வைரஸ், பாக்டீரியா, பூஞ்சையால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள்!
ஹோம் அக்ரி 23
* மரவள்ளி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊன்றுகல் மற்றும் கம்பிவலையால் ஆன வேலி
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு
என்ற குறளில் திருவள்ளுவர் உழவில் நாம் செய்யும் வேலைகளின் முக்கியத்துவத்தை கீழ்கண்டபடி வரிசைப்படுத்துகிறார்.
* பயிர் பாதுகாப்பு. * நீர் பாய்ச்சுதல். * களை எடுத்தல்.* உரமிடுதல். * உழவு.
இதன்படி பயிர்பாதுகாப்பு எல்லாவற்றையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. நோய், விலங்குகள், பறவைகள், காற்று, புழு பூச்சிகள், வண்டுகள் மற்றும் மனிதர்களிடமிருந்து செடிகளையும், தோட்டத்தையும் காப்பதே பயிர் பாதுகாப்பு.
இதன் முதல் அம்சம் வேலி அமைப்பது. தோட்டத்தின் வெளியிலிருந்து வரும் ஆடு, மாடு, மனிதர்களை இது கட்டுப்படுத்தும். ஆனால், நாம் தோட்டத்துக்குள் வளர்க்கும் கோழி, ஆடுகளை கட்டுப்படுத்தாது. அதுபோலவே பன்றி, காட்டுப்பன்றி, யானை, மயில், கிளி போன்றவற்றையும் கட்டுப்படுத்தாது. பன்றி, காட்டுப்பன்றி, யானை இவைகளுக்கு மின்வேலி ஓரளவுக்கு பயன் தரும்.
வேலி அமைக்கும் போது கம்பிவலைகள் மூலமாகவோ, மூங்கில் தட்டி மூலமாகவோ, உயிர் வேலியாகவோ அமைக்கலாம். இதில் உயிர்வேலியாக அமைக்கும்போது செலவைக் குறைத்து, ஆடு மாடுகளுக்கு தீவனமும் பெறலாம். உயிர்வேலி அமைக்க பலமாதங்கள் எடுத்துக் கொண்டாலும் பலவிதமான பலன்களை அது தரக்கூடியது.
பொதுவாக கிலுவை, ஒதியம், இலந்தை, முள்ளு முருங்கை, சுபாபுல், கிளரிசிடியா போன்றவற்றை அமைக்கலாம். உயிர்வேலிகள் வேகமான காற்றிலிருந்தும் செடிகளை பாதுகாக்கின்றன. உலர்ந்த மரங்கள், தோட்டக்கழிகளிலிருந்து வேலி அமைப்பது பொதுவாக பயனில்லாததாகவே இருக்கிறது அல்லது மிக குறுகிய காலத்தில் பயனில்லாமல் போகிறது.
மின்வேலி அமைப்பது சட்ட விரோதமானது. காட்டுப்பகுதிகளில் வனத்துறை அமைப்பது மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி மூலமாக மின்வேலி அமைப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சோலார் தகடுகள் மூலமாக தயாரிக்கும் மின்சாரம் குறைந்த மின் அழுத்தத்தில் கம்பிகளில் பாய்ச்சப்படுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுவதில்லை.
இனி தாவரங்களை நோய்களிலிருந்து காப்பது எப்படி என்று பார்ப்போம். மனிதர்களைப்போலவே பொதுவாக வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சையால் தாவரங்களில் நோய்கள் ஏற்படுகிறது. நம்மைப்போலவே தாவரங்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. இந்த நோய்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவும்போதே நாம் பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டி யிருக்கும். அல்லது நோய்தாக்கிய செடியை நீக்கிவிட்டு ஒரு சில முற்பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலமாக நோய் பரவுவதை தடுக்கலாம்.
வைரஸால் வரும் நோய்கள்: இலைப்புள்ளி நோய், பலவண்ண நோய், இலைச் சுருள் நோய், உச்சிக் கொத்து நோய், மொசைக் நோய். பாக்டீரியாவால் வரும் நோய்கள்: வாடல் நோய், இலைவெடிப்பு நோய், சொறி நோய்,வெப்பு நோய், மென் அழுகல் நோய், கேன்கர் நோய்.பூஞ்சையால் வரும் நோய்கள்: செவ்வழுகல் நோய், வெண்துரு நோய், கருத்துரு நோய், வெப்பு நோய்.
எந்த நோய் தாவரத்தை பாதித்திருக்கிறது என்பதை அறிந்த பின் மருத்துவம் செய்வதுதான் பலனளிக்கும். இப்படி நோயை அறிந்து கொள்வதில் கவனம் செலுத்தாமல் மருந்து தெளிப்பதால்தான் அதிகம் செலவாகிறது, மருந்தும் பலனளிக்காமல் போகிறது. நமக்கு எப்படி நோய் அறிதல் முக்கியமோ அதைவிட அதிக முக்கியத்துவத்தை தாவரங்களின் நோய் அறிதலுக்கு நாம் கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் தாவரங்களால் பேசமுடியாது.
பெரும்பாலான நேரங்களில் சத்து குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகளை நோய் என்று தவறாக எண்ணி மருந்து தெளிக்கிறோம். போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது.இலைகளில் இருக்கும் புள்ளிகள், நுனிக்கருகல், வாடல் போன்ற அறிகுறிகள் சத்துக் குறைபாட்டாலும் இருக்கலாம் நோய்களாலும் இருக்கலாம். இரண்டில் எது என்பதை அறிய அனுபவமிக்க விவசாயி, அரசு விவசாய அலுவலர்கள், தனியார் விவசாய ஆலோசகர்கள் போன்றவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
பெரும்பாலான நோய்களுக்கு எளிய மருந்துகளும், கட்டுப்பாட்டு முறைகளுமே நல்ல தீர்வாக அமைகின்றன. உதாரணமாக ஒருசில குறைபாடுகளும் நோய்களும், வெறும் தண்ணீரை நன்றாகத் தெளிப்பதனாலேயே சரியாகின்றன. ஒருசில பூச்சிகளின் முட்டைகள் வெறும் சுண்ணாம்புத் தண்ணீரை தெளிப்பதனால் அழிந்துவிடுகின்றன. சில பூச்சிகளை சர்க்கரைக் கரைசல் தெளித்து எறும்புகளை வரவேற்பதால் அழிக்கலாம்.
இவை எல்லாவற்றுக்கும் நோயின் மூலத்தையும், காரணத்தையும் அறிவது அவசியம். இந்த இடத்தில் மருந்து தெளிக்கும் முறை, தெளிக்கும் நேரம், எந்த தெளிப்பான் உபயோகப்படுத்துகிறோம் என்பதும் முக்கியமாக அமைகிறது.
வாகை மரத்தின் சிறப்புகள் என்ன? ஏன் இதை மரச்செக்கு என்று சொல்கிறார்கள்? - கேள்வியின் நாயகன், குனியமுத்தூர்.
வாகைமரத்தில் மரச்செக்கு செய்யப்படுவதால் இது மரச்செக்கு என்று வழங்கப்படுகிறது. வாகைமரம் எடை குறைவாக இருக்கும். ஆனால், பலமானதாகவும், உராய்வு குறைவாகவும், எந்த வாடையும் இல்லாமலும் இருக்கும். இதனாலேயே இது செக்கு செய்ய பலன்படுகிறது. பண்டைய காலத்தில் மன்னர்கள் வெற்றி பெற்று நாடு திரும்பும்போது வாகை மலரை அணிவது வழக்கம். இதிலிருந்துதான் ‘வாகை சூடுதல்’ என்ற சொலவடை வந்தது.
வாகை மரம் பல மருத்துவப்பலன்கள் கொண்டது. இதன் இலைகள், பூ, மரப்பட்டை, பூ மொக்கு, விதை அனைத்துமே விசேஷமான மருத்துவக் குணங்களை கொண்டுள்ளன. வாகை இலையை ஆடு, மாடுகளுக்கு தீவனமாக தரலாம். அதே இலையில் நாம் தேநீர் தயாரித்து குடிக்கலாம். வாகை இலையின் தேநீர் கண்களில் ஏற்படும் எல்லாவிதமான நோய்களுக்கும், குறிப்பாக கண் சிவத்தல், கண் எரிச்சல், மாலைக்கண் நோய் இவைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. இதன் பூக்கள் விஷ முறிவுக்கு பயன்படுகிறது.
வீட்டுத்தோட்டத்தில், ஓணான் நல்லதா கெட்டதா? - நந்தினி அமித், கோவை.
ஓணான் ஒருசில சமயங்களில் இலை மற்றும் பூக்களை குதறினாலும், செடிகளுக்குத் தீங்கு தரும் பூச்சிகளை பிடித்து தின்பதால் இவைகள் தோட்டத்துக்கு நன்மையே செய்கின்றன. அதுபோலவே சிலந்திகளும் பெரும் பயன் தரக்கூடியவை. அதனால் சிலந்திகளையும், ஓணானையும் ஓட்டாமல் இருப்பதே நல்லது.
சாக்கலேட் மாதிரியே மிகவும் சுவையுள்ள காரப்பழம் என்ற ஒன்று கிராமங்களில் கிடைப்பதாக ஒரு யூ டியூப் வீடியோ பார்த்தேன். அது என்ன பழம்? - தாமரைச்செல்வி, திருவாடனை.
அது காரப்பழம் இல்லை, காராப்பழம். சுவையாக இருக்கும். இது செங்காயாக இருக்கும்போது சிறிது துவர்ப்பும் இனிப்பும் உள்ளதாகவும்,நன்றாகப் பழுத்தபின் நல்ல இனிப்பாகவும் இருக்கும். நிறைய மருத்துவப்பலன்கள் நிறைந்தது. குறிப்பாக அடிக்கடி கொட்டாவி விடுபவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து. ஊளைச் சதையைக் குறைக்கும். இலையையும் காயையும் கஞ்சி வைக்கும் போது சேர்த்து உண்ணலாம். மூலத்துக்கும் இது சிறந்த மருந்து.
(வளரும்)
மன்னர் மன்னன்
|