முதல் பழங்குடி ஸ்ட்ராபெர்ரி விவசாயி!
பொதுவாக பெரும்பாலான பழ வகைகள் வளர்வதற்கு ஏற்ப தட்ப வெப்பச்சூழல் தேவை. ஆனால், ஸ்ட்ராபெர்ரி பழமோ எப்படியான சூழலிலும் வளரக்கூடியது. இதுவே இதன் சிறப்பு. மக்களால் நேரடியாக நுகரப்படுவதோடு, ஜாம், ஜூஸ், ஐஸ்கிரீம், கேக், மில்க் ஷேக் தயாரிப்பிலும் ஸ்ட்ராபெர்ரியின் பங்கு முக்கியமானது. அதனால் இதன் சந்தை உலகளவில் விரிவடைந்துள்ளது.
 இத்தனைக்கும் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் தான் ஃபிரான்ஸில் முதல் முறையாக ஸ்ட்ராபெர்ரி தோட்டம் உருவாக்கப்பட்டு, விவசாயம் செய்யப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
இப்படியான ஸ்ட்ராபெர்ரி விவசாயத்தில் இறங்கி, முதல் பழங்குடி ஸ்ட்ராபெர்ரி விவசாயி என்ற சிறப்பைத் தன்வசமாக்கியிருக்கிறார் ரமேஷ் பிவா பாங்கர்.
மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடி கிராமமான கோப்ராவில் பிறந்து, வளர்ந்தவர் ரமேஷ் பிவா பாங்கர். குடும்பச்சூழல் காரணமாக ரமேஷால் பத்தாவது வரைக்குமே படிக்க முடிந்தது. பத்தாவது தேர்வு எழுதியவுடனே படிப்பை நிறுத்திவிட்டு, 2006ம் வருடம் ஒரு பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.
 மிகக் குறைவான சம்பளம். இரண்டு வருடங்களுக்கு மேல் அலுவலக உதவியாளர் வேலையில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பிறகு தற்காலிகமாக ஓட்டுநர் வேலை செய்து வந்தார். இன்னொரு பக்கம் ரமேஷின் குடும்பத்துக்குச் சொந்தமாக 22 ஏக்கர் நிலம் இருந்தது. தண்ணீர் வசதியின்மையால் இரண்டு அல்லது மூன்று ஏக்கரில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்கிற நிலை. டிரைவர் வேலையிலும் பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை.

அதனால் அந்த வேலையை விட்டுவிட்டு, விவசாயத்தில் இறங்கினார் ரமேஷ். அவரது கிராமத்தில் நெல் விவசாயம்தான் பிரபலம். ரமேஷும் நெல் பயிரிட்டார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கவில்லை.  அதனால் தினமும் 350 ரூபாய் கூலி என்ற அடிப்படையில் பல வேலைகளைச் செய்து வந்தார் ரமேஷ். ‘‘கடுமையாக உழைத்து நெல் விவசாயம் செய்தேன். ஆனால், குறைந்த வருமானமே கிடைத்தது. என்னுடைய தாத்தா, அப்பா மாதிரி நெல் விவசாயத்திலேயே தேங்கிப்போக நான் விரும்பவில்லை.
அதே நேரத்தில் என்னுடைய ஊரை விட்டு வெளியே செல்லவும் விருப்பமில்லை. ஊரிலேயே நல்ல வருமானத்தை ஈட்ட வேண்டும்...’’ என்கிற ரமேஷ், கடந்த வருடம் அவரது மாமாவைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்புதான் ரமேஷின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை. ஆம்; ரமேஷின் மாமாதான் ஸ்ட்ராபெர்ரி விவசாயத்தைப் பற்றி ரமேஷிடம் சொல்லியிருக்கிறார். அத்துடன் எந்தவிதமான தட்பவெப்பநிலையிலும் ஸ்ட்ராபெர்ரி நன்றாக விளையும் என்று ரமேஷிற்கு நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார் அவரது மாமா. மட்டுமல்ல, மாமாவிடமே 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, ஒரு ஸ்ட்ராபெர்ரி கன்று 10 ரூபாய் என்ற வீதத்தில் 4,800 ஸ்ட்ராபெர்ரி கன்றுகளை வாங்கினார் ரமேஷ். மீதமிருந்த 2,000 ரூபாயில் கன்றுகளை வீட்டுக்கு எடுத்துப் போவதற்காக ஒரு வண்டியை வாடகைக்குப் பிடித்தார். இந்த ஸ்ட்ராபெர்ரி விவசாயத்தைப் பற்றி அவரது வீட்டில் யாருக்குமே தெரியாது. ‘‘ஸ்ட்ராபெர்ரி விவசாயம் அப்பாவைத் திருப்திப்படுத்தவில்லை.
ஸ்ட்ராபெர்ரி விவசாயத்தை நான் எப்படி செய்யப்போகிறேன் என்ற கவலையிலேயே இருந்தார். ஒருவேளை இதில் நான் தோற்றுவிட்டால் எப்படி கடனைத் திருப்பி அடைப்பேன் என்ற பயம் வேறு அவரைத் தொல்லைப் படுத்திக்கொண்டே இருந்தது. அத்துடன் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளைப் போல நானும் செய்துவிடுவேனோ என்றும் அவர் பயந்துகொண்டு இருந்தார்...’’ என்கிற ரமேஷ் நம்பிக்கையுடன் கால் ஏக்கரில், 4,800 ஸ்ட்ராபெர்ரி கன்றுகளையும் நடவு செய்தார்.
ஈரப்பதத்துக்காக ஸ்ட்ராபெர்ரி கன்றுகளின் மீது ஈர வைக்கோலை வைத்தார். ரமேஷின் ஸ்ட்ராபெர்ரி விவசாயத்தைப் பார்த்த கிராமத்தினர் அவரைக் கேலி செய்தனர். வீட்டிலும் சரி, ஊரிலும் சரி ஒருவருக்குக் கூட ரமேஷின் மீது நம்பிக்கை வரவில்லை.பத்து நாட்களுக்கு ஒரு முறை கன்றுகளுக்கு நீர் பாய்ச்சினார் ரமேஷ். கெமிக்கல் உரங்களுக்குப் பதிலாக மாட்டுச் சாணம், மோர், தயிரை உரமாகப் பயன்படுத்தினார்.
ஒரு மாதம் கடந்தது. ஸ்ட்ராபெர்ரி செடிகள் நன்றாக வளர்ந்தன. ஆனால், ஒரு செடியில் கூட ஸ்ட்ராபெர்ரி பழம் காய்க்கவில்லை.
‘‘எல்லோருமே என்னை வேடிக்கையாகப் பார்த்தனர். சில நாட்கள் வீட்டை விட்டு வெளியில் கூடச் செல்லவில்லை. இந்த 4,800 செடிகளில் ஒரு பழமாவது காய்க்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்...’’ என்கிற ரமேஷின் கனவு அடுத்த சில நாட்களில் நனவானது.
ஆம்; 45வது நாளில் முதல் ஸ்ட்ராபெர்ரி காய்க்க ஆரம்பித்தது. அது பழமானதும் தனது மகனுக்குக் கொடுத்தார் ரமேஷ். ‘‘என்னுடைய மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. என் பண்ணையில் விளைந்த முதல் ஸ்ட்ராபெர்ரி பழத்தை மகனுக்குக் கொடுத்தேன். அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடாமல் தன் நண்பர்களிடம் காட்டச் சென்றான்.
நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என எல்லோரிடமும் நான் விளைவித்த முதல் ஸ்ட்ராபெர்ரி பழத்தைப் பற்றிச் சொன்னேன். ஸ்ட்ராபெர்ரியை விளைவித்ததுதான் என் வாழ்க்கையில் பெருமை மிகுந்த தருணம். எதிர்காலத்தில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் முதல் ஸ்ட்ராபெர்ரியை மகனுக்குக் கொடுத்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடாகாது...’’ என்கிற ரமேஷ், தனது தோட்டத்தில் விளைந்த இரண்டாவது ஸ்ட்ராபெர்ரியைச் சுவைத்தார்.
இதுதான் அவரது வாழ்க்கையில் சுவைத்த முதல் ஸ்ட்ராபெர்ரி. விலை காரணமாக ஸ்ட்ராபெர்ரியை ஒருமுறை கூட ரமேஷ் சுவைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 20 கிலோ ஸ்ட்ராபெர்ரியை அறுவடை செய்கிறார். அத்துடன் உள்ளூர் சந்தைக்கு ஸ்ட்ராபெர்ரியை எடுத்துச் சென்று நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்கிறார். தினமும் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இப்போது இருப்பதைவிட நான்கு மடங்கு பெரிதாக ஸ்ட்ராபெர்ரி விவசாயத்தை விரிவாக்க வேண்டும் என்பது ரமேஷின் அடுத்த திட்டம்.
த.சக்திவேல்
|