டுமீல்...



அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுதான் கடந்த சில நாட்களாக டாக் ஆஃப் த வர்ல்ட்.உண்மையில் அமெரிக்க ஜனாதிபதிக்கு கொடுக்கப்படும் பாதுகாப்புக்கு சற்றும் குறைவில்லாமல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் வழங்கப்படும். 
அந்த வகையில் பட்லர் நகரில் டிரம்ப் பொதுக்கூட்டத்துக்கு அருகே இருந்த கட்டடங்களின் உச்சிகள் அனைத்தையும் காவல்துறை பரிசோதனை செய்தது. டிரம்ப் பேசிய பொதுக்கூட்டத்துக்கு அருகே இருந்த ஒரு கட்டடத்தின் உச்சியில் இரு கரும்பூனை ஸ்னைப்பர் வீரர்கள் தயாராக பாதுகாப்புக்கு நின்றிருந்தார்கள.

பொதுக்கூட்டத்துக்கு வரும் அனைவரும் மாக்னடிக் கருவி உதவியுடன் ஸ்கேன் செய்யப் பட்டே உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். திறந்த வெளி பொதுக்கூட்டம் நடக்கையில், கொலையாளி அருகே இருந்த வயல்வெளியில் பதுங்கி இருந்தான். கூட்டம் துவங்கி, டிரம்ப் பேச ஆரம்பித்தவுடன் கூட்டத்தின் கவனம் முழுக்க அங்கே திரும்பியது.கொலையாளி 20 வயது வாலிபன். பெயர் தாமஸ் மேத்யூ க்ரூக். ராணுவ உடை, வேட்டைக்காரர் உடையை அணிந்து மனநலம் பாதிக்கப்பட்டவனைப் போல் பள்ளிக்கு வருவானாம்.  

வயலில் பதுங்கி இருந்த தாமஸ் ஓடிவந்து கட்டடத்தின் ஜன்னல், சுவரைப் பிடித்து தொற்றி மேலே ஏறினான். கட்டடத்துக்குள் காவல்துறை இருக்கலாம் என்பதால் படிகளை அவன் பயன்படுத்தவில்லை. 

கூட்டத்தில் இருந்த சிலர் அவனைப் பார்த்து சத்தமிட்டார்கள்.உடனே காவல்துறை அதிகாரி ஒருவர் மொட்டைமாடிக்கு விரைந்தார். தாமஸ் அதற்குள் ஏ.ஆர் 15 ரைபிளை எடுத்து சுடுவதற்கு செட் செய்துவிட்டான். காவல்துறை அதிகாரி மேலே சென்றதும், துப்பாக்கியை அவரை நோக்கித் திருப்பினான். அதிகாரி பயந்து மேலும் ஆட்களை அழைத்துவர கீழே விரைந்தார்.

இது மிகப்பெரும் செக்யூரிட்டி குறைபாடாகக் கருதப்படுகிறது. அதிகாரி அவனுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தாலே இன்னொரு கட்டடத்தின் உச்சியில் இருந்த ஸ்னைப்பர் டீம் உஷாராகி கொலையாளியை சுட்டு வீழ்த்தி இருக்கும்.அதிகாரி அழைத்து வந்த காவல்துறையினர் கட்டடத்தை நோக்கி விரைய... 150 மீட்டர் தொலைவில் பேசிக் கொண்டிருந்த டிரம்ப்பை நோக்கி தாமஸ் குறி வைக்கிறான். ஏதுவாக அவரது தலையில் சிவப்புத் தொப்பி. அதைக் குறிவைத்து தாமஸ் சுடுகிறான். குறி தவறுகிறது.

டிரம்ப்பின் தலையருகே சென்ற புல்லட் கேமராவில் பதிவானது.டிரம்ப் சற்று குழம்ப, அடுத்த புல்லட்டை தாமஸ் ஏவுகிறான். இது டிரம்பின் காதைக் கிழிக்கிறது. அவர் அதிர்ச்சியடைந்து காதைப் பிடிக்க, கையில் ரத்தம் கொட்டுகிறது. இதற்குள் மூன்றாவது புல்லட்டை தாமஸ் ஏவியிருந்தான். அதுவும் மிஸ் ஆகிறது.

டிரம்ப் உடனே இது கொலை முயற்சி என சுதாரித்து கீழே விழ... கரும்பூனைப் படை மேற்கொண்டு குண்டு விழாமல் அரண் அமைத்தார்கள். இதன் பிறகு மேலும் ஐந்து குண்டுகளை தாமஸ் சுடுகிறான். இதில் டிரம்ப்பின் பின்னே அமர்ந்திருந்த ஒருவர் பலியானார். 

இருவர் படுகாயம். இவை அனைத்தும் 42 நொடிகளில் நடக்கின்றன
அதிரடிப்படை ஸ்னைப்பர் வீரர் ஒருவர் தாமஸ் இருந்த கட்டடத்தின் உச்சியை நோக்கி சுட்டு தாமஸின் தலையை சிதறடித்தார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டிரம்ப் சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். உண்மையில் தனிமனிதசுதந்திரம் என்ற பெயரில் மிக எளிதாக அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய ஆயுதங்கள் பற்றி இப்போது நாம் பேசியாக வேண்டும். பள்ளி மாணவனுக்குத் துப்பாக்கிகள் கிடைத்து அவன் தனது ஆசிரியர்களையும் சக நண்பர்களையும் சுட்டு வீழ்த்துவது எல்லாம் இப்படி நடப்பதுதான்.

தற்போது டிரம்ப்பை சுட்டு இருப்பதும் இருபது வயது இளைஞன்தான். நவம்பரில் நடக்கவிருக்கும் தேர்தலில்தான் அவன் தன் முதல் வாக்கையே செலுத்தவிருந்தான். ஆயுதங்கள் யாருக்குக் கிடைக்கின்றன என்பதைக் குறித்த போதிய கண்காணிப்பு அமெரிக்காவில் இல்லை. ஏனெனில் அங்கே அதைச் சுற்றி மிகப்பெரிய மாஃபியா வலைப்பின்னல் உள்ளது. இதைக் குறித்து விரிவாக அரசு ஆராய வேண்டும். செய்யுமா என்றுதான் தெரியவில்லை.

அமெரிக்காவில் இருந்து ராஜ்