விமான விபத்தை அறிய கருப்பு பெட்டியை தேடுவோம் இல்லையா... படமும் அப்படித்தான்...



‘‘விமானத்தில் விபத்து ஏற்பட்டால் விபத்தில் என்ன நடந்தது என தெரிந்துகொள்ள கருப்புப் பெட்டியைத்தான் தேடுவாங்க. 
அப்படி கருப்புப் பெட்டி என்பது அவ்வளவு முக்கியமான ஒன்று. அப்படித்தான் இந்தக் கதையிலும் கருப்புப் பெட்டி போன்ற முக்கியமான விஷயத்தைத் தேடுகின்றனர். அதனால்தான் படத்திற்கு இந்தத் தலைப்பு... கதைப்படி இதுதான் தலைப்பு’’ என ஆரம்பித்தார் அறிமுக இயக்குநர் எஸ்.தாஸ்.

எஸ்.தாஸ் இயக்கத்தில், ஜேகே ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சி.பிரபாத் தயாரித்து அவரே நாயகனாக நடிக்கும் படம், ‘கருப்புப் பெட்டி’. தேவிகா வேணு நாயகியாக நடித்துள்ளார். மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அருண் இசை அமைத்துள்ளார்.  

‘‘சுமார் 25 வருடங்களுக்கு மேல இந்த சினிமா துறையில் இருக்கேன். எனக்கு சொந்த ஊர் பொள்ளாச்சி. உடன் இருந்த அத்தனை பேரும் சினிமா கலைஞர்கள்தான் என்கிறதாலேயே எனக்கென தனி ஒரு அடையாளம் இல்லை என்றாலும் சினிமா என்னை விடலை.  

ஆனாலும் எனக்கான அங்கீகாரம் முக்கியம் என்கிறதால் பல வருட காத்திருப்புக்குப் பிறகு இப்போ முதல் படம். படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான கே.சி.பிரபாத் என் மீதும், என் கதை மீதும் வைத்த நம்பிக்கையால்தான் இன்னைக்கு இந்த அளவுக்கு படத்தை உருவாக்க முடிஞ்சது. 

இவர்தான் ‘பில்லா பாண்டி’ படத்தின் தயாரிப்பாளர்...’’ புன்னகைத்த எஸ்.தாஸ், என்ன கதை, என்ன களம் எனத் தொடர்ந்தார். ‘‘உண்மையில் ‘ஏ’ சர்டிபிகேட்தான் சென்சார் தரப்பில் கொடுப்பார்கள் என நினைத்தோம். அந்த அளவுக்கு ஸ்டிராங்கான கான்செப்ட். ரொம்ப நல்லவன், சின்சியர் மனிதன், ஆபீசுக்கு லீவு கூட போட மறுக்கும் அளவுக்கு நேர்மையான மனிதன்.

அவன் பொண்ணுங்க விஷயத்தில் தவறானவன் என்கிற குற்றச்சாட்டு விழுது. ஏன், எதனால்? உண்மையில் அவனைச் சுற்றி நிகழும் பிரச்னைகள், ,அதற்கான காரணங்கள் குறித்த தேடல்தான் ‘கருப்புப் பெட்டி’ கதையின் மையக்கரு...’’ என்றவர் பார்வையாளனுக்கு எப்படிப்பட்ட அனுபவம் கொடுக்கும் என்றும் விவரித்தார். ‘‘மனித வாழ்க்கையில தவிர்க்க முடியாத காரணங்களை எல்லாம் அறிவியல் ரீதியாகவும், லாஜிக்காகவும், மூட நம்பிக்கையாகவும் பார்த்திட்டு இருந்தா எப்போ வாழ்வது?

இந்த மெசேஜ்தான் நான் இந்தப் படம் மூலமா சொல்ல முயற்சி செய்து இருக்கேன். எனக்கு இது முதல் படம். தயாரிப்பாளர் மற்றும் நாயகன் பிரபாத் மட்டுமல்ல ,என்னை நம்பி இந்தப் படத்தில் ஒப்பந்தமான இசையமைப்பாளர் அருண், சினிமாட்டோகிராபர் மோசஸ் டேனியல் இப்படி அத்தனை பேருமே இந்தக் கதையை நம்பி இறங்கியிருக்கோம்.ரசிகர்களின் ஆதரவுக்காக காத்திருக்கோம்...’’ கண்களில் கனவுகள் மின்ன நிறைவு செய்தார் இயக்குநர் எஸ்.தாஸ்.

ஷாலினி நியூட்டன்