சென்னை ஆயுசு குறைவு!
‘‘இன்னும் 6 வருடத்தில் சென்னையின் காற்று மாசு இப்போதைக்கு இருப்பதைவிட கால் மடங்கு அதிகமாகும். சென்னை, தூத்துக்குடி, மதுரை மற்றும் திருச்சியில் நாங்கள் மேற்கொண்ட காற்று மாசு ஆய்வில் தூத்துக்குடி மற்ற நகரங்களைவிட மோசமான நிலையில் இருந்தாலும் மற்ற பல காரணங்களால் சென்னை விரைவில் இந்த விஷயத்தில் மோசமான நிலையை அடையும்...’’ என்று சொல்கிறது ஒரு அண்மைய ஆய்வு.

பெங்களூரை மையமாகக்கொண்டு இயங்குகிறது ‘அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் திட்டங்களுக்கான ஆய்வு நிறுவனம்’ (Center For Study Of Science, Technology And Policy - CSTEP). இது ஒரு தன்னார்வ சிந்தனையாளர்கள் சேர்ந்து செயல்படும் நிறுவனம். இந்த ஆய்வு நிறுவனம்தான் அண்மையில் சென்னையைப் பற்றி இப்படி ஒரு ஆபத்தான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
உதாரணமாக காற்றில் உள்ள நச்சுத் துகள்களை, அதாவது நுண்துகள்களை பிஎம் (PM) என்று பெயரிட்டு அழைப்பார்கள் (Particular Matter). இதிலும் பல சைஸ்கள் உண்டு. அதில் முக்கியமானது பிஎம் 2.5 என்ற அளவுள்ள நுண்துகள்.
 இந்த துண்துகள்கள்தான் 2030ல் சென்னையில் சுமார் 27 சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்லியிருக்கிறது அந்த நிறுவனம். தில்லி காற்று மாசுபாட்டைப் பற்றி அதிகம் கவனம் பெறும் தமிழ்நாட்டில் சென்னையைப் பற்றிய ஓர் அபாய அறிவிப்பு நம்மை சுதாரிக்கச் செய்யுமா என்ற ரீதியில் பூவுலகின் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களில் ஒருவரான பிரபாகரனைப் பிடித்து பேசினோம்.
 ‘‘நுண்துகள்களை பொதுவாக மூன்று வகையாக பிரிப்பார்கள். அவை பிஎம் 1, பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10. இதில் பிஎம்1 மிகச் சிறியது என்றால் பிஎம் 2.5 அதைவிட கொஞ்சம் பெரிது. பிஎம்2.5 ஐவிட மேலும் பெரியதுதான் பிஎம் 10. 1, 2.5 மற்றும் 10 என்பது ஒரு நுண்துகளின் டயாமீட்டரைக் குறிப்பது ஆகும். பொதுவாக சுற்றுச்சூழல்வாதிகள் பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 பற்றித்தான் அதிகம் கவலைப்படுவார்கள்.
காரணம், இந்த இரண்டு அளவுகளில் இருக்கும் நுண்துகள்களால்தான் மனித உடல்களுக்கு பிரச்னைகள் ஏற்படும்...’’ என்று சொல்லும் பிரபாகரன் மேலும் நுண்துகள்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தார்.‘‘பிஎம் 2.5-ன் அளவு நம் தலைமுடியின் அளவில் சுமார் 30 மடங்கு சிறியதாக இருக்கும். ஓர் ஊரில் எவ்வளவு பிஎம் 2.5 இருக்கிறது, பிஎம் 10 இருக்கிறது என்பதை வைத்து அந்த ஊரின் காற்றின் மாசு குறித்த நிலவரங்களைத்தெரிந்துகொள்ளலாம்.
பிஎம் 10 கொஞ்சம் பெரிதாக இருப்பதால் அது பிஎம் 2.5 ஐ விட ஆபத்தானது என்றாலும் இதில் இரண்டும் எவ்வளவு ஒரு ஊரில் இருந்தால் பாதுகாப்பானது என்பது பற்றியும் உலக சுகாதார நிறுவனம் ஒரு வரையறையை வைத்திருக்கிறது. உதாரணமாக காற்றில் சதுர மீட்டருக்கு பிஎம் 2.5 நுண்துகள்கள் 15 மைக்ரோகிராம் இருந்தால் மட்டுமே அந்த நகரம், ஊர் பாதுகாப்பானது, சுகாதாரமானது என்று சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்.
ஆனால், சென்னையைப் பொறுத்தளவில் சுமார் 40 மைக்ரோகிராம் பிஎம் 2.5 நுண்துகள்களாவது பொதுவாகக் காணப்படுகிறது. அதிலும் சென்னையிலும் ஏரியாவுக்கு ஏரியா மாறுபடுகிறது. இன்றைய நிலையில் சென்னையில் 40 மைக்ரோகிராம் என்றால் 2030ல் சென்னை இந்த விஷயத்தில் எப்படி இருக்கும் என்று கணக்கிட்டதை வைத்துப் பார்த்தால் அந்த வருடத்தில் சென்னையில் கிட்டத்தட்ட கால் மடங்கு அதிகமாகி 50 மைக்ரோகிராம் நுண்துகளாவது, அதாவது காற்று மாசாவது இருக்கும்...’’ என்று சொல்லும் பிரபாகரன், சென்னையிலும் இந்த மாசின் வித்தியாசமான நிலைகளைப் பற்றி விளக்கினார்.
‘‘2019ல் எல்லா இந்திய மீடியாக்களும் சென்னையை வட்டமிட்டன. பெரிய விவாதங்கள் எல்லாம் நடந்தன. காரணம், அன்றைக்கு சென்னை தில்லியை மாதிரி புகை மூட்டமாக காணப்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னையின் புகை மூட்டம் 200 ஐயும் தாண்டியது. உண்மையில் இவை எல்லாம் நடந்தது தென் சென்னையில். சென்னையை எடுத்துக்கொண்டாலும் வட சென்னையைவிட தென் சென்னை மற்றும் மத்திய சென்னையில் காற்று மாசு குறைவு.
உதாரணமாக அந்த 2019ம் ஆண்டிலே கூட வடசென்னையில் 124 நாட்கள், அதாவது வருடத்தில் மூன்றில் ஒரு பங்கு நாட்களில் காற்று மாசுபாடு தில்லியைப் போல காணப்பட்டது. ஆனாலும் இதை எல்லாம் மீடியாக்கள் கண்டுகொள்ளவில்லை. அரிதாக ஏற்பட்ட தென் சென்னை புகை மூட்டத்தைத்தான் கண்டுகொண்டன. தென் சென்னையைவிட வட சென்னையில்தான் தொழிற்சாலைகள் மற்றும் அனல் மின்நிலையங்கள் அதிகம்.
இத்தோடு வடசென்னையின் மக்களின் ஆயுட் காலமும் இந்த காற்று மாசால் கிட்டத்தட்ட 8 வருடங்களாவது குறைகிறது என்று சொல்லும் ஒரு ஆய்வு பொதுவாக மற்ற சென்னை மக்களின் ஆயுள் காலம் 2லிருந்து 3 வருடம் குறைவதாக சொல்கிறது...’’ என்று சொல்லும் பிரபாகரன், 2019ல் தென் சென்னையில் ஏற்பட்டது போன்ற அரிதான நிகழ்வுகளுக்கு என்ன காரணம் என்றும் விளக்கினார்.
‘‘இன்று காற்று மாசுக்கும் பருவகால நிலை மாற்றங்களுக்கும் பெரிய தொடர்பு இருப்பதாக அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். உதாரணமாக நாம் இருக்கும் பூமியின் மட்டத்தில் தொழிற்சாலை மற்றும் வாகனம் மற்றும் பிற காரணங்களால் காற்று மாசுபடுகிறது என்றால் அது விலக பூமியின் மேல் அடுக்கும், அதாவது நமது தலைக்கு மேல் மட்டத்தில் இருக்கும் சீதோஷ்ண நிலையும் நல்லபடியாக இருக்கவேண்டும்.
நவம்பருக்கும், ஜனவரி, பிப்ரவரிக்கும் இடையில் பனி அதிகமாக இருந்து அதுவும் ஈரப்பதத்துடன் இருந்து காற்றின் வேகமும் குறைவாக இருந்தால் பூமியின் மேல் அடுக்கு மிகவும் அடர்த்தியாக இருக்கும். அப்போது பூமியின் காற்று மாசு அந்த மேல் அடுக்கு அடர்த்தியான பனி மேகத்தை ஊடுருவி விலகிச் செல்லமுடியாமல் இருக்கும். அப்போது அந்த மாசு பூமியின் அடிமட்டத்திலேயே நின்றுகொண்டு நமக்கு பல்வேறு விதமான நோய்த் தொல்லைகளைக் கொடுக்கிறது.
அதேபோல சென்னையின் கடற்கரையும் காற்று மாசில் சுமார் 30 சதவீத அளவையாவது செரித்துக்கொள்ளும். ஆனால், கடலின் காற்று வேகம் நல்ல நிலையில் இருக்கவேண்டும். இது எல்லாம் இல்லாதபோது காற்று மாசு தில்லியைப் போல நிரந்தரமாக பூமியிலேயே நிலைகொண்டுவிடும்.
காலநிலை மாற்றத்துக்கும், காற்று மாசுக்கும் அடிப்படையான பலவகையான சுற்றுச்சூழல் கேடான விஷயங்கள்தான் காரணமாக இருக்கும்போது அவற்றை நிவர்த்தி செய்வதுதான் இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஒரு நிலையான தீர்வாக அமையும்...’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் பிரபாகரன்.
டி.ரஞ்சித்
|