சிறுகதை - பூனைக்குட்டி
மதுரை காமராஜபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புவாசிகள் அன்றாடம் தங்களிடம் குடிகொண்டிருக்கும் சுறுசுறுப்பைக் கடன் கொடுத்தவர்களாகக் காணப்பட்டனர்.
அதற்கு முக்கிய காரணம், வானம் எப்போதும் போல ‘பளீச்’ என்று இல்லாமல் ஆங்காங்கே சாம்பல் நிறத்தை அள்ளிப் பூசிக்கொண்டு சோம்பல் முறித்துக் கொண்டிருந்ததே. வாஸ்து பார்த்துக் கட்டப்பட்ட வீடுகளின் கிழக்கு வாசல் வழியே அனுமதியின்றி வீட்டிற்குள் நுழையும் துணிவைக் கொண்ட சூரியக்கதிர்களுக்கும் அன்று அறிவிப்பில்லா விடுமுறை அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இல்லையென்றால், பெரும்பாலான வீடுகளில் கரண்ட் மீட்டரைப் பொருட்படுத்தாமல் காலைவேளையில் ட்யூப்லைட்டுகளை எரியவிட்டிருக்க மாட்டார்கள்.நிலைமை இவ்வாறாக இருக்க, தற்போதைய வானிலையைப் போலவே சம்ரிதாவின் வாசலிலும் சிக்குக் கோலம் சிக்கனமாய் இடம்பெற்றிருப்பதைக் கவனித்தான் எதிர்வீட்டு ஆனந்த்.
ஒற்றைப்புள்ளி கூட இல்லாமல் அச்சுவார்த்தது போல மண்தரையில் அழகாய் ரங்கோலி வரைந்திடும் சம்ரிதா ஊரில் இல்லையென்றாலோ, உடல்நலக் குறைவென்றாலோ மட்டும்தான், சம்ரிதாவின் அம்மாவிற்கு அவளது சிக்குக்கோலம் வரையும் திறமையை வெளிக்காட்டும் வாய்ப்புக் கிடைக்கும்.
ஆனால், சம்ரிதா வீட்டில் இருக்கும் நாட்களில் அவள் போட்ட கோலத்தை நின்று ரசிக்காமல் அத்தெருவைக் கடந்தவர்கள் யாருமில்லை என்ற புள்ளிவிவரம் காமராஜ்நகரவாசிகள் அனைவரும் அறிந்த ஒன்றே.
ஒருபுறம் விடிந்தும் விடியாமல் ஆனந்த் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் மேற்கூறிய சம்பாஷணைகளுக்கு சொந்தக்காரியான சம்ரிதா, ஆனந்த் நினைத்தது போல ஊரில் இல்லாமல் இல்லை. அப்படியென்றால், ஏதேனும் உடல்நலக்குறைவு? இக்கேள்வியை இப்போது சம்ரிதாவிடம் யாரேனும் நேரடியாக கேட்டார்களானால் அவளது பதில், “எனக்கென்ன குறைச்சல்? நல்லாத்தான் இருக்கேன்” என்று வந்திருக்கும்.
ஆனால், யாரும் அத்தகைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாத காரணத்தால் சம்ரிதா இன்னமும் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளாமல், மலைப்பாம்பு போல படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள்.
இப்போது நமக்கு அறிமுகமாகிக் கொண்டிருக்கும் சம்ரிதா, இவ்வாறு படுக்கையில் புரண்டு நேரத்தை வீணடிக்கும் சோம்பேறியல்ல. தன் அம்மாவுடன் போட்டி போட்டுக்கொண்டு அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து வாசல் கூட்டி, கோலம் போட்டு, குளித்து முடித்து, ப்ளூடூத் உதவியுடன் ஸ்பீக்கர்களில் குறைந்த ஒலியில் சுப்ரபாதம் இசைக்க விட்டு, அதனுடனே தானும் அவ்வரிகளை முணுமுணுத்துக் கொண்டே, அம்மாவிற்கு உதவியாக சமையல்கட்டிற்குள் நுழைபவள்.
ஆனால், இன்றோ, வழக்கத்திற்கு மாறாக அவளை தனக்குள் இருத்திக்கொண்டன அவளது கட்டிலும், மெத்தையும்.பார்வைக்கு அமைதியாய் படுத்துக்கொண்டிருக்கும் சம்ரிதாவின் மனதிற்குள் அசுர வேகத்தில் ஆழிப்பேரலைகள் உருவெடுத்து அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.
அதற்குக் காரணம், சமையலறைக்குள் தனியாக வேலைபார்த்துக் கொண்டிருக்கும் அவளின் அம்மா சரஸ்வதி.‘பாவம் அம்மா! சமையலை முடித்த கையோடு ஆபீசுக்கு ஓடவேண்டும். எழுந்து சென்று அவளுக்கு உதவலாம்’ என்று நினைத்தவளுக்குள் நிமிர்ந்து நின்றாள் மற்றுமொரு சம்ரிதா. தமிழ் சினிமாக்களில் காட்டுவதுபோல, நிமிர்ந்து நின்றவள் சம்ரிதாவின் மனசாட்சியாக இருக்கலாம்.
‘எவ்வளவு நாட்களுக்குத்தான் இப்படி ‘அம்மா பாவம்!’ என்று கழிவிரக்கம் கொண்டு அவள் சொல்வதை எல்லாம் விருப்பம் இல்லையென்றாலும் செய்துகொண்டிருப்பாய் சம்ரிதா?’ என்ற கேள்வியை எழுப்பியவள், சம்ரிதாவின் மனசாட்சியே.‘விருப்பம் இல்லாமல் என்றெல்லாம் இல்லை. அம்மாவிற்கு உதவ எப்போதுமே நான் நினைத்ததுதானே?
ஆனால், இப்போது அம்மாவின் நடவடிக்கையில் தோன்றிய மாற்றம்... அதுதான் அனைத்திற்கும் காரணம்!’ என்ற சம்ரிதாவின் நினைவுகளைக் களைப்பது போல, “சம்ரி..ம்மா! எழுந்திட்டியாடா செல்லம்?” என்ற குரல் களைத்த மனதிற்கு ஆறுதலாய் தோன்றியதை இல்லையென்று மறுக்காமல் அவ்வாறுதலை மனதிற்குள் இதமாய் கடத்திக் கொண்டவள் முகத்தை மட்டும் இறுக்கமாய் வைத்துக்கொண்டு, “ம்...” என்ற ஒற்றை எழுத்தை பதிலாய் கூறினாள், சற்று அழுத்தமாக. “அம்மா! அம்மா! சரசு!” என்று பூனைக்குட்டியைப் போல தன்னையே சுற்றிவரும் தன் செல்லமகளின் இச்செயல் சரஸ்வதியை நிலைகுலையச் செய்தது. இருப்பினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ‘‘எழுந்திருடா கண்ணு! ஸ்கூலுக்கு நேரமாயிடுச்சு பாரு!’’ என்றவளின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தியவள் மீண்டும் படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டாள்.‘‘சம்ரி! சம்ரிம்மா! இது என்னடா புதுப்பழக்கம். என் பொண்ணு இப்படிப்பட்டவ இல்லையே...’’ என்றவளை மேற்கொண்டு பேச அனுமதிக்காமல், ‘‘ஆமா! உன் பொண்ணு மட்டும்தான் வித்தியாசமானவ! இப்படி சொல்லிச் சொல்லியே என் வாழ்க்கைய சந்தோஷமா வாழவிடல நீ.
அம்மா நல்லா கேட்டுக்கோ! இப்ப நான் எப்படி இருக்கேனோ அப்படித்தான் என் வயசு பொண்ணுங்க எல்லாரும் இருக்காங்க. ஆனா, நீ என்னை ஒரு சாமியார் மாதிரி வளர்த்துட்டு இருக்கம்மா.
உனக்குப் புரியுதா இல்லையா?
சின்ன வயசுலயே அப்பா செத்துப் போனது என்னோட தப்பா? உனக்கு எதிரா எல்லாருமே இருக்கறதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்? உன் வாழ்க்கைல இருக்கற பிரச்னைகளை நீதான் பார்த்துக்கணும். அதைவிட்டுட்டு என்னைக் கட்டுப்படுத்திட்டு, எனக்கு ஆர்டர் போட்டுட்டு, இதை செய்யாத, அதை செய்யாத, இங்க நிக்காத, அங்க போகாத, அவன் கூட பேசாத, மொபைல் யூஸ் பண்ணாதன்னு இனியும் சொல்லிட்டு இருக்காத.
முடிஞ்சா இந்தக்காலத்துக்கு ஏற்ற மாதிரி நீ மாறிடு. அதைவிட்டுட்டு என்னை எதுவும் சொல்லிட்டு இருந்தேன்னு வை... நான் தூக்குமாட்டிக்கிட்டு செத்துப் போயிடுவேன்...’’ என்ற மகளின் அமில வார்த்தைகளைக் கேட்டு உடைந்து போன சரஸ்வதியின் மனம் 12 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்தது.
“இங்கப் பாரும்மா சரஸ்வதி! இந்தக் காலத்துல புருஷன் செத்த அப்புறமும் தனியா வாழறது ஒண்ணும் அவ்வளவு சுலபம் இல்லை. ஒரு பொண்ணு தனியா இருக்கான்னு தெரிஞ்சா குள்ளநரிக்கூட்டம் உன்னையே சுத்தி சுத்தி வரும்...’’ என்ற அம்மாவின் புலம்பல் ஒருபக்கம்.
‘‘பாவம்டீ நீ! புருஷன்தான் குறை ஆயுசுல போய்ட்டார், பொறந்ததாவது பையனா பொறந்து இருக்கலாம்...” என்று தோழிகளின் கரிசனம் (?) மறுபக்கம் என்று தனியொருத்தியை இச்சமுதாயம் வாழவிடாது என்பது போன்ற போதனைகளால் சரஸ்வதியின் சுற்றமும் நட்பும் அவளுக்கு மூளைச்சலவை செய்து, மறுமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தனர்.
“அம்மா! நீ சொல்றதையேதான் நானும் சொல்றேன். பாப்பா இருக்கா. இப்ப நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளையும் தன் மகளா பார்க்க சம்மதிக்கற ஒருத்தரைத்தான் கல்யாணம் செஞ்சுக்குவேன்.
இல்லைன்னா இத்தோட இந்தப் பேச்சை விடு...” என்று அழுதுகொண்டே அரைகுறையாக மனதில் தோன்றியதை தன் தாயிடம் கொட்டித் தீர்த்தாள்.இந்த ஒரு வார்த்தைக்காகவே காத்துக்கொண்டிருந்த சரஸ்வதியின் சகோதரன் மகேஷ் விரைந்து மாப்பிள்ளை தேட ஆரம்பித்தான்.
மகேஷின் இத்துரித நடவடிக்கைக்குக் காரணம் சரஸ்வதி மேல் இருந்த அன்பு அல்ல. “ஏங்க! நமக்கு இப்பத்தான் கல்யாணம் ஆகியிருக்கு. உங்க அக்காவோ வீட்டுக்காரர் இல்லாம தனியா நம்ம வீட்ல இருக்காங்க.
நாம எப்படிங்க அவங்க முன்னாடி சிரிச்சு சந்தோஷமா இருக்கமுடியும்? ஒரு சினிமாவுக்கு போகனும்ன்னா கூட சங்கடமா இருக்கும். பேசாம அவங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணிடலாம். இல்லைன்னா, ஏதாவது வுமன்ஸ் ஹாஸ்டல்ல சேர்த்திடலாம்...” என்று சில நாட்களாக அவனுக்கு கூறப்படும் தலையணை மந்திரத்தின் விளைவு.
இறுதியாக ஏதோவொரு நாளில், மனைவியை இழந்த ஒருவருடன் சரஸ்வதியின் இரண்டாம் திருமணம் நடந்தேறியது. திருமணம் முடிந்த ஐந்தாவது நாள் பூமராங் போல சரஸ்வதி குழந்தையுடன் வீட்டு வாசலில் நிற்பதைக்கண்டு திடுக்கிட்டான் மகேஷ்.
“என்னக்கா... நீ மட்டும் தனியா வந்திருக்க? மாமா வரலையா?” என்று வாசலைப் பார்த்தவனை எரித்துவிடுவது போலப் பார்த்தாள் சரஸ்வதி.“அந்த ஆளை மாமான்னு கூப்பிடாத!”“ஏன்... நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டவர் இவருக்கு மாமாதானே?” என்று கணவனின் பேச்சு சாமர்த்தியம் தெரிந்தே உரையாடலுக்குள் கலந்துகொண்டாள் மகேஷின் மனைவி.
“இப்ப நடந்துச்சே அது கல்யாணமா? அவன் என் புருஷனா? ச்சீ! அவனெல்லாம் ஒரு ஆள்...” என்றவளைப் புரியாமல் பார்த்தனர் அனைவரும்.“அம்மா! நான் அப்பவே படிச்சுப் படிச்சு சொன்னேன், என் பாப்பாவ பார்த்துக்க சம்மதம்ன்னு சொல்றவங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு. ஆனா, என்னை யோசிக்கவிடாம கல்யாணம் பண்ணி வெச்சிங்க.
அதோட விளைவ பாருங்க...” என்றவள் தன் இடுப்பில் அமர்ந்திருந்த சம்ரிதாவின் துணியை விலக்கி முதுகைக் காட்டிட... அதில் பெல்ட்டில் அடித்த அச்சு பதிந்திருந்தது. குழந்தையின் முகம் அழுதழுது சிவந்திருப்பதைப் பார்த்தே அங்கே நடந்தவற்றை அனைவரும் ஒருவாறு ஊகித்தனர்.
“சரி! ஏதோ கோவத்துல நடந்திருக்கும். குடும்பம்ன்னா நல்லது, கெட்டது எல்லாம்தான் இருக்கும். அதுக்குன்னு இப்படியா கிளம்பி வருவாங்க? இங்க என் புருஷன் சம்பாத்தியம் எங்களுக்கே இழுத்துக்கோ, பிடிச்சுக்கோன்னு இருக்கு...” என்று முணுமுணுத்த தம்பி மனைவியைப் பார்த்துப் புன்னகைத்த சரஸ்வதி குழந்தையுடன் திரும்பி நடந்தாள். சரஸ்வதி! 12 வருடங்களுக்கு முன் சமூகத்தின் பார்வையில் இளம்விதவை. கையில் ஐந்து வயது பெண் குழந்தையுடன் தன் காதல் கணவனின் உருக்குலைந்த சடலத்தை ஏந்திக்கொண்டு கதறிய வலியைவிட, ஆண் துணை இழந்தவள் என்ற எண்ணத்துடன் அவளைச் சுற்றியவர்களின் பார்வையின் தாக்கத்திலிருந்தும், அடுத்தவேளை உணவிற்காக உடலை மூலதனமாக்காமல், தன் மீது தான் கொண்ட நம்பிக்கையில் ஓட ஆரம்பித்தவள், இன்றுவரை ஓடிக் கொண்டிருக்கின்றாள்.
சம்ரிதாவும் தன் தாய்க்குத் துணையாக அவளின் வலிகளில் பங்குகொண்டு அவளுடன் பயணிக்க ஆரம்பித்து ராமர் மேற்கொண்ட வனவாசம் போல பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்து கொண்டிருக்கும் நிலையில் சம்ரிதாவின் செயல்களிள் வேறுபாடுகளைக் கண்டாள் சரஸ்வதி.இப்பொழுதெல்லாம் வீட்டில் டிவி ஓடிக்கொண்டேயிருந்தது. சம்ரிதாவின் படிக்கும் நேரம் குறைந்துகொண்டு வந்தது. அவ்வப்போது நண்பர்கள் போனில் அழைத்துப் பேசுவதும் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது.
ஆரம்பத்தில் சிறுபெண்தானே என்று அவ்வப்போது அன்பாகவும், தன் நிலையை விளக்கிக்கூறியும் அவளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள நினைத்தவள், அவளின் செயல்களில் மாற்றத்தைக் கண்டு மெல்ல கண்டிக்க ஆரம்பித்தாள். அம்மாவின் அரவணைப்பை மட்டுமே உணர்ந்த சம்ரிதாவிற்கு அம்மாவிடம் திடீரென்று தோன்றிய இம்மாற்றத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதன் விளைவே, சம்ரிதா காலையில் தன் அம்மாவிடம் பேசியது.
மகளின் கோபம் நிறைந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுக்குள் ஒலிக்க, இயந்திரம் போல சரஸ்வதி வேலைக்குக் கிளம்பியிருந்தாள். மகள் அவ்வளவு பேசியும் மீண்டும் அவளின் அறையின் வாயிலில் நின்றவள், ‘‘சம்ரி..ம்மா! ரொம்ப நேரம் படுத்துட்டு இருக்காதடா. எழுந்து சாப்பிடு. அம்மா வேலைக்கு கிளம்பறேன்...’’ என்றவள் மகளின் பதிலுக்காக காத்திருக்காமல் வேகவேகமாக ஓட்டமும் நடையுமாக வெளியேறியதை வெறித்துப் பார்த்தாள் சம்ரிதா.
அம்மாவின் இவ்வேக நடைக்கான அர்த்தம் அவள் அறிந்ததே. இரண்டு நிமிடம் தாமதித்தாலும் பஸ் பேருந்து நிறுத்தத்தை விட்டுச் சென்றுவிடும், அதன் பிறகு அரைமணி நேரம் கழித்துத்தான் அடுத்த பேருந்து. எனவேதான் அவள் இவ்வாறு ஓடுகின்றாள் என்று நினைத்தவள் மனதிற்குள், ‘தான் தவறு செய்கின்றோமோ?’ என்ற நினைப்பு மெல்ல எட்டிப்பார்த்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அம்மாவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவள் வெறுப்புடன் வீட்டின் முன்வாசலுக்கு எழுந்து வந்தாள்.
கருமேகங்கள் இப்போது தூறலாய் பூமியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்க, தெருவெங்கும் ஈரம். சுற்றிலும் பரவிய குளுமை மனதிற்கு இதமாய் இருக்க, அங்கேயே வாசற்படியில் அமர்ந்துகொண்டாள் சம்ரிதா.
எத்தகைய எண்ணமுமின்றி சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் பார்வைக்குள் வந்தது அக்காட்சி.எதிர்த்த வீட்டில் தானாக வந்து அடைக்கலம் புகுந்துகொண்ட பூனை ஈன்ற ஐந்து குட்டிகளையும், தன் மடிக்குள்ளேயே படுக்கவைத்து பாதுகாத்துக் கொண்டிருந்தது. இரண்டு நாட்களாக இக்காட்சியைப் பார்த்தவளுக்கு இன்று பூனையின் செயலில் ஏதோ மாற்றம் இருப்பது போல்தோன்றியது.
பூனை இங்குமங்கும் பார்ப்பதும், ‘மியாவ்...’ என்று பெருங்குரலெடுத்து அலறுவதுமாய் சில நிமிடங்கள் கழிந்திட, மின்னல் வேகத்தில் தனது குட்டிகளை, தானே வாயால் கவ்விக் கொண்டு வேகமாய் ஓடியது.இதனைப் பார்த்த சம்ரிதாவின் நெஞ்சம் படபடத்தது. ‘ச்சீ! இந்தப் பூனைக்கு என்ன கேடு வந்திருக்கும்.
இப்படி தன் குட்டிகளை தானே கடித்து இழுத்துக்கொண்டு ஓடுகின் றதே’ என்று நினைத்தவள், ‘என் அம்மாவும் இப்படித்தானே என்னை திட்டி கஷ்டப்படுத்திட்டு இருக்காங்க. நான் ஒண்ணும் இந்த பூனைக்குட்டிங்க மாதிரி அப்பிராணி இல்லை. காலைல. எப்படி பேசினேன். இன்னைக்கு நான் பேசின பேச்சுக்கு, இனிமேல் அம்மா என்னை கண்டிக்க கனவுலயும் நினைக்கமாட்டாங்க’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டவள் சற்றும் எதிர்பார்க்காதவிதமாக அங்கு நடந்த காட்சிகளால் உறைந்து போனாள்.
சம்ரிதா தன் தாயையும், எதிர்வீட்டுப் பூனையையும் ஒப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே பக்கத்துத் தெருவிலிருந்து கண்ணில் வெறியுடன் ஓடிவந்த நாயை எதிர்த்து சீறிக்கொண்டு நின்ற அப்பூனையின் வாயில், தான் காப்பாற்ற நினைத்த அதன் கடைசிக் குட்டி தொங்கிக்கொண்டிருந்தது. பூனையின் உடலோ விறைத்து நாயை பயமுறுத்தும் விதமாக இருந்தாலும், தன் குட்டியை நாய் அபகரித்துவிடக் கூடாது என்ற எண்ணம் அதற்குள் நிறைந்திருந்தது.
தாயின் இச்செயல் புரியாத அக்குட்டிப்பூனை தாயின் வாயிலிருந்து தப்பிக்க துள்ளியதைப் பொருட்படுத்தாமல் பூனையின் கவனம் முழுவதும் குட்டியைக் காப்பதிலேயே இருந்திட, சம்ரிதாவின் மனம் தற்போது தன் தாயைப் பார்க்க துடியாய்த் துடித்தது.
‘சம்ரிதா உடம்புக்கு முடியலையா? அம்மா கோலம் போட்டிருக்காங்க...’ என்ற ஆனந்தைப் பார்த்து புன்னகைத்து, ‘‘அண்ணா! நாளைல இருந்து நான்தான் கோலம் போடப்போறேன். இனி அம்மாவுக்கு இந்த வேலை இருக்காது...’’ என்று சிரித்தவாறே வீட்டிற்குள் நுழைந்தவள் மானசீகமாய் தன் தாயிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள்.
- பெளசியா இக்பால்
|