குச்சி குச்சி ராக்கம்மா... நீ காஸ்ட்லி ராக்கம்மா!



ஒரு  பிராண்டை உருவாக்குவது ரொம்பவே கடினம். அப்படி உருவாக்கப்பட்ட பிராண்டை வாடிக்கையாளர்களின் மத்தியில் மதிப்பு மிக்கதாக மாற்றுவது இன்னமும் கடினம். அப்படி ஒரு பிராண்டை மதிப்பு மிக்கதாக உருவாக்கிவிட்டால் எந்தச் சூழலிலும் அதன் மதிப்பு குறைவதில்லை. எதனாலும் அதை அழித்துவிட முடிவதில்லை.
குறிப்பாக அந்த பிராண்டின் உரிமையாளர்கள் மாறலாம். ஆனால், அதன் பெயர் மாறாது. அந்த பிராண்டை உருவாக்கியவர் இறந்த பிறகும், அதன் வழியாக வாழ்வார். அதனால் நல்ல பிராண்டை உருவாக்கியவருக்கு மரணம் இல்லை.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம், ‘குச்சி’.  ஆம்; இப்பிராண்டை உருவாக்கிய குச்சியின் குடும்பத்துக்குள் ஏற்பட்ட சிக்கல்கள், கொலை, வாரிசுகளுக்கு இடையிலான மோதல்கள், பகை , நிறுவனம் கைமாறுதல் என பல வீழ்ச்சிகளைத் தாண்டியும் நிலைத்து நிற்பது ‘குச்சி’ எனும் பிராண்டின் சாதனை. 
தவிர, ‘குச்சி’ பிராண்டில் போலி தயாரிப்புகள் அதிகம். பல காலமாக ‘குச்சி’யைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் மட்டுமே அசலைக் கண்டுபிடிக்க முடியும் என்பது இதன் சிறப்பு.  

ரெடிமேட் ஆடைகள், காலணிகள், ஹேண்ட் பேக்குகள், வாசனைத் திரவியங்கள் என ஆண்கள், பெண்களுக்குத் தேவையான அனைத்துவிதமான ஃபேஷன் பொருட்களையும் தயாரிக்கிறது ‘குச்சி’. இதன் தயாரிப்புகள் பல ஆயிரங்களில் ஆரம்பித்து, லட்சங்களில் செல்கிறது. மட்டுமல்ல, இங்கிலாந்தில் வசித்து வந்த செல்வந்தர்களின் ஃபேஷன் தந்த உந்துதலில், இத்தாலியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம், ‘குச்சி’.

1410ம் வருடத்திலிருந்து எங்களது குடும்பம் ஃப்ளாரன்ஸ் நகரில் வாழ்ந்து வருகிறது என்று குச்சி குடும்பம் சொல்கிறது. ஆனால், ‘குச்சி’ எனும் மாபெரும் ஃபேஷன் பிராண்டின் வரலாறு குச்சியோ குச்சி என்கிற பிசினஸ் மேன் மற்றும் ஃபேஷன் டிசைனரின் காலத்திலிருந்துதான் தொடங்குகிறது.
இத்தாலியில் உள்ள ஃப்ளாரன்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஓர் எளிமையான குடும்பத்தில், 1881ம் வருடம் பிறந்தார் குச்சியோ குச்சி. இவரது தந்தை தொப்பி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரம் சரியாகப் போகாமல் திவாலாகிவிட்டார் குச்சியின் தந்தை.

குடும்பச்சூழல் காரணமாக ஃப்ளாரன்ஸிலிருந்து வெளியேறி, பாரிஸ் நகரில் குடியேறினார் குச்சி. அங்கே கிடைத்த வேலைகளைப் பார்த்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டினார். அப்போது அவரது வயது 16. பாரிஸிலும் குச்சிக்கு ஏற்ற வாழ்க்கையும், தொழிலும் அமையவில்லை. சில மாதங்கள் மட்டுமே பாரிஸில் இருந்தார் குச்சி. 
பிழைப்பைத் தேடி லண்டனில் தஞ்சமடைந்தார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற சொகுசு ஹோட்டலான சாவோயிலில் லிஃப்ட் ஆபரேட்டர் மற்றும் வாடிக்கையாளர்களின் சுமையைத் தூக்கும் உதவியாளர் வேலை கிடைத்தது.இந்த வேலைதான் அவரது வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை.

ஆம்; மர்லின் மன்றோ, வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற பிரபலங்களும், பெரும் செல்வந்தர்களும் அந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வந்தனர். ஹோட்டலில் தங்குவதற்காக வருகின்ற செல்வந்தர்கள் கொண்டு வரும் அனைத்துப் பொருட்களையும் கூர்மையாக கவனிப்பது குச்சியின் வழக்கம். 

இதற்காக, தானாகவே சென்று அவர்களது பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு, அவர்கள் தங்குகின்ற அறை வரைக்கும் செல்வார். இதன் வழியாக பெரும் செல்வந்தர்களுக்கு விருப்பமான ஃபேஷன், தரம், துணி வகைகள், பயணப் பொருட்கள் என அனைத்தையும் தெரிந்துகொண்டார்.

பிரபலங்கள் மற்றும் செல்வந்தர்களின் தேவை என்னவென்பதைக் கற்றுக்கொண்ட பிறகு ஹோட்டல் வேலையை விட்டுவிட்டு, ரயிலுக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் குச்சி. அப்போது செல்வந்தர்களால் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும் என்ற நிலை.

அதனால் அவர்களுக்குத் தகுந்த மாதிரி ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டன. செல்வந்தர்கள் விரும்புகின்ற பயணப்பொருட்களுக்கு நல்ல தேவை இருக்கிறது என்பதை இந்த வேலையின்போது அறிந்துகொண்டார் குச்சி.முதலாம் உலகப்போருக்குப் பிறகு ‘ஃப்ரன்ஸி’ எனும் லக்கேஜ் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இங்கேதான் லக்கேஜ் தயாரிப்பதற்கான அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார்.

1921ம் வருடம் ஃப்ளாரன்ஸ் நகரில் ஒரு கடையைத் திறந்தார் குச்சி. தோலினால் ஆன லக்கேஜ்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தார். அத்துடன் கைதேர்ந்த கலைஞர்களை வைத்து தோல் லக்கேஜ்களைத் தயாரித்தும் விற்பனை செய்தார். இதற்காக சிறிய அளவில் ஒரு தொழிற்சாலையை நிறுவினார். குச்சியின் பெயரே பிராண்டாக மாறியது. ‘குச்சி’ தோல் லக்கேஜ்களுக்குப் பெரிய தேவை உருவானது.

முப்பதுகளில் பெரிய தொழிற்சாலையை உருவாக்கி, விதவிதமான வகைகளில்தோல் லக்கேஜ்களைத் தயாரிக்க ஆரம்பித்தார் குச்சி. தரமும், டிசைனும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தன. 

செல்வந்தர்களின் மனதுக்கு என்ன பிடிக்கும் என்பதை முன்பே தெரிந்து வைத்திருந்ததால் அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற லக்கேஜ்களைத் தயாரிக்க முடிந்தது. 1935ல் இத்தாலிக்கும், எத்தியோப்பியாவுக்கும் இடையில் போர் மூண்டது. 

லக்கேஜ் தயாரிப்பதற்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான தோலுக்கு ரொம்பவே பற்றாக்குறை ஏற்பட்டது. தோலுக்குப் பதிலாக  மரம், வாழை நார், சணல், மூங்கிலைப் பயன்படுத்தி லக்கேஜ்களைத் தயாரிக்க ஆரம்பித்தார் குச்சி.

பிற்காலத்தில் இந்த லக்கேஜ்கள் ‘குச்சி’யின் அடையாளமாகவே மாறின. அத்துடன் தோல் லக்கேஜ்களைவிட சணல் மற்றும் மூங்கிலால் ஆன லக்கேஜ்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

1937ம் வருடம் ஹேண்ட்பேக்குகளை அறிமுகப்படுத்தியது ‘குச்சி’. இன்றும் ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்களின் ஃபேவரிட் ஹேண்ட்பேக்கே ‘குச்சி’தான்.  குச்சியின் மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்தினர் அனைவரும் கடையில் வேலை செய்ய ஆரம்பித்தனர்.

குச்சியின் மகனான ஆல்டோ குடும்ப நிறுவனத்தில் அதிக ஈடுபாட்டுடன் உழைத்தார். அப்பாவிடம் பேசி, 1938ம் வருடம் ரோம் நகரில் ஒரு கிளையைத் திறந்தார் ஆல்டோ.
இந்தக் கிளையில்  கையுறை, பெல்ட், பர்ஸ், கீ செயின்களை அறிமுகப்படுத்தியது ‘குச்சி’. இரண்டாம் உலகப்போரின்போது இத்தாலியின் இராணுவ வீரர்களுக்குத் தேவையான காலணிகளைத் தயாரித்துக் கொடுத்தது, ‘குச்சி’.

இரண்டாம் உலகப்போரின்போதும் தோலுக்குப் பெரிய தட்டுப்பாடு உண்டானது. அப்போது தோலுக்குப் பதிலாக பருத்தியால் ஆன துணிகளைப் பயன்படுத்தி ஹேண்ட்பேக்குகளைத் தயாரித்தது ‘குச்சி’. இந்த ஹேண்ட் பேக்குகளுக்கு இப்போதும் தனி மவுசு.போருக்குப் பிறகு நிறுவனத்தின் பங்குகளைத் தனது மகன்களான ஆல்டோ, வாஸ்கோ, ருடோல்
ஃபோவுக்குப் பிரித்துக்கொடுத்தார் குச்சி. 1947ம் வருடம் முழுவதும் மூங்கிலால் செய்யப்பட்ட பேக்கை அறிமுகப்படுத்தியது ‘குச்சி’.

‘‘விலையை மறந்து விடுவீர்கள். தரம் எப்போதும் நினைவில் இருக்கும்...’’ என்ற வாசகத்துடன் சர்வதேச அளவில் ‘குச்சி’யின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டன.
1952ம் வருடம் ‘மொகாசின்’ வகை காலணிகளை அறிமுகப்படுத்தியது ‘குச்சி’. இந்தக் காலணிகள் பிரபலங்களுடைய ஸ்டைலின் அடையாளமாகவே மாறின. 

1953ம் வருடம் குச்சி மரணமடைய, அவருடைய மகன்களின் கைக்கு நிறுவனம் வந்தது. இதே வருடத்தில் நியூயார்க்கில் முதல் கடையைத் திறந்தது ‘குச்சி’. அடுத்த சில வருடங்களிலேயே நியூயார்க்கில் மட்டும் மூன்று கடைகள் திறக்கப்பட்டன. அப்போது உள்ளூர்வாசிகள் நியூயார்க்கை ‘குச்சி சிட்டி’ என்று அழைத்தனர்.

எழுபதுகளின் ஆரம்பத்தில் ‘த மாடல் 2000’ என்ற வாட்ச்சை அறிமுகப்படுத்தியது ‘குச்சி’. இரண்டே வருடங்களில் பத்து லட்சத்துக்கும் அதிகமான வாட்ச்சுகள் விற்பனையாகி வரலாறு படைத்தது. 1998ல் ‘ஜீனியஸ் ஜீன்ஸ்’ என்ற ஜீன்ஸை அறிமுகப்படுத்தியது ‘குச்சி’. அப்போதே இதன் விலை இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல். அப்போது  உலகின் விலை உயர்ந்த ஜீனஸ் என்ற கின்னஸ் சாதனை படைத்தது ஜீனியஸ் ஜீன்ஸ்.

குச்சியின் மகன்களுக்கு இடையிலான பிரச்னைகள், ஒரு மகன் தனியாகப் பிரிந்து போய் கடை ஆரம்பித்தது, குச்சியின் பேரன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டது, இந்தக் கொலைக்குப் பின்னணியில் அந்தப் பேரனின் முன்னாள் மனைவியே இருந்தது... என ‘குச்சி’யின் இன்னொரு பக்கம் திரைப்படத்துக்கான கதை.

இவ்வளவு வீழ்ச்சிக்குப் பிறகும் ‘குச்சி’ நிலைத்து நிற்பது தனிக்கதை. இன்று ஃபிரான்சைச் சேர்ந்த ‘கெரிங்’ என்ற நிறுவனத்தின் வசமிருக்கிறது ‘குச்சி’ பிராண்ட். உலகமெங்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் ‘குச்சி’க்கு என்று பிரத்யேகமான கடைகள் இருக்கின்றன. இன்றும் ‘குச்சி’யின் மீதான மதிப்பு அப்படியே இருக்கிறது.                          

த.சக்திவேல்