c/o மனிதர்கள்



“ஒன்றாக இணைவது தொடக்கம்; ஒன்றாக தொடர்வது முன்னேற்றம்; ஒன்றாக பணிபுரிந்தால் வெற்றி...”அமெரிக்கத் தொழில்துறையின் பிதாமகன் ஹென்றி ஃபோர்டு சொன்ன இந்த கருத்துதான் இயக்குநர் வெங்கடேஷ் மகாவுக்கு வேதவாக்கு. அந்தக் கருத்தின் அடிப்படையில் இணைந்து, தொடர்ந்து, மகத்தான வெற்றியை எட்டியிருக்கிறார்.

‘C/o கஞ்சரப்பாலம்’ என்கிற அவரது முதல் படத்தின் மூலமே சர்வதேசப் புகழை அடைந்திருக்கிறார். நியூயார்க் இந்திய திரைப்படவிழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெலுங்குப்படமே இதுதான். இந்தப் படத்தை விரும்பி வாங்கி வெளியிட்டிருப்பவர் ‘பாகுபலி’ ராணா.

அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து, டாக்டருக்கு படித்து வாழ்ந்து வருபவர் பிரவீணா பருச்சூரி. வாரயிறுதிகளில் தெலுங்குப்படம் பார்ப்பது மட்டுமே அவரது சிறுவயது பொழுதுபோக்கு. டாக்டருக்கு படித்து இதயநோய் நிபுணராக பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த நிலையில் திடீரென்று பிரவீணாவுக்கு அந்த ஆசை வந்தது.

“நாம் ஏன் சினிமா தயாரிக்கக் கூடாது?”
ஆசை நிராசையாகிவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் உடனடியாக ஹைதராபாத்துக்கு பறந்து வந்தார். அங்கே நண்பர் ஒருவர் மூலமாக பிரவீணாவுக்கு அறிமுகமானவர்தான் வெங்கடேஷ் மகா.ஓகே. வெங்கடேஷின் கதைக்கு வருவோம்.பத்து ஆண்டுகளுக்கு முன்பு டீன் ஏஜ் இளைஞரான வெங்கடேஷ், திடீரென வீட்டை விட்டு வெளியேறி விட்டார். விசாகப்பட்டிணத்தில் கிடைத்த வேலையை எல்லாம் செய்து வயிற்றுப் பசியை போக்கிக் கொண்டிருந்தார். தங்குவதற்கு நிலையாக ஓர் இடமில்லை.

நண்பர் ஒருவர் தன் வீட்டில் தங்கிக் கொள்ளு மாறு அழைத்தார். அந்த வீடு இருந்த ஊர்தான் கஞ்சரப்பாலம். ஒன்பது மாதங்கள் அங்கே தங்கியிருந்தவர், அந்த வீட்டில் ஒருவராக, ஊர்க்காரராகவே மாறிப்போனார்.அதன்பிறகு ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்து சினிமாவில் நடிக்க முயற்சித்தார். லைட்பாயில் தொடங்கி அசிஸ்டெண்ட் டைரக்டர் வரை சினிமாவில் வெங்கடேஷ் வேலை பார்க்காத துறையே இல்லை. இயக்குநர் ஆகலாம் என்று முடிவெடுத்தபோது கதையை எழுத அமைதியான இடம் வேண்டுமென்று மீண்டும் கஞ்சரப்பாலத்துக்கே சென்றார். இம்முறை ஊர் அவருக்கு வேறு பரிமாணத்தில் தெரிந்தது.

ஊர் முழுக்க மனிதர்கள். அவர்களிடம் தளும்பத் தளும்ப அன்பு. நாம் படம் பிடிக்க வேண்டியது இந்த மனிதர்களைத்தான் என்பது வெங்கடேஷுக்குப் புரிந்தது.இதே காலகட்டத்தில்தான் தயாரிப்பாளர் பிரவீணாவை சந்தித்தார். படம் இயக்க ஒப்பந்தமானார்.
கஞ்சரப்பாலத்து கதையை, கஞ்சரப்பாலத்து மனிதர்களை வைத்தே எடுக்க திட்டமிட்டார். இதற்கு முன்பாக இப்படத்தில் நடித்தவர்கள், அதிகபட்சம் செல்ஃபீக்காகத்தான் போஸ் கொடுத்திருப்பார்கள். பயிற்சிப் பட்டறையெல்லாம் நடத்தி ஒருவழியாக அவர்களைத் தேற்றினார்.

படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க மட்டும் யாரும் முன்வரவில்லை. வெங்கடேஷ் தயங்கவே இல்லை. அமெரிக்காவிலிருந்த தயாரிப்பாளருக்கு போன் அடித்தார். “பாலியல் தொழிலாளியாக நீங்கள் நடிக்க வேண்டும்!”ஆச்சரியமும் அதிர்ச்சியும்அடைந்த பிரவீணா, ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை. எனினும் கஞ்சரப்பாலத்தில் வெங்கடேஷ் படமெடுத்துக் கொண்டிருந்த காட்சிகளை ஸ்கைப்பில் கண்டு அவர்மீது நம்பிக்கை கொண்டு நடித்துக் கொடுக்க சம்மதித்தார்.

அமெரிக்காவில் இருந்து இதற்காகவே பறந்து வந்து நடித்தார்.“வெங்கடேஷ் இயக்கியது படமல்ல. அவர் ஓர் ஊரையே இயக்கிக் கொண்டிருந்தார்...” என்கிறார் தயாரிப்பாளர்.கஞ்சரப்பாலம் என்கிற ஊர் சேர்த்து இழுத்த வடம்தான் இப்போது நியூயார்க் வரை போயிருக்கிறது.
கடந்த வாரம் இந்தியாவிலும் வெளியாகியிருக்கும் இந்த சிறிய படம், பிரும்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி போன்ற சினிமா ஜாம்பவான்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வசூலும் அமோகம்.

படத்தில் எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களில் 99% பேருக்கு இதுதான் முதல் படம். இனியும் நடிப்பார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனாலும், நடிப்பு என்பது ஒரு காட்சியில்கூட வெளிப்படாமல் ‘கேண்டிட் கேமிரா’வில் பதிந்தது போல அவ்வளவு யதார்த்தமாக
செய்திருக்கிறார்கள்.படத்தின் மையச்சரடு காதல்தான். 13 வயது சிறுவனில் தொடங்கி 50 வயது ஆள் வரையிலான நாலு பேரின் காதல் கதை.
பள்ளி மாணவி சுனிதாவின் மீது சக மாணவன் சுந்தரத்துக்கு ஈர்ப்பு.

பார்கவி என்கிற உயர்சாதிப் பெண், ஜோசப் என்கிற தறுதலையைக் காதலிக்கிறாள்.சலீமா என்கிற பாலியல் தொழிலாளியை, ஒயின்ஷாப்பில் பணிபுரியும் ஒருவன் காதலித்து மணக்க விருப்பப்படுகிறான்.பிரணீதா என்கிற விதவை. அரசு அலுவலகத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் இவருக்கு தன்னுடைய அலுவலகத்தில் அட்டெண்டராக பணிபுரியும் ராஜு என்பவர் மீது ஈடுபாடு வருகிறது.

தனித்தனியாகப் பயணிக்கும் இந்தக் கதைகள் இறுதிக்காட்சியில் எவருமே எதிர்பார்க்காத ‘திடுக்’ புள்ளியில் இணைகிறது. இந்தக் கதை
களுக்குப் பின்னணியாக கஞ்சரப்பாலத்து மண்ணும், மனிதர்களும் உரம் சேர்க்கிறார்கள்.‘சாதாரண காதல் கதைதானே?’ என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். ட்ரீட்மென்ட்தான் விசேஷமே.

சமீபகாலமாக கன்னடத்தில் ‘திதி’, மலையாளத்தில் ‘அங்காமாலி டயரீஸ்’, தமிழில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என அவரவர் மண்ணை, வண்ணத்திரையில் விசேஷமாக ஆவணப்படுத்தும் தொடர்ச்சியாக ‘C/o கஞ்சரப்பாலம்’ படமும் அமைகிறது.ஹாலிவுட், ஐரோப்பிய, ஈரானிய, கொரிய படங்களின் நகலாக இல்லாமல் உலகப்பட அரங்கில், ‘இந்தியப் படம்’ என்று நாம் பெருமையாகக் காலரைத் தூக்கிவிட்டுகொண்டு சொல்லக்கூடிய படங்கள் எளிமையான அழகியல் தன்மையோடு அணிவகுத்து வர ஆரம்பித்திருக்கின்றன.
படத்தில் ஒரு காட்சி.

விதவை அரசு அதிகாரி பிரணீதா மலை மீது இருக்கும் ஒரு கோயிலுக்குச் செல்ல விருப்பப்படுகிறார். அவருக்கு உதவியாக அட்டெண்டர் ராஜு கூடவே வந்து உதவுகிறார். மிகவும் சிரமப்பட்டு சுவாமி தரிசனம் சிறப்பாகக் கிடைக்கிறது பிரணீதாவுக்கு. அவ்வளவு கஷ்டப்பட்டு மலையேறி வந்த ராஜுவோ கோயிலுக்குள்  நுழையவில்லை.“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்கிறார் பிரணீதா.

“ஏதாவது கோரிக்கையோ, கஷ்டமோ இருந்தால் கடவுளிடம் வேண்டிக் கொள்ளலாம். கடவுள் எனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் என்னைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் செய்து கொடுக்கிறார்கள். எனக்கு எதற்கு கடவுள்?” என்கிறார் ராஜு.மனிதத்தை நம்புபவர்கள் தோற்பதில்லை. ‘C/o கஞ்சரப்பாலம்’ படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் அந்த ஊர் மனிதர்களை நம்பினார்கள். இப்போது பெரும் வெற்றியை எட்டியிருக்கிறார்கள்.

யுவகிருஷ்ணா