டப்பர் வேருக்கு என்ன ஆச்சு?
திவால் நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. இதுதான் சோசியல் மீடியாவில் இப்பொழுது வைரல்.பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல், ஆபீசுக்குப் போகும் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் டிபன் பாக்ஸ் வகைகளில் ஒன்று டப்பர்வேர். டிபன் பாக்ஸ்களாக மட்டுமின்றி வீட்டில் உணவுப் பொருட்களை அடைத்து வைக்க பயன்படும் கண்டெய்னர்களாகவும் டப்பர்வேர் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வீட்டில் இருந்தே சம்பாதிக்க நினைக்கும் பல குடும்பத் தலைவிகள் டப்பர் வேர் பொருட்களை விற்பதையும் நாம் பார்த்திருப்போம். இப்படி இந்தியாவில் பலரது வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த டப்பர் வேர் நிறுவனம் இப்போது சிக்கலில் இருக்கிறது.
அமெரிக்காவில் 1946ம் ஆண்டு தொடங்கப்பட்ட டப்பர்வேர் நிறுவனம் கடந்த 78 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய வாடிக்கையாளர்களைக் கவர முடியாததால் அதன் பங்குகள் 50 சதவீத அளவுக்கு சரிந்துள்ளன.
அதனால் டப்பர் வேர் நிறுவனம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதல் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சொத்து உள்ள இந்த நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் முதல் 10 பில்லியன் வரை கடன் இருப்பதாக அந்த நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டப்பர்வேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஆன் கோல்ட்மேன், “மூலப்பொருட்களின் விலை உயர்வு, அதிக ஊதியம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் ஆகியவற்றால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக, சவால் நிறைந்த பொருளாதாரச் சூழலால் நிறுவனத்தின் நிதி நிலைமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது...” என்று தெரிவித்துள்ளார்.ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு வைத்துள்ள டப்பர்வேர் நிறுவனம், 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது கடனில் இருந்து மீள முடியாமல் திவால் நோட்டீஸை அமெரிக்காவின் டெலவேர் நீதிமன்றத்தில் அளித்துள்ளது. டப்பர்வேர் நிறுவனத்தின் இந்த நிலை அதன் வாடிக்கையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்காவில் 78 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்தாலும், இந்தியாவில் கடந்த 28 ஆண்டுகளாகத்தான் டப்பர்வேர் நிறுவனம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் டப்பர்வேர் நிறுவனம் திவால் நோட்டீஸ் கொடுத்தாலும், இந்தியாவில் அது சிறப்பாகச் செயல்படுவதாக டப்பர்வேர் நிறுவனத்தின் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்.ஆனந்தி
|