7 வேடங்களில் ராதிகா நடிக்கும் சந்திரகுமாரி!
ஆண்களுக்கு எளிதாக இருக்கலாம். பெண்களுக்கு? நிச்சயமாக சாதனைதான்! இதைத்தான் ராதிகா நிகழ்த்தி இருக்கிறார்.ஆம். அவர் நடிக்க ஆரம்பித்து நாற்பது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் இன்றும் கோலோச்சுகிறார்; வெற்றிகரமாக வலம் வருகிறார்.
சிறந்த நடிகை, தரமான தயாரிப்பாளர், தலைசிறந்த நிர்வாகி, வியக்க வைக்கும் விநியோகஸ்தர்... என இந்த 40 ஆண்டுகளில் முத்திரை பதித்திருக்கிறார். இப்போது சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘வாணி ராணி’க்கு அடுத்து இன்னும் பிரமாண்டமாக பெரிய கேன்வாசில் சரித்திரமும் நவீனமும் கலந்த ‘சந்திரகுமாரி’யை தயாரித்து நடித்து வருகிறார்.
‘‘நடிகையானது எதிர்பாராம நடந்த விபத்து. சின்னத்திரைக்கு வந்தது, ராடன் நிறுவனத்தை ஆரம்பிச்சது, தயாரிப்பாளரா ஆனது... எல்லாமே திட்டமிட்டு நடக்கலை. கிடைச்ச வாய்ப்புகளை தவறவிடாம பயன்படுத்தி கிட்டேன்.எங்கப்பா எம்.ஆர்.ராதா நடிகரா இருந்ததால நாங்க ஹாஸ்டல்லதான் தங்கிப் படிச்சோம். நடிக்கற ஆசை துளிகூட இல்ல. சொல்லப்போனா நடிகையான பிறகும் எஸ்கேப் ஆகலாம்னுதான் நினைச்சேன். ஏன்னா, அப்ப சினிமால இன்ட்ரஸ்ட் இல்லாம இருந்தது.
ஆனா, எங்க ஃபேமில நிரோஷா நடிகையாகணும்னு எல்லாருமே விரும்பினோம். ஏன்னா, அவதான் பாட்டுப் பாடுவா. டான்ஸ் ஆடுவா. ஆக்ட்டிங் பண்ணுவா. இது எதையுமே நான் செஞ்சதில்ல.இப்ப திரும்பிப் பார்த்தா எல்லாமே ஆச்சர்யமா இருக்கு. ரொம்ப நீண்ட பயணம். இந்தளவுக்கு சிறப்பா அது அமைஞ்சதுக்குக் காரணம், எதுல இறங்கினாலும் அதைச் சிறப்பா செய்யணும், நூறு சதவிகித உழைப்பை அதுக்குக் கொடுக்கணும் என்கிற எனது மனப்பான்மைதான்...’’ எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி நிதானமாக பேசத் தொடங்குகிறார் ராதிகா.
‘‘ஒருநாள் என் ஃப்ரெண்ட் வீட்ல என் போட்டோவை பாரதிராஜா சார் பார்த்துட்டு, ‘யார் இந்தப் பொண்ணு’னு விசாரிச்சிருக்கார். ‘பக்கத்து வீட்ல இருக்காங்க’னு அவ சொல்லியிருக்கா. உடனே அவர் எங்க வீட்டுக்கு வந்துட்டார். நான் எம்.ஆர்.ராதா பெண் என்பது அப்ப அவருக்குத் தெரியாது. என்னைப் பார்த்து, ‘சினிமால நடிக்கிறியா’னு கேட் டார். ‘என் முகத்தை எல்லாம் யார் பார்ப்பாங்க’னு துடுக்குத்தனமா கேட்டேன். பொறுமையா என்னை கன்வின்ஸ் பண்ண முயற்சி செஞ்சார். நடிக்கவே மாட்டேன்னு பிடிவாதமா இருந்தேன். அம்மாதான், ‘பரவால நடி. பிடிக்கலைனா வந்துடு’னு சொல்லி அனுப்பி வைச்சாங்க.
இப்படித்தான் ‘கிழக்கே போகும் ரயில்’ல அறிமுகமானேன். அந்தப் படம் பெரிய ஹிட். அதுக்கு அப்புறம் திரும்பி வராம நடிக்க ஆரம்பிச்சுட்டேன்!’’ கண்களைச் சிமிட்டுகிறார். ‘‘சினிமால எனக்கு சீனியரா இருந்த ப்ரியா, ஒரு கட்டத்துல நடிப்பில் இருந்து ஒதுங்கிட்டாங்க. தேவி நடிக்கறதை நிறுத்தி, பத்து வருஷங்கள் பிரேக் எடுத்துட்டு அப்புறம் திரும்பவும் நடிக்க வந்தாங்க.
ஆனா, எந்த பிரேக்கும் எடுக்காம தொடர்ந்து ஓடிட்டிருக்கேன். எப்படிப்பட்ட கேரக்டரையும் உள்வாங்கி நடிப்பேன் என்கிற பெயரை வாங்கியிருக்கேன். ஆனா, தயாரிப்புல கொஞ்சம் கசப்பான அனுபவம். ரிலீசுக்கு முன்னாடியே ‘ஜக்குபாய்’ நெட்ல வெளியாகிடுச்சு. அதனால ஒரேநாள்ல எங்களுக்கு ரூ.12 கோடி நஷ்டம்.
நான் நடிக்க வந்தப்ப நிறைய ஜாம்பவான்கள் இண்டஸ்டிரில இருந்தாங்க. அவங்க கூட எல்லாம் ஒர்க் பண்ற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. உண்மைலயே அது பெரிய பாக்கியம். அந்த வகைல சிவாஜி சாரை ரொம்ப மிஸ் பண்றேன். அதே மாதிரி கே.பாலசந்தர் சார் டைரக்ஷன்ல நடிக்கலை என்கிற வருத்தம் இருக்கு...’’ என்று சொல்லும் ராதிகாவுக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன.
‘‘இது என் கணவரின் ஐடியா. ‘மத்த துறைகள்ல பெண்கள் சாதனை பண்றப்ப உரிய அங்கீகாரம் கிடைக்குது. உன் துறைல நீயும் பெரிய சாதனை செஞ்சிருக்க. இதை நாம கொண்டாடியே ஆகணும்’னு சொல்லி அதற்கான ஏற்பாடுகள்ல சரத் இறங்கியிருக்கார். என்ன செய்யப் போறார்னு எனக்கே தெரியாது. அவரே விழா பத்தி அறிவிக்கப் போறப்பதான் எனக்கே அது தெரியப் போகுது...’’ என்ற ராதிகாவுக்கு திரைத்துறையே சேர்ந்து இந்த விழாவை நடத்தியிருக்க வேண்டும் என்ற வருத்தமோ கவலையோ இல்லை.
‘‘அவங்க பார்வைல இது சாதாரண விஷயமா இருக்கலாம்...’’ என முற்றுப்புள்ளி வைத்தவர் ‘சந்திரகுமாரி’ குறித்து விவரிக்கத் தொடங்கினார். ‘‘டெலிவிஷன் வரலாற்றுலயே வித்தியாசமான கதையா ‘சந்திரகுமாரி’ உருவாகிட்டிருக்கு. இத்தனை வருடங்கள் இந்த இண்டஸ்டிரில இருக்கேன். ஆனா, ‘சந்திரகுமாரி’க்கு கொடுக்கிற உழைப்பை வேற எந்த புராஜெக்ட்டுக்கும் கொடுத்ததில்ல. அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா, அந்த வார்த்தை எனக்குப் பிடிக்காது. தினம் தினம் சவாலான உழைப்புனு வேணும்னா சொல்லலாம்.
ஒரு பக்கம் ‘வாணிராணி’; இன்னொரு பக்கம் ‘சந்திரகுமாரி’னு ஷூட் பரபரக்குது. ரெண்டையும் பேலன்ஸ் பண்ணி நடிச்சிட்டிருக்கேன். ‘சந்திரகுமாரி’ கான்செப்ட் ஃபிரெஷ்ஷா இருக்கும். சின்னத்திரைலயும் ‘பாகுபலி’ மாதிரி பிரமாண்டமான மேக்கிங் பண்ண முடியும் என்பதற்கு இந்த சீரியல் உதாரணமா இருக்கும். அப்படி இருக்கணும்னுதான் இவ்வளவு மெனக்கெடறோம்.
வெவ்வேறு ஜென்மங்கள் பத்தின விறுவிறுப்பான கதை இது. பூர்வஜென்ம பகுதியை சுரேஷ்கிருஷ்ணா சார் டைரக்ட் பண்றார். சமகால கதையை சி.ஜே.பாஸ்கர் இயக்கறார். கலக்கலான கிராஃபிக்ஸ், த்ரில்லிங்கான கதை. ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட்டா அமையும்னு நம்பறோம்...’’ என்ற ராதிகா சட்டென நெகிழ்ந்தார்.
‘‘கலைஞர் ஐயா இருந்திருந்தா ‘சந்திரகுமாரி’யை பார்த்து மகிழ்ந்திருப்பார். அவர் குடும்பத்துல ஒருத்தியாதான் இருந்தேன். அவர் வசனம் எழுதின பல படங்கள்ல நடிச்சிருக்கேன். யாருக்குமே கிடைக்காத சிறப்பு இது. கலைஞர் வசனத்தை நான் பேசி நடிப்பேன்னு எங்கப்பாவுக்கு தெரிஞ்சிருந்தா மகிழ்ச்சியோடு பெருமையா சிரிச்சிருப்பார்!
அவரோட வசனங்களை என்னால பேசமுடியும்னு தைரியம் கொடுத்து பேசச் சொன்னவர் செல்வம் சார்தான். இந்த நேரத்துல அவருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிக்கறேன். கலைஞரோட சென்ஸ் ஆஃப் ஹியுமர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் ‘சித்தி’யை விடாம பார்த்து ரசிச்சார். அப்பப்ப போன் செஞ்சு சில எபிசோடுகளை குறிப்பிட்டுப் பேசி பாராட்டுவார்.
ஒருமுறை முதுகுவலியால பாதிக்கப்பட்டு நடக்க முடியாம சிரமப்பட்டேன். அப்ப ‘யோகா செய்... சரியாகிடும்’னு சொன்னதோடு தன் யோகா மாஸ்டரையே எனக்கு அறிமுகப்படுத்தினார். இப்ப வரை ஜிம் ஒர்க் அவுட்டும் யோகாவும் செஞ்சுட்டு இருக்கேன். அவரை ரொம்ப மிஸ் பண்றேன்...’’ கலங்கிய ராதிகா சட்டென சுதாரித்துக்கொண்டு பேச்சை மாற்றினார்.
‘‘பொதுவா ஹீரோயின்ஸ் அதிகநாள் சினிமால தாக்குப்பிடிக்க மாட்டாங்கனு சொல்வாங்க. நான் தாக்குப் பிடிச்சு நிக்கறேன். கல்யாணமானா ஓரம் கட்டிடுவாங்கனு ஒரு நம்பிக்கை இருக்கு. அதை பொய்யாக்கினேன். குழந்தை பிறந்தா சினிமால சுத்தமா திரும்பிப் பார்க்க மாட்டாங்கனு அடிச்சு சொல்வாங்க. இதை என் வாழ்க்கைல மாத்திக் காட்டினவர் எங்க பாரதிராஜா சார்தான்.
குழந்தை பெத்த ரெண்டாவது மாசமே, ‘கிழக்கு சீமையிலே’ல என்னை நடிக்க வைச்சார். ‘இந்த கேரக்டரை உன்னாலதான் செய்ய முடியும்’னு கூட்டிட்டுப் போனார். அந்தப் படம் பெரிய ஹிட். அதுக்கு அப்புறம் விதவிதமான கேரக்டர்ஸ் என்னைத் தேடி வந்தது. குழந்தைகளை பிரிஞ்சு அவுட்டோர் போறது கஷ்டமா இருந்தாலும் எனக்குப் பிடிச்ச கதாபாத்திரங்களை மிஸ் பண்ணிடக் கூடாதுனு உறுதியா இருந்தேன்.
சின்னத்திரைக்கு வந்தது கூட இந்த சவுகரியத்துக்காகத்தான். பிசியா படங்கள் பண்ணிட்டு இருக்கிறப்பவே டிவிக்கு வந்தேன். ‘அங்க ஏன் போறே’னு எல்லாரும் கேட்டாங்க, சண்டை போட்டாங்க. பெண்களுக்கு பிடிக்கற மாதிரி, அவங்களுக்கு நம்பிக்கை தர்ற மாதிரியான ஒரு பிளாட்ஃபார்மா டிவி இருக்கு. அதை பயன்படுத்திக்க நினைச்சேன்.
‘சித்தி’ ஆரம்பிச்சதுலேந்து இப்ப வரை... இத்தனை வருஷங்களா எங்க சீரியல் ஒளிபரபரப்பாகுது. உண்மைலயே சந்தோஷமா இருக்கு. இதுக்கெல்லாம் காரணம் என் மேல நம்பிக்கை வைச்சிருக்கிற சன் நெட்ஒர்க் சேர்மேன் கலாநிதி மாறன் சார்தான். அவருக்கு எப்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.
ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. ‘சித்தி’ முடிஞ்சதும் ஒரு பத்திரிகைல, ‘பெரிய உயரத்துக்கு போயிட்டீங்க. இதுக்கு மேலயும் நல்ல கதை பண்ணமுடியும்னு நம்பிக்கை இருக்கா’னு கேட்டாங்க. ‘நிறையவே இருக்கு’னு சொன்னேன். ‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘அரசி’, சீரியல்ல டபுள் ஆக்டிங்கான ‘வாணி ராணி’னு வித்தியாசமான கதாபாத்திரங்கள் பண்ணி சொன்னதை காப்பாத்தியிருக்கேன். ‘சந்திரகுமாரி’ இன்னொரு கட்டம்... உயரம்...’’ புன்னகைத்த ராதிகா, டைம்மேனேஜ்மென்ட் பற்றியும் மனம் திறந்தார்.
‘‘சினிமா, டெலிவிஷன், ஃபேமிலி, ராடன்... எல்லாத்துக்கும் எப்படி நேரம் செலவழிக்க முடியுதுனு பலரும் கேட்கறாங்க. இதற்கான எனது பதில், எங்கப்பா என்கிட்ட சொன்னது தான். நடிக்க வந்தப்ப ‘பங்சுவாலிட்டி கடைப்பிடி’ன்னார். வேற எந்த அட்வைஸையும் ஸ்டிராங்கா சொல்லல. இதைத்தான் கடைப்பிடிக்கறேன். அதனாலதான் எல்லாத்துக்கும் நேரம் ஒதுக்க முடியுது...’’ என்ற ராதிகா, ‘சந்திரகுமாரி’யில் நிறைய சர்ப்ரைஸ்களை வைத்திருக்கிறார். அதில் ஒன்று, அவர் ஏழு விதமான தோற்றங்களில் நடிப்பது!
மை.பாரதிராஜா
ஏ.டி.தமிழ்வாணன்
|