சென்னை கவின் கலைக் கல்லூரிதல புராணம்

எத்தனையோ முறை பூந்தமல்லி சாலையிலுள்ள சென்னை கவின்கலைக் கல்லூரியைக் கடந்திருப்போம். ஓடுகளால் வேயப்பட்ட ஐந்து கூரை வடிவிலான சிவப்பு நிறக் கட்டடங்கள் பார்ப்பதற்கு அத்தனை அழகாகக் காட்சியளிக்கும்.

ஆனால், அது 168 ஆண்டுகளுக்கு முன்பு எம்.டி பட்டம் பெற்ற ஒரு மருத்துவரால் தொடங்கப்பட்ட கலைப்பள்ளி என்பதை எத்தனை பேர் அறிந்திருப்போம்?! ஆம். 1850ம் வருடம், பிரிட்டிஷ் மிலிட்டரி சர்வீஸில் புகழ்பெற்று விளங்கிய மருத்துவர் அலெக்சாண்டர் ஹண்டர் என்பவரால் தொடங்கப்பட்ட கலைப் பள்ளியே இன்று கல்லூரியாக நடைபோடுகிறது. ஒரு சாதாரண தனியார் பள்ளி யான இதுவே இந்தியாவின் முதல் கலைப்பள்ளி! இதன்பிறகே, கல்கத்தா (கொல்கத்தா), பம்பாய் (மும்பை), லாகூர் உள்ளிட்ட இடங்களில் கலைப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆங்கிலேயர்கள் இந்தியா வந்தபோது ஓவியம் என்பது முகலாய பாணி, ராஜ்புட் பாணி, தஞ்சாவூர் பாணி எனப் பல்வேறு பாணிகளாக இருந்தது. மெட்ராஸில் அவர்களின் வணிகம் செழிக்கத் தொடங்கியதும் நிறைய நெசவாளர்களும், காலிகோ துணியில் சித்திரங்கள் தீட்டுவோரும் நகரைச் சுற்றிக் குடியேறினர். இந்தப் பணிகளுக்காக நிறைய பேரை ஆங்கிலேயர்கள் குடியேற்றமும் செய்தனர்.

அன்று துணியில் சித்திரம் வரையும் ஓவியர்களே இங்கே அதிகளவில் இருந்தனர். தவிர, பாரம்பரிய கலைஞர்கள் பிரிட்டிஷாருக்கும், அவர்களின் மாளிகைகளுக்கும் தேவையான ஃபர்னிச்சர், உலோக வேலைப்பாடுகளைச் செய்து வந்தனர். ‘‘பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்குப் பிறகு மெட்ராஸ் ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை பிரிட்டிஷார் விரும்பும் வகையில் மாற்றியமைக்கத் தொடங்கினார்கள்...’’ என ‘தேடலின் குரல்கள்: தமிழக ஓவிய சிற்ப இயக்கம்’ நூலில் குறிப்பிடுகிறார் கலை விமர்சகர் இந்திரன்.

இதன்பிறகு, மெட்ராஸ் வந்து குடியேறிய ஐரோப்பிய ஓவியர்கள், இந்தியர்களைத் தங்களது உதவியாளர்களாக வைத்துக் கொண்டதாகவும் சொல்கிறார். ‘‘இதன்பின்னர் பிரிட்டிஷ் ஓவியர்களின் வரைகலை முறைகளைத் தெரிந்து கொண்ட இந்திய ஓவியர்கள், பிரிட்டிஷ்காரர்களை மகிழ்விக்கும் தங்களது பாரம்பரிய ஓவிய முறையை விட்டுவிட்டு அவர்களது வரைகலை முறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். பசை கலந்து ஒளிபுகாத வண்ணங்கள் பயன்படுத்துவதை விடுத்து காகிதத்தில் பென்சிலின் மூலம் நேரிடையாகச் சித்திரங்கள் வரையத் தொடங்கினர்.

இந்தியர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை விளக்கும் காட்சிகளை உள்ளூர் ஓவியர்களும் தீட்டினர். கீழை நாடுகளின் வாழ்க்கை, தத்துவம் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் திடீரென்று ஐரோப்பாவில் பெருக்கெடுத்த இந்தக் காலகட்டத்தில் இத்தகைய படைப்புகளுக்கு நல்ல விலை கிடைக்கத் தொடங்கியது.

இதனால் உற்சாகப்படுத்தப்பட்ட மதராஸின் ஓவியர்கள் அளவில் பெரிதானதும், நீர்வண்ண ஓவிய முறையிலானதும், ஐரோப்பிய காகிதங்களைப் பயன்படுத்தியதும், நீளமான கை, கால்கள் கொண்ட உருவங்களைக் கொண்டதுமான ஓவியங்களைப் படைக்கத் தொடங்கினர்.

இந்தியாவிலேயே ‘கம்பெனி சித்திரங்கள்’ என்று கலை விமர்சகர்களால் அழைக்கப்படும் ஓவிய பாணியை முதன்முதலில் படைக்கத் தொடங்கியது மதராஸ் ராஜதானியிலிருந்த ஓவியர்கள்தான்!’’ என்கிறார் இந்திரன் இந்த நூலில். இப்படியான காலகட்டத்திலே ஓவியக் கலையை முறைப்படுத்த மருத்துவர் ஹண்டர் இந்தப் பள்ளியைத் தொடங்கினார். இது அன்று போஃபம் பிராட்வேயில் இருந்து செயல்பட்டது. 1852ம் வருடம் ஆசிரியர் பற்றாக்குறையால் இந்தப் பள்ளியை அரசுப் பொதுக் கல்வித் துறை எடுத்துக் கொண்டது.

பள்ளியின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க ஹண்டர்  முயற்சி மேற்கொண்டார். இதுகுறித்து லண்டனிலிருந்த ராயல் அகாடமி மற்றும் ஈஸ்ட் இந்தியா ஹவுஸ் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்தார். அதன்படி அரசு கலைப்பள்ளி என்பது அரசு தொழிற்துறை கலைகள் பள்ளி (Government School of Industrial Arts) என மாறியது. தவிர, கலை மற்றும் தொழில்சார்ந்த என இரண்டு துறைகளாகப் பிரிக்கப்பட்டன.

அதாவது ஒரு பிரிவில் கட்டடக்கலை, மட்பாண்டம் செய்தல், தாமிரத்தை செதுக்குதல், மரம் செதுக்குதல், உடற்கூறு வரைதல் உள்ளிட்ட படிப்புகளும்; மற்றொரு பிரிவில் இயந்திரக் கருவிகளை உருவாக்குதல், வடிகால் பொருட்கள் செய்தல், ஜன்னல் மற்றும் வராண்டாவிலுள்ள டைல்ஸ் போன்றவற்றில் அலங்கார வேலைப்பாடுகள் செய்தல் உள்ளிட்ட படிப்புகளும் கற்றுக் கொடுக்கப்பட்டன.

பள்ளியின் முழுப் பொறுப்பையும் எடுத்திருந்த ஹண்டர் 1855ல் புகைப்படக் கலையையும் ஒரு படிப்பாக சேர்க்க முடிவெடுத்தார். தெற்காசியாவின் முதல் போட்டோகிராபி துறை மெட்ராஸில் உருவாக்கப்பட்டது. இதன்வழியாக நீலகிரியிலுள்ள பழங்குடிகள், கோயில்கள், நினைவுச் சின்னங்கள் என மெட்ராஸ் மாகாணத்திலுள்ள முக்கியமானவற்றை பதிவுக்காகவும், காட்சிப்படுத்தவும் புகைப்படமெடுக்கச் செய்தார். அவரது இந்தப் பணி பல இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1860ம் வருடம் ஹண்டர் தொழிற்கலைப் பள்ளி குறித்து அரசுப் பொதுக் கல்வித்துறைக்கு அனுப்பிய மதிப்பாய்வு அறிக்கையில், ‘‘மிட்
ஃபோர்ட் என்பவர் தலைமையில் செங்கல், பைப், டைல்ஸ் உற்பத்தித் துறையை பூந்தமல்லி சாலையில் அமைத்துள்ளோம். அதற்குத் தேவையான இயந்திரங்களை ஏழாயிரம் ரூபாய் மதிப்பில் இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்துள்ளோம். ஐரோப்பியர்கள் உற்பத்திக்குப் பொறுப்
பாளர்களாகவும், என்னுடைய பள்ளியில் பயிற்சி எடுத்தவர்கள் உதவியாளர்களாகவும் இருக்கின்றனர்...’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியாக பூந்தமல்லி சாலையில் நான்கு ஏக்கரில் முற்றங்களுடனும், சாய்ந்த கூரைகளுடனும், நீண்டு வளைந்த ஜன்னல்களுடனும் பசுமையாக அமைக்கப்பட்ட வளாகம்தான் இன்றைய சென்னை கவின்கலைக் கல்லூரி. 1868ம் வருடம் வரை இந்தப் பள்ளியிலிருந்து 3 ஆயிரத்து ஐநூறு பேர் வெளியேறி இருந்தனர். இவர்களில் 2 ஆயிரம் பேர் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் ஆசிரியர்களாகச் சென்றனர்.
மற்றவர்கள், கல்கத்தா, ஜெய்ப்பூர், திருவிதாங்கூர், மைசூர், சிலோன் போன்ற இடங்களுக்கும் பயிற்றுநராகச் சென்றனர். இதில் சிலர் லக்னோ, சூரத், பூனா, ஆக்ரா, லாகூர், அசாம் போன்ற இடங்களில் புதிய பள்ளிகளை உருவாக்க உதவியாகவும் இருந்தனர்.

மெட்ராஸ் கலைப் பள்ளிக்கு பிரிட்டிஷ் கண்காணிப்பாளர்களாக ராபர்ட் சிஸ்ஹோல்மும், வில்லியம் ஹாடவேயும் இருந்து வந்தனர். இந்நேரம், பிரிட்டிஷ் கலை ஆசிரியரும், விமர்சகருமான இ.பி.ஹேவல் 1884ல் பள்ளி முதல்வராக நியமிக்கப்பட்டார். இவர், மரம் செதுக்குதல், தச்சுப் பணி, உலோகப் பணி போன்ற பிரிவுகளை அறிமுகப்படுத்தினார்.

‘‘நான் மெட்ராஸ் வந்ததும் முதலில் கைவினைப் பிரிவை பலப்படுத்த விரும்பியதால் அதை மூன்று துறைகளாகப் பிரித்து பயிற்றுவித்தேன்.
ராமநாதபுரத்திலிருந்து மரம்செதுக்கும் நிபுணர் ஒருவரும், கும்பகோணத்திலிருந்து கோயில் சிலைகள் செய்யும் ஒரு ஸ்தபதி யும், விசாகப்பட்டிணம் மாவட்டத்திலிருந்து ஒரு தங்க வேலை செய்பவரையும் கொண்டு வந்து மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தினேன்...’’ எனக் குறிப்பிடுகிறார் ஹேவல்.

இவர் இந்தியக் கலை மற்றும் கட்டடக் கலையை எப்படி உயிர்ப்பிக்க முடியும் என்பதை அழகுடன் விளக்கியுள்ளார்.
‘‘ஒவ்வொரு இந்தியரும் வீடோ அல்லது மாளிகையோ கட்டும்போது இந்தியக் கலையைக் கவுரவிக்கும் வகையில் சிறந்த இந்திய கட்டுமானர்களைக் கொண்டு பாரம்பரியத்தைச் சிறப்பிக்கும்படி கட்ட வேண்டும். இந்திய வரலாற்றையும், போதனைகளையும் பள்ளி சுவர்களிலும், நகராட்சிக் கட்டடங்களிலும் இந்திய ஓவியர்களைக் கொண்டு இந்திய வண்ணங்களால் தீட்ட வேண்டும். பணக்காரர்கள் ஐரோப்பிய ஓவியங்களைச் சேகரிக்காமல் இந்திய ஓவியர்களின் ஓவியங்களை வாங்க வேண்டும்..!’’ என்கிறார்.   

1896ம் வருடம் ஹேவல் கல்கத்தா பள்ளியின் முதல்வராக நியமிக்கப்பட்டதும், மெட்ராஸ் பள்ளி கலையிழந்து போனது. கல்கத்தாவில் இருந்த நவீன கலைப்போக்கின் முன்னோடி யான அபனீந்தரநாத் தாகூருடன் ஹேவல் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதன் தாக்கம் மெட்ராஸ் பள்ளிக்கும் பாய்ந்தது. 1929ல் அபனீந்தரநாத் தாகூரின் மாணவரான டி.பி.ராய் சவுத்ரி முதல் இந்திய முதல்வராக மெட்ராஸ் கலைப் பள்ளிக்கு நியமிக்கப்பட்டார். இவர்தான் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள உழைப்பாளர் சிலை, காந்தி சிலை ஆகியவற்றை வடிவமைத்தவர்.

இவர் வந்ததும் பிரிட்டிஷாருக்கு பயன்படும் வகையில் இருந்த கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியையும், ஓவிய ஆசிரியர்கள் பயிற்சியையும் குறைத்தார். அத்துடன் பயிற்சி அளிக்கும் நிறுவனம் என்பதை ஓவியர்களுக்கான பள்ளி என்று மாற்றினார். சுமார் முப்பது வருடங்கள் முதல்வராகப் பணியாற்றினார்.

1957ம் வருடம் இவர் ஓய்வு பெற்றதும் மெட்ராஸ் கலை மற்றும் கைவினைப் பள்ளிக்கு இவரது மாணவரான கே.சி.எஸ்.பணிக்கர் முதல்வராக வந்து சேர்ந்தார். 1961ம் வருடம் இவர் காலத்திலே இந்தப் பள்ளி கல்லூரியாக தரம் உயர்ந்தது. மெட்ராஸ் கலை இயக்கம் என்ற புதிய முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. அதாவது, மெட்ராஸ் கலைப் பாணி என்பதை உருவாக்கினர்.

பின்னர், கே.சி.எஸ்.பணிக்கர் ஓவியர்கள் ஓவியர்களாக இருந்து, சுதந்திரமாக தங்கள் படைப்புகளை உருவாக்க வேண்டுெமன தன் மாணவர்களுடன் இணைந்து ‘சோழமண்டல ஓவியக்கலைஞர்கள் கிராம’த்தைத் தோற்றுவித்தார். 1966ம் வருடம் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ஈஞ்சம்பாக்கத்தில் உருவான இந்தக் கிராமம் இன்றும் சிறப்புடன் இயங்கி வருகிறது. 2001ம் வருடம் இந்தக் கலை மற்றும் கைவினைக் கல்லூரி என்பது கவின்கலைக் கல்லூரி யாக மாற்றப்பட்டு இன்று வரலாற்றில் முத்திரை பதித்து வருகிறது.                             

ஒரு பார்வை...

* எஸ்.தனபால், ஆர்.கிருஷ்ணராவ், எல்.முனுசாமி, ஏ.பி.சந்தானராஜ், சி.ஜே.அந்தோணிதாஸ், கே.எம்.ஆதிமூலம், மணியம் செல்வன், டிராட்ஸ்கி மருது, ஆர்.எம்.பழனியப்பன், நடிகர் சிவகுமார் எனப் பல்வேறு ஆளுமைகள் இந்தக் கல்லூரியில் பயின்றவர்கள்.  

* இப்போது பி.எஃப்.ஏ. நான்கு வருட இளங்கலையில் இண்டஸ்ட்ரியல் டிசைன் இன் செராமிக், இண்டஸ்ட்ரியல் டிசைன் இன் டெக்ஸ்டைல், விஷுவல் கம்யூனிகேஷன் டிசைன், ஸ்கல்ப்ச்சர், பெயிண்டிங், பிரிண்ட் மேக்கிங் என ஆறு கோர்ஸ்களும், முதுகலையில் ஐந்து கோர்ஸ்களும் உள்ளன.
 
* இதில், சுமார் 540 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.

* தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது இந்தக் கல்லூரி.

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்

ராஜா