ரத்த மகுடம்
பிரமாண்டமான சரித்திரத் தொடர் 18
என்ன நடந்தது என்பதே அப்பெரியவருக்கு சில கணங்கள் வரை புரியவில்லை.
கண்களைச் சுற்றி விண்மீன்கள் வட்டமிட்டன. நாசிக்குப் பதில் வாய் வழியே சுவாசிக்க வேண்டிய நிலை. ஓரளவு சுயநினைவு வந்த பிறகு தன் முன்னால் புற்கள் விஸ்வரூபம் எடுத்து மரங்களாக வளர்ந்திருப்பதைக் கண்டார்!அதன் பிறகுதான் தரையில், தான் விழுந்திருப்பதும் தனது பற்கள் சிதறியிருப்பதும் வாயிலிருந்து குருதி வடிந்து மண்ணை நனைப்பதும் புரிந்தது!‘‘டேய்... எழுந்திரு!’’ கரிகாலன் அதட்டினான்.
பெரியவர் தலையை உயர்த்த முற்பட்டார். முடியவில்லை. கபாலம் பிளந்திருக்கிறதோ என்னவோ..?
யாரோ கொத்தாக தலையின் சுருண்ட குழல்களைப் பிடித்துத் தூக்குவது தெரிந்தது. தள்ளாட்டத்துடன் எழுந்து நின்றார். தவறு. நிற்க வைக்கப்பட்டார். கேசங்களில் பிடிக்கப்பட்டிருந்த பிடி பலமாக இருந்ததால் தலையைப் பின்னோக்கிச் சாய்த்தபடிதான் முன்னோக்கிப் பார்க்க முடிந்தது.
சிவகாமி, தன் வலது கையை மடக்கியும் இடது கையின் உள்ளங்கையை இறுக்கியும் நின்றிருந்தாள். மென்மைக்குப் பெயர் போன இந்தப் பெண்ணா தன் தாடையைப் பெயர்த்து முகத்தில் குத்தியிருக்கிறாள்..?‘‘ஆம்! சிவகாமிதான் இக்காரியத்தைச் செய்தாள்...’’ கரிகாலனின் குரல் பின்பக்கமிருந்து ஒலித்தது. ‘‘சொல். யார் நீ..?’’‘‘அதான் சொன்னேனே... உங்கள்... ரகசியக்... குழுவை... அம்மா..!’’ அலறியபடி மீண்டும் அப்பெரியவர் தரையில் விழுந்தார். இம்முறை சிவகாமியின் கரங்கள் இடியாக தன் கபாலத்தில் இறங்குவதைப் பார்த்து உணரும் பாக்கியம் அவருக்குக் கிட்டியிருந்தது!
‘‘வயதானவனை இப்படியா அடிப்பீர்கள்..?’’ இரத்தம் சிந்த இருமியபடி அப்பெரியவர் எழுந்தார். தன் தலைக் கேசத்தை கரிகாலன் பிடிக்கவில்லை என்பதும், சிவகாமி முஷ்டியை உயர்த்தியதுமே பிடிப்பை அவன் விட்டுவிட்டான் என்பதும் புரிந்தது. நல்ல ஜோடி. ஒருவர் நினைப்பதை மற்றவர் செய்து முடிக்கிறார்!
‘‘வயதானவனா... நீயா... முட்டாள்...’’ சிவகாமி தன் வலது காலை உயர்த்தி அவன் முகத்துக்கு நேரே கொண்டு வந்தாள்.கணத்தில் யமலோக வாசலுக்கு அப்பெரியவர் சென்றுவிட்டார்! நல்லவேளையாக அவ்வாசல் திறப்பதற்குள் பூமிக்கே திரும்பிவிட்டார்! இமைக்கவும் மறந்து, வாயிலிருந்து குருதி வடிந்த அந்த நிலையிலும் பிரமிப்பு விலகாமல் தன் கண்முன்னால் தென்பட்ட பாதத்தை செய்வதறியாமல் பார்த்தார்.
அப்பாதம் அவரது நாசியின் நுனியைக் கூடத் தொடவில்லை.கணங்கள் யுகங்களாகக் கழிந்ததும் மெல்ல அப்பாதம் தரையில் இறங்கியது. இறங்கிய வேகத்தில் மீண்டும் அவர் கண் முன் தோன்றியது!இப்போது அந்தப் பாதத்தின் கட்டை விரலில் வெண் தாடி ஊசலாடிக் கொண்டிருந்தது!
அதை அவர் முகத்தில் வீசிவிட்டு, உயர்த்திய தன் காலை சிவகாமி தரையில் இறக்கினாள். ‘‘வேடம் கலைந்துவிட்டது... இப்போது சொல்..!’’ ஈட்டியாகப் பாய்ந்தது அவள் குரல்.
பெரியவராக வேடமிட்டிருந்த அந்த நடுத்தர மனிதன் தலைகுனிந்து நின்றான்.‘‘சாளுக்கியர்களின் எந்தப் படைப்பிரிவைச் சேர்ந்தவன் நீ..?’’ கேட்டபடி கரிகாலன் முன்னால் வந்து நின்றான்.வாய் திறக்காமல் மவுனம் சாதித்தான்.‘‘டேய்...’’ கர்ஜித்தபடி சிவகாமி தன் முஷ்டியை உயர்த்தினாள்.‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரின் அந்தரங்க ஒற்றன் நான்...’’ தட்டுத் தடுமாறி பதிலளித்தான்.
‘‘வல்லபன் எந்தச் சிறையில் இருக்கிறான்..?’’ நிதானமாகக் கரிகாலன் தன் விசாரணையைத் தொடர்ந்தான்.‘‘எ..ந்..த... வ..ல்..ல..ப..ன்..?’’ ஒற்றன் விழித்தான்.‘‘பல்லவ நாட்டின் புரவிப்படைத் தளபதி!’’‘‘எனக்கு ராமபுண்ய வல்லபரை மட்டுமே தெரியும்... ஆ...’’ அநிச்சையாக தன் வலது செவியை ஒற்றன் பொத்தினான். வண்டுகளின் ரீங்கார ஒலி உள்ளெங்கும் அதிர்ந்தது!உயர்த்திய தன் கையை புன்னகையுடன் சிவகாமி இறக்கினாள்.
பாதகி! புரவியை அப்படிக் கொஞ்சியவள் இப்படி பாறையாக மாறி அறைந்திருக்கிறாளே! பொங்கிய உமிழ்நீரை விழுங்க முடியாமல் தரையில் துப்பினான். மேலும் இரண்டு பற்கள் ரத்தத்துடன் தரையில் விழுந்தன!‘‘எஞ்சிய பற்களும் நாடி நரம்புகளும் உடலில் தங்க வேண்டுமா அல்லது இங்குள்ள செடி கொடி மரங்களுக்கு உரமாக வேண்டுமா..?’’ கரிகாலனின் உதட்டிலிருந்து குரூரம் வெளிப்பட்டது.
‘‘கா..ஞ்..சி... சிறை..யி..ல்...’’ ஒற்றன் தட்டுத் தடுமாறினான்.‘‘எங்கு வல்லபனை சிறைப்பிடித்தீர்கள்? அச்சப்படாமல் சொல். உயிரே போனாலும் ஒற்றன் உண்மையைச் சொல்லமாட்டான். ஆனால், இரண்டு தட்டு தட்டியதுமே நீ கக்க ஆரம்பித்து விட்டாய். அப்படியானால் எங்களிடம் சிக்கினால் சகலத்தையும் சொல்லிவிடும்படி உன் எஜமானரும் சாளுக்கியர்களின் போர் அமைச்சரு மான ஸ்ரீராமபுண்ய வல்லபர் உத்தரவிட்டிருக்க வேண்டும். நடந்ததைச் சொல்!’’ கரிகாலனின் பார்வை அவன் உடலைச் சல்லடையாகத் துளைத்தன.
இதன் பிறகு ஒற்றன் எதையும் மறைக்கவில்லை. கெடிலக்கரையில் வல்லபனைச் சுற்றி வளைத்துப் பிடித்ததையும் மல்லைக்கு இழுத்து வந்ததையும், காஞ்சி சிறையில் அவனை அடைக்கும்படி ஸ்ரீராமபுண்ய வல்லபர் அங்கு கட்டளையிட்டதையும் சொன்னான்.‘‘பிறகு எப்போது உன் போர் அமைச்சரை சந்தித்தாய்..?’’‘‘யாரைக் குறிப்பிடுகிறீர்கள் கரிகாலரே..? ஸ்ரீராமபுண்ய வல்லபரையா..?’’‘‘வேறு போர் அமைச்சர் சாளுக்கியர்களுக்கு ஏது..?’’‘‘இரண்டு நாழிகைகளுக்கு முன்பு!’’கரிகாலன் தலையசைத்தபடி சிவகாமியை ஏறிட்டான். ‘‘ஆயுதச் சுரங்கத்திலிருந்து, தான் வெளியேறிவிட்டதை நமக்கு உணர்த்தவும்; நாக விஷம் தோய்ந்த வாட்களை தாங்கள் கைப்பற்றிவிட்டதை நமக்குத் தெரிவிக்கவும் இந்த ஒற்றனிடம் ஒரு வாளைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்...’’
‘‘நமக்கு எதிர்த் திசையில் இருந்தல்லவா இந்த ஒற்றன் வந்தான்...’’ சிவகாமி புருவத்தை உயர்த்தினாள்.‘‘ஆம்! நாம் நேர் வழியில் வந்தோம். ராமபுண்ய வல்லபர் குறுக்கு வழியில் இவனை எதிர்கொண்டு நம்மைச் சந்திக்க அனுப்பி யிருக்கிறார்!’’‘‘அப்படியானால் நாம் நடமாடும் திசைகளை...’’சிவகாமியின் வாக்கியத்தை கரிகாலன் முடித்தான்.
‘‘விரல் நுனியில் சாளுக்கிய போர் அமைச்சர் வைத்திருக்கிறார்!’’‘‘நம்மை ஏன் அவர் கைது செய்யாமல் இருக்கிறார்..?’’‘‘பல்லவ இளவல் இருக்கும் இடத்தை அறிவதற்காக, சிவகாமி!’’ சிரித்தபடி பதிலளித்த கரிகாலன், தன் கரங்களை உயர்த்தி சோம்பல் முறித்துவிட்டு ஒற்றன் பக்கம் திரும்பினான். ‘‘இனி நீ செல்லலாம்... தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காலையும் மாலையும் புரவிக்கு படிகாரப் பாலின் ஒத்தடத்தைக் கொடுக்க மறக்காதே!’’ ஆள்காட்டி விரலை உயர்த்திச் சொல்லிவிட்டு, ‘‘வா சிவகாமி...’’ என்றபடி தங்கள் குதிரைகள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.
‘‘கரிகாலரே...’’ வழிந்த குருதியைத் துடைத்தபடி ஒற்றன் அழைத்தான்.‘‘என்ன..?’’ நின்ற இடத்திலிருந்தே கரிகாலன் திரும்பினான்.‘‘நான் வேடதாரி என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்..? இத்தனைக்கும் ‘செ - லி நா - லோ - செங் - கியா பா - தோ - பா - மோ’ என சரியாகத்தானே உங்கள் சங்கேதச் சொல்லை உச்சரித்தேன்!’’பதில் சொல்லாமல் கரிகாலன் கடகடவென்று சிரித்தான்.‘‘சொல்லலாம் என்றால் சொல்லுங்கள். இல்லையென்றால் வேண்டாம்...’’ ஒற்றனின் கண்களில் ஆர்வம் வழிந்தது.
‘‘நீ எப்படி உங்களுக்கு பாதகமில்லாமல் உண்மையைச் சொன்னாயோ அப்படி எங்களுக்கு பாதகமில்லாமல் நாங்களும் நிஜத்தைச் சொல்கிறோம்! ஒற்றனே... சங்கேதச் சொல்லை சரியாகத்தான் உச்சரித்தாய். ஆனால், அதில் ஆன்மா இல்லை. உயிர்ப்பில்லை! தவறு நிகழ்ந்துவிடக் கூடாதே என்ற பதற்றத்துடன் மனப்பாடம் செய்ததை ஒப்பித்தாய்... தவிர...’’நிறுத்திய கரிகாலன் மெல்ல ஒற்றனின் அருகில் வந்தான்.
அச்சத்துடன் ஒற்றன் பின்னால் நகர்ந்தான்.சிரித்தபடி கரிகாலன் ஒற்றன் ஏறி வந்த புரவியை அணைத்து முத்தமிட்டான். ‘‘நாக விஷம் தோய்ந்த வாளை உன் இடுப்பில் நீ அணிந்திருந்தது சந்தேகத்தைக் கிளப்பியது என்றால்... உன்னை அணு அணுவாக ஆராய வைத்தது இந்த அசுவம்தான்!
இது எங்கள் பல்லவ நாட்டின் புரவிப் படைத் தளபதியான வல்லபனுக்குச் சொந்தமானது. இந்தப் பகுதியிலேயே இதுபோன்ற சத்திரிய சாதிக் குதிரை அவனிடம் மட்டுமே உண்டு. அசுவத்தின் நாடி பார்க்க சிவகாமி இதன் செவிகளை ஆராய்ந்தபோது மச்சம் தென்பட்டது! அது அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டது...’’
மீண்டும் ஒருமுறை அதன் நெற்றியில் தன் இதழ்களை கரிகாலன் பதித்தான். ‘‘வல்லபனைச் சுற்றி வளைத்து சாமர்த்தியமாக கெடிலநதிக்கரையில் கைது செய்த நீ... அவன் புரவி மீது மையல் கொண்டது முதல் குற்றம்! வழியில் பயன்படலாம் என்பதற்காக தன்னுடன் அவன் எடுத்துச் சென்ற கறிமஞ்சள், சவுக்காரம், வெல்லம், அபினி, பசும்பால், நீர், படிகாரம் ஆகியவற்றையும் நீ சுமந்து வந்தது இரண்டாவது குற்றம்!
வல்லபனின் வஸ்திரத்துடனேயே அதை எடுத்து வந்தது மூன்றாவது குற்றம்! வல்லபனால் மட்டுமே இவ்வளவு அழகாக தன் வஸ்திரத்தை மடித்து புரவிக்கான மருந்துப் பொருட்களை வைக்க முடியும் என்பதை நான் அறிய மாட்டேன் என நீ எண்ணியது நான்காவது குற்றம்! சுரைக்காய் குடுவையில் இருக்கும் பல்லவ நந்தி இலட்சினையை நீ கவனிக்காமல் விட்டது ஐந்தாவது குற்றம்!’’
சொன்ன கரிகாலன் நெருங்கி ஒற்றனின் தோளைத் தொட்டான். ‘‘இப்போது நான் சொன்ன அனைத்தையும் மறக்காமல் ஸ்ரீராமபுண்ய வல்லபரிடம் தெரிவித்துவிடு! போலவே எங்கள் நடமாட்டத்தை அணு அணுவாக அவர் கண்காணிக்கிறார் என்பதை நாங்கள் அறிந்துவிட்டதாகவும் தெரிவித்து விடு!
இதையெல்லாம் தெரிந்து கொண்டபிறகும் நாங்கள் அச்சப்படவோ பின்வாங்கவோ இல்லை என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெரிவித்து விடு! பல்லவ இளவலை நாங்கள் சந்திக்கப் போவதில் எந்த மாற்றமும் இல்லை. முடிந்தால் எங்களை, பல்லவ இளவலை கைது செய்யச் சொல்!’’ அதன் பிறகு கரிகாலன் திரும்பிப் பார்க்கவில்லை. ஒற்றனும் எந்த அழைப்பையும் விடுக்கவில்லை. தங்கள் புரவிகளில் ஏறாமல் அவற்றுடன் நடந்தபடியே சிவகாமி யுடன் அடர் வனத்தின் புதருக்குள் ஊடுருவினான். சில காத தூரம் சென்றதும் சிவகாமியின் கைகளைப் பிடித்து நிறுத்தினான். தன் முன் வலுவான மரம் இருப்பதையும் அதன் அடிப்பாகம் மூன்று ஆட்கள் கைகோர்த்து அணைக்கும்படி இருப்பதையும் பார்வையால் அளந்து விட்டு சிவகாமி பக்கம் தன் கருவிழியைத் திருப்பினான்.
உதட்டில் விரல் வைத்து அமைதி காக்கும்படி அவளிடம் சமிக்ஞை செய்துவிட்டு, தங்களுடன் வந்த இரு குதிரைகளையும் நெருங்கினான். அவற்றின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு இரு நெற்றிகளையும் தன்னிரு கரங்களாலும் ஒரே நேரத்தில் தடவினான். குனிந்து எட்டு கால்களையும் தடவி, பிடித்து விட்டான்இரண்டும் ஒரே நேரத்தில் கனைத்தன.
புன்னகையுடன் ஒவ்வொரு குதிரையின் செவியிலும் தனித்தனியே முணுமுணுத்தான்.இரண்டும் வாயைத் திறந்து பற்களைக் காட்டின!செல்லமாக அவற்றின் காதுகளைப் பிடித்து வலிக்காமல் திருகி விட்டு, இரு கைகளாலும் இரண்டையும் தட்டிக் கொடுத்தான்!
அடுத்த கணம் இரு புரவிகளும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியும் ஒட்டாமலும் உரசியும் உரசாமலும் சீறிப் பாய்ந்து காட்டுக்குள் பறந்தன. அக்கம்பக்கத்து மரக் கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகள் சடசடவெனச் சிறகடித்தபடி பறந்தன. அதைக் கண்டு அவன் உதட்டோரம் புன்னகை பூத்தது.
அவற்றின் குளம்பொலிகள் மெல்லத் தேய்ந்து மறைந்த பிறகும் அந்த இடத்தை விட்டு கரிகாலன் அசையவில்லை. பின்னர் சிவகாமியின் இடுப்பைத் தன் கைகளால் வளைத்து அவளைத் தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டான். பாதங்களை அழுத்தி ஒலி எழுப்பாமல் இரு கால் கட்டை விரல்களாலும் நடந்தபடி, தான் அளவிட்ட மரத்தை அடைந்தான்.
தோளிலிருந்து சிவகாமியை இறக்காமலேயே தென்னை மரத்தில் ஏறுவது போல் கால்களைக் குவித்தும் உயர்த்தியும் அம்மரத்தில் ஏறி, அடர் கிளைகளின் நடுவில் புகுந்து அமருவதற்கு வாகான இடத்தில் சிவகாமியை இறக்கினான். இலைக் கொத்துகளைக் காற்றில் அசைவது போல் பிரித்துப் பார்த்தான்.
வனத்தைச் சுற்றி ஆங்காங்கே புரவிகளும் சாளுக்கிய வீரர்களும் தனித்தனியாகவும் குழுக்களாகவும் நிற்பது புள்ளியாகத் தெரிந்தது.முழுவதுமாகச் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறோம்! எந்தத் திசையில் சென்றாலும் யாராவது நம்மைப் பின்தொடர்வார்கள்! ஸ்ரீராமபுண்ய வல்லபர் பலே பேர்வழிதான்! ‘‘எப்படி வனத்திலிருந்து நாம் வெளியேறுவது..?’’
செவியோரம் கிசுகிசுத்த சிவகாமியை நேருக்கு நேர் பார்க்க கரிகாலன் சட்டெனத் திரும்பினான்.இவ்வளவு வேகமாக அவன் திரும்புவான் என்பதை சிவகாமி எதிர்பார்க்கவில்லை. எனவே அவளால் விலக முடியவில்லை. எனவே அவன் உதடுகள் அவள் அதரங்களை முழுவதுமாக ஒற்றின! ஒற்றிய உதடுகளை வரவேற்கும் விதமாக அதரங்கள் திறந்தன!
(தொடரும்)
கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்
|