முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற... துணிக்க டை குடும்பத்தைச் சேர்ந்த காஸ்டியூம் டிசைனர்!



தமிழ் சினிமாவின் முன்னணி காஸ்டியூம் டிசைனர் பூர்ணிமா ராமசாமி. பிரபல துணிக் கடை குடும்பத்தைச் சேர்ந்த இவர் பாலாவின் ‘பரதேசி’ படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கிய பெருமை இவருக்கு உண்டு.
‘பவர் பாண்டி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘36 வயதினிலே’, ‘இறுதிச்சுற்று’, ‘ராட்சசி’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘சலார்’... உட்பட பல ஹிட் படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியவர். சமீபத்தில் வெளியான தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கும் இவர்தான் காஸ்டியூம்.

டெக்ஸ்டைல் பிசினஸ் குடும்பம் என்பதால் உங்கள் ப்ரொஃபஷனை அதைச் சார்ந்து அமைத்துக் கொண்டீர்களா?

அப்படியெல்லாம் ப்ளான் பண்ணி மாத்திக்கல. இயக்குநர் பாலாவின் குடும்பம் எனக்கு பரிச்சயமான குடும்பம். எனக்கு டெக்ஸ்டைல் பின்னணி இருப்பதால் ‘பரதேசி’ படத்துக்கான காஸ்டியூம்ஸை ரிசர்ச் பண்ணும் பொறுப்பு கொடுத்தார். என்னுடைய ஒர்க் பிடிச்சதால படத்தில் வேலை செய்யும் வாய்ப்பை கொடுத்தார். மற்றபடி சினிமாவுக்கு வரணும்னு எந்த எண்ணமும் அப்போது இல்லை.

‘பரதேசி’ பீரியட் படம் என்பதால் அது எனக்கு அதிக ஆர்வத்தை கொடுத்துச்சு. அந்தப் படம் முடிஞ்சதும் என்னுடைய வேலைகளில் மூழ்கிவிட்டேன். தேசிய விருது க்கு பிறகுதான் பூர்ணிமா என்ற காஸ்டியூம் டிசைனர் சினிமா உலகத்துல தெரிய ஆரம்பிச்சார்.எனக்கு சினிமாவுல ஃபிரெண்ட்ஸ் இருந்தாலும் சினிமா ஆர்வம் இருந்ததில்லை. 
சின்ன வயசுல எனக்குள் இருந்ததெல்லாம் ஆடை உலகம் மட்டுமே. தி.நகரில் நான் படிச்ச பள்ளி அருகேதான் எங்கள் கடையும் இருந்துச்சு. டெக்ஸ்டைல் தவிர வேறு எதையும் யோசிக்க முடியாத சூழலில்தான் வளர்ந்தேன்.  

‘கேப்டன் மில்லர்’ கதையைக் கேட்டதும் அது உங்கள் ஆர்வத்தை எப்படி தூண்டியது?

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ‘இறுதிச்சுற்று’ சமயத்திலிருந்தே பழக்கம். தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மாமா எங்களுடைய ஃபேமிலி ஃப்ரெண்ட். அதனால் அருண் கூப்பிடும்போது எந்தவித தயக்கமும் இல்லாமல்தான் கமிட் பண்ணினேன். அருண் முழு சுதந்திரம் கொடுத்தார். அது என்னை முழு ஈடுபாடுடன் வேலை செய்ய தூண்டியது.

‘கேப்டன் மில்லர்’ மாதிரியான பீரியட் படத்தில் வேலை செய்வது எந்தளவுக்கு எளிது; எந்தளவுக்கு கடினம்?

எந்தவிதத்துல எளிது என்றால் எனக்கு படத்துக்காக ரிசர்ச் பண்ணுவது பிடிக்கும். இப்போதெல்லாம் 30கள், 40கள் என பல பீரியட் கதைகள் வருகிறது. அவர்களிடம் 2024ல் நடக்கும் படம் கொடுங்கனு விளையாட்டாக சொன்னதுண்டு. பீரியட் படத்தில் நமக்கு முன் வாழ்ந்தவர்களை முடிந்தளவுக்கு இயல்பு தன்மையுடன் காட்டலாம். அதில் எனக்கு பேரார்வம்னு சொல்லலாம்.

கலர், ஃபேப்ரிக் என எல்லா சவால்களும் இருக்கும். அதற்கு என்னுடைய டீம் சப்போர்டிவ்வாக இருந்தார்கள். இயக்குநரின் பார்வையை எந்தளவுக்கு நடைமுறையுடன் கொண்டுபோக முடியுமோ அதற்கு முயற்சி செய்வேன்.

‘பரதேசி’ படத்தில் பல புதிய ஆடைகளை கதைக்கேத்த மாதிரி டல் பண்ணியிருக்கிறேன். அதைவிட இதுல பத்து மடங்கு டல் பண்ண வேண்டியிருந்துச்சு. கதைக்கு ஃபேன்ஸி, பாலிஷ் டிரஸ் இருக்கக்கூடாது. 

அதனால் ஸ்பாட்டில் எப்போதும் டல் பண்ணும்வேலை நடந்து கொண்டே இருக்கும். பாண்டி பஜார்ல லேட்டஸ்ட் கலெக்‌ஷன் இருக்கும் என்பதால் வண்ணாரப்பேட்டை, ராயபுரம் என பல இடங்களில் சுற்றித்திரிந்து காஸ்டியூம் பர்ச்சேஸ் பண்ணினோம். மூர்மார்கெட்ல வாங்கின செகண்ட் ஹேண்ட் டிரஸ் கூட படத்துல யூஸ் பண்ணினோம். பெரிய செலவும் பண்ணாமல் அதே சமயம் செலவும் தெரியணும் என்பதால் தேர்ந்தேடுத்து காஸ்டியூம்ஸ் யூஸ் பண்ணினோம்.

ராஜா குடும்பம், பொது மக்கள், தியாகிகளை குண்டு துளைக்கும் காட்சிகள் என படம் முழுக்க எல்லா காட்சிகளுக்கும் அதிக மெனக்கெடல் இருந்துச்சு. குமரவேல் குழுவுக்கென்று ஒரே டிசைனில் ஆறேழு உடைகள் தெச்சு வச்சிருப்போம். கடைசில, அதுவும் பத்தாமப்போகும். ஒவ்வொரு காட்சிக்கும் என்ன மாதிரி ரகத்தில் உடை, எவ்வளவு தேவைப்படும் என்று இயக்குநர் அருணுடன் டிஸ்கஸ் பண்ணிய பிறகு ஷூட் போனதால் படப்பிடிப்பை சுமுகமா நடத்த முடிஞ்சது.

படம் பார்த்தவர்கள் பிரியங்கா மோகன் பாவாடை - தாவணி டிரஸ், கலர் அரேஞ்ச்மென்ட்ஸ் பற்றி  கேட்டார்கள். ‘பாகுபாலி’ கற்பனை கதை என்பதால் அதில் பல வண்ணங்களை பயன்படுத்த முடியும். ‘அவதார்’ படமும் அப்படியே. ஆனால், ‘கேப்டன் மில்லர்’ மாதிரி உண்மைக் கதை சொல்லும்போது கதைக்களத்துக்கு ஏற்ப அந்த வண்ணங்களை பயன்படுத்தினால்தான் அது நம்பகத்தன்மையைக் கொடுக்கும்.

எந்த மாதிரி ஜானர் கதைகளில் வேலை செய்வது அதிகம் பிடிக்கும்?

ஜானரைவிட இயக்குநர், தீம், புரொடக்‌ஷன் தரப்பு காஸ்டியூமருக்கு எப்படி மரியாதை தருகிறார்கள் போன்ற அம்சங்களைப் பொறுத்துதான் படம் கமிட் பண்ணுகிறேன். இங்கு  காஸ்டியூம் டிசைனருக்கு மரியாதை குறைவு. எங்கள் பெயர்களை போஸ்டர்களில் அவ்வளவாக பார்க்க முடியாது. பேர் மட்டுமே முக்கியம் அல்ல. ப்ரொஃபஷனுக்கான மரியாதை வேண்டும். நடிகர்கள், அவர்களுடைய டிரஸ் ஸ்கிரீன்ல பெரிய பங்களிப்பை செய்திருக்கும். அதற்கு மரியாதை  இருக்கணும்.

என்னுடைய ப்ரொஃபஷனை மதிச்சு எங்கு மரியாதை தருகிறார்களோ அங்கு மட்டும் வேலை செய்கிறேன். பெரிய இயக்குநர், பெரிய நடிகர் படமாக இருந்து எனக்கு மரியாதை தரவில்லை என்றால் அங்கு நான் இருக்கமாட்டேன்.

சினிமா என்பது நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டிய துறை. எப்படி மேனேஜ் பண்ணுகிறீர்கள்?

சொன்னால் நம்பமாட்டீங்க. போட்டோ ஷூட், லுக் டெஸ்ட் எடுத்து முதலிலேயே என்னுடைய வேலையை ப்ளான் பண்ணிவிடுவேன். ஸ்பாட்டில் என் உதவியாளர்கள் இருப்பார்கள். எனக்கான வேலை அங்கு குறைவு. பேட்டிகளில் வார்த்தைக்கு வார்த்தை ஜோதிகாவை அண்ணி என்று அன்பு காட்டுகிறீர்கள். 

அவருடன் வேலை செய்த அனுபவம் எப்படி?

ஜோ மேடம் எனக்கு பிடிச்ச ஆர்ட்டிஸ்ட். டிசிப்பிளின், டைம் சென்ஸ், ரெஸ்பெக்ட் விஷயத்துல அவரை அடிச்சுக்கவே முடியாது. ‘36 வயதினிலே’ பண்ணும்போது நான் ஓரிரு படம்தான் பண்ணியிருந்தேன். அது அவங்களுக்கு ரீ-என்ட்ரி.

மீண்டும் இண்டஸ்ட்ரிக்கு வரும்போது என் மீது நம்பிக்கை வெச்சு அந்தப் படம் கொடுத்தாங்க. நான்தான் ஒர்க் பண்ணணும்னு என்னை கூப்பிட்டபோது படபடப்பா இருந்துச்சு. அவரிடம் நிறைய கத்துக்கிட்டேன். இண்டஸ்ட்ரியில் இவ்வளவு டிராவல் பண்ணியதை நெனைச்சு பார்க்கும்போது அவங்க கைடு போல் என்னை வழிநடத்தியிருக்கிறதை புரிஞ்சுக்க முடிகிறது. ஜோ மேடம் நடிகை என்பதை விட பிருந்தாவுடைய அண்ணியாகத்தான் எனக்கு அறிமுகமானார்.

அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல நடிகர்களிடம் வேலை செய்துள்ளீர்கள். அவர்களுடைய பர்சனல் ஸ்டைலை எப்படி சினிமாவுக்கு கடத்துகிறீர்கள்?

அஜித் சார் கம்ஃபோர்ட்டாக இருக்கணும்னு பார்ப்பார். கேரக்டரை ரியலா காட்டணும்னு நினைப்பார். சஜஷன் சொன்னா ஏத்துப்பார். பாசாங்கு இல்லாமல் பழகக்கூடியவர்.
சூர்யா சாருக்கு கட் பனியன் கொடுத்தாலும் நல்லாயிருக்கும். கேரக்டருக்கு எது பண்ணினால் நல்லா வரும்னு ரிசர்ச் பண்ணுவார். ஒரு லைப்ரரி மாதிரி தன்னை வெச்சுப்பார். ரசிகர்களுக்கு பெரிய அனுபவம் தரணும்னு உழைப்பார்.

கார்த்தி அண்ணா ரொம்ப ஜாலியானவர். இயக்குநர் பார்வையில், எல்லாவற்றிலும் லாஜிக், வேரியேஷன் இருக்கணும்னு நினைப்பார். தனுஷ் இன்டலிஜென்ட்.  

பழங்காலத்து நடிகைகளுக்கு காஸ்டியூம் பண்ண பிடிக்கும் என்றால் யாருக்கு செய்வீர்கள்?

செளகார் ஜானகி. ஜானு அம்மா எங்கள் குடும்பத்துக்கு பழக்கமானவர். ரொம்ப இனிமையானவர். ரேவதி மேடமும் எனக்கு பிடிச்ச நடிகை. ‘பவர் பாண்டி’, ‘ஜாக்பாட்’ படங்களில் அவருடன் வேலை செய்திருக்கிறேன்.‘இறுதிச்சுற்று’ இந்தியில் வேலை செய்தீர்கள். தொடர்ந்து பாலிவுட்டிலிருந்து அழைப்பு வந்ததா?

ஹிர்த்திக் ரோஷன் படம் வந்துச்சு. அப்போது என்னுடைய குழந்தை அருகில் நான் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்துச்சு. மும்பையில் தங்கி வேலை செய்யுமளவுக்கு சூழ்நிலை இடம் கொடுக்காததால் பாலிவுட் படங்கள் பண்ண முடியவில்லை.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உங்கள் தோழி. அப்படியிருந்தும் ‘லால் சலாம்’ படத்திலிருந்து விலகுமளவுக்கு என்ன நடந்தது?

தயாரிப்பு நிறுவனத்துக்கும் எனக்குமான டேர்ம்ஸ் ஒத்துவரவில்லை. அவர்கள் சொன்ன டேர்ம்ஸ் என்னுடைய ஒர்க்கிங் ஸ்டைலுக்கு ஒத்துவரவில்லை என்பதால் விலகிவிட்டேன். மதிப்பு, மரியாதை டெக்னீஷியனுக்கு முக்கியம். அது கிடைக்காத இடத்தில் நான் இருக்கக்கூடாதுனு விலகிவிட்டேன். மற்றபடி, ஐஸ்வர்யா எப்போதும் என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட்.

எஸ்.ராஜா