கேரளாவுல கொலை செய்ய ஏலம் நடத்தும் GANG பற்றிய கதை இது!



‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் ப்ரியா மணி. முதல் படத்தில் பரவசப்படுத்தியதுபோல் இப்போதும் லைம் லைட்டில் தொடர்கிறார். இப்போது ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் தாதாவாக மிரட்டவுள்ளார். பாலாவின் சீடரான விவேக் இயக்கியுள்ள இதில் பிரபல பாலிவுட் ஸ்டார் ஜாக்கி ஷெராப் மெயின் லீட் பண்ணியுள்ளார். இயக்குநர் விவேக்கிடம் பேசினோம்.

அது என்ன ‘கொட்டேஷன் கேங்’?

இது ஹைபர் லிங் ஸ்டோரி. இதுமாதிரி பல படங்கள் வந்திருக்கு. ஹைபர் லிங் என்றால் ஒரே ஏரியாவுல நடக்கிற மாதிரி படங்கள் வந்திருக்கும். இது காஷ்மீர், மும்பை, சென்னை என பல இடங்களில் நடக்கும் கதை.அடிப்படையில் இது கேங்ஸ்டர் கதை. ‘கொட்டேஷன் கேங்’ என்பது கேரளாவில் இயங்கும் கூலிப் படை. 500, 1000 ரூபாய்க்கு சர்வ சாதாரணமா க்ரைம் பண்ண தயங்காதவர்கள். கொலை, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களைச் செய்வதற்கு ஏலம் நடத்துவாங்க.

சில வருடங்களுக்கு முன் ஒரு நடிகையை ஓடும் காரில் பாலியல் சீண்டல் பண்ணியது நியூசா வந்துச்சு. போலீஸ் விசாரணையில ‘கொட்டேஷன் கேங்’கைச் சேர்ந்தவர்கள்னு வாக்குமூலம்

கொடுத்தாங்க.சொற்ப பணத்துக்கு கொலை செய்யத் தயங்காத அவர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை சினிமாவுக்காக சில கற்பனை அம்சங்களையும் சேர்த்து இந்தக் கதையை உருவாக்கினேன்.

சிகரெட், ரத்தம்ன்னு ப்ரியாமணி டிரெய்லர்ல தெறிக்க விடுகிறாரே?

இந்தக் கதைக்கு ப்ரியாமணி மேடம் கச்சிதமா இருப்பார்னு தோணுச்சு. கதை கேட்டதும் இதுவரை நான் பண்ணாத கேரக்டர்னு  ஆர்வமா கமிட் பண்ணினார். படத்துல அவருக்கு நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கு. ரூமுக்குள் அடிச்சுக்கிற சண்டையாக இல்லாமல் எல்லாமே சாகச சண்டைக் காட்சிகள். நம்பகத் தன்மைக்காக நிறைய ரிஸ்க் எடுத்தார்.  
எனக்கு இது முதல் படம். ஆனால், என்னை அறிமுக இயக்குநராக பார்க்காமல் என்மீது நம்பிக்கை வெச்சாங்க.  

ஜாக்கி ஷெராப் எப்படி படத்துக்குள் வந்தார்?

தமிழில் ‘ஆரண்ய காண்டம்’ படத்துக்குப் பிறகு இதுல மிக முக்கியமான கதாபாத்திரம் பண்றார். ஷூட்டிங் போவதற்கு முன்பே லுக் டெஸ்ட், டயலாக்,  கேரக்டரின் தன்மை என கேரக்டர் பற்றி முழுமையாகச் சொன்னதால் புரிதலுடன் படப்பிடிப்புக்கு வந்தார்.

இது போதும்னு எந்த இடத்திலும் கமெண்ட் கொடுக்கல. அவர் முன்னணி இயக்குநர்களுடன் வேலை பார்த்தவர். எந்த இடத்திலும் என்னை புது டைரக்டர் என்று பார்க்கவில்லை. 500 படம் பண்ணின இயக்குநராக இருந்தாலும் சரி, ஒரே படம் செய்த இயக்குநராக இருந்தாலும் சரி எல்லோருக்கும் ஒரே விதமான மரியாதை தருவார்.

கேரக்டரை புரிய வெச்சுட்டா ரொம்ப ஈஸியா அவரோடு வேலை செய்ய  முடியும். அவர் செட்டுக்கு வந்தபிறகு மொத்த டீமுக்கும் பாசிடிவ் வைப் கிடைக்கும். நான் கொஞ்சம் சத்தம் போட்டாலும் சவுண்டை குறைக்கச் சொல்லிடுவார்.

கத்தியும் ரத்தமும் உள்ள படத்துல சன்னி லியோனுக்கு என்ன வேலை?

அப்படிப்பட்ட படம் கிடையாது. ஒரு படத்தோட வெற்றிக்கு பொருத்தமான நடிகர்கள் இருந்தால் படம் பேசப்படும் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஆனா, இதுல நடிச்சவங்களுடைய முந்தைய படங்களை நான் ஒப்பீடு செய்யாமல்தான் காஸ்டிங் பண்ணினேன். 

கேரக்டருக்கு க்யூட்டா போல்டா ஆர்ட்டிஸ்ட் தேவைப்பட்டுச்சு. சில ஆர்ட்டிஸ்டுகள் லிஸ்ட்ல இருந்தாங்க. அவங்களை நடிக்க வெச்சா அவங்கமேல ஆர்வம் இல்லாம, வழக்கமா இருக்கிற மாதிரி ஆகிவிடும். அது டெய்லர் மேட் மாதிரி இருந்திருக்கும்.

கேரக்டர் புதுசா தெரியணும் என்பதற்காக சன்னி லியோன் மேடத்தை செலக்ட் பண்ணினோம். எந்த கேரக்டர் கொடுத்தாலும் செய்யத் தயாராக இருக்கிற ஆர்ட்டிஸ்ட்.அவருக்கும் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் இருக்கு. சண்டைக் காட்சியில் மிரட்டினார். தேவையில்லாமல் பேசமாட்டாங்க. வெரி ப்ரொஃபஷனல் ஆர்ட்டிஸ்ட். கேரக்டருக்காக ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டார். தட்டிக்கழிக்கிற பேச்சுக்கே இடம் இருக்காது.

அவங்க வெளிநாடு வாழ் இந்தியர். நம்முடைய கலாசாரம் தெரியாதவர். ஆனாலும் கேரக்டருக்காக முழுசா தன்னை உட்படுத்தி, ரெடியாகி வந்தார்.
இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ‘பொன்னியின் செல்வன்’ ஐஸ்வர்யா, ‘தெய்வத் திருமகள்’ சாரா, பிரதீப், அக்‌ஷயா, சோனல், கியாரா இருக்கிறார்கள். அஷ்ரப் வில்லனா வர்றார். ‘ராக்கி’, ‘கேப்டன் மில்லர்’ பண்ணியவர்.

டெக்னீஷியன்ஸ்..?

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மகா முனி’ பண்ணியவர். ஆரம்பத்துல ரெண்டு, மூணு கேமராமேன்களுடன் வேலை செய்தேன். எதுவும்  திருப்தி இல்லை. காஷ்மீர் ஷெட்யூலில்தான் அருண் பத்மநாபனை மீட் பண்ணினேன்.

விஷுவல் ட்ரீட் வேற லெவலில் இருக்கும். கேமராமேன், டைரக்டர் என்பவர்கள் கணவன், மனைவி மாதிரின்னு சொல்வாங்க. எங்களிடையே பேச்சு குறைவாகத்தான் இருக்கும். கண்ணுலதான் அதிகம் பேசுவோம். இந்தப் படத்துக்காக மொத்தமா 2 மணி நேரம்தான் பேசியிருப்பேன்.

சிவமணி சார் மியூசிக் செய்றார். பின்னணி இசை  டிரம்ஸ் பின்னணியில போகணும்னு தோணுச்சு. ரெகுலர் மியூசிக் டைரக்டரிடம் போனால் கதைக்கு தேவையான மியூசிக் கிடைத்துவிடும். ஆனால் நான் எதிர்பார்க்கும் டிரம்ஸ் கிடைக்காது என்பதால் சிவமணி சாரிடம் போனேன். மூன்று பாடல்கள். பிரமாதமா கொடுத்தார். வைக்கம் விஜயலட்சுமி, சிவமணி மனைவி ஆகியோர் பாடியுள்ளார்கள். பாடல்களை அருண்பாரதி, அறிவு எழுதியுள்ளார்கள்.

மாசத்துக்கு பத்து வெளிநாடுகள் போவார். பிசி ஷெட்யூலில் டே, நைட் பார்க்காம டெடிகேஷனுடன் ஒர்க் பன்ணினார். எல்லாமே லைவ் மியூசிக்.ஏர்போர்ட் சுவரைத் தட்டி அதையும் ரிக்கார்ட் பண்ணி சேர்த்துவிடுவார். அவருக்கு உலகமே மியூசிக். தயாரிப்பு பிலிமானிட்டி காயத்ரி சுரேஷ். மும்பையிலதான் ஷூட்டிங் நடந்துச்சு. சரியான திட்டமிடலோடு படத்துக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.

பாலாவிடம் படித்த பாடம் என்ன?

சொந்த ஊர் சென்னை. படிச்சது விஸ்காம். சன் டிவியில சில காலம் ஒர்க் பண்ணினேன். பாலா சாரிடம் ‘பரதேசி’, ‘தாரைதப்பட்டை’ படங்களில் ஒர்க் பண்ணினேன்.

பாலா சாரிடம் கத்துக்கிட்டது, எதைச் செய்தாலும் நேர்த்தியா செய்யணும் என்பதுதான். அதுதான் அவரிடம் எனக்கான டேக் அவே. எல்லாவித எமோஷனும் இந்தப் படம் கொடுக்கும். கண்டிப்பா ஆடியன்ஸை டிஸ்டர்ப் செய்யும். பாலுமகேந்திரா சார், பாலா சார் படம் போல் ஆடியன்ஸுக்கு வலியைக் கொடுக்கும்.

எஸ்.ராஜா