சைக்கிள் காதலர்!



கலெக்டர்ஸ்  

சென்னை அண்ணாநகரில் அந்த வீட்டின் மெகா சைஸ் பச்சை நிற கேட்டைத் திறந்தபோது, நம்மை வரவேற்றது உயரமான பெரிய  இரண்டு தூண்கள். மறுபக்கம் வரிசையாக அணிவகுத்து நின்றன எட்டு சைக்கிள்கள்! அனைத்துமே அந்தக் காலத்தைச் சேர்ந்தவை.இவற்றை குழந்தை போல் பராமரித்து வருகிறார் பிரபாகர். 19ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சைக்கிள்கள் முதல் இரண்டாம் உலகப் போர் வரை   உள்ள ைசக்கிள்கள் இவரிடம் இருக்கின்றன!

‘‘பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைலதான். சொந்த ஊர் வெங்கல். ஜமீன்தார் குடும்பம். வீட்ல ஏராளமான பழைய பொருட்கள் இருக்கும். அது கூடவேதான் வளர்ந்தேன். குறிப்பா சைக்கிள்களை நான் சேகரிக்கக் காரணம் இதுதான் என் பழைய நினைவுகளை மீட்டெடுக்குது. சின்ன வயசுல பள்ளிக்குப் போனதும், தொழில் காரணமா பயணம் செஞ்சதும் சைக்கிள்லதான். அதனாலயே பைக், கார்னு வாங்கினாலும் சைக்கிள் மேல இருக்கிற உறவை விட முடியலை.

என் ஹம்பர் மாடல் சைக்கிள் ஒண்ணு தொலைஞ்சு போனப்ப ரொம்பவே பாதிக்கப்பட்டேன். 1955ம் வருட ஹம்பர் ஸ்போர்ட்ஸ் சைக்கிள் இருக்கிற இடத்தை என் நண்பர் சொன்னார். உடனே போய் வாங்கிட்டேன்! எலும்புக் கூடா இருந்தது. அதை சரிசெஞ்சு, நிறைய டிங்கரிங் முடிச்சு, ஓடற நிலைக்கு மாத்தினேன்.

இப்ப என்கிட்ட 12 சைக்கிள்கள் இருக்கு! எல்லாமே ஒர்க்கிங் கண்டிஷன்ல இருக்கு...’’ என்றபடி இரண்டாக மடிக்கப்பட்டிருந்த ஒரு சைக்கிளை பிரபாகர் விரித்தார். ‘‘இது இரண்டாம் உலகப் போர்ல பயன்படுத்தின சைக்கிள். பழைய கடைல இதை வாங்கினேன். அப்புறம்தான் இரண்டாம் உலகப் போர்ல இது பயன்படுத்தப்பட்டதுனே தெரியும். ஒரு கேம்புல இருந்து மறுகேம்புக்கு போறப்ப வீரர்கள் இதைப் பயன்படுத்தி இருக்காங்க.

அப்ப போர் விமானங்கள் சின்னதா இருந்ததால இதை மடித்து எடுத்துச் செல்லவும், பாராசூட்ல கட்டி குதிக்கவும் வசதியா இருந்தது. முதன்முதல்ல வாங்கினது இந்த சைக்கிள்தான். இதுல ஆரம்பிச்ச தேடல் இப்ப வரை தொடருது.
1818ல ஜெர்மனில பயங்கர வறட்சி. அப்ப ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்குப் போக சைக்கிளை கண்டுபிடிச்சாங்க. காலம் மாற மாற சைக்கிள்ல ஒவ்வொரு வசதியா பொருத்தப்பட்டது. என்கிட்ட ஸ்ட்ரூமே ஆர்ச்சர், பி.எஸ்.ஏ ரோட்ஸ்டர், ரேலே ரோட்ஸ்டர், ஹெர்குலிஸ், ராபின்ஹுட்... இப்படி பல கம்பெனி சைக்கிள்கள் இருக்கு...’’ என்ற பிரபாகர், சைக்கிள்களில் பயன்படுத்தப்பட்ட விளக்குகள் மற்றும் கடிகாரங்களையும் சேகரித்துள்ளார்.

‘‘20 வருஷங்களுக்கு முன்னாடி இந்தக் கடிகாரத்தை ஒரு பழைய கடைல பார்த்தேன்...’’ என்றபடி ஒரு கருப்புப் பெட்டியைத் திறந்து காண்பித்தார். ‘‘எதுக்காக இதை பயன்படுத்தினாங்கனு தெரியல. ஒரு சமயம் சைக்கிள் பத்தின டாக்குமெண்ட்ரியை என் நண்பர் கூட பார்த்தேன். அதுலதான் இது சைக்கிள்ல பொருத்தப்படும் கடிகாரம்னு தெரிஞ்சுது. எண்களும் முட்களும் ரேடியம்ல இருக்கிறதால இரவுலயும் மணி பார்க்க முடியும்.

இரண்டாம் உலகப் போர் சமயம் ஒரு கேம்பில் இருந்து இன்னொரு கேம்புக்கு வீரர்கள் சைக்கிள்ல போறப்ப தங்கள் பேன்ட் பெல்ட்டுல விளக்கைப் பொருத்திப்பாங்க. நைட்ல இது வழிகாட்டும். இந்த விளக்குல சின்னதா ஒரு திரை உண்டு. எதிரியின் போர் விமானம் மேல பறக்கிறப்ப திரையால விளக்கை மூடிடுவாங்க. சிவப்பு, பச்சைனு இரண்டு வண்ண விளக்குகள் உண்டு. சிவப்பு ஆபத்தையும் ,பச்சை முன்னேறுவதையும் குறிக்கும்.

சாதாரணமா சைக்கிள்ல போறப்ப மண்ணெண்ணெய் விளக்கு பயன்படுத்துவாங்க. இதே விளக்கைத்தான் கார் மற்றும் கோச் வண்டிக்கும் பயன்படுத்தியிருக்காங்க...’’ என மூச்சு விடாமல் சைக்கிள் புராணம் பாடும் பிரபாகர், வேறு பல அரிய பழங்காலப் பொருட்களையும் சேகரித்திருக்கிறார். ‘‘அந்தக் காலத்துல காடை இறகுல மையை நனைச்சு எழுதுவாங்க. அப்புறம் நிப்புகள் வந்தது.

ஒருமுறை மைல நனைச்சா ஒரு வரி எழுதலாம். இதுக்காக பயன்படுத்தப்பட்ட இங்க், மாத்திரை வடிவத்துல இருக்கும். சின்னக் குடுவைல தண்ணீர் ஊற்றி, அதுல மாத்திரையைப் போட்டு கரைக்கணும். எந்த ரசாயனம் பட்டாலும் இந்த இங்க் அழியாது. இங்க் வர்றதுக்கு முன்னாடி எழுத்தாணியைப் பயன்படுத்தினாங்க. அதுவும் என் சேகரிப்புல இருக்கு. ஒரு பக்கம் கத்தி, மறுபக்கம் எழுத்தாணி. கத்தியால  பனை ஓலையை சீவிட்டு மறுபக்கம் இருக்கிற எழுத்தாணியால எழுதணும்!

இதோ இந்த மினி சைஸ் கட்டிலைப் பாருங்க... இது குழந்தைங்க விளையாட...’’ என நான்கு பக்கமும் அழகாக டிசைன் செய்யப்பட்டிருந்த தேக்கு மரக் கட்டிலைக் காண்பித்தார். அதில் சின்னதாக மெத்தையும் இருந்தது. ‘‘இப்ப பார்பி பொம்மைல வரும் கிட்டுக்கு முன்னோடி இது.

இந்தக் கருவி என்ன தெரியுமா..? ஆங்கிலேயர் ஆட்சியப்ப புழக்கத்துல இருந்த சீஸ் பிரட் வெட்டும் கருவி! அப்புறம் அந்தக் கால சாவி கொடுக்கும் கடிகாரங்கள், சிம்னி விளக்குகள்னு எதையும் விடலை. என்னனு தெரியலை... எலக்ட்ரானிக் கடிகாரங்கள் மேல அவ்வளவு ஈர்ப்பு இல்ல...’’ என்றபடி நம்மை அழைத்துக் கொண்டு ஓர் அறைக்குள் நுழைந்த பிரபாகர், அங்கிருந்த பரணைக் காண்பித்தார்.

பழங்கால சினிமா புரொஜெக்டர், டேப் ரிக்கார்டர், சினிமா ஷூட்டிங்கின்போது பயன்படுத்தப்பட்ட டேப் ரிக்கார்டர், ஷாக் சிகிச்சை அளிக்கக்கூடிய கருவி, பெட்ரோமாக்ஸ் விளக்குகள், பாக்குப் பெட்டி, நிலம் அளக்கும் சர்வே கருவி, 100 வருடங்களான பெயின்டிங்ஸ்... என சகலமும் அங்கு வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.

‘‘வரையத் தெரியாது! அதனாலயே பெயின்டிங்ஸ் மேல ஈர்ப்பு. அழகான ஓவியங்கள் குப்பையா போடப்பட்டிருந்தாலும் அதைப் பொறுக்கி எடுத்து வாங்கிடுவேன். ரவிவர்மா வரைஞ்ச சங்கராச்சாரியார் ஓவியத்தை அப்படித்தான் வாங்கினேன். இதை வாங்கின ஆறே மாசத்துல ஓவியத்துல இருக்கிற மாதிரியான சங்கராச்சாரியார் பொம்மை கிடைச்சது. ரெண்டுக்கும் துளி வித்தியாசம்கூட இல்ல! மணியின் டிசைன் கூட ஒண்ணா இருக்குனா பார்த்துக்குங்க...’’ என்ற பிரபாகர், மேலே இருந்த பொக்கிஷ அறையின் கதவைத் திறந்தார். அங்கு சின்னதாக ஒரு இரும்புக் குடுவை இருந்தது.

‘‘இது 1816ம் வருட குக்கர்! அந்தக் காலத்துல கால்ஷியம் சத்துக்கு சிறப்பு மாத்திரை எல்லாம் கிடையாது. எலும்புதான் சிறந்த கால்ஷியம் சத்து! இந்த குக்கர்ல மாமிச எலும்பைப் போட்டு நல்லா வேகவைச்சா ரப்பர் மாதிரி ஆகிடும். வயசானவங்களால எலும்பைக் கடிக்க முடியாதில்லையா..? அவங்களுக்காக குக்கர்ல அதை வேக வைச்சுக் கொடுப்பாங்க!

19ம் நூற்றாண்டுல வேட்டையாடுவது ஒரு கலை.  துப்பாக்கியே சுமாரா ஆறு கிலோ எடை இருக்கும். அதைக் கைல தூக்கிட்டு அலைய முடியாது. அதுக்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த ஸ்டாண்ட்! கூர்மையான முனை கொண்ட குச்சி மாதிரி இருக்கும். மேல் பகுதில ரெண்டு கை அளவுக்கு பலகை மாதிரி இருக்கும்.

அதை மண்ணுல சொருகி நிறுத்திட்டு துப்பாக்கியை அது மேல வைச்சுடுவாங்க. இதை மடிக்கலாம். எங்க வேணும்னாலும் கொண்டு போகலாம்!’’ என விளக்கிவிட்டு ஒரு கூடை நிறைய இருந்த கைத்தடிகள், 19ம் நூற்றாண்டின் கோச் பெல், 100 வருட கோட் பிரஷ், காளியம்மன் விளக்கு, 1920ம் ஆண்டைச் சேர்ந்த கேமரா... என தன் சேகரிப்பை ஆர்வத்துடன் காண்பித்தார்.

‘‘பழைய புத்தகங்களை கலெக்ட் பண்றதுலயும் தணியாத ஆர்வம் உண்டு. அதுக்காக எல்லா புக்ஸையும் வாங்க மாட்டேன். அதுல ஏதாவது சிறப்பு இருந்தா மட்டும் வாங்குவேன். அப்படித்தான் 1928ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மெக்கானிசம் நூலைத் தேடி எடுத்தேன். அக்கு வேற ஆணி வேறா இதுல ஒவ்வொரு பாகத்தின் செயல்பாட்டையும் விளக்கியிருக்காங்க.

1950கள்ல வெளியான ‘பேசும் படம்’, 1955ம் ஆண்டின் ‘குண்டூசி’ இதழ்கள், 1967ம் ஆண்டின் சினிமா டைரி, 1970ல சிவாஜி ரசிகர் மன்றம் வெளியிட்ட ஆரம்ப காலம் முதல் அன்று வரையிலான அவரோட திரைப்படங்களின் தொகுப்பு... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...’’ என்று சொல்லும் பிரபாகருக்கு இரு மகள்கள். பெரியவள் பெங்களூரு ஆய்வு நிறுவனத்தில் ஆய்வாளராக உள்ளார். சின்னவள் 10ம் வகுப்பு படிக்கிறாள்.   
   
ப்ரியா

ஆ.வின்சென்ட் பால்