில் இருந்து அவர் சமைப்பதை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பேன். எனது மாமியாரும் சிறப்பாக சமைப்பவர் என்பதால், புகுந்த வீட்டிலும் சமையலில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.நான் கற்றுக்கொண்டதை, ‘மெட்ராஸ் சமையல்’ என்கிற என் ஃபுட் விலாக்கில் 2015ல் இருந்து தொடர்ந்து பகிர ஆரம்பித்து இன்று என் சமையலை பின்தொடர்பவர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள் என்கிறார் இவர்.

மகேஸ்வரி நாகராஜன்