சாதிக்கும் செலிபிரிட்டி வாரிசுகள்...



திரைப்படத்துறையில் இருக்கும் பெரும்பாலான நட்சத்திரங்கள், இயக்குநர்கள் தங்கள் வாரிசுகளும் இதே துறைக்கு வரவேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால் அதையும் மீறி பலரின் வாரிசுகள் சினிமா அல்லாத வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். அவர்களில் ஒருசிலர் இங்கே…

ஆதிரா அரவிந்த்சாமி

அரவிந்த்சாமியின் மகள் ஆதிரா. சினிமா நடிகை ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் இருந்தாலும் தனக்கென தனி பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அது சமையற் கலை. வெளிநாடுகளில் நுண்கலையில் பட்டங்களை வென்ற அவர் கூடவே சமையல் கலையிலும் ஆர்வம் கொண்டார். 
அதையும் முறைப்படி கற்றுத் தேர்ந்தெடுத்தார். தென்னிந்திய,  இலங்கை உணவு வகைகளை உலகம் முழுக்கக் கொண்டு செல்வது, உலகில் உள்ள மேற்கத்திய உணவுகளை, குறிப்பாக கேக், பிஸ்கட்டுகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவதுதான் எனது நோக்கம் என்று அவர் ஏற்கெனவே பல நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார். 
இப்போது அவர் தனக்கென தனி சமூக வலைத்தளத் தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளார். அதன்மூலம் தான் தயாரிக்கும் உணவு களின் செய்முறையைப் பகிர்ந்துவருகிறார். லட்சக்கணக்கானவர்கள் ஆதிராவைப் பின்தொடர்கிறார்கள். சமையல் உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறார் ஆதிரா.

ஸ்ருதன் ஜெய் நாராயணன் (சின்னி ஜெயந்த் மகன்)

மிமிக்ரி கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் நாடகங்களில் நடித்து, சினிமாவில் காமெடி நடிகர் ஆனவர் சின்னி ஜெயந்த். ஆனால், அவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கோ கலெக்டர் ஆவதுதான் கனவு. பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பாடத்திட்ட புத்தகங்களைவிட அதிகம் படித்தது ஐஏஎஸ் தேர்வு புத்தகங்களைத்தான். 

சினிமா பக்கம் சிறிதும் திரும்பாமல் படிப்பிலேயே கவனம் செலுத்தி 2019ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 75வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத்துறை உதவிச் செயலராகப் பணி அமர்த்தப்பட்டு, இப்போது திருப்பூர் மாவட்ட உதவி கலெக்டராக பணிபுரிகிறார்.

வேதாந்த் மாதவன்

தமிழ் நடிகராக இருந்தாலும் இந்தியா முழுக்கப் பிரபலமானவர் மாதவன். இப்போது இயக்குநராகவும் மாறி தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். அவரது மகன் வேதாந்த் தந்தையைப் போலவே நடிக்க வருவார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தபோது வேதாந்துக்கு நீச்சல் மீது ஆர்வம். பள்ளி நீச்சல் குளத்தில் தொடங்கிய அவரது பயணம் இப்போது ஒலிம்பிக் மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

மகனின் நீச்சல் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட மாதவன், அவரை அதை நோக்கித் தூக்கிச் சென்றார். மாவட்டப் போட்டிகள், மாநிலப் போட்டிகள், தேசியப் போட்டிகள் என வளர்ந்தவர் தற்போது சர்வதேசப் போட்டிகளில் நீந்தி பதக்கங்களைக் குவித்துவருகிறார். வேதாந்தின் அடுத்த இலக்கு, ஒலிம்பிக். இதற்காக துபாயில் தீவிரமான பயிற்சியில் இருக்கிறார். மகனுக்காக மாதவன் துபாயிலேயே குடியேறி அவருக்குப் பக்கத்தில் இருந்து ஊக்குவித்து வருகிறார்.

ஜெயவீணா (தலைவாசல் விஜய்யின் மகள்)

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக இருக்கும் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா. இவர் சிறுவயது முதலே நீச்சலில் ஆர்வமுடையவராய்த் திகழ்ந்தார். இவருடைய நீச்சல் ஆர்வத்துக்காகவே, மகள் கலந்துகொள்ளும் போட்டிகளில் ஒரு தந்தையாக உடன் செல்ல வேண்டி இருந்ததால், தன்னுடைய பல சினிமா, சீரியல் வாய்ப்புகளைத் தவிர்த்து
வந்தார் தலைவாசல் விஜய். உள்ளூர் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்த இவர் தேசிய போட்டிகளிலும் வெற்றியைக் குவித்தார்.

காட்மண்டுவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களைக் குவித்தார். ‘அவளுக்கு மூன்று வயது முதலே நீச்சலில் ஆர்வம். தண்ணீரைக் கண்டாலே உற்சாகமாகி விடுவாள். இதை நான் முதலிலேயே கண்டுபிடித்துவிட்டேன். தொடர்ந்து அதில் அவளை ஊக்கப்படுத்திவந்தேன். 

சர்வதேசப் போட்டிகளுக்குச் செல்லும்போது பாதுகாப்புக்காக நானும் செல்ல வேண்டி இருந்ததால், பல பட வாய்ப்புகளை இழந்தேன். படங்களைவிட எனது மகளின் சாதனையே எனக்குப் பெரிதாகத் தெரிந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்று அவர் நம் தேசியக் கொடியுடன் நின்றதைப் பார்த்த வுடன் சினிமாவில் நான் சாதித்ததெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது’ என்கிறார் தலைவாசல் விஜய்.

பிரேமராஜன் (பாண்டியராஜன் மகன்)

இயக்குனர், நடிகர் பாண்டியராஜனுக்கு பல்லவராஜன், பிரிதிவிராஜன், பிரேமராஜன் என்று மூன்று மகன்கள் உள்ளனர். இதில் பிரிதிவி ராஜன் சினிமாவில் அறிமுகமாகி தந்தை போன்று நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மூன்றாவது மகன் பிரேமராஜன் டிரோன் கேமரா டெக்னீசியனாக இருக்கிறார். சினிமாவில் டிரோன் கேமரா டெக்னாலஜி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. பெரும்பாலான படங்கள் டிரோன் கேமரா காட்சியுடன்தான் தொடங்குகின்றன.

வழக்கமான காட்சிகளை வேறு கோணத்தில் காட்டுவதால் பல நூறு அடி உயரத்தில் இருந்து டிரோன் மூலம் படம்பிடிக்கும் காட்சிகள் மக்களைக் கவர்ந்துவருகிறது. அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றால் பிரேமராஜனைத்தான் தேடுகிறார்கள். டிரோன் கேமராக்கள் பல லட்சம் மதிப்புடையது. ரிமோட் மூலம் இயக்கப்படுவதால் அவை காணாமல் போகவும், எதன் மீதாவது மோதி அழிந்துவிடவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதில் நிபுணத்துவம் பெற்ற பிரேமராஜன் தற்போது சினிமாவில் மோஸ்ட் வான்டட் மனிதராக இருக்கிறார்.

திவ்யா சத்யராஜ்

200 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட சத்யராஜின் மகன் சிபி ராஜ் தந்தை வழியில் நடிகராகிவிட்டார். ஆனால், சத்யராஜின் ஒரே மகளான திவ்யா ஊட்டச்சத்து நிபுணர். சென்னை பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து (நியூட்ரீஷியன்) படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அது தொடர்பான வேலைக்குச் செல்லாமல் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். ‘அட்சய பாத்திரம்’ அறக்கட்டளையின் நல்லெண்ணத் தூதராக உள்ளார். உலகின் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டத்தை நடத்தும் ‘வேர்ல்ட் விஷன் இந்தியா’ அமைப்புடன் இணைந்துள்ளார்.

 ‘மகிழ்மதி இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். விரைவில் அரசியலுக்கு வரும் திட்டத்தையும் வைத்திருக்கிறார். ‘என் குழந்தைகள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் நான். என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்திருக்கிறேன். 

ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யாவின் வெற்றியை நினைத்துப் பெருமைப்படுகிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும், நண்பனாகவும் என் மகளுக்குப் பக்கபலமாக இருப்பேன். நிச்சயமாக என் மகளுக்காகப் பிரசாரம் செய்வேன்’ என்று கூறியிருக்கிறார் சத்யராஜ்.

ஜியாவுதீன்