நாப்கின் புத்தகங்கள்



ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய வாழ்நாளில் ‘அந்த மூன்று நாட்களை’க் கடந்துதான் ஆகவேண்டும். பெண்களுக்கு ஏற்படும் இயற்கை நிகழ்வுதான் மாதவிடாய்  என்றாலும், இன்றும் சமூகத்தில் அதனை ஒரு தீண்டத்தகாத விஷயமாகத்தான் பலரும் பார்க்கிறார்கள். 
அந்த நாட்களில் பெண்கள் வெளியே செல்லக்கூடாது, அவர்கள் ஒரு தனி அறையில் இருக்க வேண்டும், கோயில்களுக்கு செல்லக்கூடாது, விசேஷங்களில் கலந்துகொள்ளக்கூடாது... என பல விதிமுறைகள் இருந்து வந்தன. இன்றும் தொடரப்பட்டு வருகிறது. இப்போது பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாலும், இந்த நம்பிக்கைகள் முழுமையாக மறைந்துவிடவில்லை.

ஆனால், அவர்களால் அந்த நாட்களில் பயன்படுத்தப்படும் மாதவிடாய் பொருட்கள் மட்டும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாறிவிட்டன. முன்பு மாதவிடாய் நாட்களில் பெண்கள் துணிகளைப் பயன்படுத்தி வந்தனர். பெண்கள் படிக்கவும், வேலைக்குச் செல்லவும் ஆரம்பித்த பிறகு துணிகள் அசவுகரியமாக இருந்ததால், நாப்கின்கள் அறிமுகமாயின. தற்போது டாம்பூன்ஸ் மற்றும் மென்சுரேஷனல் கப்கள் போன்றவற்றை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

என்னதான் மாடர்ன் பொருட்கள் சந்தையில் கிடைத்தாலும், இன்றும் பல பெண்கள் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். காரணம், இதனை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அதனை அப்புறப்படுத்துவதும் எளிதான காரியம் என்பதால் பெண்களில் பலர் இதனையே உபயோகிக்கிறார்கள். 

பெண்களால் எளிதாக அப்புறப்படுத்தப்படும் இந்த நாப்கின்களை நம்மால் சுற்றுப்புறச் சூழலில் இருந்து அவ்வளவு சுலபமாக நீக்கிவிட முடியவில்லை. இதனை நாம் குப்பைத்தொட்டியில் டிஸ்போஸ் செய்கிறோம். அவ்வாறு எறியப்படும் நாப்கின்கள், அவ்வளவு எளிதாக மக்குவதில்லை. ஒரு நாப்கின் மக்கிப்போக சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலாகும். மற்ற குப்பைகளை விட உலகம் முழுதும் நாப்கின்களின் குப்பைகள்தான் அதிகமாக உள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டும், பூமியின் சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலும், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை மறுசுழற்சி செய்து வருகின்றனர் பூனாவைச் சேர்ந்த ‘பேட்கேர்’ நிறுவனத்தினர். 

மறுசுழற்சி செய்யப்படும் அந்த நாப்கின்கள் அனைத்தையும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய, எழுதக்கூடிய புத்தகங்களாக மாற்றி அதனை விற்பனை செய்து வருகிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். இப்படி நாப்கின்களை மறுசுழற்சி மூலம் வேறு ஒரு மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்றி அதனை விற்பனை செய்ய எடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சியை உலகிலேயே வேறு யாரும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாக மாதவிடாய் நாட்களைத்  தீட்டாகப் பார்க்கும் நம் நாட்டில், பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் கொண்டு புத்தகம் தயாரித்து அதனை விற்பனை செய்தால், மக்கள் அதை வாங்க முன்வருவார்களா... என்ற கேள்விக்கு விடையளிக்கிறார் இந்நிறுவனத்தின் பிராஜக்ட் மானேஜராக பணியாற்றி வரும் பூஜா ஆனந்த். நாப்கின்கள் சேகரிக்கப்பட்டு, அவை மறு
சுழற்சி  செய்யப்படும் முறைகள் பற்றியும் அவர் விவரித்தார்.

‘‘பேட்கேர் நிறுவனம் 2018ல் அஜின்கியா தாரியா என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் ஒரு மெக்கானிக்கல் பட்டதாரி. இவர் தன் நண்பர் ஸ்ரீநிவாஸ் என்பவருடன் இணைந்து இந்த நிறுவனத்தைத்  துவங்கினார். இந்த ஐடியா அஜின்கியாவிற்கு கல்லூரியில் படிக்கும்போதுதான் முதலில் தோன்றியது. 

ஒரு முறை இவர் ஃபீல்ட் விசிட்டிற்காக சென்றிருந்தார். அப்போது அங்கு துப்புரவுத் தொழிலாளர்கள், கைகளுக்கு எந்தவித பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் குப்பைகளை அகற்றுவதை கண்டுள்ளார். அதாவது அவர்கள் கைகளில் கையுறை ஏதும்  அணியாமல் வேலை பார்ப்பதை பார்த்துள்ளார்.

குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்திய நாப்கின்கள். அந்தக் காட்சி அவரை பெரிய அளவில் பாதித்தது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கு முதல் காரணம் சானிட்டரி நாப்கின்களால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் கேடு மற்றும் அதனை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை. இவை இரண்டிற்கும் ஒரே தீர்வு இதனை மறுசுழற்சி செய்வது மட்டும்தான் என்று தீர்மானித்தார்.

பொதுவாக சானிட்டரி பேட்களை அகற்ற நாம் இரண்டு விதமாகத் தீர்வு காணலாம். ஒன்று எரிப்பது, மற்றொன்று அதனை மண்ணில் புதைப்பது. இரண்டுமே சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். எல்லாவற்றையும் விட பலருக்கு அதனை எவ்வாறு அகற்றுவது என்றும் தெரிவதில்லை. பெரும்பாலான பெண்கள் அதனை கழிவறையில் ஃபிளஷ் செய்கிறார்கள். இது கழிவறைப் பாதையில் அடைப்பு ஏற்படுத்தி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். மண்ணில் புதைத்தாலும் எளிதில் மக்காது.

எரித்தாலும், அதில் இருந்து வெளியாகும் புகை காற்றினை மாசுபடுத்தும். இந்தப் பிரச்னையைப் போக்குவதற்கான ஒரே தீர்வு மறுசுழற்சி செய்வதுதான். அதற்கு முதலில் ஒரு இயந்திரத்தை உருவாக்க வேண்டும். இதனை அஜின்கியா, அவரின் நண்பரும் துணை நிறுவனருமான ஸ்ரீநிவாஸுடன் சேர்ந்து பல ஆய்வுகள் செய்து உருவாக்கினார். 

அதன்பிறகு, பயன்படுத்தப்பட்ட நாப்கின் என்பதால், அதில் உள்ள ரத்தக்கறையை போக்கி மூலப் பொருட்களை தனியாகப் பிரிக்க வேண்டும். அதற்கு நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனரான சாவரி உதவி செய்தார். மைக்ரோபயாலஜிஸ்ட்டான இவர் அதற்கான ரசாயனத்தைக் கண்டறிந்தார்...’’ என்றவர் இயந்திரத்தின் செயல்பாட்டினைப் பற்றி விவரித்தார்.

‘‘பல ஆய்வுகளுக்குப் பிறகுதான் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படுவதால், அதில் உள்ள ரத்தக் கறையினை முதலில் நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கும்போது அதன் வாடை வெளியேறக் கூடாது. அதற்கு சாவரி சைட்டோ ஸ்லே என்ற ரசாயனத்தைக் கண்டறிந்தார். இது முழுமையாக ரத்தத்தினை உறிஞ்சிவிடும்.

அடுத்து பேட்கள் பிளீச் செய்யப்படும். அடுத்த கட்டம் பேடில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் செல்லுலோசினைத் தனியாகப் பிரித்து எடுப்பது. பிரித்து எடுக்கப்பட்ட செல்லுலோஸ், புத்தகம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நிறுவனத்திற்கு கொடுக்கப்படுகிறது. அவர்கள் அதிலிருந்து புத்தகம், டயரி, நோட்பேட் போன்றவற்றைத் தயாரித்து எங்களிடம் கொடுப்பார்கள்.

அந்தப் புத்தகங்களை நாங்கள் ஆன்லைனில் விற்பனை செய்கிறோம். சில கார்ப்பரேட் நிறுவனங்கள் இதனை கிஃப்க்டாகக் கொடுக்க விரும்புவார்கள். அவர்களுக்கு விற்பனை செய்கிறோம். மேலும் நாங்களும் எங்கள் நிறுவனம் சார்பாக இந்தப் புத்தகங்களை மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பரிசாகவும் அளிக்கிறோம். 

சானிட்டரி நாப்கின்களில் இருந்து தயாரிக்கப்படும் புத்தகங்களைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படும். அதனால் பாதிப்பு இல்லை. காரணம், நாங்கள் காகிதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான செல்லுலோஸை மட்டுமே காகிதம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கிறோம். பேட்களில் உள்ள மற்ற பொருட்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பான முறையில் நீக்கப்படுவதால், இதிலிருந்துதயாரிக்கப்படும் புத்தகங்கள் மிகவும் பாதுகாப்பானவை.

அடுத்து அதிலிருந்து பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக்குகளை நாங்கள் துகள்களாக்கி மறுசுழற்சி செய்து அதனை மீண்டும் பயன்படுத்தும் நிறுவனத்திற்குக் கொடுக்கிறோம். அதில் ஒரு பங்கினை எங்களின் பேட்கேர், டஸ்ட்பின் தயாரிக்க பயன்படுத்துகிறோம். தில்லி, கொல்கத்தா, மும்பை, பூனா, ஹைதராபாத், சென்னை. 

பெங்களூரூ என 15 நகரங்களில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தற்போது இங்கு சேகரிப்படும் நாப்கின்கள் அனைத்தும் பூனேவில் உள்ள எங்களின் தொழிற்சாலையில்தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது. வரும் ஆண்டுகளில் தில்லி மற்றும் பெங்களூரில் எங்களின் மறுசுழற்சி தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.

பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்களில்தான் எங்களின் டஸ்ட்பின்களை பொருத்தியிருக்கிறோம். அதைத் தவிர சின்னச் சின்ன குடியிருப்பு கம்யூனிட்டிகளிலும் நாங்கள் நாப்கின்களை சேகரித்து வருகிறோம்.

ஆரம்பத்தில் பெண்களிடம் இருந்து இதனைப் பெறுவது என்பது மிகப்பெரிய சவாலாகக் இருந்தது. காரணம், இதனை அமங்கலமாகக் கருதும் பெண்கள் அதனைத் தூக்கி எறிய வேண்டும் என்று நினைப்பார்கள். அதனை நாங்கள் சேகரித்துச் செல்கிறோம் என்று சொன்னபோது அவர்கள் அதனை முதலில் ஏற்க மறுத்தார்கள்.

அதனால் அவர்களுக்கு மண்ணில் புதைக்கப்படும் நாப்கின்களால் ஏற்படும் சிக்கல்களை உணர்த்தினோம். அதைப் புரிந்துகொண்டவர்கள் எங்களுக்கு உதவ முன்வந்தார்கள். அதன் அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனத்தில் நாங்கள் எங்கள் நிறுவனம் சார்ந்த குப்பைக் கூடையை பெண்களின் கழிவறையில் பொருத்திவிடுவோம்.

 அவர்கள் அதில் நாப்கின்களைப் போடவேண்டும். அவ்வளவுதான். அந்தக் குப்பைத்தொட்டி ரசாயனங்கள் சேர்த்தது என்பதால், அதில் போடப்படும் நாப்கின்களில் பாக்டீரியா பாதிப்பு ஏற்படாது. மேலும் அதிலிருந்து ரத்த வாடை வெளியேறாது. 30 நாட்கள் வரை அதில் போடப்படும் நாப்கின்களால் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

எங்களின் நிறுவனத்தினர் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அதனை சேகரித்து வருவார்கள். இந்த அமைப்பு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மட்டும். மற்ற குடியிருப்பு கம்யூனிட்டிகளில் தினசரி வீட்டில் இருக்கும் குப்பையை அள்ளச் செல்லும் குப்பை வண்டியில் சிவப்பு நிற டப்பா பொருத்தப்பட்டு இருக்கும். 

அதில் பெண்கள் நாப்கின்களை மட்டும் போட வேண்டும்.  இதுபோல் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களுக்கும் தனிப்பட்ட விளக்கம் கொடுத்திருக்கிறோம். அதன்படி அவர்கள் செயல்பட்டால் போதும், அதை சேகரிக்கும் பொறுப்பை நாங்கள் பார்த்துக் கொள்வோம். எங்களின் நோக்கம், வரும் காலத்தில் எந்த ஒரு நாப்கின்களும் பூமியில் புதைக்கப்படக்கூடாது என்பதுதான்.

நாப்கின்களைத் தொடர்ந்து டயாப் பர்களையும் இதேபோல் மறுசுழற்சி செய்யும் எண்ணம் உள்ளது. அதற்கான ஆய்வில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். மேலும் சிங்கப்பூர் மற்றும் துபாயிலும் இந்தத் திட்டத்தை வரும் ஆண்டுகளில் செயல்படுத்த இருக்கிறோம். காரணம், நாப்கின் பயன்பாடு இந்தியா மட்டுமில்லை, உலகளாவிய பிரச்னை என்பதால் அதற்கான தீர்வை எங்கள் நிறுவனம் மூலமாகக் கொடுக்க இருக்கிறோம்.  

இது 100% சக்சஸ் என்று சொல்ல முடியாது. காரணம், இன்றும் இந்தியாவில் மட்டுமில்லை, உலகளவிலே கூட பல பகுதிகளில நாப்கின்களின் பயன்பாடு மற்றும் அதனை
டிஸ்போஸ் செய்யும் வழிமுறைகள் பலருக்குத் தெரிவதில்லை. 

அப்படிப்பட்ட இடங்களுக்குச் சென்று முதலில் அங்குள்ள பெண்களுக்கு இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் எங்களுடன் இணைத்துச் செயல்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறோம். இதன் மூலம் மாசில்லா உலகை அமைப்பதில் எங்களுக்கும் ஒரு பெரிய பங்கு உள்ளது என்று நினைக்கும்போதே மிகவும் பெருமையாக உள்ளது...’’ என்றார் பூஜா ஆனந்த்.

- ப்ரியா