மனநலமும் இந்தியாவும்!



உலக சுகாதார நிறுவனம், ஒரு நாட்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 3 மனநல மருத்துவர்களாவது இருக்கவேண்டும் என்ற விதியை வைத்திருக்கிறது. ஆனால், 2015 மற்றும் 2016க்கு இடையே இந்தியாவில் நடத்தப்பட்ட  மனநல ஆரோக்கியம் பற்றிய கணக்கீடு’ நம் நாட்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 0.75 மனநல மருத்துவர்களே இருப்பதாகக் கண்டு
பிடித்திருந்தது. இதை இந்தியாவின் மனநல மருத்துவத்துக்கு ஒரு ஆபத்தான அறிகுறியாகப் பார்க்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

சமீபத்தில், அதாவது 2023ல் ஒன்றிய அரசின் பாராளுமன்றத்தின் ஒரு நிலைக்குழு இது தொடர்பாக ஓர் ஆய்வைச் செய்தது. அதில் இந்தியாவில் அந்த ஆண்டில் சுமார் 9000 மனநல
மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாக ஒப்புக்கொண்டது. இந்தியாவில் வருடந்தோறும் 1000 வரைக்கும் புதிய மனநல மருத்துவர்கள் படித்துமுடித்துவிட்டு வேலைக்கு சேர்ந்தாலும் மனநல மருத்துவர்களின் போதாமை கூடிக்கொண்டேதான் போகிறது.

உதாரணமாக இந்திய மக்கள்தொகையில் ஒரு லட்சத்துக்கு 3 மருத்துவர்கள் தேவை எனும் பட்சத்தில் வருடந்தோறும் 1000 புதிய மருத்துவர்கள் வேலையில் சேர்ந்தாலும் இந்த குறிக்கோளை அடைய இன்னும் 27 வருடங்களாவது ஆகும். இன்றைய சூழ்நிலையில் இந்திய மக்கள்தொகையில் ஒரு லட்சத்துக்கு 3 மருத்துவர்கள் தேவை என்றால் குறைந்தது சுமார் 36000 மருத்துவர்களாவது அவசியம். இது 2050ல்தான் சாத்தியம். அதுவரை மனநலம் பாதித்தவர்களை நாம் தெருவோரம்தான் பார்க்கவேண்டியிருக்கும்.

தேசிய மனநல ஆரோக்கியக் கணக்கீடு சுமார் 12 மாநிலங்களை எடுத்து ஆய்வு செய்திருந்தது. அதில் கேரளா, மணிப்பூர், மேற்கு வங்கம், குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட், தமிழ்நாடு, அசாம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், இராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடக்கம்.கேரளா இந்த விஷயத்தில் முன்னனியில் இருக்க தமிழ்நாடு 7வது இடத்தில் இருக்கிறது. உதாரணமாக கேரளாவில் ஒரு லட்சத்துக்கு ஒரு மருத்துவராவது இருக்க தமிழ்நாட்டில் இது 0.5 ஆக இருக்கிறது.

டி.ரஞ்சித்