சிறுகதை - என்ன விலை அழகே...



“பொண்ணை நல்லா பாத்துக்கோ... அப்புறம் சரியா பார்க்கலைன்னு இரண்டாம் தடவை பெண் பார்க்க வரச்  சொல்லக் கூடாது...’’  ஜோக் என்ற பெயரில் எதையோ என் தந்தை கூற, அனைவரும் சம்பந்தியின் ஜோக்குக்கு வேறு வழியில்லாமல் சிரித்து வைத்தார்கள்.  

“ஓகேதானா அருண்?’’  

அருண் என்பது என் பெயர்தான்.நான் பேசவில்லை. வரவர இப்படிப்பட்ட அபத்தப் பேச்சுக்கள் எனக்குப் பிடிப்பதே இல்லை. ஒருவேளை வயதும் காரணமாக இருக்கலாம்.  

கிட்டத்தட்ட 40 வயதாகப் போகிறது. ஆமாம், இப்போதுதான் பெண் பார்க்கவே வருகிறேன் தவறுதலாக காதல் தோல்வி, பிரேக்அப் என்றெல்லாம் முடிவுக்கு வந்து விடாதீர்கள்.
அம்மா என்மீது பாசமாக இருப்பாள்.  “அருண்... இந்த வீட்டுக்கு விளக்கேற்ற...”நான் சிரிப்பேன். வழக்கமாக எல்லா தாய்களும் பேசும் பேச்சுதான் அது. நான் கேட்டேன். “இதுக்காக ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கணுமா? நான்  விளக்கேத்தறேனே...”என் அம்மா சிரிப்பாள்.

வாழ்வின் மொத்த கண்ணீரையும் தேக்கினால் உப்பளமாகும் என்று சொல்வார்கள். என் தந்தையின் ஆணவம், என் இயலாமை, என் தாயின் நிறைவேறாத கனவுகள்... அவளுள் புதைந்துவிட்ட வாழ்வின் பக்கங்கள்... நான் தடுமாறிய போதெல்லாம் தாங்கிப் பிடித்த அந்தக் கரங்கள்...கரையான் அரித்தது போக மிச்சம் இருந்த புகைப்படத்தில் பார்க்கிறேன். எப்பொழுதும் அழிந்து போன எச்சங்களின் மிச்சம்தான் எனக்கு மிஞ்சுகிறது என் நினைவுகள் உட்பட.யாருமற்ற நீண்ட பகல், இரவு என்னுடையது.

என் ஒற்றை ரோஜாவின் இதழ்களில் கால் பதிக்க எந்த வண்ணத்துப்பூச்சியும் வரவில்லை. நான் பறந்துகொண்டே இருக்கிறேன். என் வாழ்வின் இறகுகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.
இப்படிப்பட்ட ஒரு நாளில்தான் நான் பைரவியைச் சந்தித்தேன். கல்லூரி லைப்ரரியில் ஆரம்பித்த உறவு. ஒரு வசந்தத்தில் பூத்த தேன் மலர். அதன் பிறகு  கொடுப்பதற்கும் பெறுவதற்கும் ஏதும் இல்லாத வர்த்தக வாழ்க்கை. அதுதான் என் இப்போதையப் பொழுதுகள்.  

பைரவி தொலைந்து போனாள். கரையில் நின்றபடி தொலைந்தவர்களை இனி தேடுவதில் அர்த்தம் இல்லை. என் காத்திருப்புக்களும் பயனில்லை.பல இலையுதிர் காலங்களுக்குப் பிறகு ஒரு வசந்தம் வரத்தான் செய்கிறது. அப்படி வந்த வசந்தம்தான் இந்தப் பெண் பார்க்கும் படலம்.இவள் பெயர் கல்யாணி.  

எனக்கும் இவளுக்கும் 10 வயதிற்கு மேல் வித்தியாசம்.அப்பா பார்த்த பெண். வேறு வழி இல்லை. எங்கிருந்தோ அம்மா வாழ்த்துவாள் என்ற நம்பிக்கை.சம்மதித்தேன். ஜன்னல் வழியே தெரிகின்ற காட்சிகளைத்  தவற விட்டுவிட்டு செல்போனில் உலகத்தைத் தேடும் மனிதர்கள் மத்தியில் நானும் ஒருவனா? புரியவில்லை.

நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. கல்யாணப் பத்திரிகைக்கு டிசைன் பார்க்க ஒரு கூட்டமே நெட்டில் அலைந்து கொண்டிருந்தது. “இந்த டிசைன் நல்லா இருக்கா மாப்ள?” எதிர்கால மனைவியின் தாய் என்னிடம் கேட்டார்.  

ஒரு டிசைனை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருந்தார்.  “உங்களுக்கும் கல்யாணிக்கும் பிடித்திருந்தால் சரி...”நான் குறுஞ் செய்தியை அனுப்பி செல்லை அணைத்தேன்.  “எனக்காகக் காத்திருப்பேன் என்று சொன்னியே... இப்போ கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டே?”  பைரவி எனக்குள் பேசினாள்.

நான் அவளுக்காகக் காத்திருந்த நாட்கள், தேடின பாதைகள், புரியாத தகவல்கள், தந்தையின் வற்புறுத்தல்கள்... இவை எல்லாம் கடந்த காலத்தின்  சுவடுகள்.  இழப்புகளின் பள்ளத்தாக்கில் நான் தொலைந்தது அவளுக்குத் தெரியுமா? உறக்கத்திலும் உயிருடன் தொடரும் வாழ்வின் பக்கங்களை நான் யாரிடம் புரட்டிக் காட்டுவேன்?

கல்யாண ஜவுளி எடுக்கிறார்களாம். என்னையும் வற்புறுத்தி அழைத்தார்கள். என்னால் மறுக்க முடியவில்லை. கிளம்பினேன்.  அனைவரும் அந்த பிரம்மாண்டமான துணிக்
கடைக்குள் கூட்டமாகப் புகுந்து காணாமல் போனார்கள்.  கல்யாண பார்ட்டி என்று புரிந்துகொண்ட கடைக்காரர் ஆளாளுக்கு ஒரு  குளிர்பானம் தந்து உபசரித்தார். நான் ரிசப்ஷனிலேயே தங்கிவிட்டேன்.

“சார் நீங்க வரலைங்களா?”
“இல்லை... இதெல்லாம் எனக்குத் தெரியாது...”
“அப்பறம் தெரிஞ்சுப்பீங்க...”
லேடீஸ் கூட்டம் சிரித்தபடி புறப்பட்டது.   
நான் அமர்ந்திருந்தேன். சற்று நேரத்தில் என் எதிரில்..?  

என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை.  இவன்... இவனா?
என் பால்ய சிநேகிதன். கிராமத்தில் ஆற்றில் இக்கரைக்கும் அக்கரைக்குமாக போட்டி போட்டுக் கொண்டு நீந்தியவர்கள் நாங்கள்.  
சில சமயங்களில் நான் ஜெயிப்பேன். சில சமயம் அவன் ஜெயிப்பான்.ஆனால், வாழ்விலே தோற்றவன் நான்.

“டேய் அருண் எப்படிடா இருக்கே ?”  
அவன் பெயர் சரவணன்.  
என்னை உசுப்பினான்.  
“இங்க எங்கடா? ஏதோ பட்டாளத்தில் சேரப் போறேன்னு சொல்லி காணாமல் போனே... அப்புறம் என்ன ஆச்சு?” நான் கேட்டேன்.  “உனக்குத்தான் தெரியுமே... என்னுடைய அத்தை பொண்ணு கனகா எனக்காகக் காத்திருப்பான்னு... அதான் வந்துட்டேன்...” பேசியவன் தொடர்ந்தான்.

“‘மாமாகிட்டே பொண் கேக்க போனேனா? முதல்லே ஒரு நல்ல வேலையை தேடிட்டு அப்புறமாக வா...’ன்னு சொல்லி  கழற்றிவிட்டுட்டார். கனகாகிட்ட சொல்லிட்டு மிலிட்டரிக்கு ஆள் எடுக்குறாங்கன்னு தெரிஞ்சிட்டு அங்க போய்  சேர்ந்தேன்...”
“இதெல்லாம் எனக்குத் தெரியும்டா. அப்புறம் என்னாச்சு சொல்லு...”
“என்னால அஞ்சு வருஷத்துக்கு மேல தாக்குப் பிடிக்க முடியலடா. அதான் வந்துட்டேன்...”
“எப்படிடா? ராணுவத்தில் சேர்ந்தா லேசுலே விட
மாட்டாங்களே...”சரவணன் தன் கைகளை உயர்த்திக் காட்டினான்.

வலது கை கட்டை விரல் இருந்த இடம் மொண்ணையாக இருந்தது.  “என்னாச்சி...  போரிலே அடிபட்டதா..?”“அப்படித்தான் கதை சொன்னேன். துப்பாக்கியாலே என் விரலை நானே சுட்டுக்கிட்டு கீழே கிடந்தேன். காயம்பட்ட வீரர்களுடன் கிடந்த என்னைக் காப்பாற்றி ட்ரீட்மெண்ட் எல்லாம் கொடுத்துட்டு, இனிமே உன்னால துப்பாக்கி பிடிக்க முடியாது, வீட்டுக்குப் போன்னு அனுப்பிட்டாங்க. வந்துட்டேன்...”  அவன்  தொடர்ந்தான்.“துரோணாச்சாரியார் கேட்ட கட்டை விரல் இல்லை இது. காதல் கேட்ட கட்டைவிரல். விரலுக்கும் விலை உண்டு. என் காதல் பரிசளித்தது....’’ சரவணன் கூறினான்.

‘‘கனகா எனக்காகக் காத்திருந்து காத்திருந்து ஒரு போராட்டத்தையே சந்திச்சது வீண் போகலடா... நான் வந்துட்டேன்...”அந்த மொண்ணை விரல்களில் அவன் காதல் துளிர்த்திருந்தது புரிந்தது. எனக்குள் ஒரு குற்ற உணர்வு. இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாமோ?சரவணன் விடை பெற்றான். என்னைத் தன் வீட்டுக்கு அழைத்து  விலாசம் கொடுத்தான். ஒரு நாள்  போக
வேண்டும்.பேச்சு சத்தம். புத்தம் புது புடவைகள் நிறைந்த கட்டைப் பைகளுடன் கிஃப்ட் பார்சல்களுடன் கல்யாண பார்ட்டி திரும்பி வந்து கொண்டிருந்தது.  
அவர்களுடன்...?

“இது என் சித்தி பைரவி. நம்ம கல்யாணத்துக்காக வந்திருக்காங்க...’’ கல்யாணியின் அறிமுகம்.நான் பார்க்கிறேன்.தொலைந்து போன ஒரு வாழ்வின் கருகிய மிச்சப் பகுதி.கரையான் அரித்த என் தாயின் புகைப்படம் போல வாழ்க்கைப் புயலில் கடந்து வந்த தடங்களின் கலைந்த உருவம். இத்தனை வருடங்கள் கழித்து இந்த இடத்தில்..?
அவள் எந்திரமாகக் கும்பிடு வைத்தாள்.

“எங்க சித்தப்பா இறந்துட்டாரு. சித்தி எங்கேயுமே போக மாட்டாங்க. நான்தான் வற்புறுத்திக் கூப்பிட்டு கல்யாணப் பத்திரிகை அனுப்பினேன். அதனால்தான் என் கல்யாணத்துக்கு வந்திருக்காங்க...”முடிந்து போன உறவின் பின் பகுதியின் அறிவிப்பு... கல்யாணி- என் எதிர்கால மனைவி அறிமுகப்படுத்தி வைக்க,  நானும் கை கூப்பினேன்  
என் விரல்கள் அத்தனையும் வெட்டுப்பட்ட உணர்வு.  

விரல்களில் வடிந்த குருதி என் நெஞ்சிலே...
அன்று இரவு என் மொபைலில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. “கல்யாணி மூலம் உங்கள் மொபைல் நம்பர் கிடைத்தது. பல வருட காத்திருப்பபுக்குப் பின் அப்பா வற்புறுத்த என்னுடைய கட்டாயத் திருமணம். நெஞ்சுவலிக்காரர் என்று தெரிந்தே நடந்த திருமணம். நெஞ்சு வலி அவருக்கு மட்டும்தானா? வாழ்த்துக்கள்...’’ஒரு பறவையின் வசந்த ராகம் தேசிய கீதமாக மாறியது. நான் சரவணன் வீட்டுக்குப் போகப் போவதில்லை.

 - விமலா ரமணி