இந்தியாவின் முதல் சுமோ வீராங்கனை!



‘‘ஐந்து வயதிலேயே என்  வாழ்க்கையின் முக்கிய பகுதியாக விளையாட்டு மாறிவிட்டது. என்னுடைய பெற்றோரின் கிராமத்தில் வசித்து வந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் விளையாட்டு முக்கிய பகுதியாக இருந்ததைக் கவனித்தேன். இதுவே என் வாழ்க்கையிலும் விளையாட்டு முக்கிய இடத்தைப் பிடிக்க காரணம். ஆனால், எதார்த்தம் வேறு விதமாக இருந்தது. ஆம்; நான் எடை அதிகமாக, குண்டாக இருந்தேன்.

என் எடையைக் குறித்து முடிவில்லாத கிண்டல்களை மட்டுமே கேட்டேன். இது என்னை நான்கு சுவர்களுக்குள் முடக்கியது; மனதை சோர்வடையச் செய்தது.
மட்டுமல்ல: சில நேரங்களில் எனக்குப் பொருத்தமான ஆடைகள் கூட கிடைக்கவில்லை...’’ என்று ஆரம்பித்த ஹேத்தல் தவே, மும்பையில் வளர்ந்தவர். ஆறு வயதிலேயே ஜூடோ பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார். ‘லிம்கா’வின் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார்.  

‘‘வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது கண்ணுக்குத் தெரிகிற எல்லோருமே ஒல்லியாக இருப்பதாகத் தோன்றும். இந்த ஒப்பீடும், என்னுடைய எடை குறித்த தாழ்வு மனப்பான்மையும் எனக்குள் பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. மற்றவர்களிடமிருந்து என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன். 

எதிர்காலம் என்னவாகப்போகிறது, அடுத்து என்ன நடக்கும் என்ற பயம் என்னைத் தொற்றிக்கொண்டது. எதையும் அறியாதவளாக இருந்தேன். சில நாட்களுக்குப் பிறகு ஒரு ஸ்போர்ட்ஸ் கிளப் சுமோ மல்யுத்தப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. இந்த ஏற்பாடுகள்தான் முதல்முறையாக என் வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்டும்படியாக இருந்தது.

இதற்கு முன்பு இப்படியொரு விளையாட்டுப் போட்டியை நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. சில நாட்கள் சுமோ விளையாட்டைக் குறித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்...’’ என்கிற ஹேத்தல், 2009ம் வருடம் தாய்வானில் நடந்த ‘வேர்ல்டு கேம்ஸ்’ எனும் பெண்களுக்கான சர்வதேச சுமோ மல்யுத்தத்தில் கலந்துகொண்டார். 

ஆனால், முதல் சுற்றிலேயே வெளியேறிவிட்டார். ‘‘ஒரு இந்தியப் பெண் கூட சுமோ விளையாட்டில் ஈடுபடவில்லை என்பதை ஆராய்ச்சியில் தெரிந்துகொண்டேன். உடனே சுமோ மல்யுத்தத்தில் பெண்களும் பங்கு பெற முடியுமா என்பதை அறிய ஜப்பானிய சுமோ அமைப்புக்குக் கடிதம் எழுதினேன்.

பாரம்பரியமான ஜப்பானிய சுமோ மல்யுத்தத்தில் பெண்களுக்கு இடமில்லை என்பதை அறிந்தபோது, மனமுடைந்தேன். இன்னும் தேடிப்போனேன். அதே நேரத்தில் சர்வதேச சுமோ அமைப்பு பெண்களுக்கான சுமோ மல்யுத்தப் போட்டிகளை நடத்தி வருவதை அறிந்தேன். இவ்வளவு காலமாக என்னுடைய எடையைக் குறித்து தாழ்வு மனப்பான்மை கொண்டு, எதிர்மறையாகவே சிந்தித்துவந்தேன். அதையே ஏன் நேர்மறையாக மாற்றக்கூடாது என்பதைக் குறித்தும் யோசித்தேன்.

ஆம்; சுமோ மல்யுத்தத்தில் எடைதான் முக்கியம். என் பலவீனமான அதிக எடையையே பலமாக மாற்றி சுமோ விளையாட்டு வீராங்கனையாக முடிவு செய்தேன்...’’ என்கிற ஹேத்தல், 2008ல் எஸ்தோனியாவில் நடந்த சுமோவில் கலந்துகொண்டு, முதல் சர்வதேச சாம்பியன் பட்டத்தை தன்வசமாக்கினார்.

அத்துடன் உலகின் தலைசிறந்த சுமோ வீராங்கனைகளின் பட்டியலில் எட்டாம் இடத்தைப் பிடித்தார். ‘‘சுமோ விளையாட்டுக்காக எங்கே, எப்படி பயிற்சி பெற வேண்டும் என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் ஜூடோ பயிற்சிகள் சுமோ விளையாடுவதற்கான நம்பிக்கையைக் கொடுத்தது. தவிர, சுமோ விளையாட்டுக்கான அடிப்படையான விஷயங்களை ஜூடோ பயிற்சி கற்றுக்கொடுத்தது.

பயிற்சியைவிட, சுமோவில் நிறைய விஷயங்கள் இருப்பதை என் தேடலில் தெரிந்துகொண்டேன். சுமோ விளையாடுவதற்காக ஸ்பான்சர்களைத் தேடினேன். பொதுவாக இந்தியாவில் விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஸ்பான்சர்கள் கிடைப்பது கடினம். அதுவும் பெரிதாக பிரபலமே இல்லாத சுமோ விளையாட்டுக்கு ரொம்பவே கடினம். சிலர் நான் பணத்துக்காக சுமோ விளையாடப்போகிறேன் என்று பொய் சொல்வதாக நினைத்துவிட்டனர். கடைசியில் என் குடும்பம்தான் எனக்கு உறுதுணையாக இருந்தது. எனது அப்பாவும், சகோதரனும் இரண்டு தூண்களாக நின்று, என்னைத் தாங்கிப் பிடித்தனர்.

அதிசயம் நிகழ்ந்தது. ஆம்; உலகளவிலான பெண்களுக்கான சுமோ விளையாட்டில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டேன். மொத்தமே அந்தப் போட்டியில் 8 பெண்கள்தான் கலந்துகொண்டனர். இதைக் கேள்விப்பட்ட குஜராத்தி நாளிதழ் ஒன்று, எனக்கு ஸ்பான்சர் செய்தது. அடுத்த சில நிமிடங்களிலே என்னுடைய விசாவுக்கு ஒப்புதலும் கிடைத்தது. என் வாழ்க்கையே மாறியது...’’ என்கிற ஹேத்தல் தவேதான் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சுமோ மல்யுத்த வீராங்கனை.

இந்தியா சார்பாக பின்லாந்து, போலந்து, எஸ்தோனியா, தாய்வானில் நடந்த சுமோ மல்யுத்தப்போட்டிகளில் கலந்துகொண்டு, பதக்கங்களைத் தட்டியிருக்கிறார். இத்தனைக்கும் இந்தியாவில் சுமோ விளையாட்டுக்கு எந்தவிதமான அங்கீகாரமும் கிடையாது; மக்கள் மத்தியிலும் பெரிதாக அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த 2012ம் வருடமே சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, திருமணம் செய்துகொண்டார்.ஆனாலும், சுமோ விளையாட்டுக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. ஆம்; சுமோ விளையாட்டில் ஆர்வமுள்ள சிறுமிகளுக்குப் பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

ஹேத்தலிடம் பயிற்சி பெற்ற சிறுமிகள், சர்வதேச அளவில் விளையாடுவதற்காகத் தயாராகி வருகின்றனர். சமீபத்தில் ஹேத்தலின் வாழ்க்கையைத் தழுவி, ‘சுமோ தீதி’ என்ற இந்திப்படம்  எடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு திரைப்பட விழாக்களில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு, பாராட்டுகளை அள்ளி வருகிறது.

த.சக்திவேல்