வெள்ளிப் பனிமலையின் மீதுலாவி...



அங்கிருந்த பலரும் என் கண்ணாடியைக் கவர்ந்து சென்ற குரங்கும், அதை வாங்கி வருகிறேன் என்று பிரசாதப் பாக்கெட்டுடன் சென்ற சமூக சேவகரும்  சென்ற திசையைப் பார்த்தபடி திக் திக்கென்று காத்திருந்தோம். அவர் சிரித்தபடி என் கண்ணாடியுடன் வந்தார். 
எல்லோரும் கைத்தட்டாத குறை. அவருக்கு நன்றி சொல்லலாம் என்று நிமிர்ந்தால் அவரைக் காணோம்!அவர் ‘ஆஞ்சநேயரே அனுப்பி வைத்த தூதராகத்தான் இருக்கும்’ என்றாள் என் மனைவி. ‘ஆஞ்சநேயரே ஒரு தூதர்தானே! இதேபோல இன்னொரு கண்ணாடி வேட்டைக்காக அவர் சென்றிருக்கலாம்’ என்றேன் நான்.

பொதுவாக குரங்குகள் வாழைப்பழம், தேங்காய் (இந்த ஜெனரேஷன் குரங்குகள் பாப்கார்ன், ஐஸ்க்ரீம்கூட!) இதெல்லாம்தான் நம் கையிலிருந்து பறித்துச் செல்லும். அதென்ன கண்ணாடியைக் கழற்றும் கெட்ட பழக்கம்?

இந்தக் குரங்குகளுக்கு இந்தக் கடைக்காரர்களே விற்பனைக்காக இப்படி ஒரு பயிற்சி கொடுத்து வைத்திருப்பார்களோ என்று என் மனதில் தோன்றிய கிரிமினல் சந்தேகத்தை வெளியே சொன்னால் தெய்வ குற்றம் என்று என் மனைவி திட்டலாம் என்பதால் உள்ளேயே விழுங்கிவிட்டேன்.
விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் எங்கும் அதிகம். அதன் விளைவாக இமாச்சல் பிரதேசத்தில் எங்கு சென்றாலும் சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து பழக்கூழ் ஆகிவிடும். அதாங்க... டிராஃபிக் ஜாம்!

மணாலி நகரத்தின் அவுட்டரிலிருந்து நகரின் உள்ளே ஏழு நிமிடங்களில் சாதாரணமாக செல்ல வேன்டிய தூரத்திற்கு ஊர்ந்து ஊர்ந்து செல்ல எழுபது நிமிடங்கள் ஆனதால் அன்றைய தினமே போக நினைத்த இடங்களுக்கு போக இயலாமல் இரவு பத்து மணிக்கு ஹோட்டல் அறைக்குச் சென்று சேரவே அப்பாடா என்றாகிவிட்டது. 

அங்கே ஒரு புதிய சிக்கல். மதியம் 12 மணி முதல் நாங்கள் அறை புக் செய்து இணையம் வழியாக பணமும் கட்டிவிட்டோம். தாமதமாக செக் இன் செய்கிறோம் என்று தகவல் தர மறந்துவிட்டோம். அவர்களாவது போன் செய்து கேட்டிருக்க வேண்டும். தாமதமானதால் நாங்கள் வர மாட்டோம் என்று கருதி எங்கள் பெயரில் புக் செய்த அறைகளை வேறு நபர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள்.

அதெப்படி கொடுக்கலாம் என்று ஒருமித்த குரலில் கேள்வி கேட்ட பிறகு அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு வேறு மூன்று சுமார் அறைகள் கொடுத்தார்கள்.மறுநாள் முழுக்க மணாலியில் பல வீர சாகச விளையாட்டுகளில் ஈடுபடத்  திட்டமிட்டுப் புறப்பட்டோம்.  மணாலியில் பாயும் ஆற்றின் பெயர் பியாஸ் (BEAS). இமாலயாவில் பனிச் சிகரங்கள் உருகுவதால் உருவாகும் ஆறான இதில்தான் ரிவர் ராஃப்ட்டிங் எனப்படும் படகுப் பயண சாகச விளையாட்டுகள் நிகழ்கின்றன.

ரப்பர் படகுகளில் (பொதுவாக ஒரு படகிற்கு அதிகபட்சம் ஐந்து பேர்) நதியின் ஓட்டத்திற்குத் தகுந்தபடி பயணம் செய்வதற்கான பகுதி ஊருக்கு பல கிமீ தள்ளி இருக்கிறது.

ஆனால், அதற்கு ஊர் முழுதும் திரும்பின திசையெல்லாம் பெட்டிக் கடைகள் போல குட்டிக் குட்டி புக்கிங் கவுண்ட்டர்கள் போட்டிருக்கிறார்கள்.பல வாட்டர் தீம் பார்க்குகளில் நம் உடைக்கு மேல் தண்ணீர் புகாத சிறப்பு உடை அணிந்து இப்படியான ரப்பர் படகுகளில் வளைந்து வளைந்து நீரில் பயணம் செய்யும் வசதி செய்திருப்பார்கள்.

ஆனால், அங்கே படகுகள் செல்லும் பாதை திட்டமிட்டு அமைக்கப்பட்டவை. இங்கே ஆற்றின் ஓட்டத்திற்குத் தகுந்தபடி செல்லும் படகு இறக்கத்தில் சறுக்கும். ஏற்றத்தில் குதிக்கும். தண்ணீர் முழுக்க போட்டுக்குள் வந்து நம்மை முழுமையாக நனைத்துவிட்டு வடியும். ஒரு கயிறைப் பிடித்துக்கொண்டு பயணித்து அந்த த்ரில்லை அனுபவிக்க வேண்டும். நாங்கள் பத்து பேர் என்பதால் இரண்டு போட்டுகள் எடுத்துக்கொண்டோம். 

25 நிமிடங்கள் பயணிக்க ஒரு படகுக்கு பத்தாயிரம் கேட்டார்கள். எங்கள் வாகன ஓட்டுனர்கள் இங்கெல்லாம் ஒரே கட்டணமெல்லாம் கிடையாது, நன்றாக பேரம் பேசலாம் என்று சொன்னதால் நாங்கள் ஐந்தாயிரத்தில் துவங்கினோம். கடைசியில் படகுக்கு ஏழாயிரத்து ஐநூறு என்று முடிவானது.

ஒரு படகுக்கு ஒரு கைடு வருவார். அவர் ஹெல்மெட்டில் கட்டிய துக்கிளியூண்டு கேமிரா மூலம் பயணத்தில் படம் எடுக்க, வீடியோ எடுத்துக்கொடுக்க தனிக் கட்டணம்.  சிறப்பு உடைகள் அணிந்து, அதற்கு மேல் பாதுகாப்பு கோட் அணிந்து, தலையில் ஹெல்மெட்டும் அணிந்து தயாரானபோது என் மனைவிக்கு கடைசி நிமிடத்தில் பயம் வந்துவிட்டது. சின்ன வயதிலிருந்தே அவருக்கு இந்த மாதிரியான விஷயங்களில் பயம் உண்டு.

சாமி கும்பிடும்போது நின்ற இடத்தில் ஒன்பது முறை சுற்றினாலே மயக்கம் வரும். திருமணமான புதிதில் தஞ்சாவூரில் ஒரு பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றிருந்த நான் வற்புறுத்தி ரங்க ராட்டினத்தில் என்னுடன் அமரவைத்துவிட்டேன். ராட்டினம் சுற்றத் துவங்கியதும் உச்சக் குரலில் அலறினார். ‘நிறுத்தச் சொல்லுங்க, நிறுத்தச் சொல்லுங்க’ என்று ஒரே கத்தல்.

நான் எப்படி நடுவில் கத்தி நிறுத்தச் சொல்ல முடியும்? கத்தினாலும் கேட்காது. அப்படியே மயங்கி என்மீது சாய்ந்துவிட... ராட்டினம் நின்றதும் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி ‘ஸாரி’ சொன்னேன்.

அன்று முதல் எந்த தீம் பார்க் போனாலும் நான் வற்புறுத்துவதில்லை. குழந்தைகள் பயணிக்கும் ரயில், ரிஸ்க் இல்லாத சிம்பிளான ரைடுகள் மட்டுமே வருவார். அப்படிப்பட்டவரை மகளும், மருமகனும் வற்புறுத்தி படகில் ஏறவைத்தபோதே எனக்கு பக்கென்று இருந்தது. நடுக்கத்தை மறைத்துக்கொண்டு ஏறிவிட்டார்.

படகு புறப்படும் முன்பு அந்த கைடு ‘யார் எந்தக் கயிறைப் பிடித்துக் கொள்ள வேண்டும், படகின் விளிம்பில் எப்படி அமரவேண்டும், பெரிய அலைகள் படகுக்குள் அடிக்கும்போது ‘டவுன்’ என்றால் படகுக்குள் குனிந்து உட்கார்ந்துவிட வேண்டும், ‘அப்’ என்றால் மீண்டும் பழைய பொசிஷனில் எழுந்து அமர்ந்துகொள்ள் வேண்டும்’ என்று குறிப்புகள் சொன்னபோதே என் மனைவிக்கு வெளிப்படையாகவே கைகளில், உதடுகளில் நடுக்கம் துவங்கியது. அந்த கைடு வேண்டுமென்றே கிண்டலாக ‘எல்லோருக்கும் நீச்சல் தெரியுமில்லையா’ என்று வேறு கேட்டு வைத்தார்.

படகு புறப்பட்டு தண்ணீரின் போக்குக்கேற்ப துள்ளலுடன் சென்றபோது நன்றாகத்தான் இருந்தது. ஐந்து நிமிடத்தில் முதல் முறையாக ‘டவுன்’ உத்தரவு வர... பெரிய அலை படகுக்குள் பாய்ந்து எல்லோரையும் நனைத்துவிட்டு வடிய... ‘ப்ளீஸ்... என்னை இறக்கிவிட்டுவிடுங்கள்’ என்று என் மனைவி கத்திவிட்டார். கைடு ஒரு தடவைக்கு இரண்டு தடவை உறுதிசெய்துகொண்டு 25 நிமிடத்திற்குப் பதிலாக பத்து நிமிடத்தில் முடியுமிடத்தில் கரை ஒதுங்க... மனைவிக்கு கம்பெனி கொடுத்து நானும் அங்கு இறங்கிவிட்டேன்.

மற்றவர்கள் முழுமையாக பயணம் செய்துவிட்டு வந்தார்கள். அங்கு அப்போது சொல்லாத ஒரு விஷயத்தை இப்போது சொல்கிறேன். பாதியில் இறங்கிக்கொண்டது எனக்கும் ஆறுதலாகத்தான் இருந்தது! அடுத்ததுதான் ஆபத்து நிறைந்த பாரா கிளைடிங் என்கிற விளையாட்டு! விரிந்த பலூனில் உயரமான பிரதேசத்தில் கொஞ்ச தூரம் ஓடி பள்ளத்தாக்கில் குதித்துப் பறக்க வேண்டும்.

ஒரு நபருக்கு ரூபாய் மூவாயிரம். முப்பது கிலோ எடைக்குக் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. இதயத்தில் பிரச்னை உள்ளவர்களுக்கும் நோ என்ட்ரி.

தவிர... ‘எது நடந்தாலும் நாங்களே பொறுப்பு’ என்று தனித்தனியாக பொடி எழுத்து ஃபாரத்தில் கையெழுத்து வேறு வாங்குகிறார்கள். நானும் என் மனைவியும் இந்த சாகசத்தில் பங்கேற்கவில்லை என்பது நான் சொல்லாமலேயே தெரிந்திருக்கும்.என் மகள், மருமகன் மற்றும் ஆதோனி ஜோடி என்று நான்கு பேரையும் விசேஷமான ஜீப்பில் ஏற்றிக்கொண்டு ஒரு சிகரத்திற்கு சென்றார்கள். மற்றவர்கள் அவர்கள் பறப்பதைப் பார்க்க முடியாது.  

ஒரு மணி நேரத்தில் திரும்ப வேண்டிய அவர்கள் மிக மிகத் தாமதமாகத் திரும்பியபோது என் மகளின் முகம் வெளிறிப் போயிருந்தது. ‘நாங்கள் பெண்கள் இருவரும் ஆறாயிரம் கட்டணத் தொகை திரும்பக் கிடைக்காது என்று அவர்கள் சொன்னபோதும், பரவாயில்லை, இந்த பாரா கிளைடிங் வேண்டாம் என்று முடிவு செய்தோம்’ என்றாள். ‘ஏன்’ என்றேன்.

(...தொடரும்)

 -   பட்டுக்கோட்டை பிரபாகர்