இது ரஜினியின் பேட்ட!



ரசிகர்களின் உற்சாகம் ஹை டெசிபலில் துடிக்கிறது. காரணம் ‘பேட்ட’! ரஜினியின் 165வது படமாக இது உருவாவதும் ‘எந்திரன்’ ப்ளாக்பஸ்டரை கொடுத்த சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிப்பதும் ரசிகர்களின் மகிழ்ச்சிக்குக் காரணங்கள்.போதும் போதாததற்கு ‘பேட்ட’யை கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கு கிறார். ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ என ரவுண்டு கட்டி அடித்த இவர், அடிப்படையில் ரஜினி ரசிகர். இதை ஆரம்பக் காலம் முதல் தனது எல்லா பேட்டிகளிலும் தவறாமல் குறிப்பிட்டு வருகிறார்.

ஆக, ரஜினி படங்களைப் பார்த்து வளர்ந்த ஒரு ‘ரசிகர்’, இப்போது அவர் நடிக்கும் படத்தையே இயக்கு கிறார்! எனில், எப்படி ரஜினியைக் காண்பித்தால் திரையரங்கில் விசில் பறக்கும்... எந்த வசனங்களுக்கு கைதட்டல் அதிரும்... எப்படிப்பட்ட காட்சிகளுக்கு ஆரவாரம் செய்
வார்கள்... என்பதெல்லாம் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றாகவே தெரியும்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘பேட்ட’ மோஷன் போஸ்டர் இதற்கு ஒரு சோறு பதம்!அக்மார்க் ரஜினி. அதுவும் ரசிகர்கள் ஆராதிக்கும் ரஜினி. மெழுகு வர்த்தி ஸ்டாண்டை ஆயுதமாக ஏந்தியபடி ரஜினி நடந்து வரும் ஸ்டைல்... அவருக்கு மட்டுமே உரிய ஸ்பெஷல்.
அவரால் மட்டுமே திரையில் நிகழ்த்திக் காட்டக்கூடிய அதிசயம்! போதாதா? ‘பேட்ட’ படத்துக்கான எதிர்பார்ப்பு இரு கரைகளையும் தொட்டு ஓடும் தமிழக காவிரி நதியாகப் பாய்கிறது!பொதுவாகவே மூன்றெழுத்தில் பெயர் வைக்கப் பட்ட ரஜினி படங்கள் அனைத்தும் வசூலில் பாக்ஸ் ஆபீசை அதிரவைக்கும். ‘பில்லா’, ‘பாட்ஷா’ என நீளும் பட்டியலை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.  

இந்த சென்டிமென்ட்டை ‘பேட்ட’ கச்சிதமாகப் பூர்த்தி செய்திருக்கிறது. ‘பேட்ட’ என்றால் ஏரியா / குறிப்பிட்ட ஒரு பகுதி என்று பொருள். காலம் காலமாக தமிழ் மக்களின் நாடி நரம்புகளுடன் இரண்டறக் கலந்துவிட்ட சொல் இது. மழலையில் பேசத் தொடங்கும் குழந்தைகள் முதல் பேச்சு தடைப்பட்டுப் போன பெரியவர்கள் வரை சகலருக்கும் ‘பேட்ட’ என்றால் என்ன வென்று தெரியும். கோனார் நோட்ஸ் கொடுத்து பெயருக்கு விளக்கம் தரவேண்டிய அவசியமில்லை.

அப்படிப்பட்ட உயிர்ப்பான ‘பேட்ட’ சொல்லையே படத்துக்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். இதன் வழியாக திரைப்பட பாக்ஸ் ஆபீஸ் ரஜினியின் பேட்டை... தமிழகமே ரஜினியின் பேட்டை... இந்திய சினிமாவே ரஜினியின் பேட்டை... உலகத் தமிழர்களின் மனங்கள் எல்லாம் ரஜினியின் பேட்டை... என அர்த்தப்படுத்தலாம்!‘பேட்ட’ கேன்வாஸ் மிகப் பெரியது. சிம்லா, டார்ஜிலிங் பகுதிகளில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை, லக்னோ, வாரணாசி, சனபத்ரா... என கிளை விரிப்பதில் இருந்தே இதை உணரலாம்.

ஹைடெக் ஆண்ட்ராய்ட் போனாக ரஜினி என்ற மூன்றெழுத்து இருக்க... அதில் டவுன் லோட் செய்யப்படும் apps ஆக விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டவர்கள் அழகு சேர்க்கிறார்கள். இதுவும் போக முதல் முறையாக இப்படத்தின் வழியே தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார் இந்தி நடிகரான நவாசுதீன் சித்திக்.

‘‘ `தலைவர் 165’க்காக ஒத்திகை  செய்துகொண்டிருக்கிறேன். சூப்பர் ஸ்டாருடன் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது...’’  என தன் பங்குக்கு டுவிட்டரில் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் நவாசுதீன் சித்திக்.  ‘பேட்ட’ படத்துக்கு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவில்லை. என்றாலும் இவருக்கும் இப்படத்துக்கும் தொடர்பிருக்கிறது!

யெஸ். சென்னை செங்குன்றத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்குச் சொந்தமாக ஒய்.எம்.ஸ்டூடியோ இருக்கிறது. இந்த ஸ்டூடியோ ஆரம்பிக்கப்பட்டவுடன் இங்கு ஷூட் செய்யப்பட்ட முதல் படம், ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘டூ பாயிண்ட் ஜீரோ’. இதனைத் தொடர்ந்து அதே ஸ்டூடியோவில் ‘பேட்ட’யின் சில காட்சிகளை / போர்ஷன்ஸை எடுக்கப் போகிறார்கள்!

திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய... முதல் முறையாக ரஜினி படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்! தனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் ‘பேட்ட’ பாடல்கள் மற்றும் பிஜிஎம்முக்காக அனிருத் உழைத்து வருகிறார்.  

‘வந்துட்டேன்னு சொல்லு... அதே பழைய ‘பாட்ஷா’ ரஜினியா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...’ என ‘பேட்ட’ ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர்
கர்ஜிக்கிறது. படமும் அப்படியே மாஸ் ஆக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.தலைவா வா! இது (சினிமா) உங்க ‘பேட்ட’!