3 ஆயிரம் இந்திய சைபர் அடிமைகள்!



பெண்கள் பெயரில் ஆண்களுக்கு ஐடி...வேலை தேடி வெளிநாட்டுக்குச் சென்று...அழுதபடி நிர்வாண call செய்யும் பெண்கள்...

‘‘கம்போடியாவில் சுமார் 3,000 இந்தியர்கள் சைபர் அடிமைகளாக உள்ளனர்...’’ என்பதுதான் சமீபத்திய அதிர்ச்சி ரிப்போர்ட். சீனாவைச் சேர்ந்த சைபர் மோசடிக் கும்பல் ஒன்று, இந்தியாவைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை சைபர் அடிமைகளாக்கி, அவர்கள் மூலம் கோடிகளைக் குவித்து வருகிறது. 
இந்த சைபர் அடிமைகளைப் பல்வேறுவிதமான சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தி வருகிறது அந்த மோசடிக் கும்பல். குறிப்பாக பெண்களை நிர்வாண வீடியோ கால் செய்ய வைத்து, பணத்தைக் குவிக்கிறது.

இந்த மோசடிக் கும்பலிடமிருந்து தப்பித்து வந்திருக்கிறார் முன்ஷி பிரகாஷ். அவர் மூலமே இப்படியான கொடூர சம்பவங்கள் அரங்கேறுவது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
தெலங்கானாவில் உள்ள கந்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர், முன்ஷி பிரகாஷ். 
சிவில் எஞ்சினியரிங் படித்துவிட்டு, ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பது முன்ஷியின் விருப்பம். இதற்காக வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் ஓர் இணையதளத்தில் தனது சுய விவரங்களைப் பதிவு செய்திருந்தார் முன்ஷி.

இந்நிலையில் கம்போடியாவைச் சேர்ந்த விஜய் என்கிற முகவர், முன்ஷியை அழைத்து ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரு நிறுவனத்தில் அவருக்கான வேலை இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முன்பு மற்ற நாடுகளுக்குச் சென்று, வந்ததைப் போல ஒரு பயண வரலாறு இருந்தால் அந்த நிறுவனத்தில் முன்னுரிமை தருவார்கள் என்று, மலேசியாவுக்கான டிக்கெட்டையும் அனுப்பியிருக்கிறார் விஜய்.

கடந்த மார்ச் 12ம் தேதி கோலாலம்பூர் சென்றார் முன்ஷி. அங்கிருந்த ஒரு குழுவினர் முன்ஷியை கம்போடியாவின் தலைநகரான நோம் பென்னுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

மட்டுமல்ல, விஜய்யின் பிரதிநிதி ஒருவர், முன்ஷியிடமிருந்து 85 ஆயிரம் ரூபாயைக் கட்டணமாக வாங்கியிருக்கிறார். தனக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையில் எதைப் பற்றியும் யோசிக்காமல் விஜய்யை முழுமையாக நம்பியிருக்கிறார் முன்ஷி.  

நோம் பென்னுக்குச் சென்ற முன்ஷிக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. ஆம்; அங்கே சீன சைபர் மோசடிக்காரர்கள் முன்ஷியின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, அவரை கிராங்க் பாவெட் நகருக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். 

மாபெரும் தடுப்புச் சுவருடன் கூடிய சிறை போன்ற கட்டடங்களில் முன்ஷியை அடைத்துவிட்டனர். அவருக்கு முன்பே அங்கே ஏராளமான இந்தியர்கள் கைதிகளைப் போல அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இப்படி வெளிநாட்டில் வேலை செய்வதற்காகச் சென்ற 3000 இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள்தான் சைபர் அடிமைகளாக மாறியிருக்கின்றனர்.

சீன சைபர் மோசடிக் கும்பலால் சிறையில் அடைக்கப்பட்ட முன்ஷிக்கு தெலுங்கு மற்றும் பிற மொழிகளைப் பேசும் இந்தியப் பெண்களின் பெயரில், போலியான சமூக வலைத்தளப் பக்கங்களை உருவாக்கி, இந்திய ஆண்களிடம் எப்படி பணத்தைக் கறக்கலாம் என்பது குறித்து பத்து நாட்கள் பயிற்சியளிக்கப்பட்டது. 

இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று முன்ஷி மறுத்திருக்கிறார். அதனால் சீன சைபர் மோசடிக்காரர்கள் முன்ஷியை மிகக் கொடூரமான முறையில் நடத்தியிருக்கின்றனர். அவரை பலமுறை அடித்திருக்கின்றனர். உணவு தராமல் இருட்டறையில் அடைத்து வைத்திருக்கின்றனர்.

ஆண்களைவிட, பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் இன்னமுமே அவலமானது. இருட்டறை சித்ரவதை காரணமாக  முன்ஷிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.
எப்படியோ தன்னுடைய நிலையை ரகசியமாக வீடியோவாக்கி, இந்தியாவில் உள்ள தனது சகோதரிக்கு இ-மெயில் மூலம் அனுப்பிவிட்டார் முன்ஷி.  

இந்தியத் துதரகமும், தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேச அரசும் இணைந்து முன்ஷி உட்பட பத்து பேரை சீன சைபர் மோசடிக்கும்பலிடமிருந்து மீட்டிருக்கிறது.

இதற்கிடையில் சீனக் கும்பல் முன்ஷி மீது போலியான வழக்குத் தொடர்ந்திருக்கிறது. அதனால் கம்போடியா காவல்துறை முன்ஷியை 12 நாட்கள் சிறையில் அடைத்திருக்கிறது. அந்த வழக்கு போலி என்பது தெரிந்த பிறகே முன்ஷி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘சீனாவைச் சேர்ந்த சைபர் மோசடிக்காரர்கள் போலியான டேட்டிங் ஆப் மற்றும் கேமிங் தளங்களை உருவாக்கி இந்தியர்களை ஏமாற்றி வருகின்றனர். இதன் மூலம் கோடிகளைச் சுருட்டுகின்றனர். இதற்காக எங்களைப் போன்றவர்களை சைபர் அடிமைகளாகப் பயன்படுத்துகின்றனர். ஆண்களைவிட பெண்களின் நிலைதான் இன்னமும் மோசம். அவர்களைக் கட்டாயப்படுத்தி நிர்வாண வீடியோ கால் செய்ய வைக்கின்றனர்.

கம்போடியாவில் 3000 இந்தியர்கள் சைபர் அடிமைகளாக இருக்கின்றனர். ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். கேரளா, தமிழ்நாடு, மும்பை, தில்லியைச் சேர்ந்த பெண்களும் இருக்கின்றனர். இவர்கள் எல்லோரும் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக வந்து, சைபர் அடிமைகளாக மாறியவர்கள்...’’ என்கிறார் முன்ஷி பிரகாஷ்.

சைபர் அடிமைகள் மூலமாக ஈட்டப்படும் பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றுகிறது சீனக்கும்பல். பிறகு  அந்த கரன்சியை அமெரிக்க டாலர்களாக மாற்றுகிறது. அமெரிக்க டாலர்களை சீன யுவான்களாக மாற்றிக் கொள்கிறது. முன்ஷி பிரகாஷைப் போல சீனக்கும்பலிடம் அகப்பட்டு சைபர் அடிமைகளாக இருக்கும் ஆயிரக்கணக்கானோரை மீட்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதே நம் முன்பு இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

த.சக்திவேல்