ஹீரோயின்ஸ் குடிக்கக் கூடாதா?



அதிரடி கருத்துக்களுக்கும் அட்டகாச நடிப்பிற்கும் சொந்தக்காரர் சாட்சாத் நடிகை மனீஷா கொய்ராலாதான். அவர் தமிழில் ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’, ‘இந்தியன்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசிவிடும் குணம் உடையவர் மனீஷா. ‘இந்தியன் 2’ வெளியாக இருக்கும் இந்த நேரத்தில் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த மனீஷாவை ரசிகர்கள் இப்போதும் நினைவுபடுத்திப் பார்க்கும் நேரம் வந்திருக்கிறது.

துடுக்கான நடிப்பாலும் அசத்தலான நடனத்தாலும் சினிமாவில் தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் மனீஷா.தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடுமையான போராட்டத்தை சந்தித்தவர் அவர். புற்று நோயால் பாதிக்கப்பட்டு தலைமுடியை இழந்து கடுமையான உயிர் போராட்டத்தை சந்தித்து மீண்டு வந்தார் மனீஷா. தன் பாதிப்பு குறித்து ரசிகர்களுக்கு டுவிட்டர் மூலம் வெளிப்படையாக அறிவித்து, வாழ்க்கையில் எப்படி எதிர்த்துப் போராட வேண்டும் என்பதை அவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார்.

அப்படிப்பட்டவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அதிரடி கருத்துக்களால் பாலிவுட் சினிமாவே ஆடிப்போயிருக்கிறது. சமீபத்தில் பாலிவுட் மீடியாவில் பேட்டி கொடுத்த மனீஷா தனது மதுப்பழக்கம் குறித்தும், பாய் ஃப்ரண்ட்ஸ் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அதில், ‘‘ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் கோக்கில் வோட்கா கலந்து குடிப்பேன். ஆனால், நான் மது அருந்துவதை வெளியே சொல்ல வேண்டாம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள் சொன்னார்கள். கோக்தான் குடிக்கிறேன் என்று சொல்லச் சொன்னார்கள். நடிகைகள் குடிப்பது வெளியில் தெரியக் கூடாது என்றார்கள்.

இதை என் அம்மாவிடம் சொன்னபோது டென்ஷனாகிவிட்டார். ‘வோட்கா குடித்தால் வோட்கா குடிக்கிறேன் என்று சொல், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பொய் சொல்லக் கூடாது’ என்றார். பாலிவுட்டில் இதுபோன்று பல பிரச்னைகள் இருக்கின்றன. ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கும்.ஹீரோக்களுக்கு பல தோழிகள் இருப்பார்கள். 

அவர்களுடன் டேட்டிங் போவார்கள். அது ஆண்மையான செயல் என்று சொல்லுவார்கள். ஆனால், ஹீரோயினுக்கு பாய் ஃப்ரெண்ட்ஸ் இருக்கக் கூடாது, டேட்டிங் போகக் கூடாது, ஹீரோயின் யாராலும் தொடப்படாத பெண் என்ற இமேஜுடன் இருக்க வேண்டும்... என்று விரும்பினார்கள். ஆனால், எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது, நண்பர்கள் இருந்தார்கள்.

ஆரம்பத்தில் சினிமா உலகுக்கு வந்தபோது ஒரு போட்டோகிராஃபர் என்னை படமெடுத்தார். அவர் ரொம்ப புகழ் பெற்றவர். முதலில் சாதாரணமாக படங்கள் எடுத்துக் கொண்டிருந்தவர் என்னைப் புகழ்ந்து கொண்டே இருந்தார். ‘நீதான் அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்றார். அதன்பின் ஒரு பிகினி ட்ரெஸ்ஸைக் கொடுத்து ‘போட்டுக்கொண்டு வா, படமெடுக்கிறேன்’ என்றார். ‘இது கடற்கரை அல்லது நீச்சல் குளத்தில் போடுவது. அதை இங்கே அணிந்து கொண்டு என்னால் போட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியாது’ என்றேன்.

அம்மாவும் உடனிருந்தார். அவர் என் அம்மாவிடம், ‘களிமண் இடம் கொடுக்காமல் எப்படி சிலை செதுக்குவது’ என்று கேட்டார். பிறகு நான் பெரிய நடிகையான பிறகு என்னை படமெடுக்க வந்தார். ‘நீ பெரிய ஆளா வருவேன்னு சொன்னேன்’ல என்று வெட்கமே இல்லாமல் சிரித்தார்...’’மனீஷா இப்படி பேசியிருப்பது பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

என்.ஆனந்தி