உள்ளங்கையில் விரியும் ஆபாசக் கடல்!



அதிரவைக்கும் மினி தொடர்

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான இந்தச் செய்தி எத்தனை பேரின் கவனத்தைக் கவர்ந்தது... எந்தளவுக்கு மனதில் பதிந்தது என்பது கேள்விக் குறி.ஆனால், இச்செய்திதான் இனிவரும் காலங்களுக்கான காலன்.குழப்பமாக இருக்கிறதா? விரிவாகவே பார்க்கலாம்.
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR), தாய் மற்றும் மகன் உறவை கொச்சைப்படுத்தும் அநாகரீகமான வீடியோக்களை அனுமதித்த விவகாரம் தொடர்பாக, யூடியூப் இந்தியாவின் துறை தலைவர் மீரா சாட் என்பவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது.

அதில், ‘‘யூடியூப் சேனலில் சமீபகாலமாக பரவிவரும் தாய் - மகன் உறவைக் கொச்சைப்படுத்தும் செயல்கள் கொண்ட வீடியோக்கள் கண்டிக்கத்தக்கவை. சமூகத்தில் இவை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீடியோக்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை தேவையாக உள்ளது. 
இப்படிப்பட்ட வீடியோக்களை தடை செய்வது அவசியம்.  இந்த வீடியோக்கள் 2012 போக்சோ சட்டத்துக்கு எதிரானவை. யூடியூப் நிறுவனம் உடனடியாக இதற்குத் தீர்வு காண வேண்டும். குற்றவாளிகள் சிறை செல்ல நேரிடும். குழந்தைகளை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கி சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடும் நபர்கள் சிறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சட்டப்பூர்வ காரணமின்றி இந்த உத்தரவுக்கு இணங்கத் தவறினால், சிவில் நடைமுறைச் சட்டம், 1908ன் ஆணை XVI இன் விதி 10 மற்றும் விதி 12 இல் வழங்கப்பட்டுள்ளபடி, விளைவுகளுக்கு நீங்கள் உட்படுத்தப்படுவீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்...’’ என எழுதியிருந்தது.இது ஒரு சோறு பதம் மட்டுமே. 

நிஜத்தில் யூடியூப் தளத்தில் கொட்டிக்கிடக்கும், கொட்டப்பட தயாராகும் வீடியோக்களில் 95 சதவிகிதத்துக்கும் மேல் ஆபாசம், வக்கிரம்... இன்னும் என்னவெல்லாம் சொற்கள் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் இட்டு நிரப்ப வேண்டிய அழுகல்.

உறவுகளை கொச்சைப்படுத்தும் வார்த்தைகளை சர்வசாதாரணமாக இன்று யூடியூப் தளத்தில் பேசுபவர்கள் பயன்படுத்துகிறார்கள். ‘நடிகர், நடிகைகளின் அந்தரங்கம்’ என்ற பெயரில் நடைபெறாத ஒன்றை அல்லது நடந்த ஒன்றின் கற்பனை கலந்த விரிவாக்கம் -ஒரு கதையாக கோர்வையுடன் அலசப்படுகின்றன.

இதில் முன்னணியில் இருப்பவர் 70 வயதைக் கடந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற அடைமொழியுடன் வலம் வருபவர்.இவரை அழைத்து நடிகர் நடிகைகளின் ‘பாலியல் வாழ்க்கையை’ அலசச் சொல்கிறார்கள். இதற்காக இவரை அழைக்கும் யூடியூப் தளம் ஒரு காணொளிக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்குவதாக சொல்கிறார்கள்.

கவனியுங்கள். எவ்வித ஆதாரமும் இல்லாமல் வாய்க்கு வந்ததை ஒரு அரைமணி நேரம் அல்லது 45 நிமிடங்கள் இவர் கேமராவைப் பார்த்து அடித்து விடுவதற்காக இவ்வளவு தொகை இவருக்கு வழங்கப்படுகிறது எனில், அந்த வீடியோவை ஒளிபரப்பும் யூடியூப் சேனல், தொடர்புள்ள அக்காணொளி வழியாக எவ்வளவு சம்பாதிக்கும்..?

கற்பனைக்கு எட்டாத வகையில் இந்த லாபம் இருப்பதால்தான் ஆபாசத்தை சந்தைப்படுத்த பெரும்பாலான யூடியூப் சேனல்கள் போட்டி போடுகின்றன.ஓர் இளம் பெண்ணின் மரணம்... கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்னைகள்... வக்கிரம் பிடித்தவர்களால் வல்லுறவுக்கு ஆளாகும் சிறுமி... என செய்திகளில் அடிபடும் விஷயங்கள் அனைத்தையும் ‘உண்மை அறியும் குழு’ என்ற முகமூடியுடன் யூடியூப் தளங்கள் அலசத் தொடங்கிவிடுகின்றன.

இறந்த இளம் பெண்ணுக்கு பல காதல்கள் இருந்தனவா... கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பா... மனைவிக்கு திருமணத்தைக் கடந்த உறவு பல ஆண்களுடன் இருந்ததா... சிறுமியை எந்தெந்த இடங்களில் காமுகர்கள் தொட்டார்கள்... எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள்... என்றெல்லாம் கேள்விகளை விலாவாரியாக எழுப்பி, வீடியோவை பார்ப்பவர் / கேட்பவர் மனதில் அருவருப்பான சித்திரங்களை உருவாக்கி அதற்கான பதிலை இறுதி வரை சொல்லாமல் 30 நிமிடங்களுக்கு ‘ஒரு கதையை’ உருவாக்குகிறார்கள்.

நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் நான்கு வீடியோக்கள் வரை இப்படி வெளியிட்டால்தான் தொடர்புள்ள யூடியூப் சேனல் டிரெண்டிங்கில் இருக்கும். வருமானம் கொழிக்கும். அதனால்தான் ஆபாசத்துக்குள் புதைந்திருக்கும் ஒவ்வொரு மைக்ரோவையும் பூதக் கண்ணாடி வைத்து IMAX திரையில் பல நிமிடங்களுக்கு ஒளிபரப்புகிறார்கள்.

யூடியூப் வழியாக வருமானமா?

ஆம். ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை ஒவ்வொரு ஆபாச காணொளி வழியாகவும் ஈட்டுகிறார்கள். இதைப் புரிந்து கொள்ள யூடியூப் எப்படி உருவானது என்பதை அறிய வேண்டியது அவசியம். 

ஏனெனில் ஆபாசத்தில் இருந்துதான் யூடியூப் என்னும் தொழில்நுட்பமே பிறந்தது!அது 2004ம் வருடம். அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகாணம்.மூன்று நண்பர்கள் அங்குள்ள ஒரு கார் காரேஜில் அமர்ந்தபடி இணையத்தில் ஒரு வீடியோவைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தேடிய அந்த வீடியோவில் ஹாலிவுட் நடிகை ஜேனட் ஜாக்சன் (Janet Jackson) தோன்றியிருந்தார். பிரபல நடிகை, பாடகி, நடனக்கலைஞர். அவர்கள் தேடியது ‘சூப்பர் பவுல் ஹாஃப்டைம்’ என்ற ஸ்டேஜ் ஷோவில் ஜேனட் ஜாக்சன் பங்கேற்ற நிகழ்வு தொடர்பாக. 

உண்மையில் அது ஒரு ‘கிளுகிளுப்பான’ சம்பவம். குறிப்பிட்ட அந்த வீடியோவில் ஜேனட் ஜாக்சன் தன் மார்பகத்தை ஒரு நகையால் மூடியிருந்தார். அதை உடன் நடித்திருந்த ஜஸ்டின் டிம்பர்லேக் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.

ஒரு விநாடிக்கும் குறைவான நேரமே அந்தக் காட்சி தெரிந்திருந்தது. இதை ‘Wardrobe Malfunction’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். ஸ்டேஜில் நடிகைகளின் ஆடை கிழிந்து போவது, அவிழ்ந்து விழுவது, ஆபாசமாகத் தெரிவதெல்லாம் இந்த ரகம். 

அப்போது இந்தச் சம்பவத்தை ‘Nipplegate’, ‘Janetgate’ என்றெல்லாம் ஊடகங்கள் குறிப்பிட்டன; கூடவே, அநாகரிகமான செயல் என்ற கண்டனங்களும் எழுந்தன. அவை எல்லாம் இங்கு தேவையில்லை. இந்த மூவர் விஷயத்துக்கு வருவோம்.

இந்த மூன்று நண்பர்கள் எவ்வளவு தேடியும் குறிப்பிட்ட அந்த வீடியோ கிடைக்கவில்லை. அவர்களுக்கு ஒன்று புரிந்தது. இணையத்தில் குறிப்பிட்ட ஒரு வீடியோவைத் தேடினால் கிடைக்காது. பார்க்க முடியாது. 

ஏனெனில் வீடியோக்களைப் பதிவுசெய்ய ஒரு தளம் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். மூவரும் என்ன செய்தார்கள் என்பதுதான்வரலாறு. இந்த இடத்தில் இந்த மூவரில் மூளையாகச் செயல்பட்ட ஜாவத் கரீம் (Jawed Kareem) பற்றி ஒரு சிறு குறிப்பு இங்கே அவசியமாகிறது.

1979, அக்டோபர் 28ல் கிழக்கு ஜெர்மனியின் மெர்ஸ்பர்க் (Merseburg) நகரில் பிறந்தவர் ஜாவத் கரீம். அம்மா ஜெர்மானியர். அப்பா பங்களாதேஷ்காரர். ஐந்து வயது இருக்கும்போது கரீமின் குடும்பம் ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்தது. பிறகு அங்கிருந்து அமெரிக்காவின் மின்னசோட்டாவுக்கு குடிபோனது. கரீம் மின்னசோட்டாவில் இருக்கும் ஹைஸ்கூலில் படித்தார். 

பிறகு, இல்லினாய்ஸ் யூனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றார். அங்கேதான் அவருக்கு இரண்டு நண்பர்கள் அறிமுகமானார்கள். சாட் ஹர்லே (Chad Hurley), ஸ்டீவ் சென் (Steve Chen).  சரியா? விஷயத்துக்கு வருவோம்.

அந்த கேரேஜில் உட்கார்ந்து மூன்று பேரும் யோசித்து ஒரு வெப்சைட்டை உருவாக்கினார்கள். அதாவது ஜேனட் ஜாக்சனின் மார்பகத்தைப் பார்ப்பதற்காக ஒரு தளத்தை ஏற்படுத்தினார்கள்.
அதற்குப் பெயர் யூடியூப் (YouTube). 2005ம் ஆண்டு அந்த இணையதளம் உலகுக்கு அறிமுகமானது. ‘You’ என்றால் ‘நீங்கள்’ என அர்த்தம். அப்படியானால் ‘Tube’?

அது அக்காலகட்டத்தில் தொலைக்காட்சி உலகில் பார்வையாளர்கள் தொடர்வதற்காகப் புழக்கத்தில் இருந்த ஒரு வார்த்தை. இரண்டையும் சேர்த்து ‘YouTube’ எனப் பெயர் வைத்தார்கள்.
இந்த இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் தங்களின் வீடியோக்களைப் பதியலாம். 

படத்தின் டிரெய்லர், சமையலறைக் குறிப்புகள், பாடல், நடனம், தொலைக்காட்சி லைவ் ஷோக்களின் தொகுப்பு, பிரபல திரைப்படங்களின் முக்கியமான காட்சிகள், முழுத் திரைப்படங்கள்... எதை வேண்டுமானாலும் பதிவுசெய்யலாம்.

அவ்வளவுதான். கிறுகிறுவெனப் பிரபலமானது யூடியூப். ஒரே வருடம். கூகுள் நிறுவனம் யூடியூபை ஆச்சர்யமாகப் பார்த்தது. வாங்கியே ஆகவேண்டும் என முடிவெடுத்தது.
2006ம் ஆண்டு, கூகுள் நிறுவனம் யூடியூபை 1.65 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. 

இணையதள வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு. ஒரு டெக் கம்பெனி, ஒரு சோஷியல் மீடியா தளத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய நிகழ்வு. ஆனால், கூகுள் ஆன்லைன் வீடியோ தளத்தில் அழுத்தமாகக் கால்பதிக்க நடந்த நிகழ்வு.

விலைக்கு வாங்கிவிட்டாலும், யூடியூபின் நிர்வாகத்துக்குச் சுதந்திரம் கொடுத்தது கூகுள். ‘உங்கள் நிர்வாகத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். நீங்கள் யூடியூபில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்...’ இந்த உத்தரவாதம்தான் நாம் ஒவ்வொரு நாளும் யூடியூபைப் பார்க்கக் காரணம். யூடியூப்... இன்றைக்குத் தவிர்க்க முடியாதது. 

செய்திகள் தொடங்கி எம்.கே.தியாகராஜ பாகவதர் படங்கள் வரை அதில் கிடைக்கும். இந்தத் தளம் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் லட்சக்கணக்கான கோடிகளில் சம்பாதித்தது இருக்கட்டும்; அவர்கள் நமக்குக் கொடுத்துவிட்டுப்போன கொடை?

உண்மையில் அபரிமிதமானது. ஆனால், இன்று அதுதான் சமூகத்துக்கு ஆபத்தாக உருவெடுத்திருக்கிறது.ஒரு கிளுகிளுப்புக் காட்சியை... ஹாலிவுட் நடிகையின் வெற்று மார்பகத்தை... ஒரேயொரு நொடி படம் பிடிக்கப்பட்டதை நினைத்த பொழுதெல்லாம் கண்டு ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட தளம் -இன்று அந்தந்த விநாடி ஆபாசத்தை எக்காலத்திலும் கண்டு ரசிப்பதற்கான சாதனமாக மாறியிருக்கிறது.

ஆம். இன்று உலகம் முழுக்க யூடியூப் தளம் கொடிகட்டிப் பறக்கிறது. 2023ம் ஆண்டு இறுதி வரை 2.3 பில்லியன் (230 கோடி!) பயனர்கள் யூடியூப் தளத்தை பார்வையிடுகிறார்கள். 52 சதவிகிதத்தினர் மாதத்துக்கு ஒருமுறையாவது யூடியூப் காணொளிகளைப் பார்க்கிறார்கள். யூடியூப் வழியாக கூகுளுக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் 29.3 பில்லியன் டாலர்கள்!  (ரூ.2,93,000 கோடி)! அதாவது யூடியூப் தளத்தை கூகுள் வாங்கிய தொகையை விட 11 மடங்கு அதிகம்.

ஆண்டுதோறும் இந்த லாபம் அதிகரித்து வருகிறது என்பதுதான் ஹைலைட். மட்டுமல்ல, கூகுள் குழுமத்தின் மொத்த ஆண்டு வருமானத்தில் 15 சதவிகிதம் யூடியூப் வழியாக மட்டுமே கிடைக்கிறது!அடிக்கோடிட்டு வலியுறுத்த வேண்டிய விஷயம்... உலகிலுள்ள முன்னணி ஓடிடி தளங்களை விட யூடியூப் தளத்தை பார்க்கும் பார்வையாளர்கள் பல மடங்கு அதிகம் என்பதுதான்.

யெஸ். இணையத்தில் புழங்கும் ஒவ்வொரு பிரபஞ்ச மனிதனும் குறைந்தது நாள்தோறும் ஒரு மணிநேரமாவது யூடியூப் வீடியோக்களைப் பார்க்கிறான்.

2023ம் ஆண்டு கணக்குப்படி சராசரியாக ஒவ்வொரு நிமிடத்துக்கும் 600 மணிநேர வீடியோ கன்டென்டுகள் யூடியூப் தளத்தில் பதிவேற்றப்படுகின்றன. இதில் 550 மணிநேர வீடியோக்கள் எதைக் குறித்தவை என்பதை சொல்ல வேண்டியதே இல்லை. இந்த டேட்டாக்கள் அனைத்தும் உணர்த்துவது ஒன்றைத்தான்.யூடியூப்பின் கச்சாப் பொருளாக இருப்பது ஒன்றே ஒன்றுதான்.அது, ஆபாசம்!

(தொடரும்)

(தனிப்பட்ட யூடியூப் தளத்தை விமர்சிப்பது நோக்கமல்ல. அதில் பதிவேற்றப்படும் வீடியோக்களில் இடம்பெற்றிருக்கும் content சார்ந்த விமர்சனமே இந்த மினி தொடர்)

கே.என்.சிவராமன்