வாயில் வடை சுடுகிறார்களா..?



இப்படித்தான் ஒட்டுமொத்த கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட், பாலிவுட்... என செப்புமொழி பதினெட்டுடையாளான இந்தியா கேட்கிறது. இந்திய ரசிகர்கள் வினவுகிறார்கள்.

காரணம் சிம்பிள்.இவர் நடித்து ஒரு தென்னிந்திய மொழிப்படம் கூட வெளிவரவில்லை. 
தென்னிந்திய சினிமாவில் தனது முதல் படமாக ஒரு தெலுங்குப் படத்தில் இப்பொழுது நடித்து வருகிறார். அப்படத்தின் ஹீரோ ‘ஆர்.ஆர்.ஆர்.’ படப்புகழ் ஜூனியர் என்டிஆர். இவருடன்தான் ஸ்ரீதேவியின் மூத்த வாரிசான ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நடிக்க இவர் வாங்கிய சம்பளம் ரூ.4 கோடி என்று சில மாதங்களுக்கு முன் காத்து வாக்குல ஸ்பேம் மெயில் சுற்றிச் சுற்றி வந்தது.தென்னிந்தியாவில் இவர் நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே, த்ரிஷா, சமந்தா அளவிற்கு பிரபலம் இல்லை. 

ஆனால், இவரது சோஷியல் மீடியா கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம். நினைத்த மாதிரி கவர்ச்சியாக ரீல்களையும், போட்டோக்களையும் அவ்வப்போது பதிவேற்றுவதில் இவருடைய ஸ்டைலே தனி. இதனால் இந்த விஷயத்தில் ஜான்வி கபூருக்கு என்று ஒரு மவுசு இருக்கிறது.

இதை அறுவடை செய்யலாம், வடக்கு பக்கமும் சினிமாவைக் கொண்டு சேர்க்க முடியுமென நினைத்துதான் இவரை தெலுங்கில் அழைத்து வந்திருக்கிறார்கள்.
இவையெல்லாம் சற்றே பழைய செய்திகள்.இப்போது புதிய செய்தி வந்து குதித்திருக்கிறது.அதாவது தெலுங்குப் படத்தில் நடிக்க இவர் வாங்கியிருக்கும் சம்பளம் ரூ.10 கோடி என்பதுதான் அந்த நியூஸ்.

இதன் மூலம் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரைத் தட்டிச்சென்றிருக்கிறார் ஜான்வி கபூர் என ஆரவாரம் எழுந்திருக்கிறது.ஆனால், ரூபாய் 10 கோடிக்கு எவ்வளவு பூஜ்ஜியம் என்று தெரியுமா என சிலர் இதைக் கேட்டு நக்கல் அடிக்கிறார்கள்.அதானே? வாயில் வடை சுடுவதற்கும் ஓர் அளவு இல்லையா?!

காம்ஸ் பாப்பா