இந்தக் கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை...



இந்தத் தலைப்பு கொஞ்சம் ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால், உண்மை அதுவே. அந்தக் கிராமத்தில் வசிக்கும் பலரும் தங்கள் வீடுகளில் சமைப்பதை நிறுத்தி வெகுநாட்களாகி விட்டன.  
பிறகு எப்படி சாப்பிடுகிறார்கள்?

கம்யூனிட்டி கிச்சன் எனப்படும் சமூக சமையலறைக் கூடம் மூலமாகத்தான். இதற்குக் காரணம் அந்தக் கிராமத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் என்பதே!

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 86 கிமீ தொலைவில் இருக்கிறது சாந்தங்கி கிராமம். இங்குதான் சமூக சமையலறைக் கூடம் மூலம் ஊர்கூடி தேர் இழுப்பது போல ஒட்டுெமாத்த கிராமமும் சாப்பிடுகின்றனர். 
ஒருகாலத்தில் இந்தக் கிராமத்தில் ஆயிரத்து நூறு பேர் வசித்து வந்தனர். இவர்களில் பலர் வேலை விஷயமாக அருகிலுள்ள பெரிய நகரங்களுக்கும், வெளி
நாடுகளுக்கும் சென்றுவிட்டனர். அதாவது பெற்றோரை கிராமத்தில் விட்டுவிட்டு வேலை நிமித்தமாகச்சென்றுவிட்ட இளம் வயதினர் அவர்கள்.

அதனால், இப்போது 500 பேர்களே கிராமத்தில் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள். அதுவும் தனித்து வாழும் முதியவர்கள். இவர்கள் தங்களுக்கான அன்றாட சமையல் செய்வதில் சுணக்கமாக இருந்துள்ளனர். தவிர, சில முதியவர்களால் சமையல் செய்வது முடியாத காரியமாகவும் இருந்துள்ளது. 

இந்நிலையில்தான் சமூக சமையலறைக் கூடம் தொடங்கப்பட்டது.இந்தச் சமையலறைக் கூடத்தில் சம்பளத்திற்கு சமையல்காரர்கள் நியமிக்கப்பட்டு இரண்டு வேளை உணவுகள் தயாரித்துக் கொடுக்கப்படுகின்றன. இதற்கு நபர் ஒன்றுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சமையல்காரர்களுக்கு ரூ.11 ஆயிரம் கொடுக்கப்படுகிறது.

இதன்வழியாக குஜராத்திகளின் விதவிதமான பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுகின்றன. இது முதியவர்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருக்கும்படி சமூக சமைலறைக் கூடத்தினர் பார்த்துக் கொள்கின்றனர். இந்த உணவை வயதானவர்கள் அங்கே உண்ணலாம். அல்லது வீட்டுக்கு எடுத்துச் சென்றும் சாப்பிடலாம். 

ஆனால், பெரும்பாலானவர்கள் இந்த சமூக சமையலறைக் கூடத்திற்கு வந்தே உணவருந்துகின்றனர். தனிமையை மறந்து அனைவருடனும் சிரித்துப் பேசியபடி சாப்பிடுகின்றனர். இந்த உணவருந்தும் கூடமும் சோலார் பேனல் மூலம் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்தத் திட்டத்திற்கும் வித்திட்டவர் கிராமத்தின் தலைவரான பூனம்பாய் படேல்தான். இவர் 20 ஆண்டுகள் நியூயார்க்கில் கழித்தவர்.

பின்னர் அகமதாபாத்திலிருந்த தன்னுடைய வீட்டையும் விட்டுவிட்டுச் சொந்த கிராமத்திற்குத் திரும்பியவர். இப்போது தங்கள் கிராமம் ஒருவருக்காக ஒருவர் வாழும் கிராமமாக இருப்பதாக பெருமையுடன் குறிப்பிடுகிறார் பூனம்பாய் படேல்.‘‘இங்குள்ள வயதானவர்கள் ஒருநாள் செய்யும் உணவையே அன்று மாலையும், மறுநாள் காலை வரையும் வைத்துச் சாப்பிடுகின்றனர். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதை உணர்ந்தேன்.

அதுமட்டுமில்லாமல் வயதானவர்களின் தனிமை, சோகம் எல்லாவற்றையும் போக்க வேண்டும் என்றும் நினைத்தேன். அந்த எண்ணத்தில்தான் இந்த சமூக சமையலறைக் கூடத் திட்டம் உருவானது. ஆரம்பத்தில் இதில் எல்லோருக்கும் நிறைய தயக்கங்கள் இருந்தன. பின்னர் அனைவரும் புரிந்துகொண்டனர்.

இது வயதானவர்களின் தனிமைக்கு ஒரு தீர்வாக இருக்குமா எனக் கேட்டால் எனக்குத் தெரியாது. ஆனால், தினமும் சமையல் செய்ய வேண்டும் என அவர்கள் வேதனைப்பட வேண்டி இருக்காது என்பது மட்டும் நிச்சயம். இதன்மூலம் அவர்களுக்கு நிறைய ஓய்வு கிடைக்கும். தங்களுக்குப் பிடித்த விஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடமுடியும்...’’ என்கிறார் பூனம்பாய் படேல்.

இந்தச் சமூக சமையலறை கான்செப்ட் சாந்தங்கி கிராம மக்களிடையே நல்ல மாற்றத்தைத் தந்துள்ளது. இதனால், அருகில் உள்ள மற்ற கிராம மக்களும் நேரடியாக வந்து ஆச்சரியமாக இந்தக் கிராமத்தையும் சமூகக் கூடத்தையும் பார்த்துச் செல்கின்றனர். இப்போது இதேபோலான கிராமங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது சாந்தங்கி கிராமம்.

பேராச்சி கண்ணன்