தயாரிப்பாளரின் கஷ்டம் இப்பதான் புரியுது..!



புரொடியூசராக மாறியிருக்கும் சுந்தரபாண்டியன் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்

‘‘சினிமாக்காரர்களில் ஆரம்பித்து ரசிகர்கள் வரை ஆர்ட்டிஸ்ட் இல்லாமல் நல்ல கதைகள் வருவதில்லை என்ற பேச்சு இருக்கு. மலையாளத்தில் ஆர்ட்டிஸ்ட் இல்லையென்றாலும் அந்தப் படத்துக்கு என்ன பட்ஜெட் தேவையோ அதை செய்றாங்க. 
இங்கு ஆர்ட்டிஸ்ட் இல்லை என்றால் பட்ஜெட் சுருங்கிவிடுகிறது. ஆர்ட்டிஸ்ட் இல்லையென்றாலும் குவாலிட்டியான படம் வரணும் என்பது என் விருப்பம். அதற்கு ‘றெக்கை முளைத்தேன்’ முதல் படியாக இருக்கும்.

இதில் தான்யா ரவிச்சந்திரன் மெயின் லீடாக வந்தாலும் இது நான்கு இளைஞர்கள் பற்றிய கதை. கேமரா முன்னாடி என்ன வேணுமோ அதைத் தயக்கம் இல்லாமல் செலவு பண்ணியிருக்கிறேன். இந்தப் படத்துக்குப் பிறகு இந்த மாதிரி படங்கள் நிறைய வரும்...’’ நம்பிக்கை தருகிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர் ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ உட்பட பல படங்கள் இயக்கியவர்.   

‘சுந்தர பாண்டியன்’ வெற்றி பாதிப்பிலிருந்து வெளியே வரவில்லை என்பதற்காகத்தான் இந்த டைட்டிலா?

முதல் படத்தோட பாடல் என்பதற்காக மட்டும் இந்த டைட்டிலை செலக்ட் பண்ணல. இது பள்ளி முடித்து முதன் முதலாக கல்லூரிக்குள் நுழையும் இளைஞர்களுக்கான கதை.
பள்ளிப் படிப்பு வரை பெற்றோர் கவனிப்பில் இருக்கும் இளைஞர்கள் கல்லூரிக்குச் செல்லும்போது சுதந்திரத்தை உணர்வாங்க.

சிம்பிளா சொல்வதா இருந்தால் சீருடையிலிருந்து கலர் டிரஸ்ஸுக்கு மாறுவாங்க. அவர்களின் கனவு, ஆசைகளை சுயமா நிறைவேற்றத் துடிக்கும் பருவம். அது றெக்க விரிச்சு பறக்கிற உணர்வைக் கொடுக்கும்.

கிராமிய பட இயக்குநர் என்ற முத்திரையை உடைக்கத்தான் த்ரில்லர் ஜானருக்கு மாறினீங்களா?

அப்படி உடைக்கணும்னு அவசியம் இல்ல. பொதுவா இயக்குநர் என்பவர் ரைட்டர் மனநிலையில்தான் கதை எழுதுவாங்க. அதுதான் ஆரம்பப் புள்ளி. அது நிறைவடையும்போது டைரக்டராக மாறுவாங்க.

திரைக்கதை எழுத்தாளராக இதுதான் எழுதணும் என்று கூண்டுக்குள் அடைஞ்சுடக்கூடாது. எல்லா தளத்திலும் சிந்திக்க முடியும் என்ற பார்வை இருக்கும். அதனால்தான் ‘சுந்தரபாண்டியன்’ படத்துக்குப் பிறகு ‘சத்ரியன்’ல ரவுடிகளின் வாழ்க்கையைப் பதிவு பண்ணினேன். ‘சுந்தரபாண்டியன்’ வெற்றிக்கு முன் அது காணாமல் போச்சு.

என்மீது கிராமம் சார்ந்த கதைகளை எடுக்கக்கூடிய இயக்குநர் என்ற அடையாளம் இருக்குது. சமீபத்துல ‘செங்களம்’ வெப் சீரீஸ் பண்ணினேன்.

முழுக்க முழுக்க அரசியல் க்ரைம் அது. ஆனாலும் நான் கிராமத்துக் கதைகளை மட்டுமே படமாக்குவதாக பார்க்கப்படுகிறது. என் மீது இருக்கும் இமேஜை உடைக்கும் விதத்தில் க்ரைம் த்ரில்லர் பண்ணியிருக்கிறேன். 

இங்கு தயாரிப்பாளர்களின் மனநிலை எப்படி என்றால் ஒரு ஹிட் கொடுத்தபிறகு அதே டைப்பில் அடுத்த படத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.

க்ரைம், சிட்டி சப்ஜெக்ட், லவ், ஆக்‌ஷன்... என வேற படம் பண்ணா அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. ‘உங்களுக்குதான் வில்லேஜ் சப்ஜெக்ட் நல்லா வருதே, அதையே பண்ணலாமே, ஏன் வேற ஜானர் பண்றீங்க’ என்ற பார்வை இருக்கு. நானே முதலீடு செய்யும்போது பரிசோதனையை செய்ய முடிகிறது.

இது ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போகும் நண்பர்கள் பற்றிய கதை. றெக்க விரிச்சு பறக்கற வயசுல பார்த்துப் பறக்கணும். முதன் முதலாக சிறகடித்துப் பறக்கும்போது எல்லாமே நல்லதுன்னு தெரியும். பார்ப்பவை எல்லாம் சரின்னு தோணும். கண் பார்க்கிறதை எல்லாம் அனுபவிக்கணும்னு தோணும்.

அதுவே ஸ்கூல் படிக்கும்போது, அப்பா, அம்மா கண்காணிப்பில் இருக்கும்போது பின்னாடி இருந்து கைட் பண்ணிட்டு இருப்பாங்க. காலேஜ் வந்த பிறகு முழு சுதந்திரத்தை உணர முடியும். அப்போது சந்திக்கும் மனிதர்கள் வேறுவித குணத்துடன் இருப்பார்கள். அப்பா, அம்மா கண்காணிப்பில் இருக்கும்போது சரியில்லாதவர்கள் என்று தெரிந்தால் ஒதுங்கி இருக்கும்படி சொல்வாங்க. அட்வைஸ் கிடைக்கும்.

முழு சுதந்திரம் கிடைச்சு பழக ஆரம்பிக்கும்போது முகங்களும் செயல்களும் வேறு. கவனமா பழகணும். பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தபோது பார்த்த முகம் வேறு. அடுத்த
கட்டத்துக்கு போகும்போது பார்க்கும் முகம் வேறு. பார்த்துபத்திரமா இருந்துக்கங்கன்னு சொல்ற படம் இது.

தான்யா ரவிச்சந்திரன் லுக் ஸ்டைலா இருக்கே?

கதை, சாராம்சம் எல்லாம் இளைஞர்களுக்கானது. ஆனால், இது க்ரைம் த்ரில்லர். நான்கு நண்பர்கள். அதுல க்ரைம் நடக்குது. அதன் விசாரணை அதிகாரியா தான்யா வர்றார். முழுப் படமும் அவருடைய விசாரணைக் கண்ணோட்டத்தில் இருக்கும்.தான்யா நடிக்கும்போது குழப்பமோ, தயக்கமோ இருக்காது. சில ஆர்ட்டிஸ்ட் கெட்டப்புக்காக ரெடியாகி வருவாங்க. அவர்கள் மைண்ட் செட்டை பார்க்கும்போதே கேரக்டருக்காக ரெடியானது தெரியும்.

தான்யா அப்படி இல்லை. ரொம்ப இயல்பா வந்து கேஷுவலா பண்ணினாங்க. முக்கிய வேடத்துல ஜெயப்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், மீரா கிருஷ்ணன் போஸ் வெங்கட், ஜீவா ரவி, ரஞ்சனி வர்றாங்க.மியூசிக் தரண்குமார். பாடல்களுக்கு தீசன் மியூசிக் பண்ணியிருக்கிறார். ‘செங்களம்’ வெப் சீரீஸுக்கு மியூசிக் தரண்குமார். 

அதுல அவர் கதையை சொன்ன விதம் பிடிச்சிருந்துச்சு. இவரை எப்படி நோட் பண்ணாம விட்டுட்டோம்னு தோணுச்சு. தீசனிடம், பின்னணியை மட்டும் தரண் கிட்ட கொடுக்கிறேன் என்று சொல்லிட்டேன். கேமரா கணேஷ் சந்தானம் ஹேண்டில் பண்றார். ‘கபாலி’, ‘காலா’ பண்ணிய முரளி சார் அசோசியேட். எடிட்டர் என்னுடைய ஃபேவரைட் டான் பாஸ்கோ.

இயக்கி தயாரிக்கும் அனுபவம் எப்படி உள்ளது?

தயாரிப்பு ‘ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ்’. இப்போதுதான் தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரியுது. டைரக்டராக இருக்கும் போது கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே யோசிப்போம். தயாரிப்பாளராக இருக்கும்போது ஃபைனான்ஸ் ரீதியா படம் வெளியாகும் வரை என்ன கஷ்டங்களை சந்திக்கிறாங்க என்பது புரிஞ்சது. பொதுவா ஒரு சினிமா, இயக்குநரின் குழந்தைனு சொல்வாங்க. அதுல தயாரிப்பாளர் அதிகமா சுமப்பதாக தோணுது. இயக்குநர் ஆண் இடத்திலும், தயாரிப்பாளர் பெண் இடத்திலும் இருந்து சுமையை தாங்குவதாகத் தெரிகிறது.

ஹிட் கொடுத்த இயக்குநர்கள் தொடர்ந்து படம் பண்ணாமல் காணாமல் போவது ஏன்?

படத்தோட வெற்றி, தோல்வி தாண்டி இங்கு சூழல் ஒண்ணு இருக்கு. அடுத்த படத்துக்கான சிச்சுவேஷனை எப்படி ஹேண்டில் பண்றோம் என்பது முக்கியம். தயாரிப்பாளர், ஹீரோ, புரொடக்‌ஷன் மேனேஜர் என எல்லோரையும் எப்படி ஹேண்டில் பண்றோம் என்பதைப் பொறுத்து உள்ளது.

படம் துவங்குவதற்கான முதல்கட்ட வேலைகளை சரியாகக் கையாண்டால்தான் படம் டேக் ஆஃப் ஆகும். கையாளத் தெரியாம இருக்கும்போது இடைவெளி எற்படுது.சினிமா இயக்கத் தெரிவதை விட மனிதர்களைக் கையாளத் தெரிஞ்சிருக்கணும் என்பது என்னுடைய கருத்து. அது தெரிஞ்சாதான் தொடர்ந்து இயங்க முடியும். இந்த ஆற்றல் இல்லாத காரணத்தால் பல நல்ல படங்கள் கொடுத்த இயக்குநர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.

எஸ்.ராஜா